தாலி - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6549
சமூகத்திற்குக் கெடுதல் உண்டாக்காமல் இருப்பது தர்மம். சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பது அதர்மம். இந்த விஷயத்தில் சமூகத்திற்கு என்ன கெடுதல் உண்டாகிறது? கூற முடியுமா?''
தேவகுமாரன் கவனத்துடன் சொன்னார்: "சமூகம் அதன் மரியாதைகளில்தான் நின்று கொண்டிருக்கிறது. அந்த மரியாதைகளை மீறினால், சமூகமே முடிவுக்கு வந்துவிடும்.''
இரு பக்கங்களில் இருந்தும் நியாய வாதங்கள் ஆரம்பமாயின. தேவகுமாரன் உலக மரியாதைகள், தர்ம உறவுகள் ஆகியவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாதம் செய்தாலும், அந்த இரண்டு இளைஞர்களின் புத்திசாலித்தனமான சிந்தனைகளுக்கு முன்னால் அவர் தோற்றுப் போய்விட்டார். அவர் தன்னுடைய நரைத்த தாடியைத் தடவிக் கொண்டும், வழுக்கைத் தலையைச் சொறிந்து கொண்டும் கூறிய அறிவுரை வார்த்தைகளை அந்த இளைஞர்கள் மிகவும் சாதாரணமாகத் தூக்கி எறிந்தார்கள்.
சின்ஹா தைரியமான குரலில் சொன்னான்: "பாபுஜி, நீங்கள் எந்தக் காலத்து விஷயங்களைக் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. சட்டத்தைப் பயன்படுத்தி நாம் அடைய வேண்டியதை அடையத்தான் வேண்டும். சட்டத்தின் பிரிவுகளின் நோக்கமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். பணம் கடனாகத் தருபவர்களிடமிருந்து ஜமீந்தார்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் சட்டங்கள் உண்டாக்கியதையும், அதன் மூலம் எவ்வளவோ பூமி ஜமீந்தார்களுக்கு திரும்பக் கிடைத்ததையும் நீங்களே சமீபத்தில் பார்த்தீர்கள் அல்லவா? அதை அதர்மம் என்று கூறுவீர்களா? இந்த சட்டத்தின் பலத்தைக் கொண்டு அவனவனுடைய காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்பது தான் உலக வழக்கு. எனக்கு கொடுப்பதற்கோ வாங்குவதற்கோ எதுவும் இல்லை. எனக்கு இதில் சுயநலமும் இல்லை. சந்தகுமாரன் என்னுடைய நண்பர். இந்த உறவை வைத்து நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... சம்மதிக்கவோ மறுக்கவோ உங்களுக்கு உரிமை இருக்கிறது!''
தேவகுமாரனுக்கு வேறு வழியே இல்லாமல் ஆகிவிட்டது. "அப்படியென்றால் நான் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறீர்கள்?''
"எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் செய்வதற்கு எதிராக நிற்காமல் இருந்தால் போதும்.''
"என்னால் சத்தியத்தின் கழுத்தை நெறிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.''
சந்தகுமாரன் கண்களைத் துறுத்திக் கொண்டு ஆவேசத்துடன் சொன்னான்: "அப்படியென்றால்... பிறகு... என் கழுத்து நெறிவதைப் பாருங்க.''
சின்ஹா சந்தகுமாரனைத் தேற்றினான். "எதற்கு தேவையில்லாதவற்றையெல்லாம் பேசுகிறீர்கள்? பாபுஜிக்கு இரண்டு நான்கு நாட்கள் சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுங்க. நீங்கள் இதுவரை ஒரு குழந்தையின் தந்தையாக ஆகவில்லை. தந்தைக்கு மகன் எந்த அளவிற்குப் பிரியமானவன் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாது. அப்பா இப்போது எவ்வளவு எதிர்த்தாலும், வழக்கு தொடுக்கும் போது என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். நம்முடைய வாதம் இப்படி இருக்கும்... அந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட நேரத்தில் அவருடைய புத்தியும் சுயஉணர்வும் ஒழுங்காக இல்லை. இப்போது கூட சில நேரங்களில் பைத்தியத்திற்கான அறிகுறி தெரிவது உண்டு. இந்தியாவைப்போல உள்ள ஒரு வெப்பம் நிறைந்த நாட்டில் இந்த நோய் ஏராளமான மனிதர்களுக்கு இருக்கிறது. அவருக்கும் அது பாதித்திருந்தால், ஆச்சரியப்படுவதற்கில்லை. நாம் சிவில் சர்ஜன் மூலம் இதற்கு ஆதாரங்கள் கொடுப்போம்.''
தேவகுமாரன் மறுத்தார். "உயிருடன் இருக்கும்போது நான் சதிவேலையை ஒப்புக்கொள்ளவே மாட்டேன். எந்த நிமிடத்திலும் சம்மதிக்க மாட்டேன். ஆழமாக யோசித்தும் உரிய சந்தர்ப்பத்திலும் தான் நான் செய்திருக்கிறேன். அந்த விஷயத்தில் சிறிது கூட எனக்கு வருத்தம் இல்லை. நீங்கள் இப்படியொரு வழக்கு தொடுத்தால் அதற்கு மிகவும் அதிகமான எதிர்ப்பு என்னிடமிருந்துதான் உண்டாகும். நான் கூறிக்கொள்கிறேன்.''
அவர் கோபத்துடன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தார்.
சந்தகுமாரனும் எழுந்து பயமுறுத்தினான்: "அப்படியென்றால் நானும் சவால் விடுகிறேன். அப்பா, நீங்கள் என்னைக் காப்பாற்ற தயாராக இருக்கிறீர்களா? இல்லாவிட்டால் தர்மத்தை மட்டுமே காப்பாற்றுவதாக இருந்தால், பிறகு என்னுடைய முகத்தையே பார்க்க முடியாது.''
"எனக்கு மனைவியையும் பிள்ளைகளையும்விட தர்மத்தின் மீதுதான் விருப்பம்.''
சின்ஹா சந்தகுமாரனுக்கு வழிமுறைகளைச் சொல்லித் தந்தான்: "நீங்கள் வழக்கு போடுங்கள். அப்பாவுக்கு புத்தி கலங்கிவிட்டது. இனி என்ன செய்வார் என்று தெரியாது. அவரை அடைத்துப் போட வேண்டும்.''
தேவகுமாரன் கையைச் சுட்டியவாறு கோபக்குரலில் கேட்டார்: "நான் பைத்தியமா?''
"ஆமாம்... பைத்தியம்தான். அப்பா, உங்களுக்கு சுயஉணர்வு இல்லை. இப்படிக் கூறுவது பைத்தியங்கள் மட்டும்தான். பைத்தியக்காரன் என்பவன் யாரையோ கடிப்பதற்காக ஓடுபவன் மட்டுமல்ல- சாதாரண மனிதன் செய்வதற்கு எதிராகச் செய்பவன்கூட பைத்தியம்தான்.''
"உங்கள் இரண்டு பேருக்குகூடத்தான் பைத்தியம் பிடிச்சிருக்கு.''
"அதை டாக்டர் முடிவு செய்வார்.''
"நான் பத்து இருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான மேடைகளில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறேன். இது பைத்தியக்காரன் செய்யக்கூடிய வேலையா?''
"ஆமாம்... இது உண்மையாகவே தலையில் பிரச்சினை வந்தவர்கள் செய்யக்கூடிய வேலைதான். நாளையே இந்த வீட்டில் சங்கிலி அணிவித்து அடைத்துப் போட்டிருப்பதைப் பார்க்கலாம்.''
"நீங்கள் என் வீட்டை விட்டு வெளியே போங்க. இல்லாவிட்டால் நான் சுட்டுடுவேன்.''
"முற்றிலும் பைத்தியக்காரர்களின் பயமுறுத்தல். சந்தகுமாரன், அந்த வழக்கில் இதையும் எழுதிக் கொள்ள வேண்டும். இவருடைய துப்பாக்கியைப் பிடுங்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து உண்டாகும்.''
இரண்டு நண்பர்களும் எழுந்து நின்றார்கள். தேவகுமாரன் எந்தச் சமயத்திலும் சட்டத்தின் வலையில் விழுந்ததே இல்லை. பதிப்பாளர்களும் புத்தக வியாபாரிகளும் அவரைப் பல முறை ஏமாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு முறைகூட சட்டத்தைச் சரண் அடைந்ததே இல்லை. தான் நன்றாக இருந்தால் உலகமும் நன்றாக இருக்கும். இதுதான் அவருடைய வாழ்க்கை முறை. எப்போதும் இதே நீதியைத்தான் அவர் பின்பற்றி வந்திருக்கிறார். அதே நேரத்தில், பயப்படக்கூடியவரோ கீழ்ப்படியக் கூடியவரோ அல்ல. குறிப்பாக சித்தாந்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு சமரசம் செய்து போகவே தெரியாது. உலகம் தலைகீழாகப் புரண்டாலும், இந்த கூட்டுச் சதியில் பங்காளியாக ஆகப் போவதில்லை. ஆனால், இதெல்லாம் உண்மையிலேயே அவரைப் பைத்தியக்காரனாகக் காட்டுவதற்கு உதவுமா? சின்ஹா கடுமையாக பயமுறுத்தியதைச் சாதாரணமாக விட்டுவிட முடியாது. அவன் இப்படிப்பட்ட சதிச் செயல்கள் செய்வதில் அனுபவங்கள் நிறைந்தவன். டாக்டர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு உண்மையிலேயே அவர் பைத்தியக்காரன்தான் என்பதை ஆதாரத்துடன் அவன் காட்டுவான். அதுதான் நடக்கப் போவது. அவருடைய சுயமரியாதை உரத்த குரலில் கர்ஜித்தது- இல்லை. உண்மையற்ற ஒன்றுக்குத் துணை போக மாட்டேன். அதற்காக எதைச் சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தாலும்... டாக்டர்களும் குருடர்களா என்ன? அவர்களிடம் சிலவற்றைக் கேட்பார்கள். பேசுவார்கள். இல்லாவிட்டால் பேனாவை எடுத்து அவர்கள் பைத்தியம் என்று எழுதுவார்கள். அவருடைய அறிவுக்கும் சுயஉணர்விற்கும் எந்தவொரு குழப்பமும் உண்டாகக்கூடிய பிரச்சினை இல்லை... ச்சீ...