ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
குளப்புரம் வக்கனைவிட நான் பயந்தது பரண் மேல் இருக்கும் சாம்குட்டியை நினைத்துத்தான். "நடுராத்திரியில பெண்களும் குழந்தைகளும் உறங்கிக்கிட்டு இருக்கிற ஒரு வீட்ல வந்து உங்க பையனை நாங்க கடத்திட்டு வந்திருக்கோம்னு சொல்ற தைரியம் உங்களுக்கு எப்படி வரலாம்? - ஆன்ஸி கேட்டாள். நான் ஆன்ஸியைப் பார்த்தேன். அவள் கிழவனின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கிழவர் சொன்னார்: "நீங்க கடத்திட்டு வந்திருக்கீங்கன்னு நான் சொல்லல. என் மகனும் ஒரு பொண்ணும் டில்லியில் காணாமல் போயிட்டாங்க. அவுங்க ரெண்டு பேரும் இங்கே ஒளிஞ்சிருக்கிறதா எங்களுக்குத் தகவல். அதைத்தான் நாங்க சொல்றோம்”. "எங்க பையனை சீக்கிரம் இங்க விட்டிங்கன்னா, பொதுவாக எல்லாருக்கும் நல்லது.” வக்கன் இன்னொரு பீடியை இப்படியும் அப்படியும் ஆட்டி அணைத்தவாறு சொன்னான். தொடர்ந்து அந்தக் குச்சியை ஒரு விரலால் வீட்டை நோக்கி எறிந்தான். அடுத்த நிமிடம் ஆன்ஸி வேகமாக பெரியவருக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவர் ஆன்ஸியையே பார்த்தவாறு நின்றிருந்தார். ஆன்ஸி வலது கையின் சுண்டு விரலை அவரின் முகத்தை உரசுவது மாதிரி வைத்துக் கொண்டு அவரிடம் சொன்னாள்: "அண்ணா, உங்களுக்கு தைரியம் இருந்தா எங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சு பாருங்க. உங்க மகன் மட்டும் இங்கே இல்லைன்னு வச்சுக்கோங்க, இந்த சம்பவத்தை நீங்க வாழ்க்கையில் ஒருநாள்கூட மறக்க மாட்டீங்க. இல்லைன்னா என்னோட அப்பன் பேரு சுள்ளிக்காமற்றத்தில் சாண்டிக்குஞ்ஞு இல்ல...” அவ்வளவுதான். கிழவரின் முகத்தில் கலவரம் படர்ந்தது. ஆன்ஸியின் தந்தையின் தம்பியின் மகன்தான் கலெக்டர் ஜான் சுள்ளிக்காமற்றம். ஐம்பது ஏக்கர் ரப்பர் தோட்டம் அவனுக்கு வரதட்சணையாகக் கொடுத்தார்கள். அதன் இப்போதைய மதிப்பு ஒன்றறை கோடி ரூபாய். கிழவரின் முகம் வெளிறிப் போனது. அவர் சொன்னார்: "எங்களுக்கு நியாயமான சந்தேகம் இருந்ததால், நாங்க...” ஆன்ஸி பின்னால் திரும்பி படியில் நின்றபடி அவர்களைக் கைகாட்டி அழைத்தவாறு சொன்னாள். "உங்க சந்தேகத்தைப் போக்கிடுங்க அண்ணா. வாங்க... தூங்கிக்கிட்டு இருக்குற குழந்தைகளை எழுப்பிடாதீங்க.” வக்கன் மீசையை வருடியபடி பெரியவரையும் அவரின் மகன்களையும் திரும்பிப் பார்த்தான். பையன்கள் பெரியவரிடம் என்னவோ முணுமுணுத்தார்கள். பெரியவர் ஜீப்பில் ஏறினார். அந்த ஜீப் நகர்ந்தது. வக்கன் என்னையும் ஜோஸையும் கூர்மையாகப் பார்த்தவாறு ஜீப்பில் ஏறினான். அந்த ஜீப்பும் நகர்ந்தது. அவன் புகைத்து விட்டு எறிந்த பீடித் துண்டு முற்றத்தில் இன்னமும் கனன்று கொண்டிருந்தது. நான் போய் அதைக் காலால் மிதித்து அணைத்தேன். ஆன்ஸி ஒரு புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு படிமேல் கால் நீட்டியவாறு திண்ணையில் அமர்ந்தாள். நானும் ஜோஸும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அவள் சொன்னாள்: "ஜாய், ஒண்ணுக்கும் உதவாத அந்தத் துப்பாக்கியைவிட என்னோட நாக்கு எவ்வளவு நல்லது.. அவள் சொன்னதைக் கேட்டு ஜோஸ் உரக்க சிரித்தான். நான் ஒன்றும் பதில் பேசவில்லை. "காதலர்களோட நிலை என்னன்னு பார்ப்போம்.” நான் சொன்னேன்: "தேங்காய் பரணுக்குப் பக்கத்தில் போய் நான் கூப்பிட்டேன்: "சாம்குட்டி...” திணறுகிற ஒலி கேட்டது. நான் மேஜையை இழுத்துப் போட்டு அதன்மேல் ஏறி நின்று டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தேன். "நான்தான்... ஜாய்...” நான் சொன்னேன்: "அப்பாவும் ஆளுக்களும் போய்ட்டாங்க. பயப்படாதே.” சாம்குட்டி பாயில் அமர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஆனி. அவள் என்னிடம் சொன்னாள்: "சாம்குட்டியோட அப்பா வந்தப்போ நான் சாம்குட்டியோட வாயை என் கையால பொத்திக்கிட்டேன்”. "தாங்க்யூ” நான் சொன்னேன். "நோ மென்ஷன் அண்ணா.” அவள் சொன்னாள். நான் டார்ச் விளக்கை அணைத்துவிட்டு கீழே இறங்கினேன்.
அதற்குப் பிறகு நாங்கள் உறங்கவில்லை. ஆன்ஸி பால் கலக்காத காபி தயாராக்கிக் கொண்டு வந்தாள். மணி நான்கு இருக்கும் கோழி கூவவில்லை. அப்போது சண்ணியின் மாருதி மெதுவாக முற்றத்தில் வந்து நின்றது. அவன் என்ஜினை ஆஃப் பண்ணவில்லை. "அவுங்கள எங்கே?” அவன் கேட்டான். "தேங்காய் பரண்ல இருக்காங்க.” நான் சொன்னேன். "கூப்பிட்டு வரட்டா?” நான் கேட்டேன். "சீக்கிரமா சீக்கிரமா” அவன் சொன்னான்: "விடியறதுக்கு முன்னாடியே வாக மண்ணுக்குப் போகணும்: "அதென்னடா வாகமண்ணு? போட்டேலுக்கில்ல போகவேண்டியது!” நான் கேட்டேன். "போட்டேலுக்குப் போனால் தேவையில்லாத பிரச்சினை வரும். வாகமண்ணில் தியானம் நடக்குது. நான் அங்கே உள்ள ஃபாதர்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டேன். தியானக் கூட்டத்துக்கு மத்தியிலேயே எல்லாத்தையும் நடத்தி முடிச்சிடலாம்.” அவன் சொன்னான். நான் மகிழ்ச்சி அலைமோத தேங்காய் பரணை நோக்கி நடந்தேன். மேஜைமேல் ஏறி நின்று நான் சொன்னேன்: "உங்கள அழைச்சிட்டுப் போக சண்ணி வந்திருக்கான். எறங்கி வாங்க”. முதலில் இறங்கி வந்தது ஆனிதான். அவள் விரிந்த என் இரண்டு கைகளுக்கு மத்தியில் ஒரு தேவதையைப்போல் இறங்கி வந்தாள். நான் அவளை மேஜைமேல் நிற்க வைத்து, கீழே இறங்கி, மேஜையிலிருந்து தூக்கி இறகினேன். அவள் போர்வையை எடுத்து வேஷ்டி மாதிரி கட்டிக் கொண்டாள். நான் கை நீட்டிய போது, சாம்குட்டி தானே இறங்கி விட்டிருந்தான். அதற்குப் பிறகு நேரத்தைக் கடத்தவில்லை. அந்தக் கறுத்த பாவாடையும் கறுப்பும் வெண்மையும் கலந்த சிறிய ஷர்ட்டும் அணிந்து ஆனியும், நீளமான கையுள்ள வெள்ளை ஷர்ட்டும் வெள்ளை பேண்டும் அணிந்து சாம்குட்டியும் சண்ணியின் காரில் ஏறி அமர்ந்தார்கள். கார் வேகமாகப் புறப்பட்டது. ஆன்ஸி அவர்கள் போவதையே பார்த்தவாறு நாடியில் கை வைத்து சொன்னாள். "பாவங்க... காதலுக்காக இவங்க எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு!”
6
நான் இப்படி வராந்தாவில் வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன். சில நேரங்களில் அடுக்களையில் இருந்தவாறு ஆன்ஸி ஏதாவது கேட்பாள். முற்றத்தில் இருக்கின்ற களத்தில் மரவள்ளிக்கிழங்கும் நெல்லும் ஜாதிக்காயும் காய்ந்து கொண்டிருக்கின்றன. இங்கிருந்து பார்த்தால் மிளகும் ரப்பரும் தென்னையும் கொக்கோவும் யாரும் ஒன்றும் சொல்லாமலே மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். சண்ணி அந்த இளம் காதலர்களைப் பற்றிய செய்தியுடன் திடீரென்று வந்து நின்றான். இரண்டு நாட்கள் தியானம் செய்த பிறகும், பெண்ணிற்கு தெய்வத்தின் கட்டளை கிடைக்கவில்லை. அவள் சாம்குட்டியை திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்த அழைத்திருக்கிறாள். ஆனால், சாம்குட்டி அவளை ஒரு வாடகைக் காரில் ஏற்றி கொச்சிக்குக் கொண்டுபோய், டெல்லிக்குப் போகிற விமானத்தில் அவளை ஏற்றி அனுப்பி விட்டான்.
வாகமண்ணில் இருந்து கொச்சி வரையும், கொச்சியில் இருந்து கரிமண்ணூர் வரையும் அவன் அழுதுகொண்டே வந்ததாக சண்ணி சொன்னான். வீட்டை அடைந்ததும், வாய்விட்டு அழுதவாறு சிலுவைமுன் முழங்காலிட்டு அமர்ந்திருக்கிறான் சாம்குட்டி. அவன் அழுவதைப் பார்த்து, அவனின் தந்தையும் அண்ணன்மார்களும் அழுதிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் வாகமண்ணில் அவர்களுடன் சேர்ந்து சண்ணியும் தியானத்தில் இருந்திருக்கிறான். அதனால், இப்போது அவன் மேலும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவனின் பிராஸிக்யூட்டர் வேலைக்கான பேப்பர் திருவனந்தபுரத்தில் கிடக்கிறது. ப்ரெய்ஸ் தி லார்ட்.
இன்று ஆன்ஸி சொன்னாள்: "நம்ம மேரிம்மாவோட மகள் ஜானீஸுக்கு சாம்குட்டியப் பார்த்தா என்ன?” அந்த இருபத்தேழு ஏக்கரை நினைத்துப் பார்த்து நானும் சொன்னேன்: "நீ சொல்றது சரிதான் ப்ரெய்ஸ் தி லார்ட்”