உன் மனதை நான் அறிவேன்
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10465
'வெண்ணிலா' ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்! பெயருக்கேற்றபடி, நீல வானத்தில் பளிச்சிடும் நிலவு போல் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது. இரவின் இருளில் ஒளிவிடும் நிலா போல மிக அழகாக காட்சி அளித்த 'வெண்ணிலா' ஹோட்டலுக்குள் இரவு நேரப் பறவைகள், ஜோடிகளாகவும், தனியாகவும் நுழைந்து கொண்டிருந்தனர்.
ஜோடிகளாக வந்தவர்கள், உல்லாசமாய் சல்லாபித்தபடி சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். சிலர், தங்கள் மெய் மறந்து மகிழ்வதற்காக அங்கே வந்து கொண்டிருந்தனர். அவர்களது பிரச்னைகளையும் அலுவலக டென்ஷனையும் மறக்க வைக்கும் மதுபானம் எனும் மருந்தை நாடினர்.
ராத்திரிகளில் ராஜசுகம் தேடி வரும் நபர்கள் நிறைந்திருந்தனர். 'என்னுடைய வழக்கம் இதுதான்' என்று பகிரங்கமாய் வருபவர்களும் இருந்தனர். வெளியில் 'கம்பீர கனவான்' எனும் உருவகம் கொண்டவர்கள் சிலர். 'தங்கள் வேஷம் கலைந்துவிடுமே' என்ற அச்சத்தில் ரகஸியமாய் வந்திருப்பவர்களும் இருந்தனர்.
நேரம் ஆக ஆக... வருகையாளர்கள் அதிகமானார்கள். மதுபானப்பிரிவில் பகல் போல வெளிச்சமிடும் அழகிய அலங்கார மின்சார விளக்குகள் அணி வகுத்திருந்தன. 'அழகான மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. முன்பக்கம் நடன அரங்கம் மிக நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கண்ணைக் கவரும் வண்ணத்திரை போடப்பட்டிருந்தது.
ஒரு கையில் மதுபானத்தையும், இன்னொரு கையில் மாதுவின் கரத்தையும் பிடித்தபடி ஓய்வாக உட்கார்ந்திருந்தனர் சில ஆண்கள். தனியாக வந்தவர்கள் மதுவை சுவைத்தபடி, 'அரங்கத்தின் வண்ணத்திரை எப்போது திறக்கும்' என்று காத்திருந்தனர்.
சீருடை அணிந்த பணியாளர்கள், தங்கள் கைகளில் மது மற்றும் மதுவிற்கு கூட்டணியான உணவு வகைகளையும் ட்ரேயில் ஏந்தியபடி உலவிக் கொண்டிருந்தனர். உணவு வகைகளில் வாசனையும், மதுவின் நெடியும் கலந்து வினோதமான மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அங்கே வந்திருந்தவர்கள், பகல் நேரப் பணிகளையும், பற்பல பிரச்னைகளையும் அறவே மறந்து, ஒரு தனி உலகத்தை உணர்ந்தனர். பணம் அங்கே மிக அட்டகாசமாய் விளையாடியது. திடீரென, வாத்ய இசை ஆரம்பித்தது. வண்ணத்திரை உயர்த்தப்பட்டது. அழகு மயிலாக, மிக ஒயிலாக அங்கே வந்து நின்று அந்த அரங்கத்திற்கு மேலும் அழகு சேர்த்தாள் கயல்விழி. கயல்விழியைக் கண்டதும் தங்கள் விழிகளை மலர்த்தி விரித்தனர் அங்கிருந்த ஆண்கள்.
பெண்களின் மனதில் பொறாமை... தீப்பொறி கனன்றது. மனைவியுடன் வந்திருந்த ஓரிரு ஆண்கள், அருகில் மனைவி இருப்பதைக் கூட மறந்து, கயல்விழியின் அழகை ரஸித்துக் கொண்டிருந்தனர்.
அங்கே ஒலிக்கப்பட்ட இசைக்கேற்ப மிக நளினமாக தன் நடன அசைவுகளை ஆரம்பித்தாள் கயல்விழி. இசையின் தாளலயத்திற்கு ஏற்ப மிக வசீகரமாக ஆடினாள். ஆபாசமாக இல்லாமல் கவர்ச்சிகரமாக அவள் அணிந்திருந்த உடை, அவளது மேனியின் செழுமையை வெளிப்படுத்தியதால், ஆண்களின் இதயம், அரங்கம் ஏறாமலே ஆட்டம் கண்டது. கயல்விழி, சுழன்று ஆட... ஆட... அவர்களின் மனது, அதைவிட வேகமாய் சுழன்றது. கயல்விழியின் கண்கள் அவளது பெயருக்கு ஏற்றபடி மிக அழகான மீன் போல இருந்தன. சங்கு போல் அமைந்திருந்த அவளது கழுத்து, ரோஜாப்பூ போன்ற இளம் ரோஸ் நிறத்தில் காணப்பட்ட அவளது கன்னங்கள், ப்யூட்டி பார்லரில் வடிவமைக்காமலே இயற்கையாய் அழகான வடிவில் இருந்த புருவங்கள், எடுப்பான மூக்கு, பவள வண்ண உதடுகள் ஆகியவற்றின் மொத்த உருவமாய் மிக அழகிய ரூபவதியாய் காண்போரின் உள்ளங்களைக் கிள்ளி எறிந்து கொண்டிருந்தாள். உணர்வுகளால் எரிய வைத்துக் கொண்டிருந்தாள்.
நடனம் முடிந்தது. கனவு லோகத்தில் இருந்து நினைவிற்கு மீண்ட பார்வையாளர்கள், எழுந்து கலைந்து சென்றனர். உடை மாற்றிக் கொள்ளும் அறைக்கு சென்றாள் கயல்விழி.
அறையின் வாசலில் காத்திருந்தான் ஜெயராஜ். ஜெயராஜ் மூலம்தான் 'வெண்ணிலா ஹோட்ட'லில் நடனம் ஆடும் கான்ட்ராக்ட் கிடைத்தது கயல்விழிக்கு. நடனப் பெண்மணிகளை ஸ்டார் ஹோட்டலுக்கு நடனமாடுவதற்காக ஒருங்கிணைக்கும் சிறிய ஏஜென்ஸியை, நடத்தி வந்தான் ஜெயராஜ். 'ராஜ் கோ-ஆர்டினேட்டிங்' என்ற பெயரில் அவனது ஏஜென்ஸியை அவன் மட்டுமே தனித்து நடத்திக் கொண்டிருந்தான். ஹோட்டல் நிறுவனத்திடமிருந்து கயல்விழியின் நடனத்திற்கென்று பணம் பெற்றுக் கொண்டு, அதில் இருந்து கயல்விழிக்கு ஒரு தொகையைக் கொடுத்து வந்தான்.
உடை மாற்றி, தன் முக ஒப்பனையை கலைத்துக் கொண்டபின் வெளியே வந்தாள் கயல்விழி. பணத்தை ஒரு கவரில் போட்டு, தயாராக வைத்திருந்தான் ஜெயராஜ். கயல்விழியிடம் கொடுத்தான். உள்ளே இருந்து பணத்தை வெளியே எடுத்து எண்ணினாள் கயல்விழி.
''இந்த தடவையும் போன தடவை குடுத்த அதே தொகைதான் ஜெயராஜ் குடுத்திருக்கீங்க...''
''இந்த ஹோட்டல்ல ரெகுலரா டான்ஸ் பண்றதுக்காக கூப்பிடறாங்க. அதனால கெடுபிடியா பேச முடியலை கயல்விழி...''
''ஏகப்பட்ட கெடுபிடியில இருக்கேன் நான். சமையல் வேலை செஞ்சு என்னையும் என்னோட தங்கச்சி வந்தனாவையும் கஷ்டப்பட்டு அம்மா காப்பாத்திக்கிட்டிருந்தாங்க. அம்மாவுக்கு குறுக்குவலி வந்து, அடிக்கடி வேலைக்கு லீவு போட்டதுனால அம்மாவை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. ஆனா... சும்மா சொல்லக் கூடாது... அம்மா வேலை பார்த்த வீட்டு அம்மா, எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணினாங்க. அதனாலதான் எங்க குடும்ப வண்டி குடை சாயாம ஓடுச்சு. அம்மாவுக்கு வேலை போனதுனாலயும், அவங்க படுத்த படுக்கையா ஆனதுனாலயும் என்னால படிப்பை தொடர முடியலை. வந்தனா மட்டும் படிச்சிக்கிட்டிருக்கா. அவளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். அம்மாவுக்கு மருந்து வாங்கணும். ரெண்டு மாசமா வாடகை குடுக்காம நிக்குது. அப்பாங்கற ஸ்தானத்துல பணம் சம்பாதிச்சு குடுக்காட்டாலும் பரவாயில்ல, கூடவே இருந்திருந்தா ஒரு துணையாவது இருந்திருக்கும். பொறுப்பை தட்டிக் கழிச்சிட்டு ஓடிப்போயிட்டார். நடுத்தெருவுல நாதி இல்லாம நிக்கிற சூழ்நிலையிலிருந்து என்னோட குடும்பத்தைக் காப்பாத்தறதுக்காக வேற வழியில்லாம ஹோட்டல்ல டான்ஸ் ஆடறேன். இதுக்காக நீங்க ஹோட்டல் மேனேஜ்மென்ட்ல இருந்து வாங்கிக் கொடுக்கற பணம் ரொம்ப குறைவு ஜெயராஜ்... தனி ஒருத்தியா நின்னு குடும்பச் செலவை சமாளிக்க முடியாமதான் ஆடறதுக்கு அரங்கத்துல ஏறிக்கிட்டிருக்கேன். நீங்க ஒரு கண்ணியமான கோ-ஆர்டினேட்டர்ன்னு கேள்விப்பட்டுதான் தைரியமா இந்த வேலைக்கு வந்தேன். என்னோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கோங்க... ப்ளீஸ்...''
கயல்விழியின் கெஞ்சலான பேச்சில் மனம் இரங்கிய ஜெயராஜ், மேலும் சில ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
''தேங்க்ஸ் ஜெயராஜ்.''
''அடுத்த தடவை இங்க டான்ஸ் ஆட கூப்பிடும்போது கூடுதலா கேட்டுப் பார்க்கறேன். நாம டிமாண்ட் பண்ணினா... டான்ஸ் ஆடறதுக்கு அவங்க ஆளை மாத்திடறாங்க...''
''நீங்க நினைக்கறது தப்பு ஜெயராஜ். இந்த ஹோட்டல் மேனேஜர் கிருஷ்ணன் என்கிட்ட காலையில பேசினார். என்னோட டான்ஸ் ப்ரோக்ராம்ன்னா நிறைய கெஸ்ட் வர்றாங்களாம். அதனால 'எங்களுக்கு தேதி குடுத்தப்புறம் மத்த ஹோட்டலுக்கு தேதி குடுங்கன்னு' சொன்னார். 'எதுவா இருந்தாலும் என்னோட கோ-ஆர்டினேட்டர் ஜெயராஜ்கிட்ட பேசிக்கோங்க ஸார்'ன்னு சொல்லிட்டேன். நான் நினைச்சிருந்தா... அவர் அப்பிடி சொன்னப்பவே 'தொகையை கூட்டிக் குடுங்க'ன்னு கிருஷ்ணன்கிட்ட கேட்டிருக்கலாம். எதிலயுமே நேர்மையை கடைபிடிக்கணும்ங்கற கொள்கை உள்ளவ நான். நீங்க பார்த்து பேசி கூடுதலான பணம் வாங்கிக் குடுத்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். நீங்க சொல்லிதான் இந்த வேலை எனக்கு கிடைச்சது. சின்ன வயசுல இருந்தே டான்ஸ் மேல உள்ள ஆர்வத்துனால டான்ஸ் ஆட பழகினேன். க்ளாசுக்கெல்லாம் போக ஏது பணம்? டி.வி. பார்த்து, சினிமா பார்த்து நானாகவே ஒரு ஆர்வத்துல ஆடிக்கிட்டிருப்பேன். அந்த பயிற்சியில இன்னிக்கு என்னோட பிழைப்பு ஓடுது. இல்லை... இல்லை... ஆடுது...''
தன் கஷ்டங்களை மறந்து நகைச்சுவையாய் பேசிய கயல்விழியைப் பார்த்து இரக்கப்பட்ட ஜெயராஜ், அவளுடன் சேர்ந்து சிரித்தான்.
''என்னால முடிஞ்ச உதவியை செய்ய நான் தயாரா இருக்கேன் கயல்விழி. கால்டேக்ஸி வெயிட் பண்ணுது. இந்தா... டேக்ஸிக்குப் பணம். நீ கிளம்பு.''
''ஓ.கே. ஜெயராஜ். தேங்க்யூ. நான் கிளம்பறேன்.'' கயல்விழி, ஹோட்டலை விட்டு வெளியே வந்து கால்டேக்ஸியில் ஏறி கிளம்பினாள். சிறிது தூரம் போனதும் கயல்விழியின் மொபைல் ஒலித்தது. ஹேண்ட் பேகில் இருந்து மொபைல் ஃபோனை எடுத்து காதில் பொருத்தியபின் பேச ஆரம்பித்தாள் கயல்விழி.
''ஹாய் சரிதா... என்ன இது... இந்த நட்டுநடு ராத்திரியில எனக்கு ஃபோன் பண்றே? உன்னோட ஹஸ்பெண்ட் அபிலாஷ் கோவிச்சுக்க மாட்டாரா?''
''அவர் ஏன் கோவிச்சுக்கப் போறார்? நம்பளோட நெருக்கமான நட்பைப் பத்தி அவருக்குத் தெரியாதா என்ன? அது சரி... டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டியா? ''
''ம்கூம். கால்டேக்ஸியில் போய்க்கிட்டிருக்கேன்...''
''ஏன்? கைடேக்ஸி கிடைக்கலியா...?''
''ஏய்... மொக்கை போடற... ரொம்ப கடிக்கற...?''
இருவரும் சிரித்துக் கொண்டனர்.
''இவ்வளவு சத்தமா சிரிக்கறியே... அபிலாஷ்... முழிச்சுக்கப் போறார்...''
''அவர், தூங்கும்போதுகூட மனசுக்குள்ள ஏதாவது ஒரு ட்யூனை கம்போஸிங் பண்ணிட்டிருப்பார்...''
''பின்னே... இன்னிக்கு அவர்தானே டாப்ல இருக்கற ம்யூஸிக் டைரக்டர்? புகழ் பெற்ற ம்யூசிக் டைரக்டர் அபிலாஷேரட சம்சாரமே... காலையில பேசலாமே...?''
''ஏன்? நான் பேசறது உனக்கு தொந்தரவா இருக்கா?''
''சச்ச... அபிலாஷேரட தூக்கத்துக்கு தொந்தரவா இருக்குமேன்னுதான் சொன்னேன். உன்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேசுவேன்? நாலு வயசுல இருந்து இருபது வருஷமா ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். உயிருக்குயிரா பழகறோம்... உன் கூட பேசறதுதான் என்னோட மனசுக்கு ஆறுதலா இருக்கு...''
''நீ ஏதாவது ஒரு ப்ரொபஃஷனல் கோர்ஸ் படிச்சிருந்தா... அபிலாஷேரட சிபாரிசுல பெரிய கம்பெனியில வேலை வாங்கிக் குடுத்திருப்பார். உங்கப்பா வீட்டை விட்டு போனப்புறம், உங்கம்மாவுக்கும் உடம்பு முடியாமப் போனதுனால உன்னால படிக்க முடியாம போயிடுச்சு. இப்பவும் நான் சொல்றேன். அபிலாஷ்க்கு இருக்கற வசதிக்கு உனக்கு வேண்டிய மட்டும் பண உதவி செய்ய முடியும். ஏதாவது ஃபேன்ஸி ஷாப் வச்சுக்கலாம்ன்னு ஏற்கனவே நான் சொன்னேன். நீதான் கேட்க மாட்டேங்கற...''
''நட்புக்கு நடுவுல இந்த பணம்ங்கற நாகப்பாம்பு நுழைஞ்சுட்டா... அதோட விஷத்தைக் கக்கி, நம்ம நட்பை முறிச்சுடும். பொருளாதார வசதியைவிட நட்பைத்தான் நான் பெரிசா நினைக்கிறேன்.''
''நமக்குள்ள அப்பிடி என்ன பெரிசா பிரச்னை வந்துடப்போகுது? நீ ஏன் இப்பிடி பேசற...?''
''நம்ப நட்பு நம்பளோட மரணம் வரைக்கும் நீடிக்கணும். அந்த நல்ல எண்ணத்துலதான் நான் பேசறேன். எனக்கு ஒரு உதவின்னு தேவைப்பட்டா உன் கிட்டதான் கேட்பேன். வேற யார் இருக்கா எனக்கு?''
''உனக்கு என்ன உதவி வேண்ணாலும் செய்யக் காத்திருக்கேன். அபிலாஷேரட சிபாரிசுல சினிமாவுல நடிக்கச் சொன்னா... அதுவும் மாட்டேங்கற...''
''ஒரு படத்துக்கு நாப்பது நாள் கால்ஷீட் வாங்கிக்கிட்டு நாலு நாள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும். மீதி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லி சும்மா உட்கார வைப்பாங்க. எனக்கு சினிமாவுல நடிக்கறதுக்கு துளிகூட ஆர்வம் இல்லை சரித். டான்ஸ்... டான்ஸ்... டான்ஸ்தான் எனக்கு சின்ன வயசுல என் மனசுல பதிஞ்சு போன ஓர் ஆர்வம். தற்செயலா... நான் விரும்பின அந்த டான்ஸ் துறையிலயே என்னோட வாழ்க்கைப் படகு போறதுல எனக்கு திருப்திதான். ஒரே ஒரு சின்ன குறை என்னன்னா... பல பேர் கூடி இருக்கற நாட்டிய மேடையில ஆடாம பல பேர் ரசிக்கற ஹோட்டல் அரங்கத்தில ஆடறதுதான். ஆனா ஒரு விஷயம் ஆறுதலா இருக்கு. நான் டான்ஸ் ஆடப் போற எல்லா ஹோட்டல்லயும் உடை விஷயத்துல என்னை வற்புறுத்தறது இல்லை. கண்ணியக் குறைவான உடைகளை ஆட்சேபித்து, போட்டுக்க மறுத்தா... அவங்க அதை ஏத்துக்கறாங்க... கெட்ட விஷயங்கள்ல்லயும் நல்ல விஷயங்கள் நடக்கற மாதிரி... என்னோட மனோபாவத்துக்கு, இந்த மாதிரி சில விஷயங்கள் நல்லபடியா நடக்குது...''
''உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாத்தான் நடக்கும். அது சரி... நாளைக்கு உனக்கு என்ன வேலை இருக்கு...?''
''கலைஞர் டி.வி.யில வர்ற 'ரோஸ் நேரம்' நிகழ்ச்சியில கலந்துக்கச் சொல்லி கேட்டிருந்தாங்க. நாளைக்கு ஷூட்டிங் இருக்காம். வரச் சொல்லி இருக்காங்க...''
''வெரிகுட். சின்னத்திரையில உன்னைப் பார்த்துட்டு பெரிய பெரிய டைரக்டர்ஸ் பெரிய திரைக்குக் கூப்பிடப் போறாங்க பாரு.''
''அம்மா தாயே. எவ்ளவு பெரிய டைரக்டர் நடிக்கக் கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் தாயே. ஆளை விடு...''
''சரி சரி. நீ ஒண்ணை நினைச்சுட்டா விட மாட்டியே...''
''ஆமாமா. நான் உன்னை நினைச்சவ. விட்டுருவேனா என்ன...?'' சரிதா சிரிக்க, கயல்விழியும் சிரித்து மகிழ்ந்தாள்.
''ஏய் சரித்... போதும். நீ தூங்கு. பாவம் அபிலாஷ்.''
''ஓ.கே. குட்நைட்...''
''குட்நைட்.''