ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
அவள் கேட்டாள்: "இவங்களை எங்கே படுக்கச் சொல்றது? ஒரே அறையிலா? இடிஇடித்ததுபோல் அதிர்ச்சியடைந்து நின்றேன்நான். "கடவுளே, இது சரியான கேள்விதான். நான் இதுவரை இதைப்பற்றி நினைக்கவே இல்லையே!” நான் ஆன்ஸியிடம் சொன்னேன்: "நீ கேட்டது சரிதான் ஆன்ஸி. நீ என்ன செய்தான் சரின்னு நினைக்கிறே.” அவள் சொன்னாள்: "நீங்க இதைப்பற்றி முடிவு செஞ்சிருப்பீங்கன்னு நான் நினைச்சேன்.” "நான் அதைப்பற்றி நினைக்கல...”. நான் சொன்னேன். "சண்ணியைக் கூப்பிட்டுக் கேட்டால் என்ன?” "சே... வேண்டாம். அவுங்க கேட்ருவாங்க” ஆன்ஸி சொன்னான்: "வேணும்னா தனித் தனியே படுக்கச் சொல்லுவோம்” நான் சொன்னான்: "அவன் வரவேற்பறையில் படுக்கட்டும். அவள் உன் ரூம்ல படுக்கட்டும். "ஆன்ஸி சொன்னான்: "ஆனா...” நான் கேட்டேன்: "என்ன ஆனான்னு இழுக்குறே...?”ஆன்ஸி என்னை ஒரு விரலால் குத்தியவாறு சொன்னான்: "அவுங்க ராத்திரி எழுந்துபோய் ஒண்ணா படுத்துக் கிட்டாங்கன்னா?” நான் சொன்னேன்: "அறையைப் பூட்டிட்டா எப்படி? பிறகு ஒரு விஷயம்... சண்ணி ஏற்கெனவே என்கிட்டே சொல்லி இருக்கான். அவங்க ஒரு ரோமம் அளவுக்குக்கூட ஒருத்தரை ஒருத்தர் தொட்டது இல்லன்னு.” அப்போது ஆன்ஸி சொன்னாள். "அப்ப எதுக்கு நாம இப்படி பயப்படணும்? அவங்க ஒரே ரூம்லேயே படுக்கட்டும். அவங்க விருப்பம் எப்படியோ அப்படி நடக்கட்டும். நாளைக்கு அவங்க எப்படிப் படுப்பாங்கன்ற விஷயத்தை நம்மால தீர்மானிக்க முடியுமா? "நான் சொன்னேன்: "நீ சொல்றது சரிதான். அவுங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தொடணும்னு தோணினால், அது நம்ம வீட்ல வச்சே நடக்கட்டும்மே! இல்லியா?” நான் ஆன்ஸியின் தொடையில் மெல்லக் கிள்ளினேன். பிறகு சொன்னேன்: "இந்த மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கிறப்போ அவங்களுக்கு ஏதாவது தோணலாம். பொண்ணுக்குக் கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சண்ணி சொன்னான். ஒருவேளை அந்த விருப்பம் இங்க உண்டாகலாம். இல்லியா? அவுங்களை ஒரே ரூம்லேயே படுக்க வைப்போம். அப்படிச் செய்வதுதான் சரியானது... சரியானது...”
ஆன்ஸியும் நானும் சேர்ந்து அறைக்குள் இரண்டு கட்டில்களை இணைத்துப்போட்டு, அதன்மேல் இப்போதுதான் சலவை செய்து இஸ்திரி போட்டுத் தயாராக இருந்த விரிப்புகளைக் கொண்டு வந்து விரித்து, சலவை செய்த போர்வைகளைக் கொண்டு வந்து வைத்து, தலையணைகளுக்கு உறை மாற்றி, மேஜைமேல் இரண்டு டம்ளர்களில் பாலும் ஒரு குப்பி நிறைய தண்ணீரும் வைத்தோம். குளியலறையில் புதிய துவாலையும் சோப்பும் வைத்தோம். எல்லாம் தயார் பண்ணிவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது பையனும் பெண்ணும் அருகருகில் நின்று முற்றத்தில் சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லை. காதலன்- காதலி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மனதிற்குள் நினைத்தேன் நான். நான் வராந்தாவில் நின்று லேசாகக் கனைத்தவாறு கூறினேன்: "என்ன படுக்கலாமா?” நான் அவர்களை அழைத்துக்கொண்டு அறையை நோக்கிப் போனபோது ஆன்ஸி அந்த அறையின் ஜன்னல்களை அடைத்துக் கொண்டிருந்தாள்,. சாம்குட்டி உடனே சொன்னான்: "அய்யோ... அதை எல்லாம் அடைக்க வேண்டாம் அக்கா. ஆனி சொல்றா கதவையும் ஜன்னல்களையும் திறந்து வச்சாதான் மின்மினிப் பூச்சிகள் அறைக்குள் வரும்ன்றா.” சாம்குட்டியும் ஆனியும் சிரித்தார்கள். அதை நான் மிகவும் ரசித்தேன். நான் மனதிற்குள் கூறினேன்: "பெண்ணே, உன்னோட ஒவ்வொரு ஆசையும் எவ்வளவு வித்தியாசமா இருக்கு! உனக்குத் தேவை மனிதர்கள் இல்லை... சும்மா திரிகிற மின்மினிப் பூச்சிகள் போதும் உனக்கு இல்லையா?” நான் சாம்குட்டியிடம் சொன்னேன்: "நீங்கள் கொஞ்சம் மறைவா இருக்க வேண்டியதுனால ஜன்னல்களையும் வாசல் கதவையும் அடைக்கிறதுதான் நல்லது.” சாம்குட்டி ஆகாயத்தைப் பார்த்தவாறு சொன்னான்: "எங்களை தெய்வம் காப்பாற்றும், ஜாய் அண்ணா,” நான் எனக்குள் சொன்னேன்: "உன்னோட அப்பாவையும் அண்ணன்களையும் குளப்புரம் ரவுடிகளையும் அதே தெய்வம்தான் காப்பாற்றுது.”படுப்பதற்கு முன்பு நான் அப்பாவின் துப்பாக்கியைப் பரணியில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த பீடத்தின்மேல் சாய்த்து வைத்தேன். ஆன்ஸி அதை ஒரு நோட்டமிட்டுவிட்டு என்னைப் பார்த்தாள். "அடியே, காதலன்- காதலியைப் பத்திரமாகப் பாதுகாக்கணும்ல. நீ என்னை இறுக்கி அணைச்சுக் கிட்டயின்னா, நான் இன்னும் கொஞ்சம் வீரத்தோட இருப்பேன்?” நான் ஆன்ஸியிடம் நெருக்கமாகப் படுத்துக்கொண்டு கூறினேன். "எனக்கு இப்போ உறக்கம் வருது” அவள் சொன்னாள். நான் சொன்னேன்: "அடியே அவுங்க இப்போ என்ன செய்வாங்க? கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு. உங்களைப் போல அவுங்க என்ன பைத்தியமா என்ன? அவுங்க அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் திரும்பிப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக்கிட்டு இருப்பாங்க.” என்று சொன்ன ஆன்ஸி எனக்கு முதுகைக் காட்டியவாறு திரும்பிப்படுத்தாள். "ஜாய்... நீங்க உறங்குங்க...” அவள் சொன்னாள். நானே உறங்காமல் இருட்டில் கண்களைத் திறந்தவாறு கிடந்தேன். என் மனதில் பல நூறு எண்ணச் சிதறல்கள் கடந்து போயின. அந்தப் பெண் என்ன அழகு! திரண்டு வந்த வெண்ணெய்ப்போல உடலை உடைய ஒரு அழகுப் பெண்! என் தெய்வமே! எங்கோ இருந்து வந்த ஒரு காதல் ஜோடி இதோ என் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இந்த வீட்டை விட்டுப் போனாலும் அவர்களின் காதலின் அடையாளமாக இங்கு ஏதாவது எஞ்சி இருக்கத்தான் செய்யும். அன்பைத் தேடும் உள்ளங்கள். இப்படியும் மனிதப்பிறவிகள் இருக்கின்றனவா? சிறிது நேரம் சென்ற பிறகு, என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மெதுவாக எழுந்து சென்று அவர்கள் படுத்திருந்த அறைக்கு வெளியே போய் ஒரு தூணின் மறைவில் நின்றவாறு நான் நோக்கினேன். ஆன்ஸி கூறியது சரிதான். அவர்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் கட்டில்மேல் திரும்பிப் படுத்துக் கிடந்தார்கள். நல்ல உறக்கம். நான் திரும்பி வந்து ஆன்ஸியைச் சிறிது நேரம் பார்த்தவாறு நின்றேன். அடுத்த நிமிடம் எதோ நடக்கப்போவதை எதிர்பார்த்தவாறு போர்வையை மூடிபடுத்தேன்.