சப்தங்கள் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6380
ஒரு லட்சம் எறும்புகள் என் கையைக் கடிச்சது. நான் குழந்தையை என்னோட மடியில வச்சு எறும்புகளைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தேன்.
"அய்யோ... என் குழந்தை!" குழந்தையோட அழுகை சத்தம் கேட்டு, இதயம் பதைபதைக்க அவன் தாய் ஓடி வந்து என் பக்கத்துல நின்னா. குழந்தையை என் கையில இருந்து பிடுங்கி, என் நெஞ்சில ஓங்கி ஒரு மிதி!
நான் ஒண்ணுமே பேசல. பேசாம ஏற்கெனவே இருந்த இடத்துல போய் உட்கார்ந்தேன். எனக்குத் தலையைச் சுத்துற மாதிரி இருந்தது. அவள் குழந்தைக்குப் பால் கொடுத்தா. அவளோட மார்பகத்துல எறும்பு கடிச்சப்போ அவ நினைச்சிருக்கணும்... குழந்தையை எறும்பு கடிச்சிருக்குன்னு.
"பேசாம படு..." - பலவிதப்பட்ட சப்தங்களுக்கு மத்தியில் ஒரு குரல்.
"கண்ணு ரெண்டும் இல்லாட்டி என்ன? எனக்கு எல்லாம் ஞாபகத்துல இருக்கு!"
"என்ன?"
"கையில காசும் துணைக்கு ஆளும் சாப்பிடுறதுக்கு ஒரு வழியும் இல்லாம எத்தனையோ வருடங்களுக்கு முன்னாடி நான் ஒரு பாதையில இருந்த ஒரு கோவில்ல இருந்தேன். நம்ம நாட்டுக்கு அன்னைக்குத்தான் வெள்ளைக்காரங்கக்கிட்டே இருந்து சுதந்திரம் கிடைச்சது. அப்போ எனக்கு இருபது வயசு. அப்போ நான் நினைச்சேன்..."
"என் தேன்கூட்டை எறும்பு கடிச்சு கொல்லப் பார்த்ததாடா கண்ணு?"
குழந்தை தன் அழுகையை நிறுத்தி, பால் குடிக்க ஆரம்பிச்சது.
தூரத்தில் கண் பார்வை தெரியாத மனிதனின் குரல்.
அப்போ நான் கேட்டேன்: "எதுக்கு நாம வாழணும்?" கேள்வி கேட்டது எனக்கு நானேதான். பதில் இல்லை. இப்போ எனக்கு என்ன வயசு? நினைச்சுப் பாருங்க. நேத்து நீங்க உறங்கறப்போ நான் எழுந்து உட்கார்ந்து கேட்டேன்...
"பிச்சைக்காரா!" குழந்தையுடன் அந்த ஏழைத்தாய் என் அருகில் வந்தா. "நீ செத்துப்போயிட்டேன்னு நான் நினைச்சேன்!"
"அப்படியா?"
"நான் மிதிச்சது உனக்கு வலிச்சதா?"
நான் பதில் பேசல. என் கண்கள்ல இருந்து கண்ணீர் ஆறா வழிஞ்சது.
"எறும்பு கடிச்சப்போதான் நான் குழந்தையைக் கையில தூக்கினேன்."
"அப்படியா? குழந்தையைத் திருடிட்டு போறேன்னு நான் நினைச்சேன்!"
"அவள் முந்தானையை அவிழ்த்து கால் ரூபாயை எடுத்து என் மடியில் வைத்தாள்."
"நீ அங்கேயே படுத்துக்கோ!"
அவள் சற்று தூரத்துல இருந்த ஒரு கல்மேல் படுத்தாள்.
நான் ஒண்ணுமே கேட்கல. ஒண்ணும் சொல்லவும் இல்ல. தாயின் இதயம். குழந்தைமேல் கொண்ட பாசம். சப்தங்கள். நான் சப்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என் கண்களில் இருந்து அப்போதும் நீர் வழிஞ்சிக்கிட்டுத்தான் இருந்துச்சு. இதயம் ஆயிரம் துண்டுகளா உடைஞ்சு போனது மாதிரி நான் உணர்ந்தேன். நான் படுத்தேன். உலகமே... நான் படுத்தேன்.
தலைக்குள் ஒரே சத்தம். என்னால தாங்க முடியல. நான் கண்களைத் திறந்து பார்த்தப்போ, நல்ல வெயில் காய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. எங்கும் ஒரே அமைதி நிலவிக்கிட்டு இருந்துச்சு. யாரையும் காணோம். அந்த இடிஞ்சு சிதிலமாகிப் போயிருக்கும் புராதனமான தேவாலயம். வேற எதுவுமே அங்கே இல்ல. என் பக்கத்துல அந்த கால் ரூபா இருந்துச்சு. நான் எழுந்து நின்னேன். மைதானம் வெறுமனே கிடந்துச்சு. எத்தனையோ அடுப்புகள். எரிஞ்சு முடிஞ்சு அணைஞ்சு போயிருந்துச்சு. நகரத்தின் பேரிரைச்சலும் ஆரவாரமும் மட்டும் காதுகளில் விழுந்துக்கிட்டு இருந்துச்சு. எனக்கு நல்ல பசி, தாகம், களைப்பு, வேதனை! நான் அந்தக் கால் ரூபா நாணயத்தைக் கையில் எடுத்தேன். வெயில்னால இருக்கணும்... காசு நல்ல சூடா இருந்துச்சு. நான் ஆரவாரமான நகரத்தை நோக்கி நடந்தேன்... சூடான கால் ரூபா நாணயம்!
11
"ராத்திரி நேரம் ஆனப்போ, நான் கடற்கரைக்கு வந்தேன். அப்போ நல்ல நிலவு நேரம்.
மக்கள் நிறைய இருந்த தெருவீதிகள் வழியாக வெறுமனே நடந்து திரிஞ்சேன். நட்சத்திரங்களைவிட பிரகாசமான மின் விளக்குகள். ஆகாயத்தைப்போல பரந்து கிடக்கும் நகரம். பல லட்சம் மனிதர்கள். வாகனங்கள். இருந்தாலும், நான் ஒரு தனி மனிதனே. ஒரு நல்ல மணம் வீசிக்கொண்டிருந்த தெருவை நான் கடந்து சென்றேன். எதிரே இருந்த வீடுகளில் நல்ல ஆடைகளணிந்து நின்றிருக்கும் பெண்கள். நன்றாகத் தலைவாரி பவுடர் இட்டு பூக்களைக் கூந்தல்ல சூடி அவர்கள் நின்னுக்கிட்டு இருந்தாங்க. பவுடர் பூசியிருந்ததால் முகம் நல்ல வெண்மையா இருந்துச்சு. சாயம் பூசிய சிவப்பான உதடுகள். மை இட்டு கறுப்பாக்கிய கண்கள்.
நிர்வாண உடம்பை வெளியே தெரிய வைக்கிற மெல்லிய ஆடைகளை அணிந்த நவநாகரீகப் பெண்கள். முல்லை, கனகாம்பரம், பிச்சி, ரோஜாப் பூக்களும் வாசனைத் திரவியங்களும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் சூழல்... சாலையில் நடந்து போவோரை அழைக்கும் கைகள், இடை, தொடைகள், மார்பகங்கள், உதடுகள். பிரபஞ்சங்களே!
அந்தத் தெருவில்தான் என்ன ஆரவாரம்! சிரிப்பு, பாட்டு, கேலிகள். பணம் கொடுத்து விருப்பமான பெண்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். பெண்களை விற்பனை செய்கிற சந்தை அது. காம வேட்கையைத் தணிக்கிற ஹோட்டல்கள் அவை.
அங்கே எல்லா வகை மனிதர்களும் வருவதுண்டு. சிலர் எந்தவித கூச்சமும் இல்லாமல்... வேறு சிலர் எங்கே யாராவது பார்த்துவிடப் போகிறார்களோ என்று பயந்து, ஒளிந்து... நான் என் நடையைத் தொடர்ந்தேன். மனதில் தாங்க முடியாத அளவுக்கு தனிமையுணர்வு. இப்படித்தான் நான் கடற்கரைக்கு வந்து சேர்ந்தேன்.
"வெண்மையான- பரந்து கிடக்கும் பொடி மணலில் நிறைய பெண்களும் ஆண்களும். கடற்கரையை ஒட்டி இருந்த சாலையில் அவர்களின் வாகனங்கள். அவர்கள் காற்று வாங்குறதுக்காக அங்கே வந்திருக்காங்க. பலவகை மனிதர்களும் அங்கே இருந்தாங்க. வங்கி மேனேஜர்கள், வக்கீல்கள், பத்திரிகையில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், ஓட்டல் உரிமையாளர்கள், சினிமா நடிகைகள்- இப்படிப் பல துறையைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தாங்க. அவர்களின் பேச்சிலிருந்துதான் அவர்களை இன்னார் என்று நான் அடையாளம் கண்டு பிடிச்சேன். அவர்கள் வாதம், எதிர்வாதம் செய்தும் நகைச்சுவையாக ஏதாவது பேசியும் பொழுது போக்கிக் கொண்டிருந்தாங்க. கொஞ்ச நேரம் போனா, அவங்க எல்லாரும் அவரவர்களின் வாகனங்களில் தங்களோட வீடுகளைத் தேடிப் போயிடுவாங்க. ஆனால் நான்...? அவர்களைக் கடந்து நான் கடலையொட்டி நடந்தேன். ஒரே நிசப்தம். நான் அப்படி நடந்து போனப்போ கடற்கரையில் சில படகுகள். மீன் பிடிப்பவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம். ஆங்காங்கே உடைந்து போயிருந்தன. நான் ஒரு படகுல ஏறி அமர்ந்தேன். எனக்கு முன்னால் பாற்கடல்.