சப்தங்கள் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6380
"சரி... உனக்கு நான் என்ன தரணும்? அதைச் சொல்லு..."
"ஒரு ரூபா... அதை முதல்ல என் கையில தரணும்!"
"இந்தா... ஒரு ரூபா! அடியே... உனக்கு என்ன உடம்புக்கு ஆகலியா?"
"ஆமா..."
"சரி... இன்னைக்கு ஒண்ணும் சாப்பிடலியா?"
"தேவையில்லாம ஏதாவது பேசிக்கிட்டு இருக்காம, எதுக்கு வந்தியோ அதை முடிச்சிட்டு போ. துணியை அவிழ்த்துப் போட்டுட்டு நான் இங்கே சாய்ஞ்சு நின்னா போதுமா?"
நான் நடுங்கல. அசையக்கூட இல்ல. பாவப்பட்ட பலவீனரான நாம்.... மனிதர்கள்! உயிரினங்கள்! ஆதிபுராதன, புராதனமான கோவில்! அந்த ஆண் அப்போதுதான் என்னைப் பார்த்தான். பதறிப்போன குரல்ல அவன் கேட்டான்:
"இது யாரு? உன்னோட..."
"என்னோட யாரும் இல்ல... இந்த ஆளு இங்கே வந்து படுத்துக் கிடக்கிறான். செத்துப்போயிட்டான்னு நினைக்கிறேன்!"
"பிணமா?" ஒரு சிறிய கல் என்மீது வந்து விழுந்துச்சு. நான் அசையவே இல்ல... உண்மையான பிணத்தைப்போலவே கிடந்தேன்!
"ஆம்பளைதான்னு நினைக்கிறேன். சரி... சீக்கிரம் காரியத்தை முடிச்சிட்டுப்போ..."
"நாம அங்கே- உள்ளே போவோம்!"
"சரி... உனக்கு வீடு இல்லியா?"
"அய்யோ... நீ அங்கே வரமுடியாது. அப்பாவும் அம்மாவும் என் பொண்டாட்டியும்..."
"பொண்டாட்டி இருக்காங்களா?"
"இப்போ அவ கர்ப்பமா இருக்கா!"
"எத்தனையாவது மாசம்?"
"அஞ்சு இல்லாட்டி ஆறுன்னு நினைக்கிறேன். சரி... நீ இந்தக் குழந்தையை அங்கே படுக்கப் போட்டுட்டு வா!"
"என் குழந்தையைப் போட்டுட்டு நான் எங்கேயும் வரமாட்டேன். எனக்கு யார்னே தெரியாத என்னோட அம்மா என்னை தனியா போட்டுட்டு போயிட்டா..."
"அடியே தங்கக்குடமே! உனக்கு வேணும்னா அரை ரூபா அதிகமா தர்றேன்..."
"அய்யோ வலிக்குது! நீ ஏன் மார்பையே பார்த்தது இல்லையா?"
"வாடி..."
"என் குழந்தை?"
"அங்கே சும்மா போடுடி..."
"பிணத்துக்குப் பக்கத்துலயா?"
"பிணம் என்ன குழந்தையைச் சாப்பிடவா போகுது?"
"சரிதான்..."
அவள் குழந்தையை ஒரு பழைய துணியில சுத்தினா. ஆனா, அங்கே குழந்தையைக் கடிக்கிற எறும்புகள் இருந்ததை அவ கவனிக்கல.
"அம்மா இதோ வந்துடுறேன்டா கண்ணு!"
அவ போனா. அவங்க ரெண்டுபேரும் சேர்ந்து இடிஞ்சுப் பாழாய்ப் போய்க்கிடந்த புராதனமான கோவிலுக்குள்ளே போனாங்க...
குழந்தையும்... நானும்... பிரபஞ்சங்களும்...
10
"ஒரு குழந்தை மட்டும் தனியே" -நான் எழுந்துபோனேன். நானும் அந்தக் காலத்துல சின்னக் குழந்தையா இருந்தவன்தானே! பார்த்தேன்... முன்பக்கம் தூரத்துல மைதானத்தில் இருந்த அடுப்புகளில் நெருப்பு கொழுந்து விட்டு எரிஞ்சுக்கிட்டு இருந்தது. பத்தல்ல- நூறல்ல... எத்தனை அடுப்புகள்! குப்பைகளும், தாளும், சருகுகளும், பழைய துணிகளும்- இவைதாம் விறகு. புகையும், நாற்றமும், ஆரவாரமும்... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இடையில் நாய்களும்... தீ ஜ்வாலையில் பிரகாசமாய் தெரிகிற முகங்கள். ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. சிவந்த கண்கள், வியர்வை அரும்பிய முகங்கள். தாடி- மீசை. தடித்தடியாய் எல்லாரும்... நிர்வாண மார்பகங்களுடன் பெண்கள். பல ஜாதி. பல வேஷம்.
எங்கு பார்த்தாலும் ஒரே ஆரவாரம். உணவு சாப்பிடுறாங்க. என்னென்னவோ தங்களுக்குள் பேசிக்கிறாங்க. புகை பிடிக்கிறாங்க. தெய்வத்தைக் கும்பிடுறாங்க. விளையாடுறாங்க. சிரிக்கிறாங்க. அழுவுறாங்க. கெட்ட வார்த்தைகளால திட்டிக்கிறாங்க. ஒருத்தரையொருத்தர் கட்டிப் பிடிக்கிறாங்க. உடலுறவு கொள்றாங்க.
"எல்லாரும் கேட்டுக்கோங்க." மூலையில் இருந்த ஒருவன் சொன்னான்: "இப்போ பட்டாசு வெடிக்கப்போகுது... சரவெடி..."
ஒரு மின்னல்போல அடுத்தடுத்து பட்டாசு வெடிக்குது. அதன் ஓசை காதைச் செவிடாக்குது.
ட, ட, ட, ட, ட, ட, ட, ட, டே!
பட்டாசு வெடிக்கும்போது உண்டான வெளிச்சத்துல முகங்கள் பிரகாசமாகத் தெரியுது. அவங்களோட உடம்பும்தான். அவங்களுக்குன்னு சிறப்பா சொல்ற அளவுக்கு ஒரு வேலையும் கிடையாது. சொந்த ஊர்னு எதுவும் இல்ல. சொந்த வீடுன்னு ஒண்ணும் கிடையாது. சொல்லப்போனா- எதுவுமே இல்ல. இருந்தாலும், மனிதர்களுக்குத் தேவைப்படுறதெல்லாம் அவங்கக்கிட்டயும் இருக்கவே செய்யுது. பூமியில் மனிதர்கள் அந்தச் சமூகத்தில் எல்லாருக்கும் தெரிஞ்சு பிறக்கிறாங்க. பெத்துக்கிறாங்க. வளர்றாங்க.
நான் எழுந்துபோய் அனாதையா படுத்துக்கிடந்த குழந்தைக்குப் பக்கத்துல போனேன்.
இதோ படுத்துக் கிடக்கிறான்- இந்த பூமியின் ஒரு எதிர்கால பிரஜை. இவனுக்கு என்ன தெரியும்? நானும் மற்ற எல்லாரும் எப்படி உண்டானோமோ அப்படித்தான் இவனும் உண்டாகியிருக்கிறான். தாகத்துடனும் மோகத்துடனும் இவன் வளர்வான். தாடி, மீசை முளைச்சு ஆம்பளையா மாறுவான். துளித் துளியா விந்தை பல மாதிரியும் சிந்துவான். அவற்றில் சில துளிகள் குழந்தையா மாறும். அதுவும் வளரும்.
விந்தைப் பல இடங்கள்லயும் சிந்தி, உடல் வலிமைபோய், தளர்ச்சியடைஞ்சு, முடி நரைச்சு, வயசாகிப் போய் ஒருநாள் இவனும் மரணத்தைத் தழுவுவான். இல்லாட்டி முதுமை வர்றதுக்கு முன்னாடியேகூட சாகலாம். இவன் வளர்றப்போ எப்படிப்பட்ட நம்பிக்கையோட வளருவான்? அம்மா சொல்லித்தர்றது பிஞ்சு மனசுல ஆழமா பதியும். பெரியவனா வளர்றப்போ மற்றவங்க சொல்றதைவிட தன் மனசுல இருக்குற நம்பிக்கைகளையும் எண்ணங்களையும்தான் இவன் பெருசா நினைப்பான். இப்போ இவன் இந்துவோ, கிறிஸ்துவனோ, முஸ்லிமோ, யூதனோ, பார்ஸியோ, புத்தமதத்தைச் சேர்ந்தவனோ, ஜைனனோ, சீக்கியனோ அல்ல...
இவன் மனிதனின் குழந்தை.
நானும் நீங்களும் கூட மனிதனின் குழந்தைகள்தாம். நான் இப்படி ஆயிட்டேன். இந்தக் குழந்தையோட எதிர்காலம் எப்படி இருக்கும்? எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இவனுக்கும் ஏற்படுமோ? இவனும் நோய்கள் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனாக ஆவானா? நான் நினைச்சுப் பார்த்தேன். இவன் ஒருவேளை பிச்சைக்காரனா ஆகலாம். இல்லாட்டி ஒரு திருடனா ஆகலாம். ஒரு கவிஞனா வரலாம். எதிர்காலத்துல ஒரு ஜனாதிபதியாகூட வரலாம். ஒரு விஞ்ஞானி ஆகலாம். இல்லாட்டி ஒரு புதிய மதத்தின் ஒரு பிரச்சாரகனாக வரலாம். தத்துவவாதி!
ஆகாயத்தில் ஒரு முழக்கம்! ஒரே இரைச்சல் மயம்!
பர்ர்றம்! பூம்! பர்ர்றம்!
"விமானம்!" நூறு சப்தங்கள்: "விமானம்... விமானம்" விமானத்தைப் பார்க்குறப்போ நமக்கு ஞாபகத்துல வர்றது- போர்!
ரெண்டு பச்சை நட்சத்திரங்கள் பக்கத்துல பக்கத்துல வருது. ஒரு சிவப்பு நட்சத்திரம் மெதுவாக நகர்ந்து வருது. பெரிய ஒரு இரைச்சலை எழுப்பியவாறு, தலைக்கு மேலே எல்லாம் பயங்கரமான வேகத்துடன் பாய்ந்தோடுது...
இப்போ ஒரே நிசப்தம். நின்னுபோன பெரிய இயந்திரம் மீண்டும் இயங்க ஆரம்பிக்குது. சப்தங்கள்!
திடீர்னு எனக்குப் பக்கத்துல தனியா- அனாதையா கிடந்த குழந்தை அழ ஆரம்பிச்சது... குழந்தையோட அழுகையைத் தாங்கிக்க மனசில்லாம நான் அதை கையில எடுத்தேன்.