உன் மனதை நான் அறிவேன் - Page 16
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
நெட்டை பாபுவை சந்திக்கும் முன்னால் சுதாகரின் ஏமாற்றுப் பேச்சில் மயங்கி, அவனது வலையில் விழுந்தவர்களுள் பாவனாவும் ஒருத்தி. சுதாகரின் சூழ்ச்சியினால்... அவன் அழைத்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் அவனுடன் போய் வந்த பாவனா, அவன் அறிமுகப்படுத்தி வைத்த செல்வந்தர்களிடம் தன்னை இழந்தாள். தன்மானத்தை இழந்தாள். அதுவரை நெருப்பாக இருந்த அவள், பண நெருக்கடியினால் கற்பு நெறியை இழந்தாள்.
பாவனாவுடன் படுக்கை சுகம் பெற்ற பணமுதலைகளிடம் நேரடியாக அவளால் பணம் பெற்றுக் கொள்ள முடியாது. சுதாகர் மூலம்தான் அவளுக்கு சேர வேண்டிய பணம் வரும். அந்தப் பணத்தையும் முழுவதுமாகக் கொடுக்காமல் பாவனாவை ஏமாற்றினான் சுதாகர். பெரியதாக ஒரு தொகை அவனிடம் சேர்ந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று அவனை நம்பி, அவனிடம் பணத்தை விட்டு வைத்திருந்தாள் பாவனா. ஒரு நல்ல தொகை சேர்ந்ததும் தன்னுடைய தவறான பாதையை மாற்றிக் கொண்டு முறையான வாழ்க்கை வாழலாம் என்று காத்திருந்த பாவனாவிற்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. பெரிய தொகை சேர்ந்ததும் சுதாகரை சந்தித்து, தன்னுடைய பணத்தைக் கேட்டாள்.
''என்ன பணம்? ஏது பணம்? யார் பணம்?'' எதுவுமே புரியாதது போல கேள்விகளை அடுக்கினான் சுதாகர்.
''என் உடலை மேய்ந்த பணக்கார செம்மறியாடுகள் கொடுத்த பணத்தையெல்லாம் நீதானே வாங்கி வச்சிருந்த? அதைத்தானே கேட்கறேன். என்னமோ ஒண்ணுமே புரியாத மாதிரி கேட்கற?''
''அதான் அப்பப்ப உன்கிட்ட குடுத்தேனே பாவனா...?''
''அதெல்லாம் ஒரு பணமா? என்னோட டேக்ஸி செலவு, சாப்பாட்டு செலவுக்கு மட்டும்தானே குடுத்த?''
''குடுத்ததை வங்கிக்கிட்டு... போய்க்கிட்டே இருந்தா... உன் பிழைப்பு நடக்கும். இப்பிடி ஏடாகூடமா கேட்டுக்கிட்டிருந்தா... ஒரு பைசா கூட தேறாது. எப்ப நீ வந்தாலும் உனக்கு சேர வேண்டிய தொகையை கரெக்ட்டா குடுத்துக்கிட்டுதான் இருந்தேன்... எதுக்காக இப்பிடி பொய் சொல்ற?''
''பொய்யா? நானா பொய் சொல்றேன்? வீட்டு உபயோகப் பொருட்கள் தர்றதாவும், அதை வித்துக் குடுத்தா கமிஷன் தர்றதாவும் சொல்லிட்டு, அப்புறம் பொண்ணுகளை தப்பான வழிக்கு கொண்டு போற நீ சொல்றது பொய்யா? உன்னோட நாடகம் தெரிஞ்சும்... எதுவும் செய்ய முடியாத இயலாமையினால இரவு நேரங்கள்ல சீரழிஞ்சு போற வாழ்க்கையாயிடுச்சு. நீ சொன்ன பொய்கள்ன்னாலதான் நான் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கேன். பெரியதா ஒரு தொகை சேர்ந்ததும் இந்த வாழ்க்கையை அடியோட மறந்துட்டு ஏதாவது கடை வச்சு பிழைக்கலாம்ன்னு தைரியமா இருந்தேன். இப்ப என்னடான்னா... எனக்கு எந்தப் பணமும் குடுக்க வேண்டியதில்லைன்னு நீதான் பொய் சொல்ற. மனசுக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழறது ஒரு நரகம். இந்த நரகத்துல இருந்து விடுதலை கிடைச்சுடும்ன்னு நம்பிக்கையோட காத்திருந்த எனக்கு துரோகம் பண்ணாத. எனக்கு சேர வேண்டிய பணத்தைக் குடுத்துடு. உன் திசைக்கே ஒரு கும்பிடு போட்டுட்டு நான் பாட்டுக்கு போய்க்கிட்டிருப்பேன். கண்ணியமான குடும்பத்துல பிறந்து வளர்ந்த நான், நீ வச்ச கண்ணியில கண்ணை மூடிக்கிட்டு விழுந்துட்டேன். என்னோட கற்பு திரும்ப கிடைக்காதுதான். ஆனா... தினம் தினம் தினவெடுத்துப் போய் வர்ற திமிங்கலங்ககிட்ட என்னோட உடம்பைக் குடுக்ற உபாதையில இருந்து, மன வேதனையில இருந்து தப்பிச்சு... நிம்மதியா இருப்பேன். எனக்கு தேவைப்பட்டது பணம். அந்த பணத்துக்காகத்தானே என்னையே பல பேர்ட்ட பறி குடுத்தேன்...? பணக்கார சபலப் பேர்வழிகளுக்கு அர்த்தராத்திரியில அந்தரங்கமா படுக்கை விரிக்கச் சொன்ன... நீ... அதன் மூலமா எனக்குக் கிடைச்ச பணத்தை இல்லைன்னு இப்ப கையை விரிக்கறியே? உனக்கே நியாயமா இருக்கா? யோசிச்சுப் பாரு. உன் மனசாட்சியை கேட்டுப் பாரு...''
''மனசாட்சியா? அதையெல்லாம் ஓரங்கட்டிட்டுதானே என்னோட தொழிலை நான் பண்ணிக்கிட்டிருக்கேன்? உன்னோட பணம் என்கிட்ட இருக்கறதுக்கு எந்த சாட்சியும் உன்கிட்ட இல்லை. இந்த லட்சணத்துல மனசாட்சியைப்பத்தி பேசறியா?''
''ஆமா. பேசறேன்... உன்னை ஒரு மனுஷனா நினைச்சு. ப்ளீஸ்... என்னோட பணத்தை எனக்கு குடுத்துடு. இனிமேலாவது கௌரவமா வாழணும்ன்னு நினைக்கிறேன்.''
''நீ நினைக்கறது நடக்காது. என்கிட்ட இருந்து ஒரு பைசா கூட உனக்கு வராது... உன்னால என்னை என்ன பண்ண முடியும்?''
''முடியாதுதான். உன்னை என்னால ஒண்ணும் பண்ண முடியாதுதான். ஆனா... நீ செய்யற இந்தக் கொடிய பாவத்துக்கு நீ பதில் சொல்லியே ஆகணும். இனிமேல் நீ கூப்பிடற இடத்துக்கு நான் வர மாட்டேன்....''
''வர மாட்டியா? வர வைப்பேன். நீ வருவ. உனக்கு பணம் வேணும்ன்னா... என்னைத் தேடித்தானே வரணும்? உன்னோட கஷ்டத்துல இருந்து காப்பாத்தினவன் நான்...''
''காப்பாத்தினியா? நீயா? இஷ்டப்படாத வாழ்க்கையில... கஷ்டப்பட்டு... ஈடுபட்டு... நான் சம்பாதிச்ச பணத்தை அபகரிக்கற நீ... என்னைக் காப்பாத்தினதா சொல்ற? தட்டிக் கேட்க ஆள் இல்லாதவள்தானே? தட்டுகெட்டு வாழத் தயாரானவதானேன்னு இளப்பமா நினைச்சு... இழிவா பேசற நீ... என்னைக் காப்பாத்தினியா? வேடிக்கைதான் போ. சரி, முடிவா சொல்லு என்னோட பணத்தை தரப்போறியா இல்லையா?''
''அதான் முடியாதுன்னு ஏற்கெனவே சொல்லிட்டேனே?''
''இதுதான் உன்னோட முடிவா?''
''ஆமா...''
''உன்னோட இந்த பாவத்துக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். குட்பை...''
கோபத்தால் சிவந்த முகத்துடனும், சோகத்தால் கண்ணீர் ததும்பிய கண்களுடனும் அங்கிருந்து அகன்றாள் பாவனா.
மோட்டார் சைக்கிள் ஹாரன் ஒலி, காதைத் துளைப்பது கேட்டு, பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் பாவனா.
காலம் கடந்தாலும் அந்த சுதாகர் மீது அவளுக்கு இருந்த கோபம் கொஞ்சமும் குறையவில்லை. நினைவுகளை தற்காலிகமாக இதயத்தின் ஓரத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு புத்தகக் கடைக்குள் நுழைந்தாள்.