ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
என்ன இருந்தாலும் இந்தக்கால பிள்ளைங்களாச்சே!” ஆன்ஸி சொன்னாள்: "அதுவும் உங்கள் பிள்ளைகளாச்சே!” "எனக்கு மட்டுமா இதுல பொறுப்பு? உனக்கும்தான். அடியே ஆன்ஸி... உனக்குத் தெரியுமா?” நான் அவள் காதில் சொன்னேன்: "இந்த மின்மினிப் பூச்சிகள் கண் சிமிட்டுவது அவர்கள் காதலன்- காதலியாக இருப்பதால்தான். அங்கும் இங்கும் கண் சிமிட்டி எப்படி அழைக்கின்றன... பார்...” அடுத்த நிமிடம் "ஜாய்... இது திண்ணை. ஞாபகத்துல வச்சுக்கோங்க” என்று சொன்ன அவளின் காலைப் பிடித்து, வெள்ளை வெளோர் என்று இருந்த பாகத்தை கையால் தடவினேன். அப்போது கேட் அருகே கார் ஒன்றின் விளக்கு திரும்புவது தெரிந்தது. ஆன்ஸி என்னைவிட்டு அகன்று வீட்டுக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள். நான் டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு கேட்டை நோக்கி ஓடியபோது, சண்ணியின் மாருதி வந்து நின்றது. அவன் இறங்கி என்னை நோக்கி வந்தான். வண்டியின் பின்கதவைத் திறந்துகொண்டு சாம்குட்டி இறங்கி வந்தான். அழகான முகமும் புன்சிரிப்புமாய் இருந்தான் அவன். நீண்ட கையுள்ள வெள்ளை ஷர்ட்டும் வெள்ளை பேண்ட்டும் அணிந்திருந்தான். "இவன் ஒரு அப்பா பிள்ளையாச்சே!” நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அவன் காரைப் பார்த்துக் குனிந்தவாறு கூறினான்: "கம் ஆனி...” "ஓ எல்லாமே இங்கிலீஷ் தானா...?” நான் மனதிற்குள் கூறிக்கொண்டேன். அவளிடம் எப்படிப் பேசி சரிப்படுத்துவது? ஆனி இருக்கை வழியே மெல்ல நகர்ந்து கால்கள் இரண்டையும் வெளியே வைத்தாள். நல்ல மெழுகுபோல முற்றத்தில் வெள்ளை நிறத்தில் இரண்டு கால்கள். அவள் அணிந்திருந்தது முழங்காலுக்குக் கீழே இருக்கிற மாதிரி ஒரு கறுத்த பாவாடையும் கறுப்பும் வெண்மையும் கலந்த ஒரு சிறிய ஷர்ட்டும். பாதத்தில் ஏதோ மினுமினுத்தது. என்னவென்று பார்த்தேன். வெள்ளிக் கொலுசு. காருக்குள் இருந்தவாறே அவள் புன்னகைத்தாள். பிறகு காரை விட்டு இறங்கி கையைக் கட்டியவாறு காருக்குப் பக்கத்தில் நின்றாள். சண்ணி சொன்னான்: "ஜாய், இது ஆனி... இது சாம்குட்டி...” "ஆனி சிரித்தவாறு கூறினாள்: "ஹல்லோ அங்கிள்...” க்ராப் வெட்டிய தலையைத் தடவியவாறு நெற்றியில் கிடந்த தலைமுடியை ஒதுக்கி விட்டாள். நான் மனதிற்குள் நினைத்தேன். "சண்ணி சொன்னது சரிதான். நல்ல வெளுத்த நீண்ட முகம். பளிங்குச்சிலை போன்ற உடல் அமைப்பு. சிரிக்கும்போது எல்லா பற்களும் ஜொலிக்கின்றன. கால்கள் வெண்ணெய்போல் இருக்கின்றன வெள்ளை வெளோர் என்று.” நான் இரண்டு பேர் முகத்தையும் உற்றுப் பார்த்தேன்- ஏதாவது விசேஷமாகத் தெரிகிறதா என்று. காதலன்- காதலிக்கென்றே இருக்கிற ஏதாவது தனித்துவம் தெரிகிறதா? ஒரு தடவை பார்த்ததில் ஒன்றுமே பிடிபடவில்லை. சண்ணி அவர்களின் சாமான்களை வண்டியில் இருந்து இறக்கி வராந்தாவில் வைத்தான். அப்போது ஆன்ஸி வராந்தாவிற்கு வந்தாள். நான் சாம்குட்டியிடம் ஆனியிடமும் சொன்னேன். "உள்ளே வாங்க. குளிக்கிறதா இருந்தா குளிச்சு சாப்பிடலாம். ஆன்ஸி இவுங்களை உள்ளே கூட்டிட்டுப் பேர்” அவர்கள் வீட்டுக்குள் போனவுடன் நான் சண்ணியிடம் சொன்னேன்: "எப்படியோ ரெண்டு பேரையும் இங்கே கொண்டு வந்துட்டே!” சண்ணி சொன்னான்: "ஆமா... ரெண்டு நாட்கள் எப்படியோ சமாளிச்சிக்கோ... அதுக்குள்ள நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்.” நான் சொன்னேன்: "டேய் சண்ணி... அதெல்லாம் உன் பிரச்சினை. ஆனால் குளப்புரம் ரவுடி வந்தால் மட்டும் என்னோட பிரச்சினையா?” சண்ணி சொன்னான்: "எப்படியாவது மேனேஜ் பண்ணுடா. வேற என்ன செய்றது? சரி... உன்னோட அப்பாவோட ரெட்டைக் குழல் துப்பாக்கி ஒண்ணு அங்க இருக்குமே! எது எங்கே?” நான் சொன்னேன்: "எனக்கு அதுக்குள்ள தோட்டா போடுறது எப்படின்னே தெரியாதுடா.” சண்ணி சொன்னான்: "டேய் ஜாய்... தோட்டா இருக்கணும்னு கூட அவசியமில்ல... சும்மா எடுத்து நீட்டினா போதும்... எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் பயந்து ஓடிடுவான். "நான் சொன்னேன்: "அப்படியா... அப்ப அதையும் பார்த்திடுவோம்.
நான் உள்ளே சென்றபோது ஆன்ஸி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள். சாம்குட்டியும் ஆனியும் ஷோபாவில் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அப்படி அமர்ந்திருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. சாம்குட்டி ஆன்ஸிடம் சொன்னான்: "அக்கா, இப்படி வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிக்கணும். எங்களை வெறும் காதலன்- காதலியா மட்டும் பார்க்க வேண்டாம். நாங்கள் தெய்வத்தை அடைவதற்கான தீர்த்த யாத்திரை இப்போது நடத்திக்கிட்டிருக்கோம். இல்லையா ஆனி?” அவன் இப்படிக் கேட்டதும் தன் முல்லைப் பூபோன்ற முப்பத்திரெண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவாறு தலையை ஆட்டினாள் ஆனி. ஆன்ஸி கேட்டாள்: "நீங்க போட்டேல் தவிர வேற எங்கே எல்லாம் போனீங்க?” சாம்குட்டி சொன்னான்: "இல்ல... வேற எங்கேயும் போகல... இது ஒரு இதயத்தோட புனிதப் பயணம் அக்கா.” ஆன்ஸி சிரித்தவாறு ஆனியை நோக்கி கேட்டாள்: "எப்போ உங்களோட கல்யாணம்? எங்களையும் கூப்பிடுவீங்கள்ல?” ஆனி சாம்குட்டியிடம் என்னவோ சொன்னான். அவன் சொன்னான்: "ஆனி சொல்றா போட்டேலுக்குப் போயி தெய்வம் எப்படி நினைக்குதோ அப்படி நடக்கட்டும்னு.” ஆன்ஸி சொன்னாள்: "என்ன இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு கஷ்டப்பட்டும் கல்யாணம் நடக்கலைன்னா, இதெல்லாம் எதுக்குன்னு ஆயிடும்.” அவன் அவளிடம் என்னவோ ஆங்கிலத்தில் கேட்டான். பிறகு ஆன்ஸியிடம் சொன்னான்: "ஆனி சொல்றா, எங்களோட அன்பையும் நட்பையும் கல்யாணம்ன்ற வரையறையோட நிறுத்திக்க முடியாதுன்னு.”அப்போது அவள் என்னவோ ஆங்கிலத்தில் கூறினாள். உடனே சாம்குட்டி சொன்னாள்: "நாங்க அன்பை விரும்பக் கூடியவர்கள். எங்களோட இந்த பயணம் ஒரு ஆத்மீக சாகச யாத்திரைன்னு சொல்லலாம். அக்கா... ஒரு ஸ்பிரிச்சுவல் அட்வென்சர். இல்லையா ஆனி? "நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: "ஆனால்... பாவம் சண்ணியோட பிராஸிக்யூட்டர் வேலைக்கு அதுவே தட்டையாக இருந்திடக்கூடாது குழந்தைகளே! ஆனி முல்லைமொட்டை ஒத்த தன் வெண்பற்களை மீண்டும் காட்டிச் சிரித்தவாறு தலையைக் குலுக்கினாள். பிறகு இரண்டு கால்களையும் முன்னால் நீட்டி செருப்பைக் கீழே கழற்றி, ஒரு பாதத்தால் இன்னொரு பாதத்தைத் தடவினாள். நான் என் கடைக்கண்களால் அதைப் பார்த்தேன். அவளின் ஒவ்வொரு கால் விரலும் ரோஜாப்பூ மொட்டை நினைவூட்டின. ஆன்ஸி உள்ளே இருந்த அறைக்குள் சென்று என்னைக் கை காட்டி அழைத்தாள். அவள் என்னை அழைத்ததும் நான் நினைத்தேன். ஆனியின் கால் விரல்களை நான் பார்த்ததை அவள் கண்டுபிடித்துவிட்டாள் என்று. ஆனால், அவள் ஒரு முக்கிய விஷயமாகத்தான் அழைத்திருக்கிறாள் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.