மரக்குதிரையின் வெற்றி வீரன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6392
“நான் டர்பி குதிரைப் பந்தயத்தைப் பற்றி தெரிந்தே ஆக வேண்டும்... அறிந்தே ஆக வேண்டும்...” அந்தச் சிறுவன் திரும்பத் திரும்ப கூறினான். அவனுடைய நீல நிற, பெரிய கண்கள் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தன.
அவன் எந்த அளவிற்கு பைத்தியம் பிடித்தவனைப்போல இருக்கிறான் என்ற விஷயம் அவனுடைய அன்னைக்கு நன்கு தெரிந்தது.
“நீ கடற்கரைக்குச் செல்... அதுதான் நல்லது.” அவனுடைய தாய் சொன்னாள். அவள் பொறுமையற்றவளாக மாறினாள். அவள் தன் மகனின் முகத்தைப் பார்க்காமல் கீழ்நோக்கி தன் கண்களைப் பதித்தாள். அவனைப் பற்றி சிந்தித்து, அவளுடைய இதயத்தில் சுமை அதிகமானது.
“என்னால் முடியாது.” அவன் சொன்னான்.
“ஏன் முடியாது?” அவன் எதிர்த்துக் கூறியவுடன் அன்னையின் குரல் கனமானது. “டர்பியில் நடைபெறும் போட்டியைப் பார்ப்பதற்காக மாமாவுடன் சேர்ந்து போ... நீ இங்கு இருக்க வேண்டாம்... பிறகு.. நீ இந்த குதிரைப் பந்தயங்களைப் பற்றி இந்த அளவிற்கு அதிகமான ஆர்வத்துடன் இருப்பதற்குக் காரணம் என்ன? நான் அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு சரியான குணம் இல்லை. தெரிகிறதா? சூதாடுபவர்கள் என்னுடைய குடும்பத்திலும் இருந்தார்கள். அவர்கள் குடும்பத்திற்கு உண்டாக்கிய கேடு என்ன என்ற உண்மை வளர்ந்த பிறகுதான் உனக்குத் தெரியும். நான் இந்த பஸ்ஸேயை இங்கிருந்து போய்விடும்படி கூறப் போகிறேன். பந்தயத்தைப் பற்றி எதுவுமே கூறக் கூடாது என்று ஆஸ்காரை இங்கிருந்து விலகியிருக்கும்படி கூறப் போகிறேன். நல்ல ஒரு சூழ்நிலையை நீ அடையும் வரை அப்படித்தான் காரியங்கள் நடைபெற வேண்டும். கடற்கரைக்குச் செல்... மற்ற எல்லா விஷயங்களையும் மறந்துவிடு. உன்னுடைய மனம் மிகவும் கலக்கத்தில் இருக்கிறது. குழந்தை...”
“அம்மா, நீங்கள் கூறுகிறபடி நான் நடப்பேன். ஆனால் டர்பியில் நடைபெறும் பந்தயம் முடியும் வரை, நீங்கள் என்னை வெளியே போகச் சொல்லக் கூடாது.” பால் சொன்னான்.
“உன்னை வெளியே போகச் சொல்வதா? இந்த வீட்டிலிருந்தா?” அவனுடைய தாய் கவலையுடன் கேட்டாள்.
“ஆமாம்...”அவன் தன் தாயை வெறித்துப் பார்த்தான்.
“என் குழந்தையே...! இந்த வீட்டைப் பற்றி இந்த அளவிற்கு கவலைப்படுவதற்கு உன்னை எது தூண்டுகிறது? நீ இந்த வீட்டை விரும்புகிறாய் என்று நான் மனதில் நினைத்ததே இல்லை.”
எதுவும் பேசாமல் அவன் தன் தாயையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவனுடைய விஷயங்கள் ரகசியங்களுக்குள் அடங்கியிருக்கும் ரகசியங்கள் ஆயிற்றே! அது ஆஸ்கார் மாமாவிடமும், பஸ்ஸேவிடமும் கூட பங்கு வைக்காத ஒன்று... இதுவரை அவன் அதை வெளிக்காட்டியதே இல்லை.
எந்த தீர்மானமும் எடுக்காமல் சிறிது நேரம் நின்றுவிட்டு, அவனுடைய தாய் கவலை நிறைந்த குரலில் இப்படிச் சொன்னாள்:
“சரி... உனக்கு விருப்பமில்லையென்றால், நீ கடற்கரைக்குச் செல்ல வேண்டாம். ஆனால், எனக்கு நீ ஒரு உறுதியைத் தர வேண்டும். நீ ஒவ்வொன்றையும் நினைத்து தலையைப் புண்ணாக்கிக் கொள்ளக் கூடாது. குதிரைப் பந்தயம் போன்ற காரியங்களைப் பற்றி நீ ஏன் சிந்திக்க வேண்டும்?”
“வேண்டாம் அம்மா. அந்த விஷயங்களைலெல்லாம் சிந்தித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அந்த விஷயங்களை விட்டு விடுகிறேன். உங்கள் இடத்தில் நான் இருந்தால், நான் கவலையே பட்டிருக்க மாட்டேன்.” பால் சொன்னான்.
“நான் நீயாகவும், நீ நானுமாக இருந்திருந்தால்... அப்படித்தானே? நாம் எப்படி நடந்து கொண்டிருப்போம் என்பதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன்.”
“அப்படியென்றால்... அம்மா, அதைப் பற்றி வெறுமனே கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே!”
பாலின் ரகசியங்களுக்குள் அடங்கியிருக்கும் ரகசியம்- அந்த மரக்குதிரைதான். அதற்குப் பெயர் எதுவும் இல்லை. அவன் ஒரு குழந்தையைவிட வயதானபோது, அந்த மரக்குதிரை வீட்டின் பரணுக்கு மாற்றப்பட்டுவிட்டிருந்தது.
“ஒரு மரக்குதிரையின்மீது ஏறி சவாரி செய்யும் வயதை நீ தாண்டிவிட்டாய்.” அவனுடைய தாய் சொன்னாள்.
“அம்மா, ஒரு சரியான குதிரை கிடைக்கும் வரை எனக்கு அது இருக்க வேண்டும்.”
“அது உனக்கு நண்பனாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய். அப்படித்தானே!”
“ஆமாம்... ஒரு மரக் குதிரை என்னுடைய நண்பன். நான் அதோடு சேர்ந்து இருக்கும்போது...” பால் சொன்னான்.
அதைத் தொடர்ந்து அந்தக் குதிரை மீண்டும் பாலின் அறையில் இருக்கத் தொடங்கியது. குதித்து ஓடுவதற்கு ஆசை இருந்தாலும், அது இப்போது கட்டப்பட்டுக் கிடந்தது.
குதிரைப் பந்தயம் நெருங்கி வந்தது. அந்தச் சிறுவன் மேலும் மேலும் பதைபதைப்பு நிறைந்தவனாக ஆனான். அவன் சலனங்கள் நிறைந்தவனாகவும் பலவீனமானவனாகவும் ஆனான். அவனிடம் யாராவது பேசினாலும், அதை அவன் கவனம் செலுத்திக் கேட்பதேயில்லை. அவனுடைய கண்கள்- உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- அமானுஷ்ய தன்மை கொண்டவையாக மாறின. அவ்வப்போது அவனைப் பற்றி நினைத்து அவனுடைய அன்னை மனதிற்குள் கவலைப்பட்டாள். சில வேளைகளில் அரைமணி நேரம் கூட அவனுடைய தாய் அவனைப் பற்றி பதைபதைப்புடன் ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டிருப்பாள். திடீரென்று அவனுக்கு அருகில் ஓடிச் சென்று, அவன் பத்திரமாகத்தான் இருக்கிறான் என்பதை அவள் தெரிந்துகொள்வாள்.
பந்தயம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், நகரத்தில் நடைபெற்ற ஒரு இரவு நேர விருந்தில் அவனுடைய தாய் பங்கு பெற்றாள். திடீரென்று தன்னுடைய மூத்த மகனைப் பற்றிய கவலை அவளை வந்து ஆட்கொள்ள ஆரம்பித்தது. அவள் அதிர்ச்சியும் அமைதியும் நிறைந்தவளாக ஆனாள். அவள் தன்னைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். சமநிலையை திரும்பப் பெற்றாலும், படிகளில் இறங்கி கீழே சென்று கிராமத்திற்கு தொலைபேசியில் பேசாமல் அவளால் இருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தொலைபேசி மணி அடித்தபோது, வீட்டிலிருந்த ஆசிரியைக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டானது.
“மிஸ். வில்மோட்... குழந்தைகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லையே!”
“எதுவுமே இல்லை... எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்கள்.”
“பால் விஷயம்...?”
“அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு போய் படுத்துவிட்டான். நான் ஓடிப்போய் பார்க்கட்டுமா?”
“வேண்டாம்...” மறுக்கும் குரலில் பாலின் அன்னை சொன்னாள்: “வேண்டாம்... தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிடுகிறோம். சரி...” தன்னுடைய மகனின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு கெடுதல் உண்டாவதை அந்த அன்னை விரும்பவில்லை.
“நல்லது...” வீட்டிலிருந்த ஆசிரியை தொலைபேசியைக் கீழே வைத்தாள்.
பாலின் தாயும் தந்தையும் வண்டியை ஓட்டி வீட்டிற்கு வந்தபோது, இரவு ஒரு மணி ஆகிவிட்டிருந்தது. அனைத்தும் எந்தவித அசைவுகளும் இல்லாமலிருந்தன.