உன் மனதை நான் அறிவேன் - Page 12
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10465
அழகான இளம் மாலை நேரம். கயல்விழியின் வருகைக்காகக் காத்திருந்தாள் சரிதா. சதா சர்வமும் மொபைலில் பேசினாலும் நேரில் அவளைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சந்தோஷமான எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தாள்.
கூடவே, சுதாகர் தன்னிடம் பேசியதைப் பற்றியும், அவன் பயமுறுத்தி பணம் பிடுங்க முயற்சித்ததைப் பற்றியும் நினைத்தவள், சஞ்சலத்திற்குள்ளானாள். சுதாகர் பற்றிய சிந்தனை வந்ததும், தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
'வெளியே பார்ப்பதற்கு கண்ணியமானவன் போல தெரிந்ததே... அவன் ஒரு கயவனாக இருப்பான் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கலியே... என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் காதலிச்சுதனாலதானே அவங்களை உறவுகள் ஒதுக்கி வச்சாங்க? அதே தப்பை நானும் செஞ்சேனே? ஆனா... கடவுள் அருளால அவனோட அயோக்கியத்தனம் தெரிஞ்சு... அவனை விட்டு விலகி, அன்பே உருவான அபிலாஷ் எனக்கு கணவரா கிடைச்சுருக்காரே...
சுதாகர்கூட பழகினதை கெட்ட கனவா மறந்துட்டு, நிம்மதியா... சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கற இந்த நேரத்துல... அவனால இப்பிடி ஒரு பிரச்னைய எதிர்கொள்ள நேரிடும்னு எதிர்பார்க்கவே இல்லையே...? அவனை காதலிச்சதை... அம்மா... அப்பாகிட்ட கூட நான் மறைக்கலியே... ஆனா... இப்போ...? என் அன்பான கணவர்ட்டயும், என் உயிர்த் தோழி கயல்விழிட்டயும் இதைப்பத்தி பேச முடியுமா? காதலிக்கும்போதே கயல்விழிட்ட நான் அதைப்பத்தி சொல்லலை. அம்மா, அப்பாவுக்கு மட்டுமே தெரிஞ்ச அந்த விஷயம்... அவங்களோட மரணத்துல மண்ணுக்குள்ள புதைஞ்சு போச்சு.
'ரகஸியமானது காதல்'ன்னு கயல்விழிட்ட கூட சொல்லாம வச்சிருந்தேன். அவனைப் பத்தின ரகஸியங்கள் வெளியானப்புறம் அறவே அவனை மறந்துட்டு, நிம்மதியா இருந்த நேரத்துல... பெத்தவங்களை பறி கொடுத்தேன். கடவுள், பாதிரியார் ரூபத்துல வந்து புயல் அடிச்ச என்னோட வாழ்க்கையில அபிலாஷ்ங்கற தென்றலை வீச வச்சார்... ஆனா... இப்போ... பாதிரியாரும் காலமாயிட்டார். யார்கிட்டயும், எதுவும் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கேனே... சும்மா... என்னை பார்க்க நேரிட்டதால மிரட்டினானா... உண்மையிலேயே பெரிசா திட்டம் போட்டு மிரட்டறானா... அவன் அயோக்யன்... ஏதாவது திட்டத்தோடதான் அப்பிடி பேசி இருப்பான். பழைய காதலை நினைச்சு நானே என் மேல பரிதாப்படறதா?... புதிய வாழ்க்கையில பொன் புதையலா கிடைச்சிருக்கற அபிலாஷை நினைச்சு சந்தோஷப்படறதா? இன்பமயமான வாழ்க்கையில இடைச்செருகற அந்த அயோக்கியனோட மிரட்டலை நினைச்சு வேதனைப் படறதா...? நான் என்ன பண்ணுவேன்... கடவுளே...'
அபிலாஷ் இசை அமைத்த ஒரு பாடலின் மெட்டு, வீட்டின் அழைப்பு மணியில் ஒலித்தது. சிந்தனை வயப்பட்டிருந்த சரிதா, 'திடுக்'கென கலைந்தாள். எழுந்தாள், கதவைத் திறந்தாள்.
ஒரு கையில் வெள்ளை ரோஜா கொத்து அடங்கிய பொக்கேயும், மறுகையில் ஸ்வீட்ஸ் பார்ஸலுமாக வந்த கயல்விழியை அணைத்தபடி வரவேற்றாள் சரிதா.
''ஹாய் சரித்...'' மகிழ்ச்சி பொங்க உள்ளே வந்தாள் கயல்விழி.
''வா கயல்... வரும்பொழுதெல்லாம் பொக்கேயும், ஸ்வீட்சும் வாங்கிட்டு வரணுமா?''
''ஏதோ... என்னால முடிஞ்சது. வெறும் கையை வீசிக்கிட்டு வர முடியுமா? உனக்கு பிடிச்ச ஒயிட் ரோஸ். உனக்கு பிடிச்ச குட்டி ஜிலேபி. வேற என்ன உனக்கு பெரிசா செஞ்சடப் போறேன்?''
ஸ்வீட்ஸ் பார்ஸலைப் பிரித்து, அதிலிருந்து குட்டி ஜிலேபி ஒன்றை எடுத்து, சரிதாவின் வாயில் ஊட்டி விட்டாள் கயல்விழி. அவளது அதிகப்படியான பாசம், சரிதாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
அங்கே இருந்த ரோஸ்வுட் டேபிள் மீதிருந்த பூ ஜாடியில் வெள்ளை ரோஜா பூங்கொத்தை செருகி வைத்தாள் கயல்விழி. ஹாலுக்கு பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த வெட்ட வெளிப்பகுதியில் போடப்பட்டிருந்த அழகிய நவீன ஊஞ்சலில் இருவரும் உட்கார்ந்தனர். ஊர்க்கதைகள், நாட்டு நடப்புகள், அரசியல் அலசல், தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு, திரைப்படங்களின் விமர்சனம் என்று செம ஜாலியாக அரட்டைக் கச்சேரியை நடித்திக் கொண்டிருந்தனர்.
''பேசினதுல மறந்தே போயிட்டேன் கயல். உனக்கு பிடிச்ச பால் பாயஸம் பண்ணி வச்சிருக்கேன். இரு... இதோ போய் நானே எடுத்துட்டு வரேன்...''
''வேண்டாம் சரித். 'நோ' சொல்லப் பழகிட்டா... உடம்பு குண்டாகாம இருக்கும்.''
''உன்னோட டையட் அட்டவணையை உன்னோட வீட்ல வச்சுக்கோ. இன்னிக்கு நான் குடுக்கறதை நீ சாப்பிடனும்.''
''அதுதான் தப்புன்னு என்னோட டயட்டிஷியன் கோமதி சொல்றாங்க.''
''டயட்டிஷியன் என்ன சொல்றாங்க?''
''ஸ்வீட்ஸ் சாப்பிட அனுமதி இல்லைன்னு சொல்லி இருக்காங்க... காபி கூட குடிக்கறதில்லை. க்ரீன் டீதான் குடிக்கறேன். என்னோட உடம்பு குண்டாயிட்டா... டான்ஸ் ஆட முடியாது. குண்டாயிட்டா என்னைப் பார்க்கறதுக்கும் நல்லா இருக்காது... வீட்ல சமையலுக்கு 'இதயம்'தான் யூஸ் பண்றோம். அதனாலதான் கொழுப்பு சேராம உடம்பு ஸ்லிம்மா இருக்கு.''
''நீ நல்லா... தளதளன்னு இருக்கியே தவிர குண்டா ஒண்ணும் இல்லை. இன்னிக்கு மட்டும் எனக்காக பால் பாயஸம் குடிப்பியாம். சமையலுக்கு ஆள் இருந்தும் உனக்காக நானே செஞ்சேன்.... ப்ளிஸ் குடி கயல்...''
''என்னோட ஃப்ரெண்ட் நீ... சொன்ன பிறகு மாட்டேன்னு மறுக்கவா முடியும்? குடு... ஆனது ஆச்சுன்னு ஒரு புடி புடிச்சடறேன். நாளைக்கு எக்ஸ்ட்ராவா ஒரு மணி நேரம் யோகாவோ, உடல்பயிற்சியோ செய்யணும்...''
அழகிய வெளிநாட்டு கிண்ணம் ஒன்றில் பால் பாயஸத்தை எடுத்து வந்து கயல்விழியிடம் கொடுத்தாள் சரிதா. நெய் மணக்க, பால் பாயாசத்தில் மிதந்த முந்திரிப்பருப்பு துண்டுகளைப் பார்த்ததும் கட்டுப்பாட்டை மீறி ஆசைதீரக் குடித்தாள் கயல்விழி.
''சூப்பர்... பிரமாதம்... அசத்திட்டே போ. இப்பிடி வர்றப்பபெல்லாம் பால் பாயாஸத்தை வளைச்சு மாட்டினா... உடல் வளைந்து நெளிஞ்சு டான்ஸ் பண்ண முடியாதுடி சரித்...''
''சரி சரி... அதான் சொன்னியே... எக்ஸ்ட்ராவா எக்ஸர்ஸைஸ் பண்ணிக்கலாம்னு பண்ணிக்கோ...''
''குறும்புடி உனக்கு...''
''குறும்போ... இரும்போ... அபிலாஷ் வந்ததும் டின்னர் சாப்பிடணும்... உனக்கு பிடிச்சது... அபிலாஷுக்கு பிடிச்சதுன்னு ஏகப்பட்ட ஐட்டம் பண்ணி வச்சிருக்கேன்...''
''அடிப்பாவி... என்னை ஒரு வழி பண்ணணும்ன்னு முடிவு பண்ணிட்ட போலிருக்கு?''
''இன்னிக்கு ஒரு நாள் சாப்பிட்டுட்டு உன்னோட டயட்டிஷியன் கோமதிட்ட என்ன பண்றதுன்னு கேட்டுக்கோ...''
''சதி லீலாவதி மாதிரி... சதி சரிதாவா இருக்கியே?!... ஓகே... உன்னோட பால் பாயஸத்துல முழு வயிறு நனைஞ்சாச்சு... இனி முக்காடு எதுக்கு? முட்ட முட்ட ஒரு வெட்டு வெட்டிட்டு நாளைக்கு முழுசும் எதுவும் சாப்பிடாம 'கட்' பண்ண வேண்டியதுதான்...''
இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். நேரம் போவது தெரியாமல் பேசி... பேசி... நட்பின் உணர்வை அனுபவித்தனர்.
அபிலாஷ் வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவனது கார் ஹாரன் ஒலி, தெரு முனையில் ஒலிக்கும் பொழுதே உணர்ந்து கொள்வாள் சரிதா. அன்றும் அதுபோல் உணர்ந்து, வீட்டு வாசலுக்கு போய் கதவைத் திறந்தாள். அபிலாஷ் தன் காரை ஓட்டியபடி உள்ளே வந்தான். காரை நிறுத்தியபின் இறங்கி, காரை பூட்டிவிட்டு கார் சாவியின் கீ செயினை தூக்கிப்போட்டு விளையாடியபடி வந்தான். அவனது வாயில் அன்று இசை அமைத்த பாடலின் மெட்டு விசிலாக வெளிவந்தது.
''ஹாய்...''
''கயல்விழி வந்திருக்கா...''
உள்ளே நுழைந்த அபிலாஷ், கயல்விழியை வரவேற்றான்.
''என்னம்மா மீன் கண்ணம்மா... எப்போ வந்தே?''
''நான் எப்பவோ வந்தாச்சு இசையமைப்பாளரே...''
''உன் தோழிக்கு நீ வந்ததும் தலைகால் புரியாதே...!''
''பின்னே? ஃப்ரெண்ட்ஷிப்ன்னா அப்பிடித்தான்...''
''மூழ்காத ஷிப் ஃப்ரெண்ட்ஷிப்தானே?...''
''அடடா... இசையமைப்பாளர் அவரோட பாணியிலயே டைலக் வுடறாரே...''
''சரி... சரி ரெண்டு பேரும் ரகளை விட்டது போதும். சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் வாங்க.'' செல்லமாக மிரட்டினாள் சரிதா.
''இதோ வந்துடறேனுங்க மேடம்...'' சரிதாவிற்கு பயப்படுவது போல குனிந்து, கைகளை குவித்து வணக்கம் சொல்வது போல நடித்தான் அபிலாஷ்.
மூவரும் சிரித்தனர்.
சரிதா, சாப்பிடும் மேஜை மீது வகை வகையான உணவுகளை எடுத்து வைத்தாள். அழகிய சாப்பிடும் தட்டுகள், அவற்றிற்கு ஜோடியான சிறு தட்டுகள், புதிய டிஸைனில் கண்ணாடி டம்ளர்கள், பரிமாறுவதற்காக உணவு வகைகள் எடுத்து வைக்கப்பட்ட பெரிய கண்ணாடி பாத்திரங்கள் ஆகியவை, சரிதாவின் கலாரஸனையை மட்டுமல்ல... அவளது செல்வச் செழுமையையும் அடையாளமிட்டுக் காட்டியது.
பஃபே முறையில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று உணவு வகைகளை அழகாக வரிசைப்படுத்தி அடுக்கி இருந்தாள் சரிதா.
அவரவர்க்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டுக் கொண்டே அரட்டையை ஆரம்பித்தனர்.
''எந்தப் படத்துக்கு இப்ப கம்போஸ் பண்றீங்க அபிலாஷ்?'' கயல்விழி கேட்பதும் வாயில் இருந்த கோளா உருண்டையை மென்று விழுங்கியபின் அவளுக்கு பதில் கூறினான் அபிலாஷ்.
''புதுபடம். 'உன் மனதை நான் அறிவேன்' அப்பிடிங்கற டைட்டில். டைரக்டரும் புதுசு. யாரோ ராஜசிம்மனாம். காதல் கதை. டைரக்டர் திறமைசாலி. ம்யூசிக்கை பொறுத்த வரைக்கும் எனக்கு முழு சுதந்திரம் குடுத்திருக்காரு. நாலு பாட்டு. நாலுமே ஹிட் ஆகும்...''
''உங்களுக்கென்ன அபிலாஷ்? உங்க கம்போஸிங் திறமையும் ஞானமும்தான் மூலதனம். மூளையை மட்டுமே மூலதனமா வச்சு முன்னுக்கு வந்தவர் நீங்க. ரெக்கார்டிங் ஸ்டுடியோ செலவு இல்லை. பாடறவங்களுக்கும், ம்யூஸிக் ப்ளேயர்களுக்கும், தயாரிப்பாளர் பணம் குடுத்துடுவார். உங்க கம்போஸிங் திறமைக்கும், ப்ரொட்யூஸர் பணம் குடுத்துடுவார். உங்க 'கீ' போர்டை தட்டினா பாட்டு... பாட்டுக்கேத்த பணம் கொட்டுது...''
''ஐய்யோ... இப்பிடி வேற ஒண்ணு இருக்கா? நான் என்னமோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கறேன்னு நினைச்சுக்கிட்டிருந்தா? 'கீ' போர்டை தட்டினா பாட்டு... பணம் கொட்டும்ங்கற...?!'' தமாஷாக பேசினான் அபிலாஷ்.
''சச்ச... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உங்க திறமைக்கு சவால் விட்டு ம்யூஸிக் பண்ணி ஒவ்வொரு படத்தையும் நீங்க ஜெயிக்க வைக்கறீங்க...''
''கடவுள் குடுத்த வரம்...'' அடக்கமாகக் கூறினான் அபிலாஷ்.
''உங்களுக்கு உங்க இசைத் திறமை... கடவுள் குடுத்த வரமா அமைஞ்சுடுச்சு. ஆனா... எனக்கு கடவுள் குடுத்த நாட்டிய திறமை, ஒரு சாபமா உருமாறிடுச்சு...''
''ம்கூம்... அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது. எதிர்காலத்தைப் பத்தி... தெரிஞ்சுக்காமலே... ஒரு ஆர்வத்துல நீயாகவே கத்துக்கிட்ட உன்னோட நாட்டிய திறமை, நீயாவே அந்தக்கலை மேல இருந்த ஆர்வத்துல அதை வளர்த்துக்கிட்ட உன்னோட ஈடுபாடு... இதுதானே உனக்கு வாழ்க்கையை ஓட்டறதுக்கு உதவியா இருக்கு? அதைப்போய் சாபம்ன்னு சொல்லலாமா? நாங்க உதவி செய்யறோம்ன்னா... அதையும் ஏத்துக்க மாட்டேங்கற...''
''தத்துவம் பேசினது போதும். எல்லா ஐட்டமும் எடுத்துப் போட்டு நல்லா சாப்பிடுங்க ரெண்டு பேரும்...'' சரிதா உபசரித்தாள்.
''சரித், சமையல்கார வத்சாலம்மா... தனியா... செஞ்சிருந்தா நிச்சயமா இவ்ளவு டேஸ்ட்டா இருந்திருக்காது. அவங்களோட உதவியோட... உன்னோட... கை வண்ணத்துலதான் இன்னிக்கு எல்லா ஐட்டமும் சூப்பரா இருக்கு. ஆனா... இத்தனை ஐட்டம்ஸ் இருந்தும்... இங்கே இல்லாத ஒண்ணை கேட்டா... கோவிச்சிக்கமாட்டியே...'' அபிலாஷ், தயக்கமாகக் கேட்டான்.
''அட... என்னங்க நீங்க. சாப்பிடறதுக்காக நீங்க கேக்கறதுக்குப் போயி... நான் கோவிச்சுப்பேனா? என்ன வேணும்? சொல்லுங்க...''
''முட்டை ஆம்லெட் வேணும்...''
''அட... இதென்ன ஜுஜுபி மேட்டர்... இதோ... நான் போயி ரெண்டு நிமிஷத்துல ஆம்லெட் போட்டு... எடுத்துட்டு வரேன்...'' சரிதா எழுந்து சமையலறைக்கு சென்றாள்.
ஆம்லெட்டிற்காக காத்துக் கொண்டிருந்த அபிலாஷ், 'ஆம்லெட், ஆம்லெட்' என்று தாளம் போட்டான்.
''இருங்க அபிலாஷ்... நான் போய் சரிதாகிட்ட ஆம்லெட்டை வாங்கிட்டு வரேன்...'' என்று சொல்லியபடி எழுந்தவள், மேஜையின் விளிம்பில் இருந்த குழம்பு பாத்திரத்தை கவனிக்காமல், வேகமாக எழுந்த போது, அவளது கை பட்டு குழம்பு பாத்திரம் கவிழ்ந்து அபிலாஷின் பேண்ட் மீது குழம்பு சிந்தியது.
''ஐய்யய்யோ... ஸாரி... வெரி ஸாரி...'' என்று கூறியபடி பதற்றத்துடன் டிஷ்யூ பேப்பரால் அவனுடைய பேண்ட்டை துடைத்தாள். அப்போது முட்டை ஆம்லெட்டுடன் அங்கே வந்து கொண்டிருந்த சரிதா, அந்தக் காட்சியை பார்த்தாள். 'சுர்'ரென்று கோப உணர்வு தலைக்கு ஏற ''கயல்விழி...'' என்று உரக்கக் கத்தினாள்.
அவளது ஓங்கிய குரல் கேட்டு திரும்பிய அபிலாஷ்,
''என்னம்மா... என்ன ஆச்சு?'' என்று கேட்டான். கயல்விழியும் கேள்விக்குறி உணர்வு தோன்ற, சரிதாவைப் பார்த்தாள்.
''ஸாரி சரித்... அபிலாஷ் மேல குழம்பு கொட்டிடுச்சு...''
''நான் போய் பேண்ட்டை மாத்திட்டு வரேன். யூ டோன்ட் வொரி...'' என்ற அபிலாஷ், அவனது அறைக்குச் சென்றான்.
''சரிதா... நீ இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலியே. வா உட்கார், அபிலாஷ் ட்ரெஸ் மாத்திட்டு வந்ததும் நாம சாப்பிடலாம்.''
பதில் எதுவும் பேசப் பிடிக்காத சரிதா, மேஜை மீதிருந்த பொரித்த அப்பளம் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
அப்பளத்தைக் கடித்தபடி, தன் டென்ஷனைக் குறைக்க முற்பட்டாள்.
'அபிலாஷ் என்னுடையவர். அவரோட மூச்சுக்காத்து கூட எனக்கு மட்டுமே சொந்தமானது... இவ... இவ... இந்த கயல்விழி... அவரோட... தொடையை... தொட்டு... ச்சே...' அப்பளம் அவளது வாயில் நொறுங்கிக் கொண்டிருக்க... அவளது மனதிற்குள், தேவையற்ற உணர்வுகள் நொறுங்கிக் கொண்டிருந்தன.
உடை மாற்றிக் கொண்டு வந்த அபிலாஷ், சாப்பிட உட்கார்ந்தான்.
''என்ன?! ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஸைலன்ட்டா இருக்கீங்க? 'சலசல'க்கற அருவி மாதிரி 'சளசள'ன்னு பேசிக்கிட்டு இருப்பீங்க?! ''
''உங்க சரிதா வாய்க்குள்ள அப்பளம் இருக்கு. பசியில அப்பளத்தை வாயில போட்டுக்கிட்டா...''
''ஓ... அப்பிடியா?! அதானே பார்த்தேன். என்னடா இது பேச்சே இல்லியேன்னு... சரி சரி... அந்த பரோட்டாவை டேஸ்ட் பார்க்கலாம். கயல்விழி... நீயும் ஒரு புடி புடிச்சுடு, நாளைக்கு முழுசும் ஜூஸ் டயட் போட்டுக்கோ...'' என்று உற்சாகமாக பேசியவன், சரிதாவிடம் திரும்பினான்.
''பரோட்டாவும், பனீர் ஷாய் குருமாவும் சூப்பர் சரித்மா...'' அபிலாஷின் சாப்பிடும் 'மூட்' மாறிவிடக் கூடாதே என்ற அக்கறையில் தன்னை சுதாரித்துக் கொண்டாள் சரிதா.
''போன வாரம் செஃப் தாமு ஸார் டி.வி.யில சொல்லிக்குடுத்தார். அதை எழுதி வச்சு செஞ்சேன்...''
''ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட இந்த மாதிரி டேஸ்ட்டா இருக்காது சரிதா...''
''தேங்க்யூ கயல்...''
மூவரும் அரட்டை அடித்தபடியே சாப்பிட்டு முடித்தனர். கயல்விழி கிளம்பினாள்.
''இவ்வளவு நேரத்துக்கப்புறம் கால்டேக்ஸிலயோ... ஆட்டோவுலயோ... போகக்கூடாது கயல்விழி. நான் வந்து ட்ராப் பண்றேன்...'' என்று அபிலாஷ் கூறியதை மறுத்தாள் கயல்விழி.
''இதெல்லாம் எனக்கு சகஜம். தினமும் ஹோட்டல்ல இருந்து லேட்டாதானே வீட்டுக்கு போறேன்?! நோ ப்ராப்ளம். நான் போயிடுவேன். நீங்க கவலைப்பட வேண்டாம். குட்நைட் சரித்... குட்நைட்...'' என்றபடி அங்கிருந்து கிளம்பினாள் கயல்விழி.