சப்தங்கள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6377
எல்லா வகைப்பட்ட கருத்துகளை உடையவர்களையும், எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும்- எல்லாரையும் நான் நேசிக்கிறேன். நான்தான் சொன்னேனே நான் பட்டாளத்துலே இருந்தவன்னு. பட்டாளக்காரனோட கடமை என்ன? முடிஞ்ச அளவுக்கு மக்களைக் கொல்லணும்! நான் கொன்னேன்- கொஞ்சம்கூட இரக்கமே இல்லாத சில ஈனப்பிறவிகள் நாட்டை அடக்கி ஆள்றதுக்காக... நான் சொல்றது உலகத்துல நடக்குற போர்களுக்குக் காரணமாக இருக்கும் தலைவர்களை. போர் நடக்குற இடத்துல அவுங்க யாரும் இருக்க மாட்டாங்களே! அவர்களின் மனைவியும் குழந்தைகளும் கூட இருக்க மாட்டாங்க. மக்களின் போர்! உயிரைக் கொல்லும் ஆயுதங்களைக் கையில வச்சிக்கிட்டு மக்கள் ரெண்டு பாகமா பிரிஞ்சு நின்னு வெடி வெடிச்சும் குண்டுகள் எறிஞ்சும் பயனட்டை பயன்படுத்தி நெஞ்சுல தாக்கியும் ஒருத்தரையொருத்தர் கொல்வாங்க. மக்களின் போர்! எந்த மக்களின்?''
"வருத்தப்படக் கூடாதுன்னு நான் சொன்னேல்ல? பிறகு... நான் உங்களை ஒண்ணு ஞாபகப்படுத்துறேன். நீங்க ஏன் என்னைப் பார்த்து இப்படி கோபமா பேசுறீங்க? நானா உங்களை பட்டாளத்துல சேர்த்துவிட்டேன்?''
"யாரையாவது பார்த்து நான் கோபமா பேசணும். மனதில் அவ்வளவு வேதனை மண்டிக் கிடக்கு!''
"சரிதான்...''
"என்ன சொன்னீங்க?''
"அமைதியா போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிட்டுட்டு தூங்கப் பார்ப்போம்!''
2
"நான் அமைதியா உறங்கி எவ்வளவோ நாட்களாயிருச்சு! எனக்குன்னு ஒரு இடமிருக்கா? சாப்பிட உணவு இருக்கா? வேலைதான் ஏதாவது இருக்கா?''
"சரி... உங்களுக்கு எல்லாருக்கும் தெரியிற மாதிரி அப்பா, அம்மா இருக்காங்களா?''
"இல்ல...''
"பிறகு?''
"எப்படி நான் பிறந்தேன்னு நினைக்கிறீங்களா? நீங்களெல்லாம் பூமியில எப்படி பிறந்தீங்களோ அப்படித்தான்!''
"ஆனா, எனக்கு எல்லாருக்கும் தெரியிற மாதிரி அம்மா, அப்பா இருக்காங்களே! சகோதரர்களும் சகோதரிகளும்கூட இருக்காங்க!''
"எனக்கு அப்படி யாரும் இல்ல!''
"அப்ப உங்களோட பிறப்பு எங்கே?''
"நாலு ரோடுகள் சந்திக்கிற இடத்துல!''
"அப்படின்னா?''
"என்னோட வளர்ப்பு அப்பா சாகுறதுக்கு முன்னாடி என்கிட்ட சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும். ஒரு அதிகாலை நேரத்துல ஒரு துணியால மூடப்பட்டு ரத்தம் சிந்த நான் கிடக்குறேன். தனியா... இருட்டுல, ரோட்ல, அனாதையா!''
"பிறகு?''
"அவர் என்னை எடுத்துக்கொண்டு போனாரு. போலீஸ்கிட்ட விஷயத்தைச் சொன்னாரு. அரசாங்கத்துக்கும் செய்தியைத் தெரிவிச்சாரு!''
"பிறகு?''
"அவங்க என்ன செய்ய முடியும்? என்னை யாருக்கு வேணும்? அதுனால என்னை அவர் குளிப்பாட்டினாரு. நான் அப்போ பயங்கரமா அழுதேன்னு அவர் சொன்னாரு. என்னை நல்லா வெளுத்த ஒரு துணியில படுக்க வச்சாரு. ஒரு பெட்டிக்குள்ள வச்சு என்னைக் கொண்டு போனாரு. எனக்கு ஒரு பேரு வச்சாரு. கோடிக்கணக்கான பேர்கள்ல ஒண்ணு... அப்படியே நான் அவரோட மதத்துல வளர்ந்தேன். ஓரளவுக்கு நல்ல படிப்பையும் அவர் எனக்குத் தந்தாரு!''
"அப்படியே நீங்க அவரோட ஜாதியில வளர்ந்திருக்கீங்க?''
"ஆனா, நான் எந்த மதத்தையும் நம்பல. சொல்லப்போனா, எல்லா மதங்களும் ஒண்ணுதான். எல்லா மதங்களுமே மனிதர்களை நல்லவங்களா ஆக்கத்தான் முயற்சிக்குது!''
"நீங்க பிறக்கும்போது எந்த மதம்?''
"அது எப்படி எனக்குத் தெரியும்? எந்த மதத்துல இருந்து வேணும்னாலும் இருக்கலாம். கிறிஸ்துவன், முஸ்லிம், இந்து, யூதன், பார்ஸி, ஜைனன், புத்த மதம், சீக்கியன்... இல்லாட்டி ரெண்டு மதங்களோட கலவையாகூட இருக்கலாம். எது எப்படியோ, நான் ஒரு தாயோட பாலைக் குடிக்கல. பெண்களோட மார்பகங்களைப் பாக்குறப்போ, எனக்கு தாகம் தோணுது. மார்பகங்கள்! மார்பகங்கள்! கோடிக்கணக்கான மார்பகங்கள்!''
"உங்களோட வளர்ப்புத் தந்தை இறந்த பிறகு, நீங்க என்ன செஞ்சீங்க?''
"படிப்பு திடீர்னு நின்னு போயிடுச்சு. வேலை தேடி அலைஞ்சேன். பட்டாளத்துல சேர்ந்துட்டேன். எனக்குன்னு சில கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். என்னோட வாழ்க்கையைப் பற்றி முழுமையான கதை எனக்குத் தெரியாது. அப்படியும் இப்படியுமா சில விஷயங்களை என்னால் சொல்ல முடியும். அவ்வளவுதான்!''
"உங்களோட வளர்ப்புத் தந்தை யாரு?''
"ஒரு பாதிரியார். அதாவது- ஒரு தேவாலயத்துல இருக்குற சாமியார். வயசானவர். அவருக்குச் சொந்தம்னு யாருமில்ல. ரொம்ப ரொம்ப இரக்க குணம் உள்ளவர். எப்ப பார்த்தாலும் கடவுளைப் பற்றியே நினைச்சிக்கிட்டு இருப்பாரு. நானொரு கேள்வி கேட்கட்டுமா? இந்த உலகத்துல கடவுள்னு ஒருத்தர் இருக்காரா?''
"இருக்காருன்னு நினைச்சா இருக்காருதான்!''
"என்ன, இருக்காருன்னு நினைச்சாவா? அப்படிச் சொல்றதுக்குக் காரணம்?''
"எனக்கு இப்போ முப்பத்தி நாலு வயசு நடக்குது. இந்த வயசுல இப்படித்தான் சொல்லத் தோணுது. பிரபஞ்சங்களான எல்லா பிரபஞ்சங்களையும் உங்களையும் என்னையும் படைத்த கருணையே வடிவமானவனாச்சே கடவுள்! நீங்களும் நானும் நம்புறதை வச்சா பிரபஞ்சங்களும் மற்றவையும் செயல்பட்டுக்கிட்டு இருக்கு? நாம நம்பலாம்... நம்பாமலும் இருக்கலாம். மனசுக்கு எது சரின்னு படுதோ, அப்படி இருக்கலாம். ஆமா... உங்களுக்கு இப்போ வயசு என்ன?''
"இருபத்தியொன்பது!''
"உங்களோட உண்மையான அப்பா, அம்மா யாருன்னு கண்டுபிடிக்கணும்னு தோணலியா?''
"தோணியிருக்கு?''
"பிறகு?''
"தேடிப் பார்த்தேன். எவ்வளவோ நாட்கள் தேடி அலைஞ்சேன். நானும் என்னோட வளர்ப்பு அப்பாவும் சேர்ந்து இங்கே வந்து தேடினோம்!''
"இங்கேயா?''
"ஆமா... இங்கே இருக்குற நாலு ரோடுகள் சந்திக்கிற இடத்துல தான் நான் ரத்தம் வழிய பச்சைக் குழந்தையா இருட்டுல கிடந்தது!''
"அப்படியா? உங்களுக்கு மட்டும்தான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்குன்னு நினைக்காதீங்க. பிரசவமான உடனே, உங்களைக் கொன்னு இருக்கலாம். இல்லாட்டி ஏதாவது நாய்க்கு சாப்பிட போட்டிருக்கலாம். அப்படி எதுவும் செய்யலியே! யார்னு தெரியாத ஒரு பெண்ணோட கருணை மனம்... அந்தக் கருணையால்தான் இப்போ நீங்க உயிரோட இருக்கீங்க...''
"ஆமா... என்ன வரையிறீங்க?''
"வரையல. எழுதுறேன். நான் ஒரு டேப்ரெக்கார்டர் இல்லியே! நீங்க சொல்றதை நான் மறந்திடுவேன். என்னோட சொந்த அனுபவம் ஒண்ணும் இது இல்லியே! நீங்க சொல்ல நான் எழுதலாம். உடனே உங்களுக்குப் படிச்சு காண்பிக்கலாம். நீங்க சொல்லாதது எதுவும் இங்கே இருக்காது. அது போதாதா?''
"போதும்!''
3
"பூமியோட ரத்தம்தான் தண்ணீர்னு உங்களுக்குத் தோணுறதுக்குக் காரணம்?''
"அந்த சம்பவத்தை நினைச்சுப் பார்க்குறப்போ எனக்கே என்னவோ போல இருக்கு. நான்தான் சொன்னேனே- நான் ஏகப்பட்ட மனிதர்களைக் கொன்னுருக்கேன். ஒவ்வொரு பட்டாளக்காரனும் எத்தனையோ ஆயிரம் மனிதர்களைக் கொன்னுருக்கான். கொன்னுக்கிட்டு இருக்கான். இப்பவும் பூமியில ஏதாவது ஒரு இடத்துல போர் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இதற்கெல்லாம் காரணம் யார்?''
"யார்னு நீங்க நினைக்கிறீங்க?''
"சக்கரவர்த்திகள், ராஜாக்கள், ஜனாதிபதிகள், சர்வாதிகாரிகள்- இவங்கள்லாம் கொலைகாரர்கள்தானே?''