உன் மனதை நான் அறிவேன் - Page 10
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10465
ஷாப்பிங் வளாகம். வீட்டில் பொழுது போகாமல் 'போர்' அடித்ததால் கற்றையாக பணத்தை அள்ளி 'ஹேண்ட்பேக்'கில் போட்டுக் கொண்டு அங்கே வந்து, ஆசைப்பட்ட பொருட்களையெல்லாம் ஆசை தீர வாங்கிக் குவிக்கும் பழக்கம் உடையவள் சரிதா.
சுமாரான வசதி கொண்ட பிறந்த வீட்டிலிருந்து, மிக அதிக வசதி கொண்ட அபிலாஷை திருமணம் செய்து கொண்ட சரிதாவிற்கு வாழ்க்கை இனித்தது. அந்த இனிமை பணத்தினால் மட்டுமே அல்ல, அபிலாஷின் அன்பான மனத்தினால். சினிமா துறையில், இசை அமைப்பில் முதலிடம் பெற்று, புகழ் அடைந்துள்ள அபிலாஷ், துளிக்கூட கர்வம் இல்லாதவன். அன்பே உருவானவன். எளிமையை விரும்புபவன். பெண்களை மதிப்பவன். பெண்மையை ஆராதிப்பவன். சிறு வயதிலேயே தன் பெற்றோரை இழந்த அவன், ஒரு கிறிஸ்தவ கருணை இல்லத்தில் பாதிரியார் ஒருவரால் வளர்க்கப்பட்டவன்.
அந்தப் பாதிரியார் கிட்டார் வாத்தியம் வாசிப்பதில் வல்லவர். அக்கலையை அபிலாஷிற்கு கற்றுக் கொடுத்தார். அதன் மூலம் இசை மீது அபிலாஷிற்கு அளவற்ற ஆர்வம் ஏற்பட்டது. தூண்டிவிட்டால் பிரகாசமாக எரியும் சுடரைப்போல பாதிரியார் கொடுத்து வந்த ஊக்கம், அவனது இசைத்திறமையை மேன்மேலும் வளர்த்தது.
புதிது புதிதாக கற்பனையில் தோன்றும் இசை ராகங்களை பாதிரியாரிடம் வாசித்துக் காட்டினான். அவனது திறமையை புரிந்து கொண்ட பாதிரியார், அவனுக்கு 'சர்ச்'சில் பாடும் பாடல்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பை அளித்தார். அதன் மூலம், வெளியிலிருந்து இசை ஆல்பம் தயாரிப்பார்கள் அவனுக்கு வாய்ப்பு கொடுத்தனர். அதன் பின் அந்த ஆல்பத்தில் உள்ள பாடல்களைக் கேட்ட ஒரு திரைப்பட இயக்குநர், அவனைப் பற்றி விசாரித்து, தனது படத்தில் இசை அமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
அந்த திரைப்படம் 'சூப்பர் டூப்பர்' ஹிட்டாகி, அபிலாஷின் பாடல்கள்தான் அந்த வெற்றிக்குக் காரணம் என்று பேசப்படும் அளவிற்கு பெயர் பெற்றான். அந்த முதல் பட வெற்றி, மேலும் மேலும் அவனை முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஏற வைத்தது. வாய்ப்புகள், பெருக... பெருக... வருமானம் அதிகரித்தது. புகழ் ஓங்கியது. ஆனால் அந்த உயர்ந்த நிலையிலும் அவனது நல்லியல்புகள் மாறவில்லை. அவனது அந்தஸ்து மேன்மை அடைந்தது. ஆனால் அவனுக்குள் ஆணவம் தலைகாட்டவில்லை. பொருளாதார ரீதியாக அவன் பெருவாரியான பணத்தை சம்பாதித்தான். ஆனால் வாழ்க்கையை ஒரு பொருளோடு வாழ வேண்டும் என்று எண்ணி வாழ்ந்தானே தவிர கண்மூடித்தனமான திசைகளில் அவனது கவனம் செல்லவில்லை. கருணை இல்லத்தில் வளர்ந்தபோது இருந்த நல்ல குண இயல்புகள் எள்ளளவும் மாறாமல் புனிதமான மனிதனாக இருந்தான். அவனை வளர்த்த அதே பாதிரியார் குறிப்பிட்டு சொன்ன பெண்ணான சரிதாவை மறுபேச்சு எதுவும் கூறாமல் திருமணம் செய்து கொண்டான்.
குழந்தைப் பருவத்திலேயே கருணை இல்லத்து பாதுகாப்பில் விடப்பட்டவன் அபிலாஷ். ஆனால் கல்லூரி மாணவியான சரிதா, அவனது கல்லூரி படிப்பை முடித்திருந்த சமயம் அவளது வாழ்க்கையில் நேரிட்ட சோகத்தினால் பாதிரியாரிடம் அடைக்கலம் புகுந்தவள்.
அம்மா, அப்பாவுடன் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்பொழுது, கார் ஓட்டி வந்த ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரே சமயத்தில் பெற்றோரை கண் முன்னால் துடிக்க துடிக்க பறி கொடுத்தவள். அவளது பெற்றோர் இருவரும் வேற்று ஜாதியை சேர்ந்தவர்கள். காதல் திருமணத்தால் உற்றார், உறவினர் அனைவராலும் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். எனவே சரிதா... நடுத்தெருவில் அனாதையாக நின்றாள். அவளுக்கு அடைக்கலம் கொடுத்த பாதிரியார், சரிதா மிக நல்ல பெண் என்று புரிந்து கொண்டு, அபிலாஷிடம் அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
தன்னை வளர்த்து, ஆளாக்கி, பெயரும், புகழும் அடைய வைத்த பாதிரியார், தனக்கு அனைத்து விஷயத்திலும் நன்மையையே செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சரிதாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான் அபிலாஷ்.
அபிலாஷும் சரிதாவும் மிக அன்பாக, 'புரிந்து கொள்ளுதல்' எனும் மிக முக்கியமான மனித நேயத்துடன் இனிது வாழலாயினர். சரிதா மீது தன் உயிரையே வைத்திருந்தான் அபிலாஷ். அதுபோல் அபிலாஷ் மீது உயிரை வைத்து உருகினாள் சரிதா. பணம், புகழ், நல்ல கணவன் அமைந்துள்ள முழுமையான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
அபிலாஷின் பேங்க் நிலவரம், வரவு செலவுகள் போன்ற எதுவுமே அபிலாஷிற்கு தெரியாது. அனைத்தையும் சரிதாவே திறம்பட கவனித்துக் கொண்டாள். அவளது இஷ்டப்படி செய்யும் எந்த செலவையும் 'ஏன்? எதற்கு?' என்று கேட்க மாட்டான் அபிலாஷ்.
இசை அமைப்பு, பாடல்பதிவு என்று அபிலாஷ் சதா சர்வமும் அவனது வேலைகளில் மூழ்கி இருந்தபடியால் பொழுது போக்காக, கார் ஓட்டுவது, கம்ப்யூட்டர் கல்வி போன்ற உபயோகமானவற்றை கற்றுக் கொண்டாள் சரிதா.
அவ்வப்போது எழும் பெற்றோரின் பிரிவுத் துயரம் தவிர வேறு எந்தக் கவலையும் இன்றி வானில் பறந்து திரியும் பறவை போல சுதந்திரமாக, சுகமாக வாழ்ந்து கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் ஒரு புயல் உருவாகப் போவதை அறியாத மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய சரிதாவை வழி மறித்தான் ஒருவன். அவன் சுதாகர்.
அவனை அங்கே சற்றும் எதிர்ப்பார்க்காத சரிதா, அதிர்ச்சி அடைந்தாள்.
''நீ... நீயா...?''
''ஏன்? என்னை எதிர்பார்க்கலியா?''
''நான் ஏன் உன்னை எதிர்பார்க்கணும்?''
''ஒரு காலத்துல என்னை எதிர்பார்த்து காத்திருந்தவதானே?''
''அதுதான் நான் செஞ்ச ஹிமாலயத் தவறு. உன்னைப் போல கேடிகள் உயிரோட இருந்து என்னதான் கிழிக்கப் போறீங்க?''
கோபத்தில் சரிதாவின் முகம் சிவந்தது.
''ஓ... நான் உயிரோட இல்லாம போறதுல உனக்கு அவ்வளவு ஆர்வமா?''
''ஆமா. நீ இல்லாமப் போனா... பல பெண்களோட வாழ்க்கை சீரழியாம இருக்கும்.''
''என்னைப் பத்தின நினைப்பே உனக்கு இல்லையா?''
''நீ எக்கேடு கெட்டா... எனக்கென்ன? நான் என் கணவர்... அவரோட உடல்நலம், அவரோட இசை அமைப்பு... இதுதான் என்னோட உலகம். இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு கிடையாது.''
''உனக்கு சிந்தனை இல்லாம போகலாம். ஆனா... எனக்கு எப்பவும் ஒரே சிந்தனைதான். அது உன் மேலதான்.''
''ஷட் அப். நான் இப்ப இன்னொருத்தரோட மனைவி. கண்டபடி என்கிட்ட பேசாதே. வழியை விடு. நான் போகணும்...''
''தாராளமா போ. ஆனா எனக்கு கட்ட வேண்டிய அபராதத்தை கட்டிட்டு போ...''
''என்னது?! அபராதமா? உளறலா இருக்கு?!..''
''என்னைக் காதலிச்சுட்டு வேற ஒருத்தனை கைப்பிடிச்சிட்டியே... அதுக்கு அபராதம் கட்டு. உன் வழியில வராம... போய்க்கிட்டே இருப்பேன்...''
''ஓ... ப்ளாக் மெயிலா? உன்னைக் காதலிச்சது என்னமோ உண்மைதான். ஆனா... உன்னோட சுயரூபமும், வெளிவேஷமும் தெரிஞ்சதும் உன்னை விட்டு விலகிட்டேனே... ஏன் என் வாழ்க்கையில குறுக்கே வர்ற?...''
''என்னோட சுயரூபம் தெரிஞ்சதுக்கப்புறம் ஒரு குப்பனையோ, சுப்பனையோ நீ கல்யாணம் பண்ணி இருந்தா... உன் வாழ்க்கையில நான் ஏன் குறுக்கே வர்றேன்? புடிச்சாலும் புடிச்ச... ஒரு புளியங்கொம்பையில்ல புடிச்சிருக்க?! பொன் முட்டை இடற வாத்து... உன்னை அவ்ளவு சுலபமா விட்டுடுவேனா என்ன?''
''புளியங்கொம்பா புடிச்சேன்... அது இதுன்னு... கண்ணியக்குறைவா பேசாதே. புனிதமான ஒரு பாதிரியார் உதவியால, கௌரவமா அபிலாஷ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார். ரொம்ப சுலபமா கெட்டுப் போகக் கூடிய வாய்ப்புகள் இருக்கும் சினிமா உலகத்துல இருக்கற அவர், நல்லவர். எந்த தவறான பழக்கமும் இல்லாதவர்ன்னு பாதிரியார் சொன்னதுனால அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். இதுல என்ன தப்பு? காதலிக்கிற எல்லாருமே காதலிச்சவங்களையா கல்யாணம் பண்ணிக்கிறாங்க? எத்தனையோ காரணங்களால காதல் கை கூடாம போயிடுது... என்னோட விஷயத்துல... உண்மையிலேயே... ஒரு நியாயமான காரணம் இருக்கு. அதனால என் மேல எந்த தப்பும் இல்லை... நான் நல்லவள்ங்கறதுனாலதான் கடவுளா பார்த்து காலேஜ்ல, என் கூட படிச்ச பொண்ணு வனிதாவை உன்னைப்பத்தின உண்மைகளை என்கிட்ட சொல்ல வச்சாரு. உன்னைப்பத்தின ரகசியம் அம்பலமாச்சு. என்னோட வாழ்க்கை மங்கலமாச்சு...''
''அந்த மங்கலம் கிடைச்சதுக்கு லம்ப்பா ஒரு தொகையை குடுத்திட்டினா... நான் உனக்கு மங்களம் பாடிட்டு போய்க்கிட்டே இருப்பேன்...''
''நீ சொல்ற நிபந்தனைக்கு நான் மறுத்தா...?''
''மறுத்தா? நீ எனக்கு உருகி உருகி எழுதின காதல் கடிதங்கள், நீயும் நானும் சேர்ந்து எடுத்துக்கிட்ட புகைப்படங்கள் இதையெல்லாம் உன்னோட இசைக்கணவர், இளம்புயல் அபிலாஷுக்கு இ-மெயில் அனுப்பி வைப்பேன்...''
சரிதா அதிர்ந்தாள்.
''அடப்பாவி...''
''அடப்பாவி இல்லாம்மா நான் அப்பாவி...''
''எத்தனையோ குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகளோட வாழ்க்கையில குறுக்கிட்டு அவர்களை முறைகேடான பாதைக்கு கூட்டிக்கிட்டுப் போயிருக்க. பெண்களையும், பெண்மையையும் மதிக்காம... கால்ல போட்டு மிதிக்கற உன்னைப் போய் காதலிச்சதுக்காக வெட்கப்படறேன், வேதனைப்படறேன். நீ செஞ்ச பாவகரமான காரியங்களுக்கு பிராயச்சித்தமா என் வாழ்க்கையில தலையிடாம ஒதுங்கிப் போயிடு...''
''ஒதுங்கிப் போகலாம்... ஆனா... கணிசமான பணம் இல்லாம பதுங்கித்தான் வாழ வேண்டி இருக்கு. நான் கேக்கற பணத்தை நீ... குடுத்திட்டின்னா... உன்னோட அன்புக் கணவர் அபிலாஷ் கூட நீ வாழற வாழ்க்கையில வம்பு எதுவும் பண்ணாம நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன். கையில காசு, வாயில தோசை! இந்தக் கையில பணத்தைக் குடு. அந்தக் கையில படத்தை வாங்கிக்கோ. மீட்டரை போட்டுட்டேன். மேட்டரை முடிச்சுடு. என் பிழைப்பை நான் பார்த்துக்குவேன்...''
''உன் பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்பு...த்தூ...''
''பின்னே... உழைச்சு பிழைக்கறதெல்லாம் என்னால முடியாதும்மா...''
அப்போது அங்கே பாடல்பதிவின் பொறுப்பாளர் ஆறுமுகம் வந்தார். சரிதாவைப் பார்த்தார்.
''என்னம்மா?... இங்கே நிக்கறீங்க? காரை பார்க் பண்ணிட்டீங்களா? அல்லது நான் ஹெல்ப் பண்ணவா?'' ஆறுமுகம், சரிதாவிடம் பேச ஆரம்பித்ததும் நைஸாக அங்கிருந்து நழுவினான் சுதாகர்.
''காரை பார்க் பண்ணிட்டேன் ஆறுமுகம் அண்ணே. தேங்க்ஸ்...''
''சரிம்மா... நான் கிளம்பறேன்...''
ஆறுமுகம் அங்கிருந்து போனதும் சரிதா, திகைப்பு மாறாத உணர்வில், மெதுவாக நடந்து, கடைகள் இருக்கும் மாடிக்கு சென்றாள். அவளது இதயத்துடிப்பு அதிவேகமாய் இருந்தது. சமாளித்துக் கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டாள்.