அன்புள்ள தியோ - Page 4
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7836
ராம்ஸ்கேட், இங்க்லாண்ட், ஏப்ரல் 28, 1876
அன்புள்ள தியோ,
இந்த நல்ல நாள் மீண்டும் வந்துகொண்டே இருக்கட்டும். என்னுடைய வாழ்த்துக்கள். நாம் ஒருவருடன் ஒருவர் கொண்டிருக்கும் அன்பு வருடம் ஆக ஆக இன்னும் பல மடங்கு அதிகமாகட்டும்.
நம் இருவருக்கும் பல விஷயங்களில் நெருங்கிய ஒற்றுமை இருப்பதை நினைத்து உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். இளம் பிராயத்து நினைவுகளை இருவரும் இன்னும் சிறிதுகூட மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்றுவரை நான் எந்தத் தொழிலில் இருக்கிறேனோ அந்த தொழிலில்தான் நீயும் இருக்கிறாய் என்பதும், எனக்கு எந்தெந்த இடங்களைத் தெரியுமோ, எந்தெந்த மனிதர்களைத் தெரியுமோ உனக்கும் அவற்றை, அவர்களைத் தெரிந்திருக்கிறது என்பதும், என்னைப் போலவே நீயும் இயற்கையையும் கலையையும் உயிரென நேசிக்கிறாய் என்பதும்கூட நம் இருவருக்குமிடையே இருக்கும் ஆச்சரியமான ஒற்றுமையே.
லண்டனிலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்தால் போய் சேரக்கூடிய தேம்ஸ் நதிக்கரையில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு தன்னுடைய முழு பள்ளிக்கூடத்தையும் விடுமுறைக்குப் பிறகு கொண்டு போக தீர்மானித்திருப்பதாக திரு.ஸ்டோக்ஸ் என்னிடம் கூறினார். மாறுபட்ட ஒரு பள்ளிக்கூடமாக, அதே நேரத்தில் சற்று விரிவுபடுத்தி அவர் அதை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.
நேற்று நாங்கள் இருவரும் நடந்து சென்றதைப் பற்றி இப்போது உன்னிடம் கூறப் போகிறேன். நாங்கள் நடந்து சென்ற பாதையின் இரு பக்கங்களிலும் இளம் கதிர்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்த வயல்கள் இருந்தன. அந்த வயல்களுக்கு வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே நடந்து போனால், கடலை நாம் அடையலாம்.
அந்த இடத்தை அடைந்த பிறகு எங்களின் இடது பக்கம் பார்த்தால் கல்லும் மணலும் அடங்கிய ஒரு மிகப்பெரிய மேடு தெரிந்தது. ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு அது இருந்தது. அதன் உச்சியில் செடிகளடங்கிய பெரிய புதர்கள். அந்தச் செடிகளின் கருப்பு, சாம்பல் நிறங்களில் பாசி பிடித்திருந்த தண்டுகளும் கிளைகளும் காற்றால் ஒரு பக்கம் வளைந்து ஆடிக் கொண்டிருந்தன. வயதாகிப்போன புதர்களும் அங்கு இருந்தன.
நாங்கள் நடந்து சென்ற மணல் முழுக்க சாம்பல் நிறத்தைக் கொண்ட பெரிய கற்களும், சுண்ணாம்பும், சிப்பிகளும் இருந்தன. வலது பக்கத்தில் கடல் இருந்தது. ஒரு குளத்தைப் போல அது அமைதியாக காணப்பட்டது. சூரியன் மறைந்து கொண்டிருந்த சாம்பல் நிற வானம் கடலில் தெரிந்தது.
அலையையே பார்க்க முடியவில்லை.
நேற்றைய உன் கடிதத்திற்கு நன்றி. வில்லெம் வாக்கி வேலைக்கு சேர்ந்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷப்பட்டேன். நான் அவரை மிகவும் கேட்டதாகக் கூறு. ஸ்கேவனின்ஜினுக்கு மரங்கள் அடர்ந்திருக்கும் வழியே இன்னொரு முறை உன்னுடன் நடந்து செல்ல நான் பிரியப்படுகிறேன்.
ஒவ்வொரு நாளும் உனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கட்டும். என்னை விசாரிப்பவர்களுக்கும், என்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் உன் அன்னைப் கூறு.
உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.
மகிழ்ச்சியான, வளமான வருடமாக இருக்க வேண்டும் என்று மீண்டும் உன்னை வாழ்த்துகிறேன். எவ்வளவோ பெரிய விஷயங்களை நாம் இந்தக் காலகட்டத்தில் செய்தாக வேண்டும். எல்லாமே நல்ல முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதயப்பூர்வமான கைகுலுக்கலும், வணக்கமும்.
***
ஐல்வர்த், இங்க்லாண்ட், அக்டோபர் 7, 1876
அன்புள்ள தியோ,
இன்று மறுபடியும் சனிக்கிழமை. மீண்டும் உனக்கு கடிதம் எழுதுகிறேன். உன்னைக் காண வேண்டுமென்று எவ்வளவு நாட்களாக நான் காத்திருக்கிறேன். நாட்கள் ஆக ஆக மனதில் இருக்கும் என்னுடைய ஏக்கமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சீக்கிரம் கடிதம் எழுது. ஒரே ஒரு வார்த்தை - நீ எப்படி இருக்கிறாய் என்பதைப் பற்றி.
போன புதன்கிழமை இங்கிருந்து ஒரு மணி நேரம் ஆகக்கூடிய ஒரு கிராமத்திற்கு நீண்ட தூரம் நடந்து சென்றோம். சாலை புல்வெளிகள் வழியாகவும், வயல்களைத் தாண்டியும் புதர்களைக் கடந்தும் சென்றன. இரண்டு பக்கங்களிலும் கருப்பு பெர்ரி பழங்கள் பழுத்துக் கிடந்தன. ஆங்காங்கே பெரிய எம் மரங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. சாம்பல் நிற மேகங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது. அப்போது விழுந்த நிழல்களைப் பார்க்க வேண்டுமே. திரு.ஸ்டோக்ஸ் நடத்திக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தோம். அங்கு எனக்குத் தெரிந்த பையன்கள் பலர் இருந்தனர்.
சூரியன் மறைந்து நெடு நேரம் ஆனபிறகும் கூட மேகங்கள் சிவப்பு வர்ணத்திலேயே காட்சியளித்துக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் வயல்கள் மேல் இருட்டு வந்து மூடியது. தூரத்திலிருந்த கிராமத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். உனக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது திரு.ஜோன்ஸ் என்னை அழைத்தார். லண்டன் வரை நடந்து சென்று அவருக்கு கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்ட வர முடியுமா என்று என்னிடம் கேட்டார். மாலையில் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது பார்த்தால் அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அதில் உன்னைப் பற்றி அவர் எழுதியிருந்தார். உங்கள் இருவரையும் பார்க்க நான் எவ்வளவு ஆவலாக இருக்கிறேன் தெரியுமா? இப்போதும் நீ பலவீனமாக இருந்தாலும், முன்னால் இருந்ததைவிட இப்போது எவ்வளவோ முன்னேற்றம் தெரிகிறது என்பதை அறிந்து கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நீ நினைத்திருந்தாய். இப்போது வீட்டிற்கு அம்மாவைப் பார்க்கப் போகிறாய் என்பதை அறிகிறபோது எனக்கு கான்ஸியன்ஸின் வார்த்தைகள்தான் ஞாபகத்தில் வருகின்றன.
‘நான் உடல் நலமில்லாமல் இருக்கிறேன். என் மனம் மிகவும் களைத்துவிட்டது. என் ஆன்மா குழப்பத்தில் இருக்கிறது. என் உடல் பயங்கரமாக வலிக்கிறது. இருப்பினும் கடவுள் என் மனதிற்கு நல்ல சக்தியைத் தந்திருக்கிறார். அன்பு என்ற உணர்வு என்னிடம் மிகவும் நிறையவே குடி கொண்டிருக்கிறது. கசப்பான விரக்தியின் எல்லைக்குள் நான் காலப்போக்கில் விழுந்து இதயத்திற்குள் மரணத்தைத் தரும் நஞ்சு எப்படி புகுந்தது என்பதை எரிச்சல் மேலோங்க பார்க்கிறேன். மலைப் பகுதிகளில் நான் மூன்று மாதங்கள் இருந்தேன். அங்கு இருக்கும்போது என்னுடைய ஆன்மா எந்த அளவிற்கு அமைதியை அனுபவித்தது தெரியுமா? அங்கு கிடைத்த ஓய்வு அதற்கு மிகவும் பிடித்திருந்தது. சுற்றிலும் நிலவிய அமைதி. மனதிற்கு இனம்புரியாத ஒரு சந்தோஷத்தை அளித்தது. கடவுளின் அந்த விலை மதிப்பற்ற படைப்புக்கு முன்னால் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்களையும் சமூக கட்டமைப்புகளையும், அதன் பிணைப்புகளையும் விட்டெறிய வேண்டும்போல் இருந்தது.