உன் மனதை நான் அறிவேன் - Page 9
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10465
'காதலித்தவன் தன்னை கல்யாணம் செய்துக்கொள்வான்' என்ற நம்பிக்கையில் காதலனிடம் தன்னை முழுவதுமாய் பறிகொடுத்துவிட்டு, 'அவன் திரும்பி வருவான்' என்று காத்திருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் அவனால் உருவாகிய கரு காத்திருக்காமல் வளர்ந்தது. அது வெளியே பிறந்தது. பிறந்ததும் அவனைப் பெற்றெடுத்த அந்த அபலைப் பெண்ணின் உயிர் பிரிந்தது. தகப்பன் பேர் தெரியாமல் பிறந்து, தாயின் முகம் அறியாமல் வளர்ந்து, ஒரு சமூக விரோதியாய் உருவானான் அந்தக் குழந்தை. அவன்தான் சுதாகர். சிறு வயதில் அவனது உள்ளத்தில் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் கேடுகெட்ட குணம் உடையவனாய் வளர்ந்தான். அனாதையாய் இருந்த அவனை ஆதரிப்போர் யாருமின்றி தறுதலையாய் உருமாறினான். உருப்படாமல் போனான். அதன் தீய விளைவாய், உழைக்காமலே பணம் சம்பாதிக்கும் இழிவான செயல்களை செய்து வந்தான்.
பணத்திற்காக சில பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தினான். பணம் பண்ணினான். வாழ்த்தி வணங்க வேண்டிய பெண் இனத்தை, தன் ஈன புத்தியால் வீழ்த்தி, அவன் வாழ்ந்து வந்தான். கையில் கணிசமாக பணம் சேர்ந்ததும் பெரிய பண முதலைகளின் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவனது அந்தரங்கத் தேவைக்காக பெண்களைத் தேடினான். அந்தப் பெண்களின் தேவைக்காக தன் நாடகத்தை அரங்கேற்றினான். அவனது நாடகத்தை நம்பிய பெண்களிடம் நைச்சியமாகப் பேசி, அவர்களை ஏமாற்றினான். தோற்றம், மிக கண்ணியமானதாக இருப்பது அவனுக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக இருந்தது. பசியின் கொடுமைக்காக சிறு வயதில் திருட ஆரம்பித்த அவன், அவனது இன்றைய இருபத்தி ஏழாவது வயதில் திருட்டைவிட மிகக் கேவலமான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான்.