மரக்குதிரையின் வெற்றி வீரன் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6392
“இதற்கு குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு பெயர் இல்லை.”
“பெயர் இல்லாமலே போட்டியில் பங்கு பெறலாம். அப்படித்தானே?”
“இதற்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. போன வாரம் ஸன்ஸோவினோ என்பது இதன் பெயராக இருந்தது.”
“ஸன்ஸோவினோ... ஆஸ்காட்டில் வெற்றி பெற்ற குதிரை... உனக்கு அந்தப் பெயர் எப்படிக் கிடைத்தது?”
“அவன் எப்போதும் தோட்ட வேலை செய்பவனுடன் உரையாடிக் கொண்டே இருப்பான். அந்த ஆளுக்கு குதிரைப் பந்தய பைத்தியம் உண்டு.” அவனுடைய இன்னொரு சகோதரி ஜோவான் சொன்னாள். தன்னுடைய சிறிய மருமகனுக்கு குதிரைப் பந்தயத்தைப் பற்றி சிறிது அறிவு இருக்கிறது என்ற புரிதல் ஆஸ்கார் மாமாவிற்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. போரில் வலது காலில் காயம் பட்ட பஸ்ஸே என்ற இளைஞனுக்கு ஆஸ்காரின் மூலம்தான் அந்த வீட்டில் தோட்ட வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பஸ்ஸே குதிரைப் பந்தயம் நடைபெறும் மைதானத்திற்கு நிரந்தரமாக செல்லக்கூடியவனாக இருந்தான். அவனுடைய வாழ்க்கையே போட்டிகளின்தான் இருந்தது. பால் என்ற அந்த சிறுவன் தோட்டக்காரனுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தான். ஆஸ்கார், பஸ்ஸேயைப் போய் பார்த்து அதைப் பற்றி விசாரித்தார்.
“பால் தம்பி என்னிடம் ஒவ்வொன்றையும் கேட்பான். நான் சொல்லித் தராமல் இருக்க முடியுமா?” அப்படிக் கூறியபோது அவனுடைய முகம் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதைப்போல மிடுக்காக இருந்தது.
“அவன் ஏதாவது குதிரையைப் பற்றி பந்தயம் வைத்திருக்கிறானா?”
“சரிதான்... நான் அந்தச் சிறுவனை விடுவதற்குத் தயாராக இல்லை. அவன் என்மீது உயிரையே வைத்திருப்பவன். அவனிடமே அவனைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். நான் அவனை விட்டு விடுவதாக இருந்தால், அவனுக்கு பெரிய அளவில் வருத்தம் உண்டாகும். ஆமாம் சார்...”
ஒரு தேவாலயத்தில் நிற்பதைப்போல மிடுக்குடன் அந்த வேலைக்காரன் நின்றிருந்தான்.
மாமா மருமகனை காரில் ஏற்றிக் கொண்டு ஒரு பயணம் புறப்பட்டார்.
“டேய், பால்... மகனே, நீ ஏதாவது குதிரைக்காக பந்தயத்தில் போட்டியிட்டிருக்கிறாயா?”
அழகான தோற்றத்தைக் கொண்ட தன் மாமாவையே பால் வெறித்துப் பார்த்தான்.
“மாமா, என்னால் முடியாது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?” அவன் சற்று ஒதுங்கினான்.
“வெற்றி பெறக்கூடிய ஒரு குதிரையைப் பற்றி உனக்கு ஏதாவது ரகசிய தகவலைத் தரமுடியுமா?”
“டாஃபோடில்.”
“உன்னால் அந்த அளவிற்கு உறுதியாகக் கூறமுடிகிறதா? இல்லாவிட்டால் மிர்ஸாவா?”
“எனக்கு வெற்றிபெறக் கூடிய குதிரையை மட்டுமே தெரியும்.” சிறுவன் சொன்னான்: “அது... டாஃபோடில்தான்.”
“இருந்தாலும்.... டாஃபோடில்...”
ஒரு நிமிடம் அமைதி நிலவியது. டாஃபோடில் என்பது கிட்டத்தட்ட யாருக்குமே தெரியாத ஒரு குதிரையாக இருந்தது.
“மாமா...”
“என்ன மகனே?”
“அதிகமாக எதுவும் கேட்க வேண்டாம். நான் பஸ்ஸேயுடன் வைத்திருக்கும் பந்தயம் அது.”
“பஸ்ஸே! நாசமாயப் போனவன்! அவனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?”
“நாங்கள் பங்காளிகள். ஆரம்பத்திலிருந்தே... முதன்முதலாக நான் இழந்த ஐந்து ஷில்லிங், அந்த ஆள் கடன் கொடுத்ததுதான். மாமா, நீங்கள் கொடுத்த பத்து ஷில்லிங்கில்தான் என்னுடைய அதிர்ஷ்டமே ஆரம்பமானது. அப்போது... மாமா, நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைத்தேன். அந்த அதிர்ஷ்டத்தை இல்லாமல் செய்து விடாதீர்கள்...”
தன்னுடைய பெரிய நீலநிற கண்களால் அவன் தன் மாமாவையே வெறித்துப் பார்த்தான். மாமா அதிர்ச்சியடைந்தாலும், என்ன செய்வதென்று தெரியாமல் சிரித்தார்.
“சரி... நீ கூறிய விஷயத்தை நான் ரகசியமாக வைத்துக் கொள்கிறேன். டாஃபோடில்... அப்படித்தானே? நீ அந்தக் குதிரையின் மீது எவ்வளவு பந்தயம் வைப்பாய்?”
“இருபது பவுண்ட்... நான் அந்த அளவுக்கு சேர்த்து வைத்திருக்கிறேன்.”
அவனுடைய மாமாவிற்கு அது ஒரு நல்ல தமாஷான விஷயமாகத் தோன்றியது.
“நீ பெரிய அளவில் திட்டம் போடும் ஆளாச்சே, பால்! அப்படியென்றால் நீ எவ்வளவு தொகைக்கு பந்தயம் வைப்பாய்!”
“முந்நூறு...” மிடுக்கான குரலில் பால் சொன்னான். “மாமா, இந்த பந்தயம் நமக்கு இடையேதான்... தெரியுதா?”
மாமா அதைக் கேட்டு உரத்த குரலில் சிரித்துக் கொண்டே கேட்டார்:
“சரி... உன் பணம் எங்கே?”
“பஸ்ஸேயின் கையில் இருக்கிறது. நாங்கள் பங்காளிகள் ஆயிற்றே!”
“சரிதான்... அப்படியென்றால் பஸ்ஸே டாஃபோடிலின்மீது பந்தயம் வைக்கும் தொகை எவ்வளவு?”
“என்னைப் போல பெரிய தொகையைக் கட்டுவதற்கு அந்த ஆளால் முடியாது என்று நான் நினைக்கிறேன். அதிகபட்சம், நூற்றைம்பது...”
“நூற்றைம்பது பெனியா?”
“இல்லை... நூற்றைம்பது பவுண்ட்...” ஆச்சரியமடைந்ததைப்போல பால் தன் மாமாவைப் பார்த்தான்: “பஸ்ஸேயின் கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. மிச்சம் பண்ணி சேர்த்து வைத்த பணம்...” சிந்தனைக்கும் ஆச்சரியத்திற்கும் இடையே ஆஸ்கார் அப்படியே மூழ்கிப் போய்விட்டார். இந்த விஷயத்தைப் பற்றி அதற்கு மேலும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் ஆஸ்கார் மாமா, பாலை உடன் அழைத்துக் கொண்டு குதிரைப் பந்தயம் நடக்கும் லிங்கன் மைதானத்திற்குச் செல்ல தீர்மானித்தார்.
“மகனே... நான் இப்போது மிர்ஸா என்ற குதிரையின்மீது இருபதையும் இன்னொரு ஐந்தை நீ விரும்பும் ஏதாவது குதிரையின் மீதும் பந்தயம் வைக்கிறேன். நீ சொல்வது... அந்தக் குதிரை எது?”
“மாமா, டாஃபோடில்...”
“டாஃபோடில் அதற்கான குதிரை இல்லை.”
“மாமா, அந்த குதிரைக்கு ஐந்து பவுண்ட் கரன்ஸி நோட் மதிப்பு இருக்கிறது. என் கையில் அந்தப் பணம் இருந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்.”
“சரி... சரி... உனக்காக நான் அதைச் செய்கிறேன்.” அவனுடைய மாமா அதை ஏற்றுக்கொண்டார்.
அதற்கு முன்பு குதிரைப் பந்தயம் நடக்கும் இடத்திற்கு அந்தச் சிறுவன் எந்தச் சமயத்திலும் சென்றதே இல்லை. அவனுடைய கண்களில் மினுமினுப்பு தெரிந்தது. அவன் வாயை மூடிக்கொண்டு எதுவுமே பேசாமல் எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த ஒரு ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவன் லான்ஸிலோட் என்ற குதிரையின் மீது பணம் கட்டினான். ஃப்ரெஞ்ச் மொழி உச்சரிப்பில் "லான்ஸெலோட்... லான்ஸெலோட்...” என்று சத்தம் போட்டு கத்திக் கொண்டே அந்த மனிதன் தன் கைகளைக் காற்றில் வீசிக் கொண்டிருந்தான். முதலில் டாஃபோடிலும், அதற்குப் பின்னால் லான்ஸிலோட்டும், மூன்றாவதாக மிர்ஸாவும் வந்தன. ஆர்வத்தால் அகல விரிந்த கண்களுடன் அந்தச் சிறுவன் உட்கார்ந்திருந்தான். ஐந்து பவுண்ட்களைக் கொண்ட ஐந்து நோட்டுகளை எடுத்து ஆட்டிக் கொண்டே அவனுடைய மாமா கேட்டார்: “நான் இதை என்ன செய்ய வேண்டும்?”