உருகும் பனி - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7483
‘‘டாக்டர் சொல்றதுல அர்த்தம் இருக்கு.”
சூஸன் சொன்னாள்: ‘‘இப்படியா விடாம புகை பிடிக்கிறது?”
‘‘ம்... இதோ இன்னொரு ஆளும் வக்காலத்துக்கு வந்தாச்சு.”
போபன் மிசஸ் வர்மாவின் பக்கம் திரும்பினான்: ‘‘ஷாலினி நீங்களாவது எனக்காக கொஞ்சம் வாதாடணும். ஷாலினி வர்மா சிரித்தாள். ‘‘வாதாடுறதுக்கு நான் வக்கீல் இல்லையே! அது மட்டுமல்ல. நான் இந்த இரண்டுக்குமே எதிரானவள். இந்தக் குடிப்பதற்கும் இந்த புகைப்பிடிப்பதற்கும் எதற்குத் தேவையில்லாம தொண்டையையும் இதயத்தையும் புண்ணாக்கிக்கணும்?”
‘‘சரிதான்...” - போபன் விழுந்து விழுந்து சிரித்தான்: ‘‘எனக்கு வக்காலத்து வாங்க அருமையான வக்கீலைத்தான் நான் கண்டுபிடிச்சிருக்கேன்!”
நட்பை வெளிப்படுத்தும் உற்சாகமான நிமிடங்கள் வெளியே இருந்த அழுத்தத்தைக் குறைத்தன.
மறுநாள் போபனின் வீட்டில் ஒரு பார்ட்டி என்ற தீர்மானத்துடன் அவர்கள் பிரிந்தார்கள்.
‘‘பார்ட்டி வைக்கிறது சரிதான்” - வர்மா முன்னெச்சரிக்கை என்பது மாதிரி சொன்னார்: ‘‘சூஸன், எந்தவொரு கடினமான வேலையையும் செய்யக்கூடாது. பார்ட்டி நடக்குறப்போ வந்திருக்குறவங்கக்கிட்ட நலம் விசாரிச்சா போதும். வேலை செய்றவங்களுக்கு உத்தரவு எதுவும் போட வேண்டாம். அதையெல்லாம் தேவகியம்மா பார்த்துக்குவாங்க. புரியுதா?”
‘‘ம்...”
‘‘டேய், இந்த விஷயத்துல நீ மிகவும் கவனமா இருக்கணும்” - வர்மா நண்பனிடம் சொன்னார்.
அந்த இரவு தங்களின் முதலிரவு என்பதாக சூஸன் நினைத்தாள். போபனும்தான். உதட்டுடன் உதட்டை உரசிக் கொண்டு, காதுகளில் ரகசியம் சொல்லி, நீண்ட நேரம் அவர்கள் கண்விழித்துப் படுத்திருந்தார்கள்.
‘‘நான் இப்போ பழைய போபன், சூஸன். உன்னுடைய பழைய போபன். நான் திரும்ப வந்திருக்கேன். திருந்திய மனிதனாகத் திரும்பி வந்திருக்கேன்.”
அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்- இனிமேல் விடவே மாட்டேன் என்பது மாதிரி. அவளுடைய நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்து முறுக்குகின்றன என்பதை அவன் உணர்ந்தான். அவனும் கண்விழித்திருந்தான். வெறிபிடித்த பழைய இரவுகள் திரும்பி வருவதைப் போல் அவன் உணர்ந்தான். ஒருவரையொருவர் தேடக்கூடிய ஆவேசம்... ஒருவரையொருவர் விழுங்கக்கூடிய வேட்கை... வெளியே காற்றில் இரத்தக் குழாய்களை சூடு பிடிக்கச் செய்த இரவு ராகங்கள் மட்டும்...
சூடு தணிந்தபோது, ராகங்கள் மவுனத்திற்குள் ஒளிந்து கொண்டபோது அவன் அவளிடம் சொன்னான்: ‘‘நான் மூன்று மாதங்கள் விடுமுறை வேண்டும்னு மனு கொடுத்திருக்கேன்.” அவள் காரணத்தைக் கேட்பதற்கு முன்பே அவன் விளக்கினான்: ‘‘இங்கேயிருந்து கொஞ்ச நாட்கள் விலகி இருக்குறது உன்னுடைய உடல் நலத்திற்கும், குழந்தையின் உடல் நலத்திற்கும் நல்லதா இருக்கும் என்றார். ‘எனக்கும்’என்பதை இன்னொரு முறை சொன்ன அவன் சிரித்தான்.
சூஸனுக்குத் துள்ளிக் குதிக்க வேண்டும்போல் இருந்தது. அவளுடைய மனம் முழுமையாகத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
‘‘நாளைய பார்ட்டியின் முக்கிய நோக்கமே- இந்தச் செய்தியைக் கூறுவதற்குத்தான். என்ன சொல்ற?”
அவள் எதுவும் சொல்லவில்லை. அதற்கு பதிலாக அவனுடன் எந்த அளவிற்கு ஒட்ட முடியுமோ அந்த அளவிற்கு ஒட்டிப் படுத்திருந்தாள். அவனை இறுக அணைத்துக் கொண்டிருந்த தன் கைகளால் மேலும் இறுக்கமாக அணைத்தாள்.
மறுநாள் பார்ட்டி மிகவும் சிறப்பாக நடந்தது. எல்லோரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த நேரத்தில் டாக்டர் வர்மா வெடிகுண்டை வெடித்தார்.
‘‘நம்முடைய நண்பர் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினியர் போபன் தாமஸ் மூன்று மாத விடுமுறையில் செல்கிறார்.”
‘‘என்ன?”- எல்லோரின் தொண்டைகளிலிருந்தும் ஒன்று போல, ஒரே நேரத்தில் அந்தச் சத்தம் வந்தது. அவர்கள் மத்தியில் குசுகுசுவென பேச்சு உண்டானபோது, வர்மா கைகளைத் தட்டினார். அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
அவர் தொடர்ந்து சொன்னார்: ‘‘உடல் நலத்தை முன்னிட்டு அவர் விடுமுறை எடுக்கிறார். யாரும் அது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. மூன்று மாதங்கள் ஆன பிறகு, அவர் இன்னும் அதிகமான உற்சாகத்துடன் திரும்பவும் வருவார். தற்போதைக்கு இது கட்டாயம் தேவை. அவருடைய மனைவி மற்றும் குழந்தையின் உடல்நலம் முக்கியமானது. அவர்களின் உடல்நலம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், அவர் அருகில் இருப்பது அவசியமாகிறது. அதனால் நாம் நம்முடைய கவலை, வருத்தம் ஆகியவற்றை அடக்கிக் கொண்டு அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஸோ... ஃபார் தி ஹெல்த் ஆஃப் போபன் தாமஸ் அன்ட் ஹிஸ் ஃபேமிலி!”
டாக்டர் குவளையை உயர்த்தினார்.
தொடர்ந்து வந்த நாட்களில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வீட்டில் போபனுக்கும் குடும்பத்திற்கும் விருந்து அளிக்கப்பட்டது.
இறுதியில் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதற்கு முந்தைய நாள் க்ளப்பில் பொதுவான பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. பலரும் கண்ணீருடன் விடை சொன்னார்கள். பெண்கள் சூஸனையும் குழந்தையையும் இறுக அணைத்துக் கொண்டு அழுதார்கள். மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் சூஸன் அவர்களைத் தேற்றினாள்:
‘‘நாம மீண்டும் சந்திப்போமே! இது தற்காலிகமானதுதானே?”
எனினும், பலரும் மூக்கைச் சிந்தினார்கள்.
மரியம்மா அக்கா அருகில் வந்து சூஸனிடம் சொன்னாள்: ‘‘மகளே, எங்கே இருந்தாலும் கடிதம் எழுதணும், தெரியுதா?”
மறுநாள் கலையில் மலை அடுக்குகளை விட்டுக் கார் கீழ்நோக்கி இறங்கியது. போபன்தான் காரை ஓட்டினான். முன் இருக்கையில் சூஸனும் அன்னமோளும் உட்கார்ந்திருந்தார்கள்.
சூஸன் விலகிப் போய்க் கொண்டிருக்கும் பனிப்படலம் மூடிய மலைகளைத் திரும்பிப் பார்த்தாள். பனி போர்த்திய மலைகள் சிறிது சிறிதாகிக் கொண்டே வந்தன.
‘‘பார்த்துக்கோ... பார்த்துகோ... காரணம்... நாம இனிமேல் எப்பவும் இந்தப் பகுதிக்கு திரும்பி வரப்போறது இல்ல...”
‘‘என்ன சொன்னீங்க?” - சூஸன் ஆச்சரியத்துடன் கேட்டாள். ‘‘விடுமுறை முடிந்த பிறகு நாம என்ன செய்வோம்?”
‘‘அதுதான் அதன் சர்ப்ரைஸ்” - போபன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்: ‘‘நான் கொடுத்திருப்பது விடுமுறைக்கான மனு இல்ல. ராஜினாமா கடிதம்...”
‘‘என்ன?” - சூஸன் அதிர்ச்சியடைந்தாள். ‘‘பிறகு நாம எப்படி வாழ்றது?”
‘‘நீ அதிர்ச்சியடைக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. உனக்கு மெண்டல் டென்ஷன் இருக்கக்கூடாது. உன் அன்னமோள் இல்லையா? உன் போபன் இல்லையா? நமக்கு மேலே வானமும் கீழே பூமியும் இல்லையா? வானத்தில் பறவைகள் இல்லையா? நாமும் அவற்றைப் போல பறந்து பறந்து...”
‘‘நானல்ல. போபன், நீங்கதான் கவிஞர்” - சூஸன் மனம் குளிரச் சிரித்தாள்.