ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
அவனின் வழக்கமான சிரிப்பையோ ஆன்ஸியைப் பார்த்து குசலம் விசாரிக்கும் குணத்தையோ பார்க்க முடியவில்லை. எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்காத ஒன்று இந்த மாருதி கார். அம்பாஸிடர் வாலில் கட்ட முடியுமா இந்த மாருதி காரை? "என்னடா சண்ணி இப்படி அமைதியா உட்கார்ந்திருக்கே? " நான் கேட்டேன். "உன்னோட கேரளா காங்கிரஸ் மேலும் பிளந்திடுச்சா? இல்லாட்டி எவனாவது கள்ள சாட்சி சொல்லி குழப்பத்தை உண்டாக்கிட்டானா? அதுவும் இல்லைன்னா உனக்கு எய்ட்ஸ் ஏதாவது வந்திருச்சா? என்ன பிரச்னை? சொல்லு...” அவன் உடனே குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்: "ஜாய், நான் இப்போ சொல்லப்போறதை ஆன்ஸி கேட்க வேண்டாம். நாம் கொஞ்சம் தோட்டத்துப் பக்கம் தள்ளி நின்னுட்டுப் பேசுவோம்...”நான் அவனுடன் ஜாதிப்பூவும் கொக்கோவும் இருக்கின்ற வேலியைத் தாண்டிப் போனேன். அப்போது சண்ணி சொன்னான்:”டேய் ஜாய், எனக்கு இங்கே ஒரு ஆளை இல்லன்னா இரண்டு பேரை ஒளிச்சு வைக்கணும்.” அவ்வளவுதான்-. நின்ற இடத்திலேயே நான் அதிர்ந்து விட்டேன். என் அம்மாவே... இந்த வீட்ல ஆளை ஒளிய வைக்கிறதா? அவன் என்ன சொல்றான்... நான் சின்னப் புள்ளையா இருக்கிறப்போ வரி வசூலிக்கிறதுக்காக யாராவது வர்றப்போ அப்பா ஓடிப்போய் வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிறதை நான் பார்த்திருக்கேன். பிறகு... ராஜீவ் காந்தியை கொன்னவங்க பெங்களூர்ல ஒளிஞ்சிருந்ததை நாம பேப்பர்ல படிச்சிருக்கோம். ஏதாவது கொலை செய்தவங்களையோ அந்தமாதிரி பெரிய குற்றம் செய்த நபர்களையோவா இவன் இந்த வீட்ல ஒளிச்சு வைக்கச் சொல்றான்? நான் இங்கே ஆன்ஸியோடும் குழந்தைகளோடும் சந்தோஷமா எந்தவிதப் பிரச்சினையும் இல்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிறப்போ, இது தேவைதானா? நான் அவனையே ஒருவார்த்தைகூட பேசாமல் உற்றுப் பார்த்தேன். பிறகு சொன்னேன்: “டேய் சண்ணி” உனக்கு பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா? ஆன்ஸியையும் குழந்தைகளையும் வச்சுக்கிட்டு இந்த வீட்ல கொலைக்குற்றவாளிகளைத் தங்க வைக்க முடியுமா? என்னைப்பத்தி நீ என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்கே! “உடனே அவன் என்தோளில் கை வைத்துக் கொண்டு சொன்னான்:”நான் அந்த அளவுக்கு முட்டாளா ஜாய்? இது கொலைகாரனும் இல்லை. ஒண்ணுமில்லை. ஒரு பொண்ணும் பையனும்டா...”என்ன? பொண்ணும் பையனுமா?” “ஆமாடா...காதலனும் காதலியும்...”
இங்குதான் நான் விழுந்து போனேன். நான் என் வாழ்க்கையில் அதுவரை ஒரு காதலன்- காதலியையும் நேரடியாகச் சந்தித்ததில்லை. சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் உண்மை இல்லையே! பிறகு நாவலில் படித்திருக்கிறேன். அதுவும் உண்மை அல்ல. அதே நேரத்தில் காதலன்- காதலி என்றொரு இனம் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு நன்றாகவே தெரியும். காரணம்? அவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள்தான் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வந்து நாம் படித்துக் கொண்டிருக்கிறோமே! அதைப்போல அவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் செய்து வைக்கிற செய்திகளும் நிறையவே பேப்பர்களில் படித்திருக்கிறேன். ஆனால், நேரடியாக இப்படி ஒரு காதலன்- காதலியை வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததே இல்லை. எங்களின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கொல்லத்துக்காரியும், ஒரு அழகான வாலிபனும் காதலன்- காதலியாக இருந்தார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து நடந்து சென்றதையெல்லாம் நான் பார்த்ததில்லை. நான் அவர்களைப் பார்த்ததே எங்களின் எட்டு ஏக்கர் ரப்பர் தோட்டத்திலிருந்த ஒரு மரத்தில் அவர்கள் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆள் ஓடிவந்து சொன்னதைக் கேட்ட பிறகுதான். வெட்டுக்காரன் பாப்பி பொழுது புலர்வதற்கு முன்பு நெற்றி விளக்குடன் மரம் வெட்ட போயிருக்கிறான். அந்த மரத்தில் கத்தியை வைத்தபோது, அவன் தோளை என்னவோ இடித்திருக்கிறது. அவ்வளவுதான், அவன் பயந்து போனான். திரும்பிப் பார்த்தபோதுதான் நெற்றி விளக்கு வெளிச்சத்தில் இரண்டு முகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்திருக்கிறது. அவன் தோளை இடித்தது கொல்லத்துக்காரியின் கால். அவன் அடுத்த நிமிடம் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து தகவல் சொன்னான். முன்னூறு ரூபாய் விலை உள்ள நெற்றி விளக்கு எங்கே போனதோ- யாருக்குத் தெரியும்? பாப்பி ஒரு மாதகாலம் காய்ச்சல் உண்டாகிக் கிடந்தான். இப்போதும் அவன் அடிக்கடி நடுங்கிப்போய் நிற்பான். அந்த மரத்தை நான் வெட்டி விட்டேன். காலை எட்டு மணி ஆகிறபோது மூன்று செரட்டை நிறைய பால் தரக்கூடிய மரம் அது. நான் கேட்க விரும்புவது என்னவென்றால் இதற்காகத்தான் அவர்கள் காதலன்- காதலியாக ஆகின்றார்களா? காதலிக்கிறோம் என்று கூறிக்கொண்டு இப்படி பயந்தோடிப்போய் சாவதைவிட எவ்வளவோ மேல்- என்னைப்போல திருமணம் செய்து கொண்டு மனைவிமீது அன்பைப் பொழிந்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்வது. ஆன்ஸியைத் திருமணம் செய்த பிறகு சத்தியமாகச் சொல்கிறேன். ஒரு புல்வெட்டுகிற பெண்ணைக்கூட நான் தொட்டதில்லை. தூரத்தில் நிற்கிற ஒன்று இரண்டு பெண்களை என்னையும் மீறி நான் ஏறிட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஆன்ஸி என்னை எங்கே பார்த்துவிடுவாளோ என்ற சிந்தனை வந்தவுடன் அந்தப் பார்வையையே தவிர்த்து விடுவேன். ஒருமுறை கோவாவிற்குத் திருவிழா பார்க்கப் போனபோது நானும், சண்ணியும், குட்டிச்சனும், டோமியும் எங்களின் மனைவிமார்களை ஏமாற்றிவிட்டு மது அருந்திவிட்டு கடற்கரை பக்கம் போனோம். அங்கு போய் வெள்ளைக்காரிகளின் பின்பாகத்தையும் முலையையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வளவுதான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் அவர்களிடம் என்ன பேசி நெருங்குவது? இது ஒருபுறமிருக்க... எங்கு பார்த்தாலும் இப்போது எய்ட்ஸைப் பற்றித்தானே பேச்சு! அதனால், நாங்கள் வெறுமனே சுற்றிவிட்டுத் திரும்பி வந்து இரண்டு குப்பி மதுவை மேலும் அருந்தி, பொரித்த பன்றி மாமிசத்தைத் தின்று தீர்த்தோம். காலையில் எழுந்தபோது ஆன்ஸி சொல்கிறாள்:”ஜாய், உங்களுக்குக் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லயா?” என்று. நான் சொன்னேன்:”மன்னிச்சுக்கோ ஆன்ஸி. கொஞ்சம் குடி அதிகமாயிடுச்சி.” அவள் சொன்னாள்:”நான் இது ஏற்கெனவே பார்த்துதானே! நீங்க உறக்கத்துல சொல்றீங்க...” நான் கேட்டேன்:”என்ன சொன்னேன்?” அவள் கூறினாள்:”மேடம் வாட் ஈஸ் யுவர் நேம்? கம் ஹியர்... ஐ லவ் யூன்னு” நீங்க சொன்னீங்க. உண்மையாகவே நான் ஆடிப்போயிட்டேன்.” நான் சொன்னேன்:”ஏதோ வெள்ளைக்காரங்க நடத்துற ஆஸ்பத்திரியிலே நான் சுகமில்லாம கிடக்கிறதா கெட்ட கனவு கண்டேன். கனவுல ஐ லவ் யூன்னு நிச்சயம் சொல்லவே இல்ல. ஐ கிவ் யூ என்று சொல்லி இருப்பேன். அதாவது... பணத்துக்காக பில்லை நீட்டினப்போ பணம் உடனே தரலாம், அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்னு சொல்லி இருப்பேன்.