மரக்குதிரையின் வெற்றி வீரன் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6392
நீல நிறக் கண்களால் அந்தச் சிறுவன் தன் மாமாவையே பார்த்தான். அந்தக் கண்களில் அசாதாரணமான பிரகாசம் நிறைந்திருந்தது. தன் மாமா கூறியதற்கு அவன் பதிலெதுவும் கூறவில்லை.
“சரி... இனி என்ன?” மாமா கேட்டார்.
“நான் அதிர்ஷ்டத்தை அழைத்துக் கொண்டு வந்த விஷயத்தை என் தாயிடம் இதுவரை கூறவேயில்லை...” அவன் சொன்னான்.
“ஏன் அதை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறாய்?”
“என் தாய் அதைத் தடுத்து விடுவாள்.”
“ம்... அப்படி நடக்காது.”
“ஓ...!” அந்தச் சிறுவன் வேதனை காரணமாக சிறிது நேரம் தன் முகத்தைச் சுருக்கினான்: “அந்த விஷயத்தை என் தாய் அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.”
“சரி... அவளுக்கே தெரியாமல் நாம் முன்னோக்கிச் செல்வோம்.” மாமா ஒத்துக் கொண்டார்.
அவர்கள் மிகவும் எளிதில் காரியங்களைச் செயல்படுத்தினார்கள்.
பால் தன்னுடைய ஐயாயிரம் பவுண்ட்டையும் தன் மாமாவின் கையில் கொடுத்தான். மாமா அதை குடும்ப வக்கீலிடம் தந்தார். அவர் பாலின் அன்னையிடம் இவ்வாறு கூறினார்: “உங்களுடைய ஒரு உறவினர் என்னிடம் ஐயாயிரம் பவுண்டைக் கொடுத்திருக்கிறார். அடுத்த ஐந்து பிறந்த நாளன்றும் ஆயிரம் பவுண்ட் வீதம் உங்களுக்குத் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.”
“அப்படியென்றால் அவளுக்கு ஐந்து வருடங்கள் பிறந்த நாள் பரிசாக ஆயிரம் பவுண்ட் வீதம் கிடைத்துக் கொண்டிருக்கும்.பரவாயில்லையே!” அந்த விஷயம் பாலிற்கு ஒரு வகையில் நிம்மதியை அளிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. தன் அன்னையின் பிறந்த நாள் எப்போது வரும் என்பதில் அவன் ஆர்வமாக இருந்தான். பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கக்கூடிய கடிதங்களுக்கு மத்தியில் அவனுடைய தாய்க்கு அந்தச் செய்தி அடங்கிய கடிதமும் கிடைக்குமல்லவா?
தான் ஒரு குழந்தை அல்ல என்ற உணர்வுடன் விருந்தாளிகள் யாருமில்லாதபோது, வீட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டான். அவனுடைய அன்னை தினந்தோறும் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். மென்மையான உரோம கோட்டுகளையும் மற்ற ஆடைகளையும் உண்டாக்குவதில் தனக்கு இருக்கும் பழைய திறமையை வெளிப்படுத்த அவனுடைய தாய் தீர்மானித்திருந்தாள். அவனுடைய அன்னையின் சினேகிதியும் நகரத்தின் "முக்கியமான கலைஞி”யுமான ஒருத்தி ஸ்டுடியோவில்தான் எப்போதும் அடைக்கலம் தேடியிருந்தாள். அந்த இளம்பெண் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் பவுண்ட்டுகள் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். ஆனால், பாலின் தாய் வெறும் "நூறு”களை மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அன்னை மீண்டும் கையற்ற நிலையில் இருந்தாள். ஏதாவதொன்றில் தான் முதலிடத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்று அவள் முடிவு செய்திருந்தாலும், அந்த இலக்கை அவளால் அடையவே முடியவில்லை.
பிறந்த நாளன்று அதிகாலையில் அவள் உணவு சாப்பிட்டு விட்டு, கடிதங்களை வாசித்துக் கொண்டிருந்தபோது பால் தன் அன்னையின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். வக்கீல் கடிதத்தை அனுப்பியிருந்த விஷயம் அவனுக்குத் தெரியும். அவனுடைய தாய் அந்த கடிதத்தை வாசித்த போது, அவளுடைய முகம் உணர்ச்சிகள் அற்றதாகவும் தீவிரமானதாகவும் மாறிவிட்டிருந்தது. வெறுமைத்தன்மையும் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாத நிலையும் அந்த முகத்தில் வந்து சேர்ந்தன. அவள் அந்தக் கடிதத்தை மற்ற கடிதங்களுக்கு மத்தியில் மறைத்து வைத்தாள். அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட வாய் திறந்து பேசவில்லை.
“அம்மா... இன்றைய வாழ்த்துக் கடிதங்களுக்கு மத்தியில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி ஏதாவது இருக்கிறதா?” பால் கேட்டான்.
“குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவுமில்லை. வழக்கமான வாழ்த்துகள் மட்டுமே...” அவளுடைய அன்னையின் குரல் மிகவும் குளிர்ச்சியாகவும் அலட்சியமானதாகவும் இருந்தது. எதுவும் கூறாமல் அன்றும் அவள் நகரத்திற்குப் புறப்பட்டாள்.
சாயங்காலம் ஆஸ்கார் மாமா அங்கு வந்தார். பாலின் அன்னை வக்கீலுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாள். தன்னுடைய கடன் ஒன்றை அடைக்க வேண்டியிருப்பதால், ஐயாயிரம் பவுண்ட் பணத்தையும் ஒரே நேரத்தில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று அவனுடைய தாய் வாதம் செய்து கொண்டிருந்தாள்.
“அவங்க என்ன சொல்றாங்க, மாமா?” பால் கேட்டான்.
“நீ முடிவு செய் குழந்தை.”
“சரி... அப்படியென்றால் ஒரே நேரத்தில் கொடுத்துவிடுங்கள். இன்னொரு பாதியை வைத்து நாம் இனியும் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.” பால் சொன்னான்.
“புற்களுக்கு மத்தியில் இருக்கும் இரண்டு கிளிகளைவிட, கையில் கிடைத்திருக்கும் ஒரே கிளி எவ்வளவோ மேல்...”
ஆஸ்கார் மாமா சொன்னார்.
“ஆனால், கிராண்ட் நேஷனலிலோ லிங்கனிலோ இல்லாவிட்டால் டெர்னியிலோ எங்காவது ஒரு இடத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்ற விஷயம் எனக்கு உறுதியாகத் தெரியும்.” பால் சொன்னான்.
பாலின் அன்னைக்கு முழு தொகையும் ஒரே நேரத்தில் கிடைக்கிற மாதிரி ஆஸ்கார் மாமா வக்கீலிடம் போட்ட ஒப்பந்தத்தைத் திருத்தி எழுதினார். அப்போதுதான் மேலும் ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் ஒரு திருப்பம் உண்டானது. வீட்டின் முணுமுணுப்பு அதிகமானது. குளிர்காலத்தின் தவளைகள் சத்தம் உண்டாக்குவதைப்போல வீடு "கலபில” என்று சத்தத்தை எழுப்ப ஆரம்பித்திருந்தது. சமீபகாலமாக சில புதிய ஏற்பாடுகள் உண்டாகிவிட்டிருந்தன. பாலுக்கு பாடம் கற்றுத் தர வீட்டில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். வர இருக்கும் வசந்த காலத்தின்போது பாலை பள்ளிக் கூடத்தில் சேர்த்தாக வேண்டும்.
வசந்த காலத்தின்போது மலர்களுக்குப் பஞ்சமில்லை. அதே போல் பாலின் அன்னையின் ஊதாரித்தனத்திற்கும் தடையே இருக்காது. வீட்டின் பல இடங்களிலிருந்தும் அந்த முணுமுணுப்பு நிரந்தரமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது. நாற்காலியின் குஷன்களுக்கு கீழேயிருந்தும் பூத்துக்குலுங்கும் ஆல்மண்ட் செடிகளிலிருந்தும் தொட்டாஞ்சிணுங்கி செடிகளுக்கு நடுவிலிருந்தும் அந்த மந்திரச் சொற்கள் உயர்ந்து கொண்டேயிருந்தன.
பணம்... பணம் வேண்டும்... மேலும் பணம்... மேலும் பணம்... எப்போதும் இருப்பதையும்விட அதிகமாக...
அது பாலை மிகவும் பயங்கரமாக பதைபதைப்பு அடையச் செய்தது. வீட்டிற்கு வரும் ஆசிரியர் அவனுக்கு லத்தீன் மொழியையும் கிரேக்க மொழியையும் கற்பித்தார். ஆனால், அவனுடைய நேரம் முக்கியமாக பஸ்ஸேயுடன்தான் செலவழிந்தது. கிராண்ட் நேஷனலிலும் லிங்கனிலும் நடைபெற்ற குதிரைப் பந்தயங்களில் அவன் தன்னுடைய மனதில் தோன்றிய எண்ணத்தின்படி பந்தயப் பணத்தைக் கட்டினான். அவனுடைய நூற்றைம்பது பவுண்ட்கள் இழக்கப்பட்டுவிட்டன. அவனுக்கு "அருள்வாக்கு” கிடைக்கவில்லை. அவனுடைய பார்வை பயங்கரமானதாக ஆனது. அவனுடைய மனதிற்குள் என்னவோ தாங்க முடியாமல் வெடித்துச் சிதற தயாராக இருப்பதைப் போல தோன்றியது.
“அதெல்லாம் போகட்டும் மகனே. நீ அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.” அவனுடைய மாமா தேற்றினார். ஆனால், தன் மாமா கூறிய எதையும் அவன் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.