மரக்குதிரையின் வெற்றி வீரன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6392
“சரிதான்... அப்படியென்றால், அதிர்ஷ்டம் என்றால் என்ன?”
“உனக்கு பணத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பெயர்தான் அதிர்ஷ்டம். நீ அதிர்ஷ்டமும் உள்ளவனாக இருந்தால், உனக்கு பணம் வந்துசேரும். அதனால்தான்- பணக்காரனாக அல்ல, அதிர்ஷ்டசாலியாகப் பிறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பணக்காரன் தரித்திரவாதியாக மாறலாம். ஆனால், அதிர்ஷ்டசாலியின் செல்வம் அதிகரிக்கவே செய்யும்.”
“அப்படியென்றால்... அப்பா அதிர்ஷ்டசாலி அல்ல... அப்படித்தானே?”
“சிறிதும் அதிர்ஷ்டமே இல்லாத மனிதர் என்றுதான் நான் கூறுவேன்.” அவள் கசப்புணர்வுடன் கூறினாள். நம்பவே முடியாமல் அந்தக் குழந்தை தன் தாயையே கூர்ந்து பார்த்தான்.
“ஏன் அப்படி?” அவன் கேட்டான்.
“ஒரு மனிதன் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கும், இன்னொரு மனிதன் அதிர்ஷ்டமே இல்லாமல் இருப்பதற்குமான ரகசியம் யாருக்குமே தெரியாது குழந்தை...”
“யாருக்குமே தெரியாதா?”
“ஒருவேளை கடவுளுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவர் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.”
“அவர் அதைக் கூறியே ஆகவேண்டும். அம்மா, நீங்கள் அதிர்ஷ்டசாலிதானே?”
“என் கணவர் அதிர்ஷ்டசாலி அல்ல என்றால், நான் எப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியும்?”
“அம்மா, நீங்கள் அதிர்ஷ்டசாலி அல்ல என்று கூறிகிறீர்களா?”
“திருமணத்திற்கு முன்பு அப்படியில்லாமல் இருந்தேன் குழந்தை. ஆனால், நான் அதிர்ஷ்டசாலி அல்ல என்று இப்போது நினைக்கிறேன்.”
“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?”
“சரி... அதெல்லாம் இருக்கட்டும்.... நான் அதிர்ஷ்டசாலி அல்ல... அவ்வளவுதான்...” தாய் சொன்னாள்.
சிறுவன் அவளையே வெறித்துப் பார்த்தான்- தன் தாய் அர்த்தத்துடன் கூறியது அதைத்தானே என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப்போல. வாயைச் சுற்றிலும் இருந்த சுருக்கங்களைப் பார்த்து, தன் தாய் தன்னிடமிருந்து எதையோ மறைத்து வைக்கிறாள் என்பதாக அவன் நினைத்தான்.
“எது எப்படி இருந்தாலும்- நான் அதிர்ஷ்டசாலிதான்.” அவன் உறுதியான குரலில் சொன்னான்.
“அது எப்படி?” திடீரென்று குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே தாய் கேட்டாள்.
அவன் தன் அன்னையையே வெறித்துப் பார்த்தான். தான் ஏன் அப்படிச் சொன்னோம் என்று அவனுக்கே தெரியவில்லை.
“தெய்வம் என்னிடம் அவ்வாறு கூறினார்...” அவன் தன்னுடைய உயர்வைக் காட்டுகிற விதத்தில் உறுதியான குரலில் கூறினான்.
“அவர் அப்படிக் கூறியிருப்பார் மகனே.” அவள் அப்போதும் சிரித்தாள். ஆனால், அந்த சிரிப்பில் கசப்பு நிறைந்திருந்தது.
“அவர் உண்மையாகவே கூறினார் அம்மா.”
“நல்லது...” தாய் சொன்னாள். அவளுடைய கணவர் ஆச்சரியப்படும் வகையில் எப்போதும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை "நல்லது” என்பது.
தன்னை தன் தாய் நம்பவில்லை என்ற விஷயம் அந்தச் சிறுவனுக்குப் புரிந்தது. அவனுடைய ஆழமான நம்பிக்கையை அவனுடைய தாய் பொருட்படுத்தியதே இல்லை. இந்த விஷயம் அவனுக்குள் எங்கோ கோபத்தை உண்டாக்கியது. தன் தாயின் கவனத்தை அந்த விஷயத்தை நோக்கி பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் அவன் இருந்தான்.
"அதிர்ஷ்ட”த்தை நோக்கிச் செல்லக் கூடிய வழி எது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவன் அங்கிருந்து குழந்தைகளுக்கே உரிய தெளிவற்ற சிந்தனையுடன் நகர்ந்து சென்றான். அவன் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்தான். யாரைப் பார்த்தும் வெட்கப்படாமல் அவன் அதைப் பற்றி மட்டுமே மனதில் நினைத்தான். அவன் அதிர்ஷ்டத்தின்மீது மட்டுமே ஆசை உள்ளவ னாக இருந்தான். அதிர்ஷ்டத்தை மட்டுமே விரும்பினான். அதிர்ஷ்டத்தைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக முயற்சித்தான். விளையாடும் இடத்தில் இரண்டு சிறுமிகள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவன் அந்த ஆடும் குதிரையின் மீது ஏறி உட்கார்ந்து, பலமாக அதை ஆட்டினான். அவன் குதிப்பதைப் பார்த்து சிறுமிகள் பயந்துவிட்டார்கள். அவனுடைய கறுப்பு தலைமுடிகள் பக்கங்களில் பறந்து ஆடிக் கொண்டிருந்தன. அவனுடைய கண்களில் வெறித்தனமான ஒரு வெளிச்சம் தெரிந்தது. சிறுமிகள் அவனுடன் உரையாடுவதற்கு பயந்தார்கள்.
பதட்டத்தை உண்டாக்கிய அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து அவன் கீழே இறங்கி அந்தக் குதிரையின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அதன் சிவந்த வாய் சிறிது திறந்திருந்தது. கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
“இப்போது...” அவன் கோபத்துடன் அந்த மரக் குதிரையிடம் சொன்னான்: “அதிர்ஷ்டம் உள்ள இடத்திற்கு என்னையும் அழைத்துக் கொண்டு வேகமாக செல். வேகம்... வேகம் வேண்டும்.”
வேண்டிய அளவிற்கு அடிமைப்படுத்தினால் மட்டுமே அந்த குதிரை தன்னை தான் நினைக்கும் இடத்திற்குக் கொண்டுபோய் சேர்க்கும் என்ற எண்ணம் உண்டானதால், அவன் ஆஸ்கார் மாமா தந்த சிறிய சாட்டையை எடுத்து குதிரையை அடித்தான். அவன் மீண்டும் குதிரையின்மீது ஏறி கோபத்துடன் சவாரியை ஆரம்பித்தான். தான் அதிர்ஷ்டம் இருக்கும் இடத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அவனுக்குள் ஆழமாக வேரூன்றி விட்டிருந்தது.
“பால், நீ உன்னுடைய குதிரையை ஒரு வழி பண்ணிவிடுவாய்.” வேலைக்காரி சொன்னாள்.
“அவன் இப்போதுதான் இதை ஆரம்பித்தானா என்ன? அவன் குதிரையை விட்டு ஏன் இறங்காமல் இருக்கிறான்?” மூத்த சிறுமி கேட்டாள்.
ஆனால், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். வேலைக்காரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
இன்னொரு நாள் இதே பிரயோஜனமில்லாத பயணத்தைச் செய்து கொண்டிருந்தபோது, அவனுடைய அன்னையும் ஆஸ்கார் மாமாவும் அங்கு வந்தார்கள். அவன் அவர்களிடம் வாய் திறக்கவே இல்லை.
“ஹலோ, சவாரி செய்யும் குழந்தையே! நீ ஒரு வெற்றி பெறக்கூடிய குதிரையையா ஓட்டிக் கொண்டிருக்கிறாய்?”
“ஒரு ஆடும் குதிரையை ஓட்டுவதற்கு மட்டும்தான் நீ இருக்கிறாய் என்பது உன்னுடைய எண்ணமா? நீ பெரியவனாக ஆகிவிட்டாய். தெரியுதா?” அவனுடைய தாய் சொன்னாள்.
அவன் கிட்டத்தட்ட மூடியிருந்த தன் பெரிய கண்களின் வழியாக ஒரு பார்வை பார்த்தான். பிடிவாதம் பிடிக்கும் நேரங்களில் அவன் யாரிடமும் பேசுவதில்லை.
அவனுடைய தாய் அவனையே ஆர்வத்துடன் பார்த்தாள். அவன் இயந்திரத்தனமாக குதிரையைப் பிடித்து நிறுத்தினான்.
“சரி... நான் அங்குபோய் சேர்ந்து விட்டேன்.” அவன் உறுதியான குரலில் சொன்னான். விரித்து வைத்திருந்த தன் கால்களையே அவன் பார்த்தான்.
“நீ எங்கு போய் சேர்ந்தாய் என்கிறாய்?”
“நான் விரும்பிய இடத்திற்கு...” அவன் கோபமான குரலில் சொன்னான்.
“சரி மகனே...” மாமா சொன்னார்: “நீ மனதில் நினைத்த இடத்தை அடையாமல் இறங்க மாட்டாய். இல்லையா? சரி... உன்னுடைய குதிரையின் பெயர் என்ன?”