சப்தங்கள் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
"ஒழுக்கத்தை வச்சு...''
"இந்த பூமியில எங்கே வசிக்கிற மக்களோட ஒழுக்கத்தை வச்சு?''
"அதைப்பற்றி எனக்குத் தெரியாது. சாதாரணமா நாம ஒழுக்கம்னு சொல்லுவோம் இல்லியா? வேற பெண்களைப் பார்க்கக்கூடாது. பதிவிரதை அது இதுன்னு...''
"பல மதங்களிலும் பல மாதிரி ஒழுக்கங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கு. ஏகபத்தினி விரதம் என்பதையே எடுத்துக்கோங்க. சில மதங்களில் இதுவே பல பத்தினி விரதமா இருக்கு. அம்மா, சகோதரி- இவங்களை மனைவிகளா ஆக்கிக் கொள்கிற மக்களும் மன்னர்களும்கூட இருந்திருக்காங்க. அதுதான் அவங்களோட ஒழுக்கம். ஆண் குறியை வழிபடுறது. பெண் குறியைக் கும்பிடுறது- இதைப் பற்றியெல்லாம் நீங்க கேள்விப்பட்டிருக்கிங்களா? அங்கே ஒழுக்கம்னா எது? மிருகங்கள், புழு- பூச்சிகள், பறவைகள்- இவற்றுக்கு மத்தியில் சொந்தச் சகோதரியே பெரும்பாலும் மனைவி. இதே மாதிரி மனிதர்கள் மத்தியிலும் இருக்கு. சகோதரிக்கு சகோதரன் மூலம் கர்ப்பம் உண்டாகுற சம்பவங்களும் இருக்கு. தாய்க்கு மகன் மூலம் கர்ப்பம் உண்டாகுறதும் நடக்கவே செய்யுது. மகளுக்கு தந்தை மூலம் உண்டாகுறதும்...''
"கேட்கவே பயங்கரமா இருக்கே!''
"உங்களுக்கு அப்படி தோணுறதுக்குக் காரணம்?''
"எனக்கே தெரியல!''
"நான் சொல்றேன். உங்களுக்கு வாழ்க்கையில கொள்கைன்னு ஒண்ணு இருக்கு. இல்லைன்னு சொன்னா அது தப்பு. சின்ன வயசுல இருந்தே அது உங்க மனசுல இருக்கு. தேவாலயத்தில் ஒரு பாதிரியாரா இருந்தவர்தானே உங்களோட வளர்ப்புத் தந்தை? அவர் உங்களுக்கு அதைச் சொல்லித் தந்திருக்காரு. இது நல்லது இது தப்புன்னு அவர் சொல்லிக் கொடுத்திருப்பாரு. அதுதான் உங்களோட கொள்கை, தத்துவ சாஸ்திரம்!''
"நீங்க சொல்றது சரியாக இருக்கலாம். நான் ஒண்ணு கேட்கட்டுமா? ஆண்- பெண் உறவுல ஒருவருக்கொருவர் உண்மையா இருக்க முடியுமா?''
"உடல் சம்பந்தப்பட்ட விஷயத்திலயா?''
"ஆமா...''
"இதுக்கு என்னால எப்படி பதில் சொல்ல முடியும்? என்னைத் தவிர, இப்போ உலகத்துல இருக்கிற எல்லா ஆண்களையும் பெண்களையும் பற்றியில்ல சொல்ல வேண்டியிருக்கு? உண்மையாக நடந்தால் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். பொதுவாகப் பார்த்தால் யாருக்காவது எதனிடமாவது நிரந்தரமாக உண்மையாக இருக்க முடியுதா? நாம மற்றவங்க முன்னாடி நல்லவங்க மாதிரி இருக்க முயற்சிக்கிறோம்ன்றதுதான் உண்மையே தவிர, நமக்கு முன்னாடி நாம நல்லவங்களா என்ன? நம்மோட பகல்கள்... நம்மோட இரவுகள்...''
"மனித சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
"மோசமா சொல்றதுக்கில்ல. அப்படி நீங்க கேட்கக் காரணம்?''
"இன்னைக்கு உலகத்துல இருக்குற மக்களில் பத்துல ஏழு பேருக்கு கொனோரியாவும் ஸிஃபிலிஸும் இருக்கு!''
"அப்படி யார் சொன்னாங்க?''
"ஒரு பெரிய மிலிட்டரி டாக்டர்!''
"பட்டாளக்காரர்களை பயமுறுத்துறதுக்காக அவர் அப்படிச் சொல்லியிருப்பாரு!''
"பட்டாளக்காரர்களுக்கு பத்துல ஒன்பது பேருக்கு உடல்நலக்கேடு இருக்கு. இது உண்மை. மரணத்துக்குப் பக்கத்துலயே இருக்குறவங்க அவங்க. மற்றவர்கள்? தொழிலாளிகள், விவசாயிகள், உத்தியோகம் பார்ப்பவர்கள், வக்கீல்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், நடிகர்- நடிகைகள், வைதீகர்கள், பிரம்மச்சாரிகள், பத்திரிகைகளில் வேலை பார்ப்பவர்கள், கதை எழுதுபவர்கள், கவிஞர்கள், விபச்சாரிகள், விமர்சகர்கள், பிச்சைக்காரர்கள், ஜனாதிபதிகள்- உலகத்தில் இப்படிப்பட்ட பொதுமக்கள்ல பத்துல ஏழு பேருக்கு ஸிஃபிலிஸும் கொனோரியாவும் இருக்கு!''
"இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியாது. இருந்தாலும் மருந்துகள் இருக்கே! கொனோரியா, ஸிஃபிலிஸ், சயம், குஷ்டம்- எல்லாத்துக்கும் உரிய மருந்துகள் இருக்கே!''
"நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே மருந்துகளை வாங்கி பயன்படுத்த முடியும். இருந்தாலும் முழுமையா நோய் குணமாகுறது இல்ல. சாம்பல்ல தீக்கட்டைபோல... கொனோரியா, ரத்தம் மூலமா... விந்து வழியா... மூணு தலைமுறை வரை தொடர்ந்து வர்றதா டாக்டர்கள் சொல்றாங்க. குஷ்டரோகத்தைவிட பயங்கரமானதோ என்னவோ... விபச்சாரிகள் பக்கத்துல போறதுக்கே எனக்கு பயம். நான் போனதே இல்ல. பட்டாளத்துல இருந்து வெளியே வந்து நான் நகரத்துல வசிக்க ஆரம்பிச்ச பிறகு, நான் ஒரு காதலனாக மாறினேன். அதுவரை- அதாவது நான் பட்டாளத்துல இருக்குற வரை என்னோட காதலியா இருந்தது ஒரு சினிமா நடிகையின் படம்தான்! வாழ்க்கை முழுவதும் திருமணமே ஆகாம வாழ்ந்துக்கிட்டு இருக்குற எங்கள்ல பலருக்கும் காதலியா இருந்தது அந்தப் படம்தான்!''
"அப்படின்னா?''
"அந்தப் படத்துல உதடுகள் இருந்துச்சு. கண்கள் இருந்துச்சு. மார்பகங்களும் தொப்புளும் தொடைகளும் இருந்துச்சு. எங்களுக்கும் உணர்ச்சிகள் இருந்துச்சு. முத்தம் கொடுப்போம். கட்டிப்பிடிப்போம். உடலுறவு....''
"சரிதான்!''
"எங்களுடைய வாழ்க்கையை நினைச்சுப் பாருங்க. பூமியில் உள்ளவர்களின்... எங்களின் படுக்கையறைகள்!''
"பூமியில எத்தனையோ கோடி பெண்களும் ஆண்களும் இருக்காங்க! என்னையும் சேர்த்துத்தான்... உங்களையும்தான்... படுக்கையறைகளைப் பற்றி நினைக்க என்ன இருக்கு? ரத்தமும் எலும்பும் தாகமும் மோகமும் கொண்ட உயிர்கள்! நீங்க காதலனா ஆன கதையைச் சொல்லுங்க. நான் கேட்கிறேன்.''
5
"நான் காதலனா இருந்தது நகரத்தின் முக்கிய புள்ளியின் வீட்டில் தங்கி இருக்குற காலத்தில்தான். பட்டாளத்தைவிட்டு வெளியே வந்தவுடனே, அந்தச் சம்பவம் நடந்தது. பட்டாளத்துல இருந்தவங்க எல்லாரும் வேலை வெட்டி இல்லாம சாலைகள்ல அலைஞ்சிக்கிட்டு இருக்காங்க. எங்கே பார்த்தாலும் பஞ்சமும் நோய்களும் தலைவிரிச்சு ஆடுது. எந்தக் காலத்திலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லையே! உலகத்துல எந்த விஷயம் நடந்தாலும் ஆண் பெண்ணொருத்தியைக் காதலிக்காமல், உடலுறவு கொள்ளாமல் வாழ்றதுன்னா..''
"கொஞ்சம் நிறுத்துங்க. நகரத்துல முக்கிய புள்ளியோட வீட்டுக்கு எப்படி நீங்க போய்ச் சேர்ந்தீங்க?''
"ஜாதிச் சண்டையோ, அரசியல் சண்டையோ... ஏதோ காரணத்தால மக்கள் மத்தியில ஒரு குழப்பம்... சண்டை! மக்களின் சண்டை! மக்களின் போராட்டம்! நான் ஒரு ஹோட்டலின் மாடியில் நின்னுக்கிட்டு இருந்தேன். கண்ணுக்கு அழகா சூரிய அஸ்தமனம். ஆனால், சூரியன் இன்னும் அஸ்தமனம் ஆகல. நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? உலகத்துல இப்படிப்பட்ட சண்டைகளும் போராட்டங்களும் என்னைக்காவது முடியிறதுக்கு வழி இருக்கா?''
"ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களோ ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளோ உலகத்துல இருக்கும் காலம் வரையில்...''
"யார் சொல்றது சரி?''
"நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. தலைன்னு ஒண்ணு இருக்குதுல்ல? அதுக்குள்ளே மூளை இருக்கு. சிந்திச்சுப் பாருங்க. அதை வச்சு யோசிக்க முடியலைன்னா, எது சரின்னு படுதோ அதை ஏத்துக்கங்க!''
"இந்த மாதிரியான கருத்துகளோட நோக்கம் என்ன?''
"உங்க கேள்வியோட அர்த்தத்தை என்னால புரிஞ்சுக்க முடியல!''
"இப்போ... மதங்கள் இருக்குல்லியா? அதே நேரத்துல அரசியல் கட்சிகளும்? எல்லாரும் சேர்ந்து குழப்பங்களை உண்டாக்குறாங்க. ஆளுகளைக் கொல்றாங்க. ஆமா... இவங்களுக்கு உண்மையிலேயே என்ன வேணும்?''