உன் மனதை நான் அறிவேன் - Page 14
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10465
தி.நகர் ஏரியாவில் மிக அழகான கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. 'அழகு' ப்யூட்டி பார்லர். அழகை மேம்படுத்தும் அந்த அழகுக்கலை நிலையத்தின் உரிமையாளர் உஷா ராஜன்.
உஷா ராஜனுக்கு அந்த அழகுக்கலை அனுபவத்தில்தான் பல வருடங்களே தவிர அவள் இளம்பெண். அழகுநிலையத்தை மிகவும் திறம்பட நடத்தி வந்தாள். அவளது இன்முகமும், அன்பான பேச்சும், அக்கறையான கவனிப்பும் அங்கே வரும் பெண்களை மிகவும் கவர்ந்தது. எனவே... வாய்மொழியாக பரவிய பாராட்டுகள், மேலும் அவளுக்கு வாடிக்கையாளர்களை சேர்த்தன.
அவளது அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பிரியமும், பரிவுமாக இருப்பாள் உஷா ராஜன். பண்டிகை காலங்களில் அவர்களுக்கு துணிமணிகள் வாங்கித் தருவாள்.
தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ள வரும் பெண்களில், அழகுப் பராமரிப்பிற்கு வருபவர்கள், வெறுமனே புருவம் சீரமைக்க மட்டுமே வருபவர்கள் என்ற பாரபட்சம் காட்டாமல், ஒரே விதமாக மதிப்பாள். இவை அனைத்திற்கும் மேலாக அவளை வெகுவாக பாராட்ட வேண்டியது அவளது அயராத உழைப்பிற்காக.
திருமணத்திற்கு முன்பே அழகுக்கலையில் ஐக்கியமாகி 'அழகு ப்யூட்டி பார்லர்' ஆரம்பித்த உஷா ராஜனுக்கு, கணவர் அமைந்தது இறைவன் கொடுத்த வரமாக இருந்தது. கணவரது முழு ஆதரவினால் அவளது அழகு நிலையத்தை மேன்மேலும் வளரச் செய்தது. மனைவி ஈடுபட்டிருக்கும் துறையில், அவள் முன்னேறுவதற்கு உறுதுணையாய் இருக்கும் ஆண்கள் பாராட்டுக்குரியவர்கள்.
அத்தகைய பாராட்டுக்குரிய ஒரு ஆணை, கணவனாக அமையப் பெற்ற உஷா ராஜனின் 'அழகு ப்யூட்டி பார்லரி'ல் தன் அழகை மேலும் மெருகு ஏற்றிக் கொள்வதற்காக அவ்வப்போது வரும் சரிதா, அன்றும் அங்கே வந்தாள். பார்லருக்குள் நுழைவதற்கு முன் அவளுக்கு பரிச்சயமான குரல் கேட்டு நின்றாள். அந்தக் குரலுக்குரியவன் சுதாகர்.
''அழகுக்கு அழகு சேர்க்கறியா? உன்னோட அழகுல உன்னோட புருஷனைக் கட்டிப்போட்டு வைக்கணும்னு ரொம்பத்தான் மெனக்கெடற?!! சினிமா உலகத்து சிங்காரிகள்கிட்ட உன் புருஷன் சிக்கிக்கக் கூடாதுன்னு உன்னோட உடம்பையும் 'சிக்'ன்னு வச்சுக்கற... உன்னோட வனப்பையும், காப்பாத்திக்கற?! ரொம்ப முன் ஜாக்கிரதையா இருந்துக்கறியே...''
''முன்ஜாக்கிரதையா இருந்ததுனாலத்தான் உன்கிட்ட இருந்து தப்பிக்க முடிஞ்சுது...''
''உன்னைத் தப்பிக்க விட்டது என்னோட முட்டாள்தனம்...''
''முட்டாள்தனம் கூட சில நேரங்கள்ல்ல நல்ல விஷயங்கள் செய்யுதே... அதாவது எனக்கு...''
''உனக்கு நல்ல விஷயம்... ஆனா எனக்கு?! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சே?! அதுக்குத்தானே ஒரு விலையை கேட்கறேன்?''
''விலையா?! ...''
''ஆமா. நான் சிங்கப்பூர்ல ஸெட்டில் ஆகறதுக்கு என்ன செலவு ஆகுமோ... அந்த தொகையை நீ எனக்குக் குடுக்கணும். பிரபல ம்யூசிக் டைரக்டர் அபிலாஷ் கூட நீ வாழற வாழ்க்கைக்கு விலைதான் அந்தத் தொகை...''
''என்ன... உளர்ற...?''
''உளறல் இல்லை... உண்மை. என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டியே... அந்த உண்மைக்குதான் ஒரு விலை கேக்கறேன். அந்த உண்மை உறங்கிப் போகணும்ன்னா... நான் சொல்ற ஒரு தொகையை நீ எனக்கு குடுத்தாகணும். உறங்கிக் போயிருக்கற அந்த உண்மையை உசுப்பிவிட்டு உன்னோட கணவர் அபிலாஷ் காது வரைக்கும் போகணும்ன்னா... தேவை இல்லாத வாக்குவாதம் பண்ணு. உன் கூட போட்டி போட நான் தயாரா இருக்கேன்...''
''எந்தக் கீழ் மட்டத்துக்கும் தயாரான ஒரு கேடு கெட்ட மனுஷன் நீன்னு எனக்குத் தெரியும்...''
''தெரிஞ்சுமா... வளவளன்னு கேள்வி கேட்டுக்கிட்டுருக்க? கையில பணத்தைக் குடுத்தா... நான் பாட்டுக்கு வானத்துல பறந்து... சிங்கப்பூருக்கு போயிக்கிட்டே இருப்பேன்...''
''என் கணவர் சம்பாதிக்கற பணத்தை உனக்கு ஏன் நான் தரணும்?''
''உன்னோட கணவர் அபிலாஷ்னு பெருமையா சொல்லிக்க அவன் உயிரோட இருக்கணுமே... அதுக்குதான்...''
இதைக்கேட்ட சரிதா, அதிர்ச்சிக்குள்ளானாள். அதிர்ச்சியினால் அவளது அழகிய முகம் வெளிறிப்போனது.
சமாளித்துக் கொண்ட அவளுள் கோபம் எழுந்தது.
சுதாகர் தொடர்ந்து பேசினான்.
''என்ன? நான் பேசறது புரியலியா? ஆசைப் பொண்டாட்டியோட அந்தரங்கம், அரங்கத்துல அம்பலமாயிட்ட அவலத்தை எந்த புருஷனாலயும் தாங்கிக்க முடியாது. உன்னோட கடந்த காலத்தை அவன்கிட்ட சொல்லிட்டா?... அவன் உயிரோட இருப்பானா?''
''நீயெல்லாம் ஒரு மனுஷன்... ச்சீ...''
''மனுஷன்னுதானே காதலிச்ச?''
''வாழ்க்கையில நான் பண்ணின பெரிய தப்பே அதுதான்.''
''அந்த பெரிய தப்புகூட சின்னதா இன்னொரு சின்ன தப்பும் பண்ணிடேன்...''
''ம்கூம்... உனக்கு பணம் எதுவும் குடுக்க நான் தயாரா இல்லை...''
''அப்பிடின்னா எல்லாத்தையும் உன் புருஷன் அபிலாஷ்ட்ட சொல்லிடுவேன்...''
''ஐய்யோ... இதைச் சொல்லி சொல்லியே என்னை பயமுறுத்தி சாகடிக்கிறீயே ?...''
''இங்க பாரு சரிதா... உன்னை சாகடிக்கறதுனால எனக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்லை. நீ உயிரோட இருந்தாத்தான் உன் உயிருக்குயிரான அபிலாஷ்ட்ட 'உன்னோட கடந்த காலத்தைப்பத்தி சொல்லிடுவேன்'னு உன்னை மிரட்டி பணம் வாங்க முடியும். என்னோட காரியத்தை சாதிக்க முடியும்.''
''ஒரு பொண்ணை மிரட்டி பணம் பிடுங்கற செயல். உனக்கு பெரிய சாதனையா? உன்னை நல்லவன்னு நம்பினதுக்கு எனக்கு இந்த சோதனையா? ப்ளிஸ்... என்னை விட்டுடு... அன்பான கணவரோட, அமைதியா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். உன்னோட தவறான நடவடிக்கைகளை மாத்திக்கோ. உழைச்சு சம்பாதிச்சுப்பாரு. அதில இருக்கற சுகம் வேற எதிலயும் கிடையாது. உன்னோட தப்புக்கள உணர்ந்து திருந்திட்டினா... நீயும் நல்லவன்தான். நல்லவனாக முயற்சி செய்யேன்...''
''உன்னோட போதனைகள் எனக்குத் தேவை இல்லை உன்னோட செல்வபோகமான வாழ்க்கையில... உன்கிட்ட இருக்கற பணம்தான் எனக்குத் தேவை...''
''நேர்மை இல்லாத வழிகள்ல்ல நிறைய பணம் சம்பாதிச்சிட்டியே, அதெல்லாம் போதாதா உனக்கு?..''
''பணம் சேர... சேர... ஆசைகளும் நிறைய சேருதே. தேவைகளும் கூடுது. 'இது போதும்'ங்கற திருப்தியே வராதே. அதனாலதான் இந்த நாட்டில இருந்து சிங்கப்பூர்ல போய் ஸெட்டில் ஆகலாம்ன்னு திட்டம் போட்டிருக்கேன். அந்தத் திட்டத்துக்கு ஏகப்பட்ட பணம் தேவைப்படுது. வெட்டியா வாக்குவாதம் பண்ணிக்கிட்டிருக்காம, எனக்கு உபதேசம் செஞ்சுக்கிட்டிருக்காம... பணத்தை நீ ஸெட்டில் பண்ணு... சிங்கப்பூர்ல நான் ஸெட்டில் ஆயிடறேன். அதுக்கப்புறம் இந்த சுதாகரோட தொந்தரவே உனக்கு இருக்காது...''
சுதாகர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது... அங்கே திரைப்படத் தயாரிப்பாளர் கங்காராம் வருவதை சரிதா பார்த்தாள்.
''நீ உடனே இங்கே இருந்து போய்டு. ப்ரொட்யூஸர் கங்காராம் வர்றாரு. இப்ப என்னோட கணவர் ம்யூஸிக் பண்ணிக்கிட்டிருக்கறது அவரோட படத்துக்குத்தான்.''
சுதாகர், அங்கிருந்து நகர்ந்தான். சரிதாவைப் பார்த்த கங்காராம் அவளருகே வந்தார்.
''என்னம்மா... ஏன் வெளியே நிக்கறீங்க...?''
''அது... அது... வந்து... பார்லருக்கு வந்தேன் ஸார். நீங்க வர்றதைப் பார்த்துட்டு இங்கேயே நின்னுட்டேன்... நல்லா இருக்கீங்களா ஸார்...?''
''நான் நல்லா இருக்கேன்மா. மாயாஸ் ப்ளாஸாவுல நிறைய கண்ணாடி சாமான்கள் வாங்க வேண்டியதிருக்கு. என்னோட மூத்த பொண்ணு வரலஷ்மி... போன வருஷம் கல்யாணம் ஆனவ... அவ, வீடு வாங்கி இருக்கா. அவளுக்காக க்ராக்கரி ஐட்டம்ஸ் வாங்க வேண்டி இருக்கு. கார் பார்க்கிங்ல இடம் கிடைக்கல. அதனால காரை தள்ளி நிறுத்தச் சொல்லிட்டு மாயாஸ் ப்ளாஸாவுக்கு நடந்தே வந்தேன். சரிம்மா... நீ பார்லருக்கு போ.''
''சரி ஸார்.''
பெருமூச்சு விட்டபிடி சரிதா, பார்லருக்குள் நுழைந்தாள்.