சப்தங்கள் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
என்னோட சாப்பாடுகூட அங்கேதான். எனக்கு அந்த வீட்ல பரிபூர்ண சுதந்திரம். நான் அந்த வீட்ல ஒரு ஆளு மாதிரி. நான். அறையில் உட்கார்ந்து இருக்குறப்போ, ஒரு மாலை நேரத்துல நகரத்தில் உள்ள விளக்குகளெல்லாம் பிரகாசமா எரியத் தொடங்கின கணத்தில், ஒரு காதலனா நான் ஆனேன்...!''
6
கனவு காண்கின்ற கண்கள், வசீகரமான புன்னகை, குருத்தென அப்போதுதான் முளைத்து நிற்கும் மார்பகங்கள். அந்த நடை.... அந்தப் பார்வை...
ஒவ்வொரு நாள் மாலையிலும் என்னோட அறைக்கு முன்னாடி அவள் நடந்துபோவாள். என்னைப் பார்ப்பாள். என்னைப் பார்த்து புன்னகைப்பாள். நானும் புன்னகைக்க முயற்சிப்பேன். ஆனா, எனக்கு தைரியம் வராது. நான் யார்னு தெரியாமத்தான் இதெல்லாம். அந்தப் பெரிய வீட்ல ஒரு ஆள்னு என்னை அவள் நினைச்சிருக்கணும். நான் யார், எங்கே இருந்து வந்த ஆள்னு தெரிஞ்சிருச்சின்னா அதுக்குப் பிறகு அவளோட நடத்தையே வேற மாதிரி இருக்கும். இருந்தாலும் அவள் யார்? எதற்காக அவள் என்னை அப்படிப் பார்க்கிறாள்? இது பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அவள் மாணவியா? இல்லாட்டி வேலை ஏதாவது பார்க்கிறாளா? அவள் யாராக இருந்தாலும் மனசுல சந்தோஷம் தர்ற அளவுக்கு ஒரு பேரழகின்றது என்னவோ உண்மை. அவளோட பேரு என்னன்னு எனக்குத் தெரியாது. அவள் என் மனசை எப்படியோ கவர்ந்துட்டா. வாழ்க்கையில வீசின ஒரு பெருங்காற்றாக அவ இருந்தா.
ஒரு முத்தத்துக்காக, உயிரோட்டமுள்ள ஒரு அன்பான அணைப்பிற்காக நான் எவ்வளவு நாளா ஏங்கிக்கிட்டிருந்தேன் தெரியுமா? ஒரு பெண் உடம்புல துணியே இல்லாம இருந்தா எப்படி இருப்பா? எனக்குத் தெரியாது. அதை நான் பார்க்கணும்னு நினைச்சேன். அப்படி ஒரு பெண் இருக்குறப்போ அவளைத் தொட்டுப் பார்க்கணும். அவளுக்கு முத்தம் தரணும். அவளை அப்படியே ஆசையா இறுகக் கட்டிப்பிடிச்சு அணைக்கணும். பெண்ணோட மணத்தை மனசுல கற்பனை பண்ணிக்கிட்டு கருங்கல்லைக்கூட தவிடு பொடியாக்கக்கூடிய அளவுக்கு முறுக்கேறிப்போய் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். எதிர் பார்ப்போட மக்கள் ஏராளமா நடந்துபோற தெருவைப் பார்த்தவாறு நான் ஜன்னல் பக்கத்துல நின்னுக்கிட்டு இருப்பேன். சாயங்கால நேரம் வந்துட்டா, மாலை நேர வெளிச்சத்தோட சேர்ந்து அவ வருவா. ஒவ்வொரு நாளும் வேற வேற வண்ணத்துல ஆடை அணிஞ்சிருப்பா. அதற்குப் பொருத்தமான செருப்பும், அதற்கேற்ற ஹேண்ட் பேக்கும்!
அப்படி ஒரு மாலை வேளை. விளக்குகள் எரிய ஆரம்பிச்சது. நகரம் ஒரே இரைச்சல் மயமா இருக்கு. என்னோட இதயம் "டக்டக்"னு ரொம்பவும் வேகமாக அடிச்சிக்கிட்டு இருக்கு. அப்போ அவ வந்துக்கிட்டு இருக்கா! என்னோட காதல் தேவதை! அவ பாட்டுக்கு நடந்துபோறா. நான் அறையை அடைச்சிட்டு சாலையில இறங்கி நடந்தேன். நான் நடந்து வர்றதை அவ பார்த்தா. மெதுவா நடக்க ஆரம்பிச்சா. பார்த்தா. புன்சிரிப்புடன் என் முகத்தையே அவ உற்றுப் பார்த்தா. பிறகு ஒரு கேள்வி. தொண்டை அடைச்சிருந்த மாதிரி இருந்தது. இருந்தாலும் குரல்ல ஒரு இனிமை இருக்கவே செய்தது. "எங்கே போறீங்க?"
அதற்குப் பதில் சொல்ற மாதிரி நான் புன்சிரிக்க முயற்சித்தேன். வாழ்க்கையில எங்கே போறது? நான் வேர்த்துப்போய் நின்னேன். என் வாயில நீரே வற்றிப் போச்சு. "குமுகுமா"ன்னு அருமையான வாசனை! முல்லைப் பூ போன்ற வெளுத்த முகம். ரோஜாப் பூவைப்போல் சிவந்த உதடுகள். இரவுநேரம் போல கருமையான கூந்தல். அவளோட உடம்பின் எல்லா இடங்கள்லயும் எனக்கு முத்தம் கொடுக்கணும்போல இருந்துச்சு. ஆடைக்குள், ப்ளவுஸுக்குள், பாடீஸுக்குள் மறைஞ்சிருக்கிற அழகான மார்பகங்கள்... இடது கையில ஒரு சின்ன குடையும் ஹேண்ட் பேக்கும். வலது கையில் ஒரு சின்ன கை லேஸ்.
அவளையே தாகத்துடன் பார்த்து உருகிக்கிட்டே நான் நடந்தேன். அவளோடு அதிக நேரம் பேச முடியல. அந்த நேரத்துல எங்களுக்கு எதிரே ஒரு மோட்டார் கார் படுவேகமா வந்துக்கிட்டு இருக்கு. அதுல நான் தங்கியிருக்கிற வீட்டு உரிமையாளரோட மனைவி இருக்காங்க. என்னை அவங்க எங்கே பார்த்துடப்போறங்களோன்னு நான் நிழல்ல போய் மறைஞ்சிக்கிட்டேன். கார் கடந்து போயிடுச்சு. நான் மட்டும் தனியா நின்னுக்கிட்டு இருக்கேன். என்னோட பாதங்களுக்குப் பக்கத்துல அந்தக் கை லேஸ்!
நான் அதை குனிஞ்சு எடுத்தேன். அவளோட முகத்தைத் தொட்டதை, அவளோட உதடுகளைத் தொட்டதை, அவளோட வியர்வையைத் தொட்டதை நான் முத்தம் கொடுத்தேன். ஆயிரம் முறை அதற்கு முத்தம் தந்தேன். தொடர்ந்து அதை என்னோட ஆடைக்குள்- பனியனுக்கு உள்ளே- என் இதயத்தை ஒட்டி வச்சிக்கிட்டேன்.''
7
"பிறகு?''
"நான் சொல்றேன். அங்கே பாருங்க. அந்த மரத்துக்கு மேலே!''
"நிலவுதானே?''
"எவ்வளவு அழகா காய்ஞ்சிக்கிட்டு இருக்கு! எப்படி வெள்ளி மாதிரி ஜொலிச்சிக்கிட்டு இருக்கு! இந்த வெளிச்சத்துல பகல் மாதிரியே இருக்கு! நிலவுக்கு எப்படி இப்படியொரு... அங்கே பாருங்க... பச்சை இலைகள் ஒவ்வொண்ணும் நிலவொளி பட்டு பிரகாசிப்பதை! பிரகாசம்... ஓ... இப்போ மலைகளிலும், பாலைவனங்களிலும், கடல்களிலும்...''
"நிலவு இருக்கட்டும். நீங்க சொல்லிட்டு வந்த மணமுள்ள கை லேஸைப் பற்றிச் சொல்லுங்க!''
"உங்களுக்கு காதல் பரிசுகள் கிடைச்சிருக்கா?''
"நிறைய கிடச்சிருக்கு.''
"நீங்க அதை எந்த அளவுக்கு பெரிசா நினைக்கிறீங்க?''
"அப்படி நீங்க கேக்குறதுக்குக் காரணம்?''
"நான் சும்மா கேட்டேன்!''
"அதாவது- காதல்ன்றது ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒண்ணுமில்ல. நீங்களும் அந்தச் சந்திரனைப் பாருங்க. கோடிக்கணக்கான யுகங்களுக்கு முன்பு- அதற்கும் முன்னாடி கோடிக்கணக்கான யுகங்களுக்குமுன் - மனிதர்கள் இந்த பூமியில் தோன்ற ஆரம்பிச்ச காலம் முதல் ஒரு ஆணுக்குப் பெண்ணோடு தோணுற அந்த ஏதோ ஒண்ணை- நிலவு உதிச்சுக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல நான் சொல்றேன்- காதல்னு. எத்தனையோ வருடங்களா பூமியில இது நடந்துக்கிட்டு இருக்கு. அந்தக் காலத்துல இருந்து இப்ப வரை ஆண் பெண்ணைக் காதலிக்கிறான். பெண் ஆணைக் காதலிக்கிறாள். புரியுதா? உயிரினங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஒரு வகை ஈர்ப்பு. இணை சேர்தல். உற்பத்திப் பெருக்கம். அதற்கான வழிதான் காதல். சுகந்தம் கமழும் அற்புதமான உறவு....''
"எல்லாமே அற்புதமாகத்தான் இருக்கு!''
"உயிரினங்களும் பூமியும் சந்திரனும் நட்சத்திரங்களும்... எல்லாம்...!''
"நான் அந்த மணமுள்ள கை லேஸைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன். அன்னைக்கு ராத்திரி நான் அதற்கு எத்தனை முறை முத்தம் கொடுத்தேன்னு நினைக்கிறீங்க? என்னவெல்லாம் நான் கனவு கண்டேன் தெரியுமா? என் காதல் அந்த வீட்டைத் தாண்டி, நகரத்தையும் தாண்டி...''