மரக்குதிரையின் வெற்றி வீரன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6392
அழகான ஒரு பெண் இருந்தாள். எல்லா பின்புலங்களும் அவளுக்கு இருந்தாலும், அவள் அதிர்ஷ்டமில்லாதவளாக இருந்தாள். அவள் அன்பிற்காக ஏங்கி திருமணம் செய்து கொண்டிருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு அவள் மனதில் கற்பனை செய்து வைத்திருந்த எல்லா விஷயங்களும் தவிடுபொடியாகி விட்டன.
அவளுடைய குழந்தைகள் அழகும் நல்ல உடல் நலமும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களை அவள் ஒரு சுமையாக எண்ணினாள். அவளால் அவர்கள் மீது அன்பு செலுத்த முடியவில்லை. அந்த குழந்தைகள் அவளை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தன. அவளிடம் அவர்கள் குற்றங்கள் கண்டு பிடிப்பதைப்போல, தனக்குள் இருக்கும் ஏதோ குற்றத்தைத் தேடி அதை மறைத்து வைப்பதற்கு அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஆனால், அது என்னவென்று அவளே கண்டு பிடிக்கவில்லை. எந்தச் சமயத்திலும் அவளுக்கு அது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும்- அவள் தன்னுடைய குழந்தைகளுக்கு முன்னால் கடுமையான இதயத்தைக் கொண்டவளாக இருந்தாள். அது அவளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டாள். அதைப் பார்க்கும்போது, அவள் அவர்கள்மீது நிறைய பாசம் வைத்திருந்தாள் என்பதைப்போல தோன்றும். தன்னுடைய இதயத்தின் அடித்தளத்தில் ஒரு இடத்தில் அன்பு என்ற ஒன்று எந்தச் சமயத்திலும் தொடவே செய்திராத ஒரு இடம் இருக்கிறது என்ற விஷயம் அவளுக்கு மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு ஒரு இனிய உணர்வு அவளுக்கு யார்மீதும் தோன்றியதில்லை. எல்லாரும் சொன்னார்கள்: "அவள் அந்த குழந்தைகள்மீது மனப்பூர்வமாக அன்பு வைத்திருக்கிறாள். அவள் உண்மையிலேயே மிகச் சிறந்த தாய்”. உண்மை அதுவல்ல என்ற விஷயம் அவளுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே தெரியும். அந்த அன்னையும் குழந்தைகளும் ஒருவரையொருவர் கண்களால் பார்த்தவாறு, அந்த உண்மையை வாசித்துக் கொள்வார்கள்.
ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளும். அவர்கள் நல்ல வசதிகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு பூந்தோட்டம் இருந்தது. அவர்களுக்கு நல்ல வேலைக்காரர்களும் இருந்தார்கள். தாங்கள் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது.
அவள் நாகரீகமாகவும் அலங்காரங்களின்மீது மோகம் கொண்டவளாகவும் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அந்த வீட்டில் எப்போதும் ஒரு கவலை நிறைந்த சூழ்நிலை நிறைந்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் தேவையான அளவிற்கு பணம் எந்தச் சமயத்திலும் இருந்தது இல்லை. தாய்க்கும் தந்தைக்கும் சிறிய வருமானம் வந்து கொண்டிருந்தாலும், அது அவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்த சமூக அந்தஸ்தைத் தொடரும் அளவிற்கு உதவவில்லை.
தந்தைக்கு நகரத்தில் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை. அவருக்கு பெரிய திட்டங்கள் இருந்தாலும், அவற்றை எந்தச் சமயத்திலும் நடைமுறையில் வெற்றி பெறச் செய்ய அவரால் முடியவில்லை. அவர்கள் ஆடம்பரமாகவே வாழ்ந்தார்கள்- வருமானம் தேவையான அளவிற்கு வரவில்லையென்றாலும்...
இறுதியில் தாய் கூறினாள்: "நான் கொஞ்சம் முயற்சிக்கட்டுமா?” ஆனால், எங்கே ஆரம்பிப்பது என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் மூளையைப் போட்டு குழப்பிக் கொண்டாள். பலவற்றையும் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் போட்டாள். ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. தோல்விகள் அவளுடைய முகத்தில் சுருக்கங்களை உண்டாக்கின. வளர்ந்து கொண்டிருந்த குழந்தைகளுக்கு பள்ளியில் படிப்பதற்கு மேலும் பணம் தேவைப்படும். தன்னுடைய சொந்த சந்தோஷங்களுக்காக பணத்தை செலவழித்துக் கொண்டிருந்த அழகான தோற்றத்தைக் கொண்ட அந்த தந்தையாலும் குறிப்பிட்டுக் கூறும் வகையில் எதையும் செய்ய முடியவில்லை. தாய் மிகவும் தன்னம்பிக்கை குணம் கொண்டவளாக இருந்தாள். அத்துடன் ஒரு ஊதாரித்தனம் நிறைந்தவளாகவும்...
"கொஞ்சம் பணம் வேண்டுமே! கொஞ்சம் பணம்...” என்ற குரல் அந்த வீட்டில் பெரும்பாலான நேரங்களில் கேட்க ஆரம்பித்தது. யாரும் அப்படி உரத்த குரலில் கூறவில்லையென்றாலும், குழந்தைகள் அப்படி ஒரு குரல் ஒலிப்பதைக் கேட்டார்கள். அந்தக் குழந்தைகள் கிறிஸ்துமஸ் நேரத்தில் அந்த குரல் உரத்து ஒலிப்பதைக் கேட்டார்கள். அழகானவையாகவும் விலை அதிகம் கொண்டவையுமான பொம்மைகள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்தபோது அது நடந்தது. பிரகாசித்துக் கொண்டிருந்த ஆடும் மரக்குதிரைக்குப் பின்னாலும் சிறிய பொம்மைக் கூண்டிற்குப் பின்னாலும் அந்தக் குரல் ஒலித்தது- ஒரு முணுமுணுப்பைப்போல... "கொஞ்சம் பணம் இருந்தால்...! கொஞ்சம் பணம் வேண்டுமே!” அந்த குழந்தைகள் விளையாட்டுகளிலிருந்து ஒரு நிமிடம் விலகி நின்று அந்த மந்திரச் சொற்களைக் கேட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கண்களால் பார்த்துக் கொண்டு, அந்த மந்திரச் சொற்களைக் கேட்டுக் கொண்டதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
"அதிகமாக பணம் வேண்டும். கொஞ்சம் பணம் இருந்தால்...!”
அப்போதும் ஆடிக் கொண்டிருந்த அந்த மரக் குதிரையின் ஸ்பிரிங்குகளில் இருந்துதான் அந்த மந்திரச் சொற்கள் புறப்பட்டு வந்திருக்க வேண்டும். அந்த மரக்குதிரை அந்த மந்திரச் சொற்களை எழச் செய்தது. அங்கு குறும்புத்தனமான புன்னகையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒரு புதிய, பெரிய பொம்மை இருந்தது. அது மேலும் தைரியத்துடன் அந்த மந்திரச் சொற்களைக் கேட்டு சிரிப்பதைப்போல தோன்றியது.
ஆனால், யாரும் அதைப் பற்றி உரத்த குரலில் பேசவில்லை. அந்த மந்திரச் சொற்கள் அங்கே கேட்டுக் கொண்டிருந்தன. அதனால்தான் யாரும் சத்தம் போட்டு அதைப் பற்றிப் பேசவில்லை. "நாங்கள் சுவாசிக்கிறோம்” என்று யாரும் கூறுவது இல்லையே! ஒவ்வொரு நிமிடமும் சுவாசம் என்ற விஷயம் நடந்து கொண்டிருந்தாலும்...
“அம்மா...” பால் என்ற ஆண் குழந்தை சொன்னான்: “நமக்கு ஏன் சொந்தமாக ஒரு கார் இல்லை? ஏன் எப்போதும் மாமாவின் காரையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? இல்லாவிட்டால் ஒரு வாடகைக் காரை...”
“காரணம் இருக்கிறது. நாம் அந்த அளவிற்கு பெரிய பணக்காரர்கள் அல்ல...” தாய் சொன்னாள்.
“அது ஏன்?” அவன் கேட்டான்.
“உன் தந்தைக்கு அதிர்ஷ்டமில்லை... அவ்வளவுதான்... அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.” கசப்பை உணர்ந்து கொண்டே அன்னை சொன்னாள்.
அந்த சிறுவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“அதிர்ஷ்டம் என்றால் பணமா, அம்மா?”
அவன் கேட்டான்.
“இல்லை பால்..., அது அல்ல. அதிர்ஷ்டம்தான் பணத்தைக் கொண்டு வருகிறது என்பதே உண்மை.”
“அப்படியா?” பால் தெளிவில்லாத குரலில் சொன்னான்: “ஆஸ்கார் மாமா கேவலமான பணமென்று சொன்ன போது, அவர் பணத்தைப் பற்றித்தான் கூறுகிறார் என்று நான் நினைத்தேன்.”
“ஆமாம்... ஆனால், கேவலமானது என்று அதிர்ஷ்டத்தைப் பற்றி கூறவில்லை!”