சப்தங்கள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
"அவங்களுக்குத் தேவை கடைசியில்- அதிகாரம். அதாவது- பலம்!''
"எதற்கு?''
"இந்த பூமியில வாழ்ற மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் அடக்கி ஆளுறதுக்கு. மதங்கள் தெய்வத்தின் பெயரில்... தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்களின் சொந்தப் பெயரில்...''
"அதாவது...?''
"ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில ஒவ்வொரு கொள்கை- தத்துவ சாஸ்திரம் இருக்கு. அதையொட்டி எல்லா விஷயங்களும் நடக்கணும்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிறாங்க!''
"என்னைப் பொறுத்தவரை- எனக்குன்னு வாழ்க்கையில் ஒரு கொள்கையும் இல்ல. யாரோட தொடர்பும் எனக்கு இல்லாம இருக்குறதுனால இது இருக்குமா?''
"உங்களுக்கு வாழ்க்கையில ஒரு கொள்கை- கோட்பாடு இருக்கு. அதைப்பற்றி நான் ஏற்கெனவே உங்கக்கிட்ட சொல்லி இருக்கேன்! இனி... தொடர்புகளையும் பற்றி சொல்றதுன்னா... உங்களுக்கும் எல்லார்கூடவும் தொடர்பு இருக்கத்தான் செய்யுது!''
"என்ன தொடர்பு?''
"உங்களுக்கு தொப்புள் இருக்கா?''
"தொப்புளா? இதை வச்சு என்ன தொடர்பு?''
"உங்களுக்கே தெரியாத தாயுடன் நீங்க அதன் மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருந்தீங்க...''
"அதுனால என்ன.''
"உங்களுக்கே தெரியாத உங்களுடைய தந்தை அவரோட தாயுடன் இதே மாதிரிதான் தொடர்பு கொண்டிருந்தார். சுருக்கமா சொல்லப்போனால் உலகத்துல இருக்குற எல்லாருக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கு!''
"எனக்கு ஒண்ணும் அப்படித் தோணல!''
"அப்படி எதுவும் தோணலைன்னா இல்லைன்னு வச்சுக்கோங்க. நீங்க தேவையில்லாம அது இதுன்னு பேசி நேரத்தை வீண் செய்றீங்க. சரி... நீங்க காதலனா ஆன கதையைச் சொல்லுங்க. நீங்க நகரத்துல இருந்த ஒரு ஹோட்டலோட மாடியில நின்னுக்கிட்டு இருக்கீங்க. அழகான சூரிய அஸ்தமனம்...''
"ஆமா... ஆனா, சூரியன் இன்னும் அஸ்தமனம் ஆகல. நகரம் ஒரு பெரிய காடுன்னு நினைச்சுக்கோங்க. அதுல எல்லா வகைப்பட்ட மோசமான மிருகங்களும் இருக்கு. ஆனா, அதற்குப் பெயர் நகரம்! கர்ஜனை செய்றதும், உறுமுறதும், ஊளையிடுறதும், முனகுறதும்... எல்லாமே நகரத்துல இருக்கு. வாகனங்கள், இயந்திரங்கள்- எல்லாவற்றிலும் சத்தங்கள்! சாரிசாரியா வேக வேகமா ஒரு வகை பதற்றத்தோட போய்க்கொண்டிருக்கும் மனிதக்கூட்டம்! சீறிக்கொண்டு பாய்ந்தோடுற வாகனங்கள்! பல்வேறு வகைப்பட்ட கட்டடங்கள்! அவை ஆகாயத்தையே எட்டிப் பிடிச்சிக்கிட்டிருக்கு. மில்கள், ஹோட்டல்கள், வாசக சாலைகள், மதுக் கடைகள், மருத்துவமனைகள், அரசாங்க அலுவலகங்கள்... எல்லா இடங்கள்லயும் கட்டாயம் இருக்கு- பல நிறங்கள்லயும் இருக்குற சாயங்களில் தோய்க்கப்பட்ட துணிகள்!''
"என்ன சொல்றீங்க?''
"கொடிகள்.''
"ஓ... அதை சொல்றீங்களா...?''
"அந்தச் சாயத்தில் முக்கிய ஒவ்வொரு துணித் துண்டும் மக்களின் ஒவ்வொரு அடையாளமாயிற்றே!''
"ஆமா...''
"கொடியைச் சேர்ந்தவங்க ஒவ்வொருத்தருக்கும் அவுங்களுக்குன்னு சில வேலைகள், திட்டங்கள் இருக்கு!''
"இருக்கத்தானே செய்யும்!''
"ஒவ்வொருத்தரும் மக்களைப் பற்றித்தானே பேசுறாங்க?''
"எல்லாரும் அப்படித்தான் பேசுவாங்க!''
"ஒரு வெடி மருந்து சாலையில நெருப்பு பிடிச்சிருச்சு. மக்களின் ஒரு ஊர்வலம்... அதே நேரத்துல மக்களின் இன்னொரு ஊர்வலம்... ஒரே கோஷங்கள் மயம்! ரெண்டுக்கும் மோதல்! பிறகென்ன? குண்டுகள், டயனமைட்டுகள், சோடா பாட்டில்கள்- எல்லாமே அடுத்தடுத்து வெடிக்குது! கருங்கற்கள் வானத்துல பறக்குது! வெட்டுக் கத்திகள் நெஞ்சுல பாயுது!
கோஷங்கள்! எதிர் கோஷங்கள்! ஒருத்தருக்கொருத்தர் கெட்ட வார்த்தைகளில் வசை பாடல்! சவால்! ரத்தத்தோட ஒரு விளையாட்டு! மரணத்தோட விளையாட்டு! அடி! இடி! அழுகை! ஓட்டம்! ஆர்ப்பாட்டம்! மரணத்தின் ஊழித் தாண்டவம்...
போலீஸ்காரர்கள் வருகிறார்கள். பட்டாளம் வருகிறது. இயந்திரத் துப்பாக்கிகள் கர்ஜிக்கின்றன.
ட, ட, ட, ட, ட, ட, ட, ட, டே!
"முடிவே இல்லாத கர்ஜனை. எங்கு பார்த்தாலும் கூக்குரல்கள்! ஓலங்கள்! மேலே வட்டம் சுற்றிக்கொண்டிருக்கிற விமானம்.
பர்ர்றம்! பர்ர்றம்!
கீழே மண்டை பிளந்தும் நெஞ்சு கீறியும் விழுந்து கிடக்குற மனிதர்கள். நெருப்பு பிடிச்சு எரியிற கட்டடங்கள். வீசி அடிக்கிற வெப்பக் காற்று. ரத்தமும் வெடி மருந்தும் கலந்த நாற்றம். வழக்கம் போல அன்னைக்கும் நகரத்தின் தெரு விளக்குகள் அழகாக எரிய ஆரம்பிச்சது. திரைப்படக் கொட்டகைகளில் இருந்து இனிமையாக பாடல்கள் கிளம்பி வந்தன. இருண்டு போய் காணப்பட்ட ஆகாயத்தில் ரத்தச் சிவப்பு வண்ணத்தில் தோன்றி மறையிற விளம்பரங்கள்! அடடா... என்ன அதிசயமான, பயங்கரமான, அழகான நகரம்!
ஆறு மாடி கட்டடம் ஆகாயம் வரை உயர்ந்து நின்னு தகதகன்னு நெருப்புல எரிஞ்சிக்கிட்டு இருக்கு. எத்தனையோ ஆயிரம் கண்கள்ல அந்த ஜுவாலைகள் பிரதிபலிக்குது! மக்கள் ஆயிரக்கணக்குல வெந்து சாம்பலாகுறாங்க. தொடர்ந்து இடைவிடாமல் மணிகள் அடித்தவாறு வாகனங்கள் பாய்ஞ்சு வருது. தீயை அணைக்கக்கூடிய இயந்திரங்கள். ஆகாயத்தில் நீரைப் பீய்ச்சி அடிக்கிறார்கள்.
நான் நின்னுக்கிட்டு இருந்த ஹோட்டல் முழுக்க முழுக்க புகையால மூடிக்கிருச்சு. நெருப்பு பிடிச்சு எரியுது. இருமிக்கிட்டே, கண்களைத் திறக்க முடியாம, ஒவ்வொருத்தரும் தடவித் தடவி கீழே இறங்கி ஓட முயற்சிக்கிறாங்க. நானும் இறங்கி ஓடினேன். எங்கே ஓடுறதுன்னு ஒரு குறிக்கோளும் இல்லாம ஓடினேன். எப்படியாவது தப்பிக்கணுமே! நெருப்புல குதிச்சேன். உடம்புல நெருப்பு பற்றிக்கிடுச்சு! நெருப்பு பற்றின ஆடைகளோட நான் ஓடுறேன்.
நகரத்துல முக்கியமான அந்த மனிதர் சொன்னார்- நான் நெருப்புல இருந்த பலரையும் காப்பாற்றினேன் என்று. எது எப்படியோ... எனக்கு சுயநினைவு வந்தப்போ நான் அவரோட வீட்ல இருந்தேன். அவரோட மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் என்னை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. நான் ஒரு வீர இளைஞன்னு அவங்க நினைச்சாங்க! நாட்டோட நம்பிக்கை நட்சத்திரம்! என்னைப்போல் இன்னும் நூற்றுக்கணக்கான ஆயிரம் இளைஞர்கள் உருவாக வேண்டும்.
என்னோட படத்தை அவர் ஏதோ ஒரு பத்திரிகையில பிரசுரம் செய்தார்னு நினைக்கிறேன். அதோட அவர் தன்னுடைய அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதற்குப் பிறகு கொஞ்ச நாட்களுக்கு.... ஒரே அறிக்கைகள் மயம்தான்! எல்லா தலைவர்களும் மாறி மாறி அறிக்கைகள் விட்டாங்க! எதிர் அறிக்கைகளும்தான்! ஒவ்வொரு கொடியைச் சேர்ந்தவங்களும் ஏராளமான பேர் இறந்து போயிருந்தாங்க. அதற்கு மற்ற கொடிக்காரர்கள் ஆறுதல் சொல்லணும்! பிறகு... செத்துப் போனவங்களோட எண்ணிக்கை! எல்லாமே சுத்தப் பொய்கள்! சாயத்தில் முக்கிய துண்டுத் துணிகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லாருமே பொய் சொன்னாங்க. மேடையில பேசினாங்க. பத்திரிகைகளில் எழுதினாங்க. கோஷங்கள் மாறின. வேற விசேஷமா ஒண்ணும் நடக்கல. வெடி மருந்தும் குண்டுகளும் சாயத்தில் தோய்ந்த துண்டுத் துணிகளும்...''
"நீங்க காதலனா ஆனது?''
"சொல்றேன். நான் அந்தப் பெரிய மனிதரோட வீட்லதான் தங்கினேன். அதாவது... மோட்டார் ஷெட்டின் இரண்டு பக்கங்கள்லயும் ரெண்டு நல்ல அறைகள் இருந்துச்சு. அதுல ஒரு அறையில நான். இன்னொரு அறையில டிரைவர்.