சப்தங்கள் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6380
சூடான காற்று மேலே கிளம்பியதுபோல இருந்துச்சு. ஒரு அசைவும் இல்லை. எனக்கு மிகவும் களைப்பா இருந்துச்சு. பேசாம மணல்ல போய் படுத்தேன். அப்போ என் விதியைப்பற்றி நானே நினைச்சுப் பார்த்தேன். என்மேல் அன்பு செலுத்தவோ என்னை வெறுப்பதற்கோ இந்த உலகத்துல ஒரு உயிர்கூட இல்ல. பூமியில் எத்தனைக் கோடி, எத்தனை வகை மனிதர்கள் இருக்காங்க! மற்றவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு அவங்க யாருமே இல்ல. இல்லாட்டி நீங்க சொன்ன மாதிரி... எல்லாருமே என் சொந்தக்காரங்க. இந்தச் சிந்தனை எனக்குக் கொஞ்சம்கூட தைரியத்தைத் தரல. கவிதைகள்லயோ, கதைகள்லயோ, பிரபஞ்சங்கள்லயோ எவ்வளவோ சொல்லலாம். உண்மையான வாழ்க்கையில பார்த்தால், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அனாதைதான்! யார் இறந்தால் என்ன? யார் வாழ்ந்தால் என்ன? மனிதர்கள் எல்லாரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்களா இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், புழுக்கள், பூச்சிகள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள், மிருகங்கள், புல், மரம்- எல்லாமே மனித சமுதாயத்தோட தொடர்பு கொண்டவையாக இருக்கலாம். நான்தான் சொன்னேனே, என்னோட சிந்தனைகளுக்கோ வாழ்க்கை வரலாறுக்கோ தெளிவான ஒரு விதிமுறை கிடையாது.
நான் ஒரு தனிமனிதன். வேற ஒண்ணும் இல்ல. மனித சமுதாயம்ன்ற பெரிய இயந்திரத்தோட ஒருசிறு ஆணிகூட இல்ல நான். யாராவது என்னை என்னவாகவாவது ஆக்கமுடியுமா? ஒரு உண்மையைச் சொல்றேன். யாரும் இதுவரை என்னிடம் கருணையோடு நடந்தது இல்ல. அப்படி நடந்திருந்தால்...
என்னோட வளர்ப்புத் தந்தை உயிரோட இருந்த காலத்தில் நான் அவர்மேல் வேண்டிய அளவுக்கு அன்பு செலுத்தினேனா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். செத்துப்போன அவரைப் பற்றிய நினைவுகளை நான் விரும்புகிறேன். மொத்தத்துல- என் இதயம் முழுக்க ஒரே கவலைகள். தற்கொலை செய்துக்கலாமான்னு நான் பார்த்தேன். ரெயில்வே தண்டவாளங்களைப் பற்றி நினைச்சேன். நான் வாய்விட்டு அழுதேன். கொஞ்ச நேரத்துல தூங்கியும் போனேன்.
ஒரே அமைதி. பயங்கரமான குளிர். நான் கண்களைத் திறந்தேன். இருட்டு. அடர்த்தியான இருட்டு இல்ல. லேசான வெளிச்சமும் இருந்துச்சு. எத்தனையோ கோடி வருடங்களுக்கு முன்பு... மனிதர்களும் மற்ற உயிரினங்களும் தோன்றதுக்கு முன்னாடி... அதை நான் இப்போ நினைச்சுப் பார்த்தேன். நட்சத்திரங்கள் மங்கலா வானத்துல இருந்துச்சு. நான் இப்போ எங்கே இருக்கேன்? இப்பத்தான் நான் சுய உணர்வு நிலைக்கே வந்தேன். பொழுது புலர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும்? ஒண்ணுமே எனக்கு சரியா தெரியல. என்னோட ஆடைகள் முழுவதும் நல்லா நனைந்து விட்டிருந்தன. நான் மணல்ல இறங்கி நடந்தேன். பாதங்கள் குளிர்ல விரைச்சுப் போன மாதிரி இருந்துச்சு. மணல் முழுக்க நனைஞ்சு போயிருந்துச்சு. காலால மேல இருந்த மணலைத் தட்டிவிட்டேன். சுடுமணல் உள்ளே இருக்க, அதன்மேல் நான் உட்கார்ந்தேன்.
கடல் பயங்கர இருட்டா இருந்தது.
மனதை நடுங்க வைக்கிற அளவுக்கு ஒரு தனிமையுணர்வு. அது என்னோட ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நுழைஞ்சு, இதயத்தின் அடித்தளம் வரை நுழைஞ்சது. அப்போ நான் நினைச்சுப் பார்த்தேன். புராதன- புராதனமான முதற்பொருள். உலகத்தில் ஆதரவுன்னு யாரும் இல்லாதவர்களோட கடைசி சரணாலயம்- கடவுள்!
கடவுளைப் பற்றிய சிந்தனையில் நான் மூழ்கிப் போனேன். என்ன காரணத்தாலோ என் கண்கள்ல இருந்து கண்ணீர் தாரை தாரையா வழிஞ்சது. இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்கள், பெண்களைப் பற்றியும் நான் நினைச்சுப் பார்த்தேன்னு சொன்னா அது சரியான விஷயமா இருக்காது. கண்ணால் பார்க்காதவங்களையும், காதால் கேட்காதவங்களைப் பற்றியும் நான் எப்படி நினைச்சுப் பார்க்க முடியும்? என் இதயம் இந்த மகா பிரபஞ்சத்தையே அடக்குற அளவுக்கு அப்படியொண்ணும் பெரிதில்லையே?
நான் ஒண்ணுமே சிந்திக்காம சும்மா இருந்தேன்னு சொல்றதுதான் சரி. அப்படி இருக்குறப்போ ஒரு மாற்றம் தெரிஞ்சது. காரணம்- வேற ஒண்ணும் இல்ல. வானத்துல ஒரு நிற வேறுபாடு தெரிஞ்சது. பொழுது புலரப்போகுது. ஒரு புதிய நாள் பிறக்கப்போகுது. எத்தனையோ கோடி... கோடி... கோடி... புதிய நாட்கள் ஏற்கெனவே கடந்து போயிருக்கு. இப்போ இன்னுமொரு புதிய நாள்... உலகத்தில் தெளிவற்ற சப்தங்கள்!
நான் நினைச்சுப் பார்த்தேன்- இந்த நாள் எப்படி இருக்கும்? ஆனால், எவ்வளவு நேரம் சிந்திச்சாலும், என் மனசுல ஒரு முடிவுக்கும் வர முடியல.
சப்தங்கள்! மில்களின் சங்கொலி! கப்பல்களில் இருந்து வரும் அழைப்பு ஒலிகள்! வேலைக்காரர்களை அழைக்கிறார்கள்- பூமியில் இருக்கும் வேலைக்காரர்களை!
என்னை அழைக்க யார் இருக்கிறார்கள்? ஒரு இயந்திரமும் இல்ல. ஒரு மனிதனும் இல்ல. வாழ்க்கையில் இன்னொரு புதிய நாள் புலரப்போகுது. வானத்தின் எல்லையில் ஒரு நிற மாற்றம் நடந்துக்கிட்டு இருக்கு! அடர்த்தியான நீல வண்ணத்தில் பரந்து கிடக்கும் கடலில் இருந்து "தக தக"வென ஜொலித்தவாறு மேலே வருகிறான் சூரியன்.
ஒரு நிமிடம் ரத்த நிறத்தில் இருந்த கடல் சிறிதுநேரத்தில் உருகிய தங்க வண்ணத்தில் பிரகாசித்தது. அடுத்த சில நிமிடங்களில் கண்ணாடிபோல அது டாலடித்தது.
நான் எழுந்தேன்.
என்னுடைய நிழல் நகரத்தையும் தாண்டி நீண்டுபோய்க் கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாததன்... முடிவற்ற... புள்ளியை நோக்கி... போ... போ...
12
"பிறகு?''
"ரயில்கள் முழங்குகின்றன. அதைப் பற்றித்தான் இப்போ நான் சொல்லப்போறேன். உங்களுக்கு உறக்கம் வருதா?''
"இல்ல... நான் நீங்க சொல்றதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேனே!''
"இனி அதிகம் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. கடைசிக்கு வந்துட்டோம். இதுவரை நான் சொன்ன விஷயங்களைப் பற்றி உங்க கருத்து என்ன?''
"கருத்து...? நீங்க சொன்னது ஒவ்வொண்ணையும் நான் குறிச்சு வச்சிருக்கேன். இனி அவை ஒவ்வொண்ணையும் தாள்ல மெருகேற்றி எழுதணும். அது இங்கேயிருந்து புறப்பட்ட பிறகுதான் முடியும்!''
"எங்கே போகப் போறீங்க?''
"எங்கேயாவது தனியாகப் போய் அமைதியா உட்கார்ந்து எழுதணும். நான் திரும்பி வர்றதுவரை நீங்க இங்கேயே இருக்கலாம். உணவுக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன். எனக்கு ஒரு டாக்டர் நண்பர் இருக்கிறார். அவருக்கு நான் ஒரு கடிதம் தர்றேன். அவர் மருந்து தருவார். திரும்பி வந்தபிறகு உங்களோட கதையை நான் படிச்சுக் காட்டுறேன். மீதியைச் சொல்லுங்க...''
"தற்கொலையைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
"அது நல்லதா கெட்டதான்னு கேக்குறீங்களா?''
"ஆமா...''