சப்தங்கள் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
"அப்படியா?''
"நிச்சயமா. அவர்களின் சிம்மாசனங்கள் எல்லாம் மனிதர்களோட ரத்தத்துல முக்கி எடுத்ததுதான். அவங்க குடிக்கிறது மக்களோட ரத்தம்தான். அவங்க...''
"கொஞ்சம் நிறுத்துங்க. இடையில நான் ஒண்ணு கேக்குறேன். போர்ல எப்பவும் ஒரு பக்கம் இருக்கறவங்க தப்பானவங்கதானே!''
"இருக்கலாம். அவங்களையே எதிர் பக்கத்துல இருந்து பாக்குறப்ப...''
"அப்படிப் பார்த்தால் நாம வாழ முடியுமா? மிருகங்களோட, பறவைகளோட, தானியங்களோட, மரங்களோட, மீன்களோட, மற்ற நீர்வாழ் பிராணிகளோட பக்கம் நின்னு பார்த்தால், மனிதர்கள் எல்லாருமே பயங்கர கொலைகாரர்கள்தாம். இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?''
"இப்படி ஒரு பதிலை நீங்க வச்சிருக்கிங்களா? எது எப்படியோ, நான் என்னோட காதல் கதையை இப்போ சொல்லப்போறேன்!''
"பூமியோட ரத்தம்!''
"அதை நான் சொல்லப் போறதில்ல!''
"என்ன காரணம்?''
"நான் கொன்ன ஒரு ஆளைப் பற்றி இப்போ சொல்லப் போறேன்!''
"அதற்கு முன்னாடி பூமியோட ரத்தத்தைப் பற்றி சொல்லுங்க. உங்களுக்கு எப்படி அந்த மாதிரி தோணிச்சு?''
"விவரமா என்னால அதைச் சொல்ல முடியாது. எனக்கு அதை நினைச்சுப் பார்க்கவே என்னவோபோல் இருக்கு. ஒரு ராத்திரி நாங்க... சுமார் ஐநூறு பட்டாளக்காரர்கள் தண்ணீர் குடிச்சோம். பொழுது விடிஞ்சு பார்த்தப்போ, பாத்திரங்கள்ல ரத்தம் இருக்கு. அது ஒரு சிறிய போர் நடந்து முடிஞ்ச இடம். எத்தனையோ பேர் கீழே செத்து பிணமா கிடக்குறாங்க. முழுசா இல்ல. நான் அதையும் சொல்றேன். அது என் மனசுல பசுமையா அப்படியே நின்னுக்கிட்டு இருக்கு. என் நண்பன் ஒருத்தனோட மரணம்- அவனைக் கொன்னது நான்தான். ட...ட..டேன்னு ரெண்டு மூணு வெடிகள் வச்சேன். நல்ல பகல் நேரம். பயங்கர வெயில். போர் நடக்குற இடத்துல இருக்குற உஷ்ணத்தைப் பற்றி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. ஆரவாரம்... முழக்கம்... வெடிச்சத்தம்.. ஒரு தும்மலுடன், ஒரு அதிர்ச்சியுடன் காதே செவிடாகிப்போகிற மாதிரியான சத்தத்துடன் வெடிக்கிற குண்டுகளின் ஓசைகள்... அவை உண்டாக்கும் பிரகாசம்... வெப்பம்... வியர்வை. "குர்ர்றம்... குர்ர்றம்" என்ற பாமர் விமானங்களோட இடைவிடாத கர்ஜனை! இடி முழுக்கம்! மின்னல் வெட்டுகள்! செவிப்பறையைக் கிழிக்கிற மாதிரி பயங்கர ஓசையுடன் வெடிக்கும் குண்டுகள்... தொடர்ந்து கேட்கும் ஓடும் ஓசைகள்... அலறல் சத்தம்... அழிவு... மொத்த அழிவு... மொத்தத்தில் உடலையும் உயிரையும் நடுங்க வைக்கும் சூழ்நிலை. பாதுகாப்பற்ற ஒரு நிலைமை. இரவும் பகலும் இப்படியே போய்க்கிட்டு இருக்கு. இதற்கிடையில் உணவு சாப்பிடுவேன். உறங்குவேன். எல்லாம் ஒழுங்கா நடந்துக்கிட்டு இருக்கும். எல்லாம் ஒரு கனவுல நடக்குற மாதிரி நடக்கும். ஒருநாள் நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்த உணவுல ஒரு மனிதக் கண் கிடக்கு. என்னைச் சுற்றிலும் துண்டு துண்டா மனிதர்கள். நாற்றமெடுக்கும் பிணங்கள். மரணம் பக்கத்துலயே நின்னுக்கிட்டு இருக்கு. குண்டுகள் வெடிக்கிற சத்தம் பக்கத்துலயே கேட்குது. நான் ஏன் சாகலைன்னு எனக்கே தெரியல. இது என்னுடைய அனுபவம் மட்டுமில்ல. பட்டாளத்துல இருக்குற ஒவ்வொரு ஆளுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கும். நானும் என் நண்பனும் பக்கத்துலயே இருக்கோம். நாற்பது அடி தூரத்துல விழுந்த நெருப்பு குண்டு அந்த ஆளைக் கொல்லல. அது உண்டாக்கின குழியில இருந்து கிளம்பிய மண் என்னை மூடிடுச்சு. நல்ல பகல் நேரம். கண், மூக்கு, வாய்- எல்லாத்துலயும் மண். நான் எப்படியோ திமிறி வெளியில் வந்தேன். எங்கெங்கோ நெருப்பு பிடிச்சு எரிஞ்சிக்கிட்டு இருக்கு. நெருப்பு கொழுந்துவிட்டு எரியிற சத்தம் என் காதுல கேட்குது. அந்த நேரத்துல என் நண்பனோட அலறல்! கடுமையான வேதனையுடன், ஒருவித பயத்துடன் அந்த ஆளு என் பக்கத்துல நிக்கிறாரு.
"தயவு செஞ்சு கடவுளை மனசுல நினைச்சுக்கிட்டு என்னைக் கொன்னுரு. என்னால இதற்குமேல சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது!''
ஒரு சத்தம் கேட்டது. அந்த ஆளை நான் பார்த்தேன். என் மரணம் வரை நான் மறக்க முடியாத ஒரு சம்பவம் அது. நான் உண்மையிலேயே பயந்து நடுங்கிப்போய் வியர்வை அரும்ப நின்னுக்கிட்டு இருந்தேன். உங்களோட உள்ளங்கால் முதல் தலை வரை இருக்குற தோல் முழுவதும் பச்சையா நீங்கிப் போயிருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. உடம்புல இருந்து ரத்தம் கொட்டிக்கிட்டு இருக்கு. தீயினால் வந்த விளைவுன்னு நான் நினைக்கிறேன். நிர்வாணமான சிவந்து போன மனிதன். ரத்தத்தில் தோய்க்கப்பட்ட மனிதன்! அந்தக் கண்கள்! கை விரல்களில் இருந்தும் ஆண் குறியில் இருந்தும் ரத்தம் ஒழுகிக்கிட்டு இருக்கு!
செத்துக் கிடக்குற ஒரு பட்டாளக்காரனோட ஆடைமேல் அந்த ரத்தம் விழுந்துக்கிட்டு இருக்கு. நிற்காம விழுந்துக்கிட்டு இருக்கு!''
4
"காதல் கதையைக் கேட்கட்டுமா?''
"எல்லா பட்டாளக்காரர்களுக்கும் காதல் அனுபவம் இருக்கும். பலருக்கும் சேர்த்து ஒரு காதலி. ஒரே ஆளுக்கு பல காதலிகளும் உண்டு. சொல்லப்போனால் இது ஒரு குழப்பமான பிரச்சினை. சாதாரண பட்டாளக்காரர்களுக்குக் கிடைக்கக்கூடியவங்க தரம் தாழ்ந்த விபச்சாரிகளாகத்தான் இருக்கும். அவர்களோட கிரேடு கூடக் கூட கிடைக்கக்கூடிய பெண்களோட சமுதாய நிலையும் உயர்ந்ததாக இருக்கும். விபச்சாரத்தைப் பற்றி உங்களோட கருத்து என்ன?''
"அது நல்லதா கெட்டதான்னு சொல்லச் சொல்றீங்களா?''
"ஆமா!''
"விபச்சாரம்ன்றது உலகத்திலேயே ஒரு புராதன தொழில்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்கும் அதைப் பலரும் செஞ்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. பிச்சைக்காரி முதல் ராணி வரை. இருந்தாலும் என்னோட தாயும், சகோதரிகளும், மனைவியும் அதைச் செஞ்சா எனக்குப் பிடிக்காது.''
"உங்களுக்கு மனைவி இருக்காங்களா?''
"வெளியே தெரியிற மாதிரி இல்ல...''
"ரகசியமாக...?''
"ரகசியமாகவும் இல்லைன்ன வச்சுக்கோங்க. அப்படி இருந்தா, அவள் ஒரு விபச்சாரியா இருக்குறது எனக்குப் பிடிக்காது. சரி... உங்க கதையைச் சொல்லுங்க...''
"விபச்சாரத்துக்குப் பின்னாடி எப்பவும் ஒரு பொருளாதாரப் பிரச்சினை மறைஞ்சு இருக்கிறது உங்களுக்குத் தெரியுதா?''
"ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும்!''
"ஆமா... பெண்கள் ஏன் விபச்சாரிகளா ஆகுறாங்க?''
"ஆண்கள் இருக்குறதால!''
"அது சரியான காரணமா என்ன?''
"ஆண்கள் எதற்கு அவர்களைத் தேடிப் போறாங்க? நாம அதையும் இதையும் பேசி தேவையில்லாம நேரத்தை வீண் செய்ய வேண்டாம். ஆண்களோட பக்கம் இருந்து பார்த்தால், தப்பு பெண்கள் பக்கம்தான் தெரியும். பெண்கள் பக்கம் இருந்து பார்த்தால், தவறு எப்பவும் ஆண்கள் கிட்டத்தான்னு தோணும். சொல்லப்போனால் ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. இல்லாட்டி ரெண்டு பக்கமும் தப்பு இல்ல. நீங்க இது தப்பு இது சரின்னு எதை வச்சு சொல்றீங்க?''