சப்தங்கள் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
"அது வேண்டாம். நீங்க இந்த பூமியில இருக்குற ஒரு மனிதர். சிந்திச்சு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க. நாம எதையெதையோ பேசி வெறுமனே நேரத்தைப் போக்கிக்கிட்டு இருக்கோம். நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ, தாராளமா சொல்லுங்க. எனக்கு எழுதுறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு!''
"நான் எந்த இடத்துல நிறுத்தினேன்?''
"மணமுள்ள கை லேஸ். அப்போத்தான் நீங்க பிரகாசமா வானத்துல இருக்குற சந்திரனைப் பார்த்தீங்க. ஆமா... நீங்க அந்தக் கைலேஸுக்கு முத்தம் கொடுத்தீங்க. ராத்திரியில படுத்துக்கிட்டு கை லேஸைக் கையில வச்சுக்கிட்டு கனவுகள் கண்டீங்க!''
"சரிதான். அதுல செண்ட் தடவப்பட்டிருந்துச்சு. ரொம்பவும் விலை உயர்ந்த செண்ட். நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரோட மனைவி உபயோகிக்கிற செண்ட் அது. எனக்கு இந்த விஷயம் வேலைக்காரி சொல்லித்தான் தெரியும். என் பாக்கெட்ல அந்த மகத்துவமான கை லேஸை வச்சிருந்தேன். "மாஸ்டர், உங்களுக்கு சின்ன அம்மாவோட மணம்" என்று அவள் சொன்னாள். நான் கேட்டேன்: "எந்த சின்னம்மாவைச் சொன்னே?" அவள் சொன்னா: "நம்மோட" அவள் இப்படிச் சொன்னது எனக்கு அவள் காப்பியும் பலகாரமும் கொண்டு வந்து தந்த சமயத்துல. நான் அவள் பேசினதுல கவனமே வைக்கல. நான் அப்போ என்னோட காதலியைப் பற்றி நினைச்சக்கிட்டு இருந்தேன்!''
"பிறகு?''
"அங்கே ஒரு கல்யாணம் நடந்தது. நான் தங்கியிருந்த வீட்ல இருந்த ஒரு இளம் பெண்ணுக்கு. அன்னைக்கு ஒரே வெடிச்சத்தமும், ஆர்ப்பாட்டமுமா இருந்தது. விருந்து வேற. முக்கிய ஆண்களும் பெண்களும் ஏராளமா கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. ஒவ்வொருத்தருக்கும் எது எது தேவையோ எல்லாமே அங்கே இருந்துச்சு. மது தேவைப்பட்டவங்களுக்கு மதுவும் போதை மருந்துகள் தேவைப்பட்டவங்களுக்கு அதுவும். சாயங்காலத்துக்கு முன்னாடியே நான் நிதானத்துல இல்லாம இருந்தேன்."
"வழக்கம்போல அன்னைக்கும் என்னோட காதலி வந்தா. நான் அவ கூட போனேன். என்னை ஒரு வண்டியில ஏற்றிக்கொண்டு போனா.''
"பிறகு?''
"கனவு காண்ற கண்களோட என்னைப் பார்த்து சிரிச்சா. என்னை வண்டியில இருந்து இறக்கிவிட்டா. தெருவுல இருந்த அறையில தள்ளி கதவை அடைச்சா. என்னை இறுக்கமா கட்டிப் பிடிச்சா. படுக்கையில உட்காரச் சொன்னா. அவளே பிடிச்சு உட்கார வச்சா. அறை இருட்டுல மூழ்கிக் கிடந்தது. சொர்க்கம்னு தான் சொல்லணும். நான் அவளோட முகத்துலயும் கண்கள்லயும் முத்தம் தந்தேன். அழகான மார்பகங்களில் திருப்பித் திருப்பி நூறு முறை முத்தம் தந்தேன். உலகத்தையே மறந்து நாங்க ஒருவரையொருவர் இறுகத் தழுவி இன்பத்தில் ஆழ்ந்துபோய்க் கிடந்தோம்.
நான்... நான் ஏதோ மலைமேல இருந்து புறப்பட்டு பாய்ஞ்சு வர்ற நதி மாதிரி ஆனேன். பல யுகங்களாக நதியின் ஓட்டமே இல்லாமல் இருந்த மலை என்னோட பலத்தால் தகர்ந்து... நொறுங்கியது. பயங்கரமான வேகத்துடன் நான் பாய்ந்து ஓடினேன். ஓடுகிற ஓட்டத்தில் என்னையே நான் இழந்தேன். கடைசியில் ஆனந்த வெள்ளத்தில் சிக்கி, நான் திக்குமுக்காடிப்போய் நின்னேன். கண்களைத் திறந்து பார்த்தேன். விளக்கு மீண்டும் எரிஞ்சது. என் தலையில வெளிச்சம் வந்து விழுந்துச்சு. என் மனசுல பயங்கர சந்தோஷம். பல யுகங்களாக நான் காணாத ஒரு திருப்தியை அப்போது உணர்ந்தேன். ஆனால், என்னைச் சுற்றிலும் பார்த்தேன். ரசிக்கிற மாதிரி இல்ல. மேல் பூச்சு ஆங்காங்கே உதிர்ந்து சிதிலமடைந்து போயிருக்கும் சுவர். கொடியில் தொங்கிக் கொண்டிருந்த நாற்றம் பிடித்த துணிமணிகள். மண்ணாலான திண்ணையில் ஒரு இரும்புப் பெட்டி. சுவரில் திரைப்பட நடிகைகளின்- நடிகர்களின் புகைப்படங்கள். அறையெங்கும் ஒரு கெட்ட நாற்றம்! அதற்கு மத்தியில் ஒரு இனிய நறுமணமும்!
"ஏதாவது குடிக்கிறீங்களா?" அவள்தான் கேட்டாள். அதைக்கேட்டு நான் நடுங்கிப்போனேன். என்ன குரல் அது! ஒரு கிழட்டு காகத்தின் குரலைப்போல் இருந்துச்சு. பெண்மையின் அடையாளமே இல்ல! கறுப்பு முடிகள் பாடீஸுக்குள் இருந்து எட்டிப் பார்த்துச்சு. எனக்கு ஒருவிதத்துல வியப்பாகவும் பயமாகவும் வெறுப்பாகவும் இருந்துச்சு.
நான் எழுந்து மார்பகங்களைப் பிடிச்சேன். பஞ்சாலான ரெண்டு பொட்டலங்கள்! அவ்வளவுதான்- நான் அப்படியே உட்கார்ந்துட்டேன். நேரம் மணிக்கணக்கா ஓடிக்கொண்டே இருந்துச்சு. அந்த மார்பகங்களை பாடீஸோடு சேர்த்து நான் கழற்றினேன். முடிகள் உள்ள ஒரு ஆணின் நெஞ்சு!
அந்த பஞ்சாலான மார்பகங்களைக் கொண்ட பாடீஸை நான் படுக்கையில் வச்சேன். அழகான மார்பகங்கள்! எனக்கு கோபமா, வியப்பா, கவலையா, வெறுப்பா, பயமா என்ன வந்ததுன்னே எனக்கே தெரியல. நான் ஒரு சிகரெட்டை உதட்டுல பொருத்தி புகையை விட ஆரம்பிச்சேன். புகை...! புகை நிரம்பிய வாழ்க்கை! நகரத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் வெடிச்சத்தம் காதில் வந்து விழுந்துச்சு.
நான் கேட்டேன் :
"நீ ஆணாகப் பிறந்து...?"
8
"அவள்- அது- அவன் என் பக்கத்துல வந்து நின்னான். பஞ்சால் ஆன மார்பகங்கள் கொண்ட பாடீஸை எடுத்து அணிஞ்சான். அதற்கு மேலே ப்ளவுஸைப் போட்டான். பிறகு அழகா புடவையைக் கட்டியவாறு என்னைப் பார்த்துக் கேட்டான்:
"என்னைப்போல இருக்குறவங்களை நீ பார்த்ததே இல்லியா?"
"உன்னைப்போல உள்ளவங்களையா?"
"எல்லா இடங்கள்லயும் இருக்குறாங்களே!"
"எல்லா இடங்கள்லயும்...!" (எல்லா காலங்கள்லயும்) பின்னாடி தான் எனக்கே தெரிஞ்சது- அந்தக் காலத்துல மன்னர்களோட அரண்மனைகள்ல, சக்கரவர்த்திகளின்... ஜனாதிபதிகளின்... சர்வாதிகாரிகளின் மாளிகைகள்ல இவங்க இருந்திருக்காங்க. ஆண் விபச்சாரிகள்! பெண்களின் உடைகளை அணிந்துகொண்டு நடக்குறவங்கள்லாம் இப்படித்தானா? நான் அப்படியே பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருந்தேன். எனக்கு பெண்களை அறிமுகமே கிடையாது. ஆடை இல்லாம நிர்வாணமா, அவுங்களை நான் பார்த்ததும் இல்லை. இருட்டுல காமத்தின், மதுவின், காதலின் போதையில் நான் என்னென்னவோ செஞ்சிட்டேன். என் உடம்பு முழுக்க வியர்வை. நான் உட்கார்ந்து என்னை நானே கடுமையா திட்டினேன். நான் என்ன காரியம் செஞ்சிட்டேன்? சொல்லப் போனா ஒருவித பரிதாபமும்... கோபமும் அப்போ வந்துச்சு. அதோட இரக்கமும். மனசின் ஒரு மூலையில் அருவருப்பும் வெறுப்பும்கூட தோணிச்சு. என்னைப்போல ஒரு ஆண்!
நான் கேட்டேன்:
"உன்னைப்போல இருக்குறவங்க இங்கே எவ்வளவு பேர் இருக்காங்க?"
"இங்கே நிறைய பேர் இருக்காங்க!"
"இது எப்படி...?"
அவன்... அது... முகத்தைத் திருப்பிக்கொண்டான். நான் அவனை மேலும் வற்புறுத்தவே அவன் சொன்னான்:
பிறகு... லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டில் தடவிக்கிட்டே அவன் சொன்னான்: "எங்களுக்குன்னு சங்கம் இருக்கு. ஒண்ணு இல்ல... நிறைய சங்கங்கள் இருக்கு.