குஞ்ஞம்மாவும் நண்பர்களும் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6355
விசாலமான உலகம் மிகவும் அமைதியாக இருந்தது. அப்படியென்றால் முழுமையான அமைதியா? இடிக்கப்பட்டிருந்த அந்த தேங்காய்கள் போய்விழும் இடத்திற்கு அருகில் அவள் கண்களை ஓட்டினாள். அப்படியே நின்றாள். ஐந்து நிமிடங்கள். அந்த இளைஞன் பதுங்கியவாறு வெளியே வந்து சொன்னான்: "மிகவும் நன்றி!''
"போங்க.''
"தெரியும். குஞ்ஞிப் பாத்தும்மாவின் மகள்தானே?''
"நீங்க?''
"பாவாக்குட்டி.''
"என்ன?''
"பயந்தாச்சா?''
"இல்லை...'' - பயந்து கொண்டே சொன்னாள்.
"வரட்டுமா. நரிகள் போயிடுச்சு.''
"ம்...''
பாவாக்குட்டி நிழல்களுக்கு மத்தியில் நடந்து வயல்களை நோக்கி நடந்து போவதை கதீஜா பார்த்தாள். பிறகு அவனைப் பார்க்கவில்லை. தாங்க முடியாத பயம். அவள் உள்ளே வந்து கதவை அழுத்தி அடைத்துவிட்டு, தாழ்ப்பாளைப் போட்டாள்.
அன்று தனிமையில் உட்கார்ந்து அவள் பலவற்றையும் சிந்தித்துப் பார்த்தாள். அவன்தான் பாவாக்குட்டியா? அவனைப் பற்றி அவள் முன்பே கேள்விப்பட்டிருக்கிறாள். முதலில் கேள்விப்பட்டது, பீடித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது. அப்போது அவன் கடுமையான சொற்பொழிவுகளைச் செய்திருக்கிறான். பாவாக்குட்டியைப் பற்றி இரண்டு விதமான கருத்துகளை கதீஜா கேள்விப்பட்டிருந்தாள். "தைரியமானவன்- நல்லவன்- கொஞ்சம் படித்தவன்- அவன் சொற்பொழிவாற்றும் போது அவனிடமிருந்து கண்களை எடுக்கத் தோன்றாது" - இப்படிச் சில. அதற்கு நேர்மாறான கருத்தும் உண்டு. சைத்தான் பிடித்தவன்- படைத்தவனைப் பற்றிய தேடல் இல்லை- பள்ளிவாசலுக்குள் நுழைவதில்லை- தொழுகை நடத்துவதில்லை- மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பவன். இவற்றில் எது உண்மையானது? தூக்கம் வரும்வரை கதீஜா சிந்தித்துப் பார்த்தாள். ஒரு முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை. அதாவது - உண்மையைத் தெரிந்தவர்கள் எவ்வளவு குறைவானவர்களாக இருக்கிறார்கள்!
அன்று இரவு கதீஜா பயங்கரமான கனவுகளைக் கண்டாள். ஈட்டியின் நுனியில் குத்தப்பட்ட தலைகள்... வானத்தின் விளிம்பு வரை வளைந்து நெளிந்து செல்லும் குடல் மாலைகள்... அதிலிருந்து அடர்த்தியான ரத்தம் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது. அந்த ரத்த ஆறு ஒரு மலைச்சரிவில் போய் விழுந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு சிவப்பு வெளிச்சம் பரவியிருக்கிறது. ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் தடிமனான மரங்களில் மனிதர்கள் கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த மனிதர்களின் மார்புகளில் இருந்து தோலை உரித்து விட்டிருக்கிறார்கள். ரத்தம் வழியும் பச்சை மாமிசம் பிதுங்கிக் கொண்டு நின்றிருந்தது. சுற்றிலும் ஈட்டிகளும் மண்வெட்டியும் கத்தியும் வைத்திருக்கும் மனிதர்கள் உரத்த குரலில் சத்தம் போட்டவாறு நடனமாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கால்களில் மருதாணி போட்டதைப்போல ரத்தம் தோய்ந்திருந்தது. அந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஒரு இளைஞன்- அது பாவாக் குட்டிதான்.
கதீஜா அதிர்ந்துபோய் எழுந்தபோது, வெயில் சாளரத்தின் வழியாகச் சிரித்துக் கொண்டே கடந்து வந்து கொண்டிருந்தது. "பயப்பட வேண்டாம்... நான் இங்கே இருக்கேன்" என்று வெளிச்சம் கூறுவதைப் போலத் தோன்றியது. "அடடா! என் கடவுளே!" என்று கூறியவாறு கதீஜா சமையலறையை நோக்கித் தளர்ந்த நடையுடன் சென்றாள்.
பாவாக்குட்டியின்மீது கதீஜாவிற்கு பயமும் காதலும் சேர்ந்து கலந்த ஒரு மனநிலை தோன்றியது. அந்த அறிமுகம் எப்படிப் புதுப்பிக்கப்பட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தெரியாது. ஜின்னுகளுக்கும் மலிக்குகளுக்கும் தெரியாது. அவர்கள் அனைவரும் பூமிக்கு மேலே பயணிப்பவர்கள் ஆயிற்றே! பாவாக்குட்டி அந்த சமயங்களில் பூமிக்கு அடியில் பயணித்துக் கொண்டிருந்தான். மேலே போலீஸ்காரர்கள் இருந்தார்கள். மெதுவாக, அந்தப் பழைய தேங்காய்கள் போடப்படும் இடத்திற்கு அருகில் நின்று கொண்டு இரவு வேளையில் சில அழுத்தப்பட்ட உரையாடல்கள் நடந்தன.
"ஏன் இப்படித் திரியிறீங்க?''
"போராட்டமாச்சே!''
"யாருடன்?''
"அரசாங்கத்துடன்!''
"எதற்காக?''
"பிற்போக்கு சக்திகளை அழிக்கணும்.''
"எதற்கு?''
"சமத்துவம் கொண்ட ஒரு அழகான உலகத்தைப் படைக்க வேண்டும்.''
"அதனால்தான் இந்த இருட்டில் நடந்து போறீங்களா?''
"ஆமாம்...''
"எங்கே படைக்கப் போறீங்க?''
"இந்த நாடு முழுவதும்.''
"புத்திசாலி! என் கடவுளே! அது திடீரென்று வருமா?''
"இல்லை!''
"அப்படியா? எனக்குத் தெரியலையே!''
"முழுமையான சுய உணர்வுடன் பார்க்க வேண்டும்.''
"பிறகு... மனிதர்களில் எல்லாரும் சுய உணர்வு இல்லாமலா நடக்கிறார்கள்? இந்த நிலத்திலும் அந்த நிலத்திலும் பள்ளிவாசல் இருக்கும் இடத்திலும் இதுவரை எதுவும் உருவாக்கப்பட வில்லையே!''
"மெதுவாகப் பார்க்கலாம். ஒரு புதிய உலகம் உருவாகி வருகிறது!''
"அப்படியென்றால், இறுதி நாள் கடந்துவிட்டதா? எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அப்படி படைப்பது பகல் வேளையில் இருந்தால்தானே வசதியாக இருக்கும்? நல்ல காரியத்தைச் செய்யறப்போ, நாட்டில் இருப்பவர்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்வார்களே!''
"பிற்போக்கு எண்ணம் கொண்ட மோசமான சக்திகளை அனுமதிக்க மாட்டோம்.''
"அவர்கள் யார்? நம் நாட்டில் இருக்கிறார்களா?''
"எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ரஷ்யாவில் மட்டும் இல்லை.''
"இங்கே, இப்போ யார் இருக்காங்க?''
"இங்கும் இருக்கிறார்கள்.''
"இரவு வேளையில் நிலத்தில் நிற்கிறப்போ திடீரென்று தோன்றுவார்களா?''
"இல்லை. அவர்களுடைய மையம் அமெரிக்காதான்.''
"அது சீமைக்கு அப்பால்தானே இருக்கு?''
"ஆமாம்...''
"அதற்கு இங்கே எதற்கு ஒளிஞ்சு திரியணும்?''
"அதைப் பற்றிக் கொஞ்சம் படிக்கணும்.''
"உண்மையாக இருக்கலாம். பசிக்கலயா?''
"இல்லை. நான் உணவு சாப்பிட்டுட்டேன்.''
சிறிது நேரத்திற்கு ஒரே அமைதி. இருட்டு மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அருகில் நின்றிருப்பவர்களால்கூட ஒருவரின் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு கேள்வி...
"கொல்லுவீங்களா?''
"யாரை?''
"மனிதர்களை...?''
"கொல்ல வேண்டியது வந்தால் கொல்வேன். அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அடிப்பேன்.''
"மனிதர்களை?''
"ஆமாம்...''
"அடிப்பதால் மனிதர்கள் நன்றாக ஆவார்கள் என்றால், அரசாங்கம் உங்களை இப்போ எவ்வளவு அடிச்சிருக்கு! ஆனால், நீங்கள் மாறவே இல்லையே!''
"ஆனால், நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் சக்தி.''
"வளரும் சக்தி மற்றவர்களை அடிக்கணுமா?''
"போராட்டம்தான் வாழ்க்கை.''
"என்னவோ? கஷ்டங்களும் பிரச்சினைகளும் இல்லாமல் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்குத்தானே இந்த வேலைகள் எல்லாம்?''
"ஆமாம்...''
பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு. சிறிது நேரத்திற்கு உரையாடல் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் அவள் கேட்டாள்:
"நான் வர்றேன். பெரிய உம்மா கூப்பிடுவாங்க.''
நிழல்கள்தான் பேசிக் கொண்டிருந்தன. அதனால் தெளிவில்லாமல் இருக்கும். எனினும் சில நாட்களில் சுவரில் காது முளைக்கும். அப்படிப்பட்ட ஒரு செவி பெரிய உம்மாவின் அறைக்குள் நுழைந்தது. அத்துடன் ஒரு சூறாவளியும் ஆரம்பமானது.
மறுநாள் பத்து மணிக்கு குஞ்ஞிப் பாத்தும்மா குடையை வைத்துக் கொண்டு கையை வீசி வீசி தன்னுடைய வீட்டிற்கு வந்தாள். வந்து நுழைந்தவுடனே குடையை ஒரு மூலையில் எறிந்து விட்டு உள்ளே வந்து கேட்டாள்: