சப்தங்கள் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6380
எலும்பு உருகி சலமா போகும். உள்ளே தோல் பழுத்துப் போய் நாற்றமடிக்கும். அதற்கு மத்தியில் பயங்கர வேதனையோட சூடான மூத்திரம்...''
"இது ஸிஃபிலிஸா கொனோரியாவா?''
"கொனோரியா. ஸிஃபிலிஸுக்கு புண்கள் உண்டாகும். ரத்தத்தைப்போல... நெருப்பைப்போல... சிவப்பு சிவப்பா அடையாளங்கள். அது கொஞ்சம் கொஞ்சமா நெருப்பு மாதிரி எரிஞ்சு பெருசாகும்.''
"அதற்குப் பிறகு நீங்க அந்த கிழட்டு விபச்சாரியைப் பார்த்தீங்களா?''
"பார்த்தேன். அவனை மட்டுமில்ல. இன்னும் எத்தனையோ பேரைப் பார்த்தேன். அதற்கு முன்னாடி நான் மணமுள்ள கை லேஸை நெருப்புல எரிச்சிட்டேன்." அவன் காகத்தின் குரல்ல என்னைப் பார்த்துக் கேட்டான்.
"அதற்குப் பின்னாடி என்ன நீ என்னைப் பார்க்கவே இல்ல? என்னை மறந்திட்டியா? எனக்குத் தெரியும்- வேற யாரையோ தேடி நீ போய்ட்டே, இல்ல?"
"சரி... உங்க நெஞ்சில மிதிச்ச தாயைப்பற்றி சொல்லுங்க...''
9
"மனம் முழுக்க கவலையையும் உடம்புல தளர்ச்சியையும் வச்சிக்கிட்டு நான் போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். எனக்குப் பின்னாடி இடிஞ்சு போய் காணப்பட்ட ஒரு பழைய பெரிய தேவாலயம். இடது பக்கம் சற்று தூரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். முன்பக்கம் பரந்து கிடக்கும் பாழ்நிலம். வலது பக்கம் கொஞ்சம் தள்ளி மிகமிகப் பழைய சுடுகாடு. நான்தான் சொன்னேனே எனக்கு பயங்கர களைப்பா இருந்துச்சுன்னு. நான் உணவுன்னு எதுவும் சாப்பிடல. பசியின் கொடுமை எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியும்ல? கடுமையான பசி. என் கையில ஒரு பைசா கிடையாது. நான் அந்தப் புராதனமான தேவாலயத்தின் படின்னு நினைக்கிறேன்... ஒரு கருங்கல் மேல தளர்ந்துபோய் படுத்துக் கிடந்தேன். பசி, தாகம், களைப்பு, வேதனைகள்... வேதனைகளின் கொடுங்காற்று. சூரியன் மறையிறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. நான் என்னை மறந்து மயங்கிக் கிடந்தேன். அந்தக் கருங்கல்லின் குளிர்ல அப்படியே ஒன்றிப் போனேன். கொஞ்ச நேரத்துல நல்லா தூங்கியும் போனேன். சூரியன் மறைந்தது. இரவு வந்தது. இது எதுவுமே எனக்குத் தெரியாது.
என்னை யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்துச்சு. நான் ஒரு பெரிய கலாட்டாவுக்கு மத்தியில சிக்கிக்கிடந்ததுபோல உணர்ந்தேன். கண் விழிச்சுப் பார்த்தேன். உடம்பு தெப்பமா நனைஞ்சிருந்தது. முழுக்க இருட்டுன்னு சொல்றதுக்கு இல்ல. உலகம் நிலவு வெளிச்சத்தில் மூழ்கிக் கிடந்துச்சு. இலைகள் வழியா சந்திரன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நட்சத்திரங்கள். விசாலமான, விசாலமான, விசாலமான வானம். எனக்குள் ஒரே தனிமை உணர்வு... பிரபஞ்சம்.... கண்விழித்த வேதனைகள்.... பலவித சத்தங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணின் தெளிவான குரல். அவளின் குரலில் ஒருவித கவலை, வேதனை தெரிந்தது.
"யார் இங்க வந்து படுத்துக் கிடக்கிறது? ஏதோ இந்த இடம் இந்த ஆளுக்குச் சொந்தம் மாதிரி..."
அவள் சொன்னது என்னைப் பற்றித்தான். நான் கொஞ்சம்கூட அசையல. வாய்திறந்து ஒரு வார்த்தை பேசல. பேய், பிசாசுகள்மீது எனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் நான் பயந்து போயிருந்த தென்னவோ உண்மை. கொஞ்சம் தள்ளி இன்னொரு குரல். ஒரு கிழவனின் குரல் அது.
"எனக்கு ரெண்டு கண்ணுமே இல்லைன்னா என்ன?"
"க்ல... க்ல.... க்ல... க்லக்!" நாய் தண்ணீரை நக்கி குடிக்கிற சத்தம்! இடையில் ஒரு குழந்தையின் குரல்!
"பால் தரல."
"அடியே, மிருகமே!" ஒரு ஆணின் குரல்.
அதற்கு ஒரு பெண்ணின் பதில்:
"நான் கொஞ்சம் மூத்திரம் இருந்துட்டு வர்றேன்!"
மூத்திரம் பெய்யும் சத்தம் என் காதில் விழவில்லை. ஒரே ஆர்ப்பாட்டம். மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் இடையில் குழந்தைகளும். நான் இப்போ எங்கே இருக்கேன்? நினைச்சுப் பார்த்தப்போ மனசுல இனம்புரியாத பயம் உண்டானது. என்னைச் சுற்றிலும் ஒரே நாற்றம். என்னவோ தீயில் எரிஞ்சு கருகுற மாதிரி இருந்துச்சு. இடையில் சில நல்ல வாசனைகளும் இல்லாம இல்ல.
"சரி... எந்திரிச்சு போ." மீண்டும் முதலில் கேட்ட பெண்ணின் குரல். அவள் எனக்கு ரொம்பவும் பக்கத்துலேயே இருந்தா. நான் கொஞ்சம் கூட அசையல. காற்றில் இலைகள் சலசலத்துக்கிட்டு இருந்துச்சு! என் உடம்புல மரத்தின் நிழல்கள் பட்டுச்சு. வெண்மையான மேகங்கள் வானத்துல சஞ்சரிச்சுக்கிட்டு இருந்துச்சு. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் வேகமா பாய்ந்து போய்க் கொண்டிருந்த மேகங்களைப் பார்க்கவே ரொம்பவும் ரம்மியமா இருந்துச்சு. வானமே, கோடிக்கணக்கான நட்சத்திரங்களே, நிலவு காய்ந்து கொண்டிருக்கிற இரவு நேரமே, அற்புதமான பிரபஞ்சமே!
"மழை பெய்யுமோ?" தூரத்தில் ஒரு ஆணின் குரல். அதற்கு யாரோ பதில் சொன்னாங்க. பதில் சொன்னது ஒரு பெண்:
"தெய்வம் இன்னைக்கு மழை பெய்ய வைக்கமாட்டான்!"
"ஆமா... வழியில கிடந்தது என்ன?" ஒரு ஆண் கேட்க, ஒரு பெண் பதில் சொன்னாள்:
"எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு!"
"ஏன்?"
"நான் நேற்றுத்தான் பிரசவமானேன்!"
"சரி... குழந்தையோட அப்பன் யாரு?"
"யாருக்குத் தெரியும்?"
"முட்டாள்!" யாரோ சொன்னாங்க. அதைத் தொடர்ந்து ஒரே சிரிப்பொலி. அந்தச் சிரிப்பொலியில் சில பெண்களின் சிரிப்பும் இல்லாமல் இல்லை. கொஞ்ச நேரத்தில் சப்தங்கள் அந்தப் பக்கம் கேட்கல. யாரோ ஒரு கிழவன் சொல்லிக்கிட்டு இருந்தான்.
"நூறு பேர்கள்கிட்ட கேட்கணும்!"
"சரிதான்... அழுவுற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!" ஒரு பெண் சொன்னாள்.
"க்ல, க்ல, க்ல, க்லக்!"
"போ நாயே!"
"சரிதான்..."
"இந்த உலகத்துல இருக்குறவங்கள்ல தெய்வத்துக்கு பயப்படுறவங்க யாரு? சிலர் ஐநூறு பேருக்கு... சிலர் நூறு பேர்களுக்கு... சிலர் பத்து பேர்களுக்கு... ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்காக...!"
"ஆனா... வாங்குறவங்க கொடுக்கிறவங்க ஜாதிப் பெயரைச் சொல்லணும்!"
"அப்போ உண்மையைச் சொல்லக்கூடாது!"
"உண்மையைச் சொன்னா மரணம்தான்!"
"இங்கே வந்து பதினொரு வருடமாச்சு!"
"இதுவரை என்னத்தைச் சம்பாதிச்சிருக்கு?" ஒரு பெண்ணின் கேள்வி.
"ஒண்ணுமே இல்ல..."
"அதுதான் உண்மை!"
"போடி நாயே! நீயும் உன் சம்பாத்தியமும்..."
"சரி... உன்னோட நாற்றம் பிடிச்சு அழுகிப்போன காலை எதுக்கு என் முகத்துக்குப் பக்கத்துல நீட்டுறே?"
"உன்னோட மற்றது கூடத்தான் பழுத்திருக்கு!"
"எந்திரிச்சுப் போறியா இல்லியா?" மீண்டும் என் பக்கத்துல நின்றிருந்த பெண்ணின் குரல்: "அதுலதானே தினமும் நீ படுக்குறே?"
அவள் என் உடம்பைத் தொட்டாள். நான் பனிக்கட்டியைப் போல குளிர்ந்து போனேன்.