உருகும் பனி
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7481
மகர மாத மூடுபனி மலைத்தொடர்களை மறைத்திருந்தது. எதையும் பார்க்க முடியவில்லை. சூரியன் உதயமாகிவிட்டதா என்பது கூட தெரியவில்லை. குவார்ட்டர்ஸின் மேல்மாடியில் சூஸன் நின்றிருந்தாள். எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருந்த பனிப்படலம் உள்ளேயிருக்கும் கவலையைப் போல இருந்தது. முன்பு பனியைப் பார்த்துக் கொண்டிருப்பது என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இங்கு முதன்முதலாக வந்த காலத்தில். அப்போது குளிர்காலக் காலை வேளைகளில் இந்த மாடியில் பிரம்பு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்காருவது உண்டு. அவளுடன் போபனும் இருப்பான். போபன் தாமஸ் என்ற அவளுடைய அன்புக் கணவன்... போபன் தாமஸ் என்ற எஞ்சினியர்.
‘‘இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். போபன், நீங்க கூட இருந்தால்...” அவள் கூறுவாள்.
‘‘நான் கூட இல்லைன்னா?” - போபன் குறும்புத்தனமாகக் கேட்பான்.
‘‘கூட இல்லாம இருக்க முடியாதே!”
‘‘உறுதியா சொல்ல முடியுமா?”
‘‘நான் உறுதியா சொல்வேன்.”
அந்த நினைவு சூஸனின் கண்களை ஈரமாக்கியது. இலை நுனியில் ததும்பி நின்றிருக்கும் பனித் துளியைப் போல ஒரு நீர்த்துளி அவளுடைய கண்ணின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. இன்று போபன் அருகில் இல்லையே! பல காலை வேளைகளிலும் போபன் அவளுடன் இல்லாமல் இருப்பதுண்டு. வேலை விஷயமாக கோட்டயத்திற்கோ திருவனந்தபுரத்திற்கோ போனால், சில நேரங்களில் இரவில் திரும்பி வரமுடியும் என்று கூறுவதற்கில்லை. ஆனால், அந்தச் சமயங்களில் இந்த அளவிற்கு இதயம் பாதிக்கக்கூடிய வகையில் தனிமையை அவள் உணர்ந்ததில்லை. அப்போதெல்லாம் வெளியே இருக்கும் மூடுபனி உள்ளே நுழைந்து மனதிற்குள் நிறைந்து நின்றுகொண்டு இந்த மாதிரி இருட்டை உண்டாக்கினதில்லை. இப்போதிருக்கும் தனிமை உணர்வு தாங்கிக் கொள்ள முடியாதது. இப்போதைய மூடுபனி அதிகமான கவலையைத் தரக்கூடியது. கடுமையான கவலையை.
சில நாட்களாகவே போபன் இங்கு இல்லாமல் இருப்பது தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இருட்டை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அதற்கேற்ற காரணமும் இருக்கிறது. போபன் முற்றிலும் மாறிப்போய்விட்டான். எந்தச் சமயத்திலும் சிறிதும் எதிர்பாராத அளவிற்கு மாற்றங்கள் போபனிடம் உண்டாக்கிக் கொண்டிருந்தன.
அன்று நினைவில் குளிர்ந்து போயிருந்தாலும் அந்த இனிமையான அதிகாலை வேளையில் போபன் சொன்னான்: ‘‘சூஸன், அவ்வளவு உறுதியா சொல்றியா? உறுதியான நம்பிக்கை கட்டாயம் காப்பாற்றும்.”
நம்பிக்கை உறுதியானதாக இருந்தது.
‘‘இங்கே பாருங்க போபன். இந்த மூடுபனி பூமியை முழுசா மூடியிருக்கு. நமக்கு மிகவும் அருகில் இருக்கும் இடங்களைக்கூட பார்க்க முடியல. அதை நினைக்கிறப்போ கவலை தோணத்தான் செய்யும். ஆனால், அந்தக் கவலை கொஞ்ச நேரத்திற்குத்தான். நிமிட நேரத்திற்கு இருக்கும் கவலையைப் போலவே, இந்த மூடுபனியும் கொஞ்சம் கொஞ்சமா குறைந்து கொண்டே வரும். குறைந்து குறைந்து இறுதியில் இல்லாமலே போகும். அப்போ மகர மாதத்தின் பிரகாசமான சூரியன் மெல்லியக் கதிர்களுடனும், இதயம் நிறைய கருணையுடனும் தன்னுடைய தேரை ஒட்டிக் கொண்டு வரும்” - அவளுடைய வார்த்தைகள் ஒரு கவிதையைப்போல தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.
‘‘இது யாரு? வேர்ட்ஸ்வர்த்தா? லேடி வேர்ட்ஸ்வர்த். இயற்கையைக் காதலிக்கும் கவிஞர். அருமை! மிக மிக அருமை! தொடர்ந்து சொல்லு... கவிதையைத் தொடர்ந்து சொல்லு.”
‘‘கிண்டல் பண்ண வேண்டாம்.”
‘‘கிண்டலா? நானா?”
நாற்காலியைப் பின்னால் இழுத்துப் போட்டுவிட்டு, போபன் எழுந்தான். சூஸனைப் பிடித்து எழ வைத்தான். அவளை அப்படியே தூக்கி மார்பிலும் வயிற்றிலும் தொடர்ந்து முத்தமிட்டான். அவள் கூச்சத்தால் நெளிந்தாள்.
‘‘ச்சே... இப்படியா போரடிக்குறது!”- அவள் எதிர்ப்பைக் காட்டினாள். ஆனால், அவளுடைய எதிர்ப்பு வெறும் நடிப்பு என்பதும், அவளுடைய மனமும் உடலும் எதற்கும் சம்மதிக்கக்கூடிய நிலையில்தான் இருக்கின்றது என்பதும், அவை எதையெதையோ விரும்பிக் கொண்டிருக்கின்றன என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு அவன் படுக்கையறையை நோக்கி நடந்தான்.
‘‘ச்சே... விடுங்க”... அவள் கைகளையும் கால்களையும் உதறினாள். ‘‘அந்த தேவகி இங்கே ஏறி வந்துட்டா?”
அவளுடைய வார்த்தைகள் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் தன் உதடுகளைக் கொண்டு முத்திரை பதித்தான். அவளை மெத்தையில் எறிந்த அவன் நடந்து போய் கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டான்.
அப்படித் தாழ்ப்பாளை இட்டபோது, மனமெங்கும் ஓடிக் கொண்டிருந்த கனவுகளுக்கு, அன்றைய இளமையின் வெறித்தனமான ஆசைகளுக்கு இப்போது தாழ்ப்பாள் விழுந்திருக்கிறது. அந்தத் தாழ்ப்பாளை எடுத்தால், அந்தக் கதவைத் திறந்தால், மீதமிருப்பது மகரமாத மூடுபனி மட்டுமே. பனிப்படலத்திற்குப் பின்னாலிருந்த சூரியன் எங்கே போனது? குளிர்காலத்திற்குப் பின்னால் வரும் என்று கவிஞர் சொன்ன வசந்தம் எங்கே?
சூரியனும் வசந்தமும் எங்கோ போய் மறைந்து விட்டிருக்கின்றன. ஒரு ஆயுள் காலத்தின் தாங்க முடியாத கெட்ட காலத்தைப்போல, ஒரு யுகத்தின் கடுமையான இருளைப்போல மூடுபனி சுற்றிலும் பரவிக் காணப்பட்டது. இந்த ஆயுள்காலத்தின் துன்பம் நீங்கி விடாதா? இந்த யுகத்தின் இருள் மாறிவிட்டதா? சூஸனின் மனம் ஒரு ஒழுங்கே இல்லாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. அவளுடைய மனம் அலையடித்து உயர்ந்து கொண்டிருந்த உணர்ச்சிகளின் இனம்புரியாத ஒரு பேய்த்தனமான நடனம் ஆடப்பட்டுக் கொண்டிருக்கும் மண்டபமாக மாறியது. அவள் மாடியை விட்டு, உள்ளே நுழைந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தாள்.
மணி ஆறரை ஆகியிருந்தது. ஆனால், சூரியன் எங்கே?
பனிப்படலம் மூடிய மலைத்தொடர்களுக்குப் பின்னால் எங்கோ சூரியன் மறைந்திருக்கிறது. அந்தப் பச்சைப் போர்வைகளின் அடர்த்திக்குள் எங்கோ அவளுடைய போபனும் மறைந்திருக்கிறான்.
அவளுடைய புலர்காலைப் பொழுது மழைக்காலத்தைப் போல இருண்டிருந்தது. அங்கு சூரியனும் சந்திரனும் மறைந்துவிட்டார்கள். நட்சத்திரங்கள் இல்லாமற்போயின. பிணம் தின்னிக் காகங்கள் மட்டும் கண்விழித்து, சத்தம் எழுப்பிப் பறந்து திரிந்தன. பித்ருக்கள் முடிவற்ற தலைமுறையின் இறுதிச் சடங்கிற்கு வேண்டிக் காத்துக் கிடந்தார்கள். பாவத்தைக் கழுவுபவர்கள் மத்தியில் குளியல் உண்டாக்கும் ஆரவாரம். கரைகளில் அலைகள் அடித்து உண்டாக்கும் சத்தம்.
மழைக்காலத்தின் இருட்டிற்கு மத்தியில் இருக்கும் புனிதத் தன்மையைப்போல, இருட்டின் ஆழமான கருணையைப் போல, சுற்றிலும் நிறைந்திருக்கும், எல்லாவற்றையும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் மூடுபனி... மனதிற்குள் மூடுபனி ஏற்படுத்தும் சோக உணர்வின் கடுமையான சுமை... சூஸனின் பெருமூச்சுகள் மூடிக் கொண்டிருக்கும் பனிப்படலத்தை அகற்றக்கூடிய வெப்பமாக வெட்டவெளியில் உயர்ந்தபோது, அவளுடைய கண் இமைகளுக்கு நடுவில் வேதனை எரிமலையாக வெளிப்பட்டபோது, அவளுடைய மனதின் உதடுகளிலிருந்து ஒரு மவுன வேதனை பிறந்தது.