சப்தங்கள் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
"எனக்கு இதுவரை தற்கொலை செய்யணும்னு தோணியதே இல்ல. வாழ்க்கை, அதன் கடைசி எல்லையில் தோல்வியடைஞ்சிடுதுன்னு வச்சுக்கோங்க. பிறப்புன்னு ஒண்ணு இருந்தால், மரணம்னு ஒண்ணு கட்டாயம் இருக்கும்ன்ற உண்மையை மனசுல வச்சுக் கிட்டுத்தான் நான் இதைச் சொல்றேன். அதாவது- மரணமடையிறது வரை நாம வாழவேண்டும். நல்ல தைரியசாலியா வாழணும். சுய நினைவு கொண்ட ஒரு மனிதனாக வாழணும். இந்த பூமியில்... மகாபிரபஞ்சங்களில் இருக்கும் ஒரு மனிதன் நான்... இந்த நிலையைத்தான் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்!''
"வாழ்ந்து என்ன செய்யப் போறீங்க?''
"எதுவும் செய்யலாமே! இந்த உலகம் முழுமையா உங்க முன்னாடிதான் இருக்கு! எது வேணும்னாலும் நாம செய்ய வேண்டியதுதான். ஒரு தீர்மானத்திற்கு நீங்க வரணும். அதுதான் முக்கியம். நீங்க இந்த நாட்டோட ஜனாதிபதியா ஆகணும்னு நினைக்கிறீங்கன்னு வச்சுக்கோங்க. நினைச்சா மட்டும் போதாது. அதற்காக கடுமையா முயற்சிக்கணும். வெற்றி பெறுவோமா தோல்வியைத் தழுவுவோமா என்றெல்லாம் பார்க்கக்கூடாது. முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்!
நான்தான் சொன்னேனே- என்னோட வாழ்க்கையில் ஒரு தத்துவத்திற்கும் இடமில்லை. நான் என்ன தீர்மானத்திற்கு வருவது! நான் என்ற வீடு தகர்ந்து போயாச்சு. அம்மா இல்ல. அப்பா இல்ல. யாருமே இல்ல... இந்த உலகத்துல நான் மட்டும் தனி. நான்தான் சொன்னேனே, என்மீது அன்பு செலுத்தவோ வெறுக்கவோ ஒரு உயிர்கூட இல்ல. அதனாலதான் நான் உங்கக்கிட்ட தற்கொலையைப் பற்றிக் கேட்டேன்.''
"நீங்க இதுவரை சுகம்னா, மகிழ்ச்சின்னா என்னன்னு உணர்ந்திருக்கீங்களா?''
"ஒரு கனவைப்போல.''
"அப்படின்னா?''
"பசிக்கிறப்போ சாப்பிடுவேன். தாகம் எடுக்குறப்போ தண்ணீர் குடிப்பேன். குளிர்னு உணர்றப்போ நெருப்பு முன்னாடி போய் உட்காருவேன். தூக்கம் வர்றப்போ தூங்குவேன்- இதெல்லாம் சுகமான அனுபவங்கள்தானே!''
"பிறகு?''
"சந்திரோதயம், சூரிய உதயம், அழகான மலர்கள், அழகான பெண்கள், இசை- இவை எல்லாம் என் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கு!''
"பிறகு?''
"மது, போதை மருந்துகள்- இவற்றிலும் நான் ஆனந்தத்தை அனுபவித்திருக்கிறேன்!''
"பிறகு?''
"அரிப்பு வந்து சொறியிறதுல சுகம் தெரிஞ்சிருக்கு. மூத்திரம் இருக்கணும்னு தோணி, மூத்திரம் பெய்யுறப்போ ஒருவித சுகத்தை உணர்ந்திருக்கேன். இப்படிப் பார்க்கப்போனா, வாழ்க்கையில் நிறைய சுகமான அனுபவங்கள் இருக்கத்தான் செய்யுது!''
"நீங்க ஏதாவது சொந்தமாகச் செய்து, அதனால் உங்களுக்கு சந்தோஷம் கிடைச்சிருக்கா? விவசாயம் செய்வது... ஒரு செடியை நட்டு வச்சு, நாளடைவில் அது மலர்களோடும் காய்களோடும் பூத்துக் குலுங்கி நிற்பதைப் பார்ப்பது... ஏதாவது ஒரு புதிய பொருளை நாமே படைப்பது... தாகத்தால் களைச்சுப்போய் வந்து நிற்கிற நாய்க்கு தண்ணீர் தருவது... பசியால் வாடி நிற்கிற மனிதனுக்கு உணவு தருவது... இப்படி...''
"உங்களுக்குத் தெரியும்ல- நான் சொந்தமா ஒரு காரியம் பண்ணினேன்னா- அது மனிதர்களை வெடி வச்சுக் கொன்னது மட்டும்தான். மனிதர்களின் ரத்தத்தைக் குடிச்சிருக்கேன். பிறகு... ஒரு முறை தற்கொலை செய்ய முயன்றிருக்கேன்!''
"பிறகு?''
"அதையும் சொல்லிர்றேன். நான் இந்த ராத்திரியே புறம்படலாம்னு இருக்கேன்!''
"எங்கே?''
"இது நான் பிறந்த ஊராச்சே! என்னைப் பெற்ற அம்மாவையும், அப்பாவையும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். ஒவ்வொரு வீடா நான் ஏறி இறங்கப் போறேன். ஒவ்வொரு பெண்ணைப் பார்த்தும் நான் கேட்பேன்: "நீங்க என் அம்மாவா? நீங்கதான் என்னைப் பெற்று பழைய துணியில் சுத்தி நான்கு ரோடுகள் சந்திக்கிற இடத்துல இருட்டுல போட்டுட்டுப் போனதா?" நான் செத்துப் போனாலும் ஒரு பயங்கர பிசாசு வடிவத்தில் இரவு நேரங்கள்ல ஒவ்வொரு வீடா ஏறி உற்றுப்பார்த்து கதவைத் தட்டிக் கூப்பிடுவேன்...''
"கொஞ்சம் நிறுத்துங்க. இதெல்லாம் நான் போய் உங்க கதையை முழுசா எழுதிட்டு வந்து உங்களுக்குப் படிச்சுக்காட்டின பிறகு, வசதிப்படி செய்யலாம். உங்களுடைய தற்கொலை முயற்சியைப் பற்றி இப்போ சொல்லுங்க. அது எப்படி தோல்வியில முடிஞ்சது?''
"நான் தற்கொலை பண்ண தீர்மானிச்சேன். ரெயில் தண்டவாளத்தில் தலையை வச்சு புகைவண்டியோட சக்கரம் அது மேல ஏறி மரணமடையணும்னு நான் திட்டம் போட்டிருந்தேன். வண்டி வேகமா பாய்ஞ்சு வரும். சக்கரங்கள் கழுத்துமேல் ஏறி அதைச் சின்னாபின்னமாக்கிக் கடந்துபோகும். தலை தனி, உடல் தனி என்றாகும். எல்லாம் முடியும். வேதனைகளும் கஷ்டங்களும் முடிவுக்கு வரும். திறந்திருக்கிற பார்க்க முடியாத கண்கள்!
"நிலவு காய்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைதியான இரவு. நகரத்தின் எல்லையில் இருக்கிற ரெயில் தண்டவாளம். அதில் எப்போதும் ஒரு இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் வண்டி வந்துகொண்டே இருக்கும். நான் ஒரு மரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்தேன். ஒரு வண்டி பயங்கர சத்தத்துடன் பாய்ஞ்சு போனது. நான் கம்பி வேலியைத் தாண்டிப் போனேன். நிறைய தண்டவாளங்கள் இருந்தன. ஒரு தண்டவாளத்தில் தலையை வச்சுப்படுத்தேன். கடைசியாக நான் படுப்பது... கழுத்தில் பயங்கர குளிர். நான் அசையாமல் அப்படியே படுத்திருந்தேன். நாளை நான் ஒரு அனாதைப் பிணம்! அப்படிச் சொல்வதுதான் உண்மையில் பொருத்தமானது. வண்டி வரும் நேரமாயிடுச்சு! ஒரு இரைச்சல் கேட்டது.
"பர்ர்றம்... பர்ர்ற்ம்...!"
விமானம்தான்... அதோடு சேர்ந்து வண்டியும் வந்தது. எரிச்சலும், குளிரும் என் உடலெங்கும் பரவியதை உணர்ந்தேன். ரயிலின் ஓசை! என்னிடம் ஒரு பதைபதைப்பு. இதை நீங்க ரெயில்வே தண்டவாளத்தில் தலையை வச்சு படுத்தால் மட்டுமே உணரமுடியும். ரெண்டு மூணு முறை எழுந்து ஓடிடலாமான்னு நினைச்சேன். நான் அசையவே இல்ல. செவிப்பறைகள் வெடிச்சிடும்போல இருந்துச்சு. ஆகாயமும் பூமியும் நடுங்குற அளவுக்கு "ஊ ஊ ஊ"ன்னு புகை வண்டி எழுப்புற ஓசை! பிரபஞ்சம் முழுவதும் அந்த ஓசை கேட்கும். வண்டி வேகமாக பாய்ஞ்சு வந்துக்கிட்டு இருக்கு. பயங்கர வேகத்துல வந்துக்கிட்டு இருக்கு. நான் கண்களை மூடிக்கிட்டேன். என் மூச்சே நின்னுடுச்சு. உடம்பெல்லாம் வியர்வை வழிஞ்சிக்கிட்டு இருக்கு. தலைக்கு உள்ளே ஒரே குடைச்சல். தெய்வமே! கழுத்து நசுங்கி சின்னா பின்னமாகப் போகிற கடைசி நிமிடத்தை எதிர்பார்த்துக்கிட்டு நான் தண்டவாளத்துல கிடக்குறேன். வண்டி பயங்கர சத்தத்துடன் சீறிக்கிட்டே என்னைக் கடந்து போயிடுச்சு எனக்குப் பக்கத்துல இருந்த வேற ரெண்டு தண்டவாளங்கள் வழியே...''
"பிறகு? சரிதான்...''
மங்களம்.
சுபம்..