Lekha Books

A+ A A-

குஞ்ஞம்மாவும் நண்பர்களும் - Page 25

kunjamavum nanbargalum

சோயுண்ணி குஞ்ஞிப் பாத்தும்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனதில் பல காட்சிகளும் பாய்ந்து பாய்ந்து போய்க் கொண்டிருந்தன. குஞ்ஞம்மாவும் சாத்தப்பனும் கோவிந்தக் குறுப்பும் கோபாலன் நாயரும் ஆரிய சமாஜமும் - எல்லாம். குஞ்ஞிப் பாத்தும்மா மீண்டும் அழைத்து சொன்னாள்: "காம்பு பழுக்காத வெற்றிலைதான் வேணும். உனக்கு கேட்கிறதா?''

"கேட்குது...''

ஒரு பிறப்பு

வெயில் இல்லை. மழையும் இல்லை. ஒரே மங்கலாக இருந்தது. பிரபஞ்சம் ஒரு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறது. கோவிந்தக் குறுப்பு தானிய அறையின் திண்ணையில் உட்கார்ந்து உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மழை பெய்யுமா? இல்லை. வெயில் இருக்குமா? உறுதியாகக் கூற முடியாது. பிரபஞ்சத்திற்கும் ஒரே நிலை இல்லை என்று குறுப்பிற்குத் தோன்றியது. சூரிய கதிர்கள் புன்னகையைத் தவழ விட்டு நின்று கொண்டிருக்கும்போது நாம் கூறுவோம்: "என் அழகான பிரபஞ்சமே!"  என்று. அதைக் கூறி முடிப்பதற்கு முன்பே, காட்சி மாறி விடும். சூரியன் மேகங்களுக்கு மத்தியில் போய் மறைந்துவிடும். பிரபஞ்சத்தின் நிலைமை இப்படி நம்பிக்கையில்லாமல் இருக்கும்போது, அதன் படைப்பான மனிதனை எப்படி நம்ப முடியும்?

கோவிந்தக் குறுப்பு ஐந்து முறை இந்தக் கேள்வியைத் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். எப்படி கேட்காமல் இருப்பார்? வாழ்க்கையின் அனுபவங்கள்தான் அவரை உட்கார வைத்து சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பே, சோயுண்ணியைப் பற்றி யாராவது ஒரு மோசமான வார்த்தையைச் சொன்னால் அதை கோவிந்தக் குறுப்பால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. குறுப்பு சாதாரணமாகவே அவனை "மடையா" என்று தான் அழைப்பார். ஆனால், "நல்லவனே" என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வார். தனிப்பட்ட முறையில் தன்னால் முடியக்கூடிய உதவிகளையெல்லாம் அவனுக்குச் செய்வார்.

சோயுண்ணி குஞ்ஞிப் பாத்தும்மாவின் சிஷ்யனாக ஆன பிறகும் அந்த உதவிகள் தொடர்ந்திருக்கின்றன. எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு, இறுதியில் அவருக்கே ஏமாற்றம் உண்டாகி விட்டதே? ஒரு நாள் காலையில் பார்க்கும்போது சோயுண்ணி அப்துல் ரஹிமானாகி நின்று கொண்டிருக்கிறான். அவன் திருடிவிட்டு சிறைக்குப் போய்விட்டான் என்று கேள்விப்பட்டால், குறுப்பு அதிர்ச்சியடைய மாட்டார். "மடையனுக்கு திருடத் தெரியாது" என்று நினைத்துக் கொண்டு அவனை விடுதலை செய்வதற்குத் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்துவார். அடிதடி ரகளை பண்ணினான் என்று வந்தால், சோயுண்ணியின் வீர சாகசங்களைப் பற்றி, அருகிலிருந்த தேநீர் கடையின் பெஞ்சின் மீது உட்கார்ந்து கொண்டு ஒரு சிறிய சொற்பொழிவே நடத்துவார். ஆனால், ஏமாற்றிவிட்டானே! இஸ்லாம் மதத்தில் சேர்ந்துவிட்டானே! அதை நினைத்தபோது, குறுப்பிற்கு கோபம் அதிகமானது. இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை மதம் மாறச் செய்வதைப் பற்றி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா? ஆனால், ஒருத்தனும் எதிர்க்கவில்லை. உலகம் மோசமானதாக ஆகிவிட்டது. குறுப்பிற்கு இந்த முழு உலகத்தின் மீதும் வெறுப்பும் கோபமும் உண்டாயின. வெறுப்பும் கோபமும் வரும்போது, அது உலகத்தின் மீது முழுமையாகத்தானே? அப்துல் ரஹிமானை குறுப்பு இதுவரை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. எனினும், அவனுடைய புதிய உருவம் மனதிற்குள் நிழலிட்டிருந்தது. புள்ளிகள் போட்ட வேட்டி, வளர்த்து கத்தரித்த தாடி, தொப்பி- வேண்டாம்... பார்க்க வேண்டாம். இனிமேல் அழிக்கத்தான் வேண்டும். குறுப்பு மெதுவான குரலில் கூறினார்: "மடையன்... மடையன்... மடையன்.'' அப்போதும் பிரபஞ்சம் மங்கலாகத்தான் நின்று கொண்டிருந்தது. செடி கொடிகளுக்கு எந்தவொரு மாறுபாடும் உண்டாகவில்லை. ஒரு பல்லி மட்டும் எதிர்காலத்தை வாழ்த்தியவாறு, தானிய அறையின் உத்தரத்தை நோக்கி ஓடியது.

"என்ன குறுப்பு, சிந்தனையில் மூழ்கியிருக்கீங்க?'' -பின்னாலிருந்து ஒரு கேள்வி. திரும்பிப் பார்த்தார். கோபாலன் நாயரும் அச்சுதன் நம்பூதிரியும் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

"உட்காருங்க'' என்று கம்பீரமாக கூறிய குறுப்பு, ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு, ஒரு பீடியை கோபாலன் நாயரிடம் கொடுத்தார். நம்பூதிரியோ, தன் கையிடுக்கில் இருந்து ஒரு கட்டு தாள்களை எடுத்து முன்னால் வைத்தார். ஒரு கோழி முட்டையைத் தரையில் வைப்பதைப் போன்ற மென்மைத் தன்மையுடன் நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

"என்ன ஒரு சிந்தனை?'' - நம்பூதிரிதான் ஆரம்பித்தார். குறுப்பு பேசவில்லை. மீண்டும் கேள்வி. மீண்டும் அமைதி. மூன்றாவது தடவையாகக் கேட்டபோது, குறுப்பு கண்ணாடியைக் கொஞ்சம் சரி செய்தார். பிறகு சொன்னார்:

"நீங்கள் எல்லாம் இருக்கும்போது இந்த நாடு சரியாக ஆகாது.''

"இல்லை'' - கோபாலன் நாயர் ஒப்புக்கொண்டார். "ஐந்தாறு பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, பணம் எதுவும் கையில் இல்லாமல் இருப்பது- இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்குறப்போ, நாடு சரியாக ஆகாது, குறுப்பு. சரியாக ஆகாது.''

"தமாஷாகப் பேசுவதை நிறுத்துங்க.'' - குறுப்பு கடுமையான மன நிலையில் இருந்தார்.

"இப்போ கூறியதைப் போன்ற ஆழமான விஷயங்களை மிகவும் குறைவாகவே நான் என்னுடைய வாழ்க்கையில் கூறியிருக்கிறேன். எல்லா நாட்களிலும் இதைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. சில நாட்கள் மட்டும் எனக்கு அறிவு உண்டாகும். மற்ற நாட்களில் அது இருப்பதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறேன்.''

"இன்று அறிவு உள்ள நாள்... அப்படித்தானே?'' - நம்பூதிரி சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கேட்டார்.

"ஆமாம்...'' - கோபாலன் நாயர் அமைதியான குரலில் தொடர்ந்து சொன்னார்: "சில நாட்களில் எனக்கு தற்கொலை செய்தால் என்ன என்று தோன்றும்.''

"அப்படியென்றால் ஊரில் இருந்து சுமை நீங்கியது'' - குறுப்பு சற்று பிடிவாதத்துடன் சொன்னார்.

"ஆனால், நம்முடைய கவலை என்னவென்றால், நல்ல நான்கு பிரி கயிறு கிடைக்கவில்லை. நம்முடைய கயிறு தொழில் அழிந்து கொண்டிருக்கிறது. இல்லையா குறுப்பு? இல்லாவிட்டால் இந்த குஞ்ஞம்மாவைப் போல உள்ளவர்கள் திரிக்கும் கயிறுக்கு அந்த அளவிற்குத்தான் உறுதி இருக்கும்.''

"குஞ்ஞம்மா இப்போது கயிறு திரிக்கும் வேலைக்கெல்லாம் போவதில்லை.'' -குறுப்பு அதை கோபத்துடன் கூறினார்.

"ஏன்?''

"கர்ப்பமாக இருக்கிறாள் அல்லவா?''

"எத்தனை மாதங்களாகி விட்டன?''

-அச்சுதன் நம்பூதிரி பதைபதைப்புடன் கேட்டார்.

"பத்து... இன்னொரு வகையில் பார்த்தால் இதையெல்லாம் என்னிடம் கேட்க வேண்டிய அர்த்தம் என்ன? சாத்தப்பனிடம் போய்க் கேளுங்கள்.''

"கேட்க வேண்டியது அவனிடம்தான்'' - கோபாலன் நாயர் ஒப்புக்கொண்டார். "ஆனால், அவர்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள், குறுப்பு?''

"திருடுவான்'' - குறுப்பு கோபத்துடன் சொன்னார். "என்னுடைய தேங்காய்கள் இருக்கின்றன அல்லவா? பிறகு... அவனுக்கு என்ன கவலை? இங்குதான் வேலை என்றொரு பெயர் வேறு.''

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel