Lekha Books

A+ A A-

சப்தங்கள் - Page 12

sapthangal

"செத்துப் போயாச்சா?" அவள் கேட்டாள். நான் சிறிதுகூட அசையல. நான் செத்துப் போனேன்னு அவங்க நினைக்கட்டும். என்னைச் சுற்றிலும் ஒரு அருமையான நறுமணம்! சோப்பு வாசனையா என்ன? இல்லாட்டி பவுடர் மணமா? ஏதோ ஒரு விலை குறைந்த செண்ட் மணம்னு மனசுல பட்டுச்சு. நல்ல வாசனைதான். நான் வலதுபக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தேன். இப்போ எல்லாம் தெளிவா தெரிஞ்சது. ஒரு பெண், இடுப்புல ஒரு குழந்தை. தாயும் பிள்ளையும்.

அவள் கொஞ்சம் தள்ளி நின்னு குழந்தைக்குப் பால் கொடுக்க ஆரம்பிச்சா. அவளின் பெரிய மார்பகங்களை அந்தக் குழந்தை சப்பிச் சப்பி குடிச்சது!

"ஒரு விஷயம் தெரியுமா? நான் இதுவரை ஒரு தாயோட பாலைக் குடிச்சது இல்ல. அந்தக் குழந்தை ஒரு கையால் அந்தப் பெண்ணின் இன்னொரு மார்பகத்தைப் பிடிக்க முயற்சித்தது. எனக்கே தெரியாத நான் இதுவரை பார்க்காத... என்... என்னோட தாய்!"

"மகனே... அம்மாவோட தங்கக்குடமே... என் பிள்ளை நல்லா பால் குடிச்சு முடிச்சு உறங்கணும்... அம்மாவைத் தேடி ஒரு ஆள் வருவாரு. அவர் அம்மாவுக்கு நிறைய காசு தருவாரு... மகனே... நீ உறங்கு..."

அவள் குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு தரையில் பழந்துணியில் சுற்றி அவனைப் படுக்க வச்சா. இருட்டுல... தனிமையான பாதையில... பழைய துணியில் சுற்றப்பட்டு... அனாதையாக... விசால, விசாலமான வானம். கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். ஒளிர்ந்து கொண்டிருக்கும் சந்திரன். இளம் காற்று. என் மனசுல கடுமையான தனிமை உணர்வு. அவள் ஆடைகளைத் தேடி உடுத்தினா. மார்பகங்களை உள்ளே விட்டு பொத்தான்களைப் போட்டா. மார்பகங்கள்... பிறகு கூந்தலை அவிழ்த்தா. சரியாக அதை முடிச்சுப் போட்டு கட்டினா. பிறகு... இடிஞ்சு போய் இருக்கும் பழமையான... புராதனமான சுவரோடு சேர்ந்து சாய்ஞ்சா.

யார் வர்றது? என்னவொரு எதிர்பார்ப்பு! அவள் இப்போ யாரை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கா? என் இதயம் படுவேகமாக அடிக்க ஆரம்பிச்சது. உடம்பெங்கும் சூடு பரவ ஆரம்பிச்சது.

அவங்க எதைப்பற்றியும் பெருசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. பல சத்தங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணின் சப்தம்:

"என் தாய் என்னைப் பெற்று வாய்க்கால்ல போட்டுட்டா. எனக்கு ரெண்டு புருஷன்க... ஒன்பது பிள்ளைங்க..."

"என் தகப்பன் ஒரு பட்டாளக்காரன்னு அம்மா சொன்னாங்க!"

"இன்னைக்கு நான் மோட்டார்ல ஏறினேனே." ஒரு பெண்ணின் குரல். வேறொருத்தி கேட்டாள்: "யார்டி உன்னை மோட்டார்ல ஏத்திட்டுப்போனது?"

"ஆரி... ரா... ரா... ரோ..." ஒரு தாய் தன் குழந்தையைத் தாலாட்டு பாடி தூங்க வைக்க முயற்சித்தாள். இடையில் பலவித சப்தங்கள்!

"இங்கே அவன்களுக்கு என்ன வேலை? இடிஞ்சு கீழே விழுந்து கிடந்தாலும், இது நம்மோடது..."

"போடா நாயே! இது எங்க ஜாதிக்காரங்களுக்குச் சொந்தமானது!"

"உங்க ரெண்டு ஜாதிக்காரங்களுக்கும் இல்ல. இது எங்களுக்குச் சொந்தமானது. அதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்கு!"

"ஓ... இதுமேல இனி சண்டை போடணுமா? கொஞ்சம் கஞ்சா தர்றேன்... நல்லா சண்டை போடு..."

"எனக்கு ரெண்டு கண்களும் இல்ல. அதனால என்ன?"

"ஒண்ணையும் பார்க்க முடியலியே!"

"இந்த உலகத்துல பார்க்க என்ன இருக்கு? நான்தான் எல்லாத்தையும் காதால கேக்குறேனே!"

"பார்ப்பதற்கு நட்சத்திரங்களும் நிலவும் இருக்கு!"

"நான் ஒரு கதை சொல்லட்டுமா?"

"கண் பார்வை இல்லாத ஒருத்தன் கதை சொல்லப்போறானாம்!"

"கையில காசும், துணைக்கு ஆளும், உணவுக்கு ஒரு வழியும் இல்லாம- பாதையில இருக்குற ஒரு கோவில்ல உட்கார்ந்து- சரி... ஒரு கஞ்சா பீடி கொடு... ஒரு இழு இழுத்துட்டு தர்றேன்!"

"இதுதான் கதையா? இந்தா தர்றேன் ஒரு கஞ்சா பீடி- பிடிச்சுக்கோ!"

"அய்யோ!" ஒரு பெண்ணின் அலறல் சத்தம்: "நீ என் நெஞ்சுமேல விழுந்திட்டே. உன்தலையில இடி விழ!"

"விழும்டி... விழும்!"

ஒரு பெண்ணின் காதல் வயப்பட்ட குற்றச்சாட்டு:

"வந்துட்ட... முழுசா கள்ளை ஊத்திக்கிட்டு!"

"அடியே, தேனே!"

"என்ன?"

"முத்தம்!"

"ஒரே கள்ளு நாற்றம்!"

"கள்ளு இல்லடி... பிராந்தி!"

"கள்ளுதான்!"

"பிராந்தியைக் கள்ளுன்னு சொன்னா உன்னைக் கொன்னுடுவேன்." இன்னொருவனின் குரல்.

"பேசாம படுக்குறியா என்ன?"

"என் பொண்டாட்டியோட அம்மாதான் என்னைப் பெற்றவள்!"

"அப்படியா?"

"நான் உன்னோட அப்பன்!"

"ஒத்துக்குறேன். நான் மகன்!"

"வேண்டாம்!"

"மகள்?"

"வேண்டாம்!"

"பொண்டாட்டி!"

"வேண்டாம்!"

"அப்பன்?"

"அப்பாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம். தெய்வமும் வேண்டாம்."

"பிறகு யார்தான் வேணும்?"

"ஸ்ரீமான் கஞ்சா!"

ஒரு துக்கச்செய்தி. கொஞ்ச தூரத்துல இன்னொரு மூலையில இருந்து-

"இன்னைக்கு ரெயில்வே தண்டவாளத்துல தலையை வச்சு ஒரு ஆள் செத்துப்போயிட்டான். தலை தனியா துண்டாயிடுச்சு. கண் திறந்து, வாய் பிளந்து வானத்தைப் பார்த்துக்கிட்டு தனியா கிடந்தான்..."

"பிச்சைக்காரங்களும் மாறாத நோய் உள்ளவங்களும் கண் குருடானவங்களும்..."

"உண்மைதான்!"

"காட்ல பெரிய மரமும் சின்ன மரமும்..."

"பாம்பும் புலியும் சிங்கமும் எருமையும் மானும் முயலும் எலியும் யானையும்..."

"நாட்டுல மன்னனும் சக்கரவர்த்தியும் மில்காரனும் மந்திரியும் ஜனாதிபதியும் ஜெனரலும்..."

"நம்ம ரத்தமும் அவங்க ரத்தமும் ஒண்ணா?"

"நாய்க்கும் பன்றிக்கும்கூட ரத்தம் சிவப்பாத்தான் இருக்கும்!"

"நாயும் பன்றியும் எதை வேணும்னாலும் சாப்பிடும்!"

"இன்னொரு புது செய்தியைக் கேக்குறியா?" இன்னொரு மூலையில் இருந்து ஒரு குரல்: "காசு இருக்கும்னு நினைச்சு, தெரு மூலையில வச்சு கழுத்தை நெரிச்சு கொன்னேன். செத்துப்போன பிறகு பார்த்தால்... செத்தவன் பாக்கெட்ல ஒரு செல்லாத காசு இருக்கு!"

"அதற்குப் பிறகு நீங்க என்ன செஞ்சீங்க?" ஒரு பெண் கேட்டாள்.

"மகனே, அதோ வந்தாச்சு!" என் அருகில் இருந்த பெண்.

"யார் வர்றது? யாரோ நடந்து பக்கத்துல நெருங்கி வர்றாங்க. அவளுக்கு ரொம்பவும் பக்கத்துல வந்தாச்சு. நிலவு காய்ஞ்சிக்கிட்டு இருக்குற... நட்சத்திரங்கள் நிறைஞ்ச... அமைதியான வானம்! கீழே ஒரே மக்கள் கூட்டம்! பழமையான கோவில்! அவங்க மெதுவான குரல்ல பேசிக்கிறாங்க." அவள் ஏதோ தடுக்கிறாள்:

"இருக்கட்டும். காசை முதல்ல தந்துட்டு மார்புல கையை வை."

"உனக்கு எப்போ பார்த்தாலும் காசைப் பற்றித்தான் நினைப்பு! உன்மேல் இருக்குற காதல்னாலதானே இவ்வளவு தூரம் நடந்து நான் வந்திருக்கேன்!"

வேதனை கலந்த ஒரு சிரிப்பு: "காதலையும் அன்பையும் வச்சு... என் மகனின் பசியும் என்னோட பசியும் அடங்குமா என்ன?"

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel