உன் மனதை நான் அறிவேன் - Page 11
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10465
'நெட்டை பாபு' என்று அழைக்கப்படும் பாபு, தனது பழைய காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரின் கதவை ஓங்கி அறைந்து சாத்தினான். அப்படி பலமாக மூடினால்தான் அந்தக் கதவு மூடும். லாரியின் கதவை மூடுவது போல மூட வேண்டும்.
பாவனாவின் வீட்டிற்குள் நுழைந்தான். சபலப்படும் ஆண்களின் ஆசைக்குத் தன் உடலை வழங்கும் நிலைமை ஏற்பட்ட பாவனா, பரிதாபத்துக்குரியவள். அவள் விரும்பி அந்த திரைமறைவு வாழ்க்கை அமையவில்லை. எனினும், தானாக வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளும் விதமாக அமைந்துவிட்டது.
பாவனா அழகிய இளம்பெண். இயல்பாக நல்லவள். எனினும் சூழ்நிலைகளுக்கேற்ப தன் குணத்தை மாற்றிக் கொள்ளத் தயங்காதவள். அவளது அழகில் தங்கள் மனதை பறி கொடுக்காதவர்கள் இருக்க முடியாது. அவளது அழகிற்கு வஞ்சம் வைக்காத இறைவன், அவளது பொருளாதாரத்தில் மிக மிக கஞ்சம் பிடித்து விட்டான்.
எனவே... ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கினாள். அழகாக இருக்கும் ஏழைப் பெண்களின் அவலநிலை அவளுக்கும் ஏற்பட்டது. வேலை தேடி சென்ற இடங்களில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, தன்னை இழந்தாள். தன் கற்பை இழந்தாள். விதிவசமாய் 'நெட்டை பாபு'வை சந்திக்க நேரிட்டது. பேரழகியாய் காணப்பட்ட அவளை விலை பேசலாமே என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே அவளிடம் பேசினான்.
'நான் காரும் கீருமாய் இருக்கேன்னு, என்னை பெரிய ஆள்னு நினைச்சு... என்கிட்ட வேலை கேக்கற. உண்மையிலயே நானும் உன்னைப் போல கஷ்டப்படறவன்தான். இந்தப் பழைய கார் சும்மா ஒரு 'ஷேர'வுக்கு. வேலை எதுவும் நான் பார்க்கலை. நான் ஒரு கோ-ஆர்டினேட்டர்னு கௌரவமா வெளியில சொல்லிக்கிட்டாலும்... உண்மையிலயே... பச்சையா சொல்லப்போனா நான் ஒரு ப்ரோக்கர்... ஆமா... அழகான பெண்களுக்காக அலையும் ஆண்களுக்கு... பெண்களை அனுப்புற வேலைதான் எனக்கு. நீ சம்மதிச்சா... இந்த வேலை மூலமாத்தான் உனக்கு நான் ஹெல்ப் பண்ண முடியும்...'' தயக்கமாய் கூறிய 'நெட்டைபாபு'வை நிமிர்ந்து பார்த்தாள் பாவனா. விரக்தியான சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.
''என்னோட குடும்பத்துல என்னை சேர்த்து மூணு ஜீவன்கள். திடீர்னு செத்துப் போயிட்ட அம்மாவோட இடத்தை நான்தான் இப்ப நிரப்ப வேண்டி இருக்கு. அப்பாவுக்கு நிரந்தரமான வேலை கிடையாது. வாடகைக்கு வீடு பார்த்து குடுக்கற வேலை. மூணு மாசத்துக்கு ஒரு வீடு முடிச்சு, கமிஷன் வாங்கிட்டு வந்தா பெரிய விஷயம். தங்கச்சிக்கு சின்ன வயசு. ஸ்கூல்ல படிக்கறா. அப்பா கொண்டு வர்ற பணம் வீட்டு வாடகை குடுக்கறதுக்கு உதவியா இருக்கு. மத்த செலவுக்கெல்லாம்? என்ன பண்றதுன்னு விழி பிதுங்கற நிலைமை. ஏதோ தெரிஞ்ச வரைக்கும் வேலைக்கு போகலாம்னு போனா... அங்கே என்னை... தவறான கண்ணோட்டத்துல அணுகற ஆண்கள்தான் அதிகம். அவங்ககிட்ட என்னை இழக்கறதும், நீங்க சொல்றபடி கேட்கறதும் ஒண்ணுதான். அதனால நீங்க சொன்ன 'அந்த வேலை'க்கு நான் சம்மதிக்கிறேன்.''
அதன்பின், 'நெட்டை பாபு' அழைத்துப் போகும் இடங்களுக்கு அவனுடன் போவதும், அவன் அறிமுகப்படுத்தும் ஆண்களிடம் தன் அழகை அரங்கேற்றி, அதற்குரிய தொகையை நெட்டைபாபுவிடம் வாங்கிக் கொள்ளும் வழக்கம் உண்டானது. ஆண்களின் இரவு நேர இச்சைகளைத் தீர்த்து வைத்து, தன் குடும்பத்தின் வறுமையைத் தீர்த்துக் கொள்ளும் இரவுப் பறவையாய் மாறினாள் பாவனா.
பாவனாவின் வீட்டிற்கு 'நெட்டை பாபு' வரும் பொழுது பாவனா, அவனுக்காக சூடான தேனீர் கொடுப்பது வழக்கம். அன்றும் அவன் வந்ததும் தேனீர் தயாரித்தாள். சிறிய சமையல் மேடை, 'கிச்சன்' என்று அழைக்கப்பட்டது. எட்டுக்கு எட்டு அறை 'பெட்ரூம்' என்று அழைக்கப்பட்டது. அதைவிட சின்ன ஹாலில் பழைய சோஃபா ஒன்று போடப்பட்டிருந்தது. சிறிய வீடு எனினும் மிக சுத்தமாய் காணப்பட்டது. பழைய சேலைகள் மற்றும் துப்பட்டாவில் ஜன்னலுக்கு திரைகளாக தைத்து போடப்பட்டிருந்தன.
சோஃபாவில் உட்கார்ந்தான் 'நெட்டைபாபு'. அவனுக்கு அந்தப் பெயர் ஏற்பட காரணமாய் இருந்தன அவனது நீண்ட கால்கள். பாவனா தேனீரைக் கொண்டு வந்தாள்.
''இன்னிக்கு மகாபலிபுரம் போகணும். சாயங்காலம் ஆறு மணிக்கு ரெடியா இரு. கார் கொண்டு வரேன்...''
''உன்னோட கார்லயா?!''
''சச்ச... என்னோட கார்ல மகாபலிபுரம் என்ன... இதோ இருக்கிற மகாலிங்கபுரம்கூட போக முடியாது. எனக்கு தெரியாதா என்ன? கால் டேக்ஸி வரும். அதில போயிடலாம்...''
''இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த கேவலமான பிழைப்போ தெரியலை.''
''வருத்தப்படாதே பாவனா. வறுமையின் கொடுமையினால உன்னைப் போல பல பெண்களும், என்னைப்போல பல ஆண்களும் இந்த நிலைமையில இருக்கோம். ஒரு பெண்ணான உனக்கு உன்னோட இழப்பு... ஈடு செய்ய முடியாது.''
இதைக்கேட்டு பெருமூச்சு விட்ட பாவனா தொடர்ந்து பேசினாள்.
''முடியாத ஒரு விஷயத்தைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கறதுல பிரயோஜனமே இல்லை. ஆனா... ஒருத்தருக்கொருத்தர் நம்ம வேதனைகளை பகிர்ந்துக்கறதுனால ஏதோ கொஞ்சம் மனபாரம் குறையுது...''
அப்போது அங்கே பாவனாவின் அப்பா நீலகண்டன் வந்தார்.
நீலகண்டன் வந்ததும் விடைபெற்று கிளம்பினான் பாபு.
''அப்பா... இன்னிக்கு நான் வர லேட் ஆகும். தங்கச்சியை பார்த்துக்கோங்க. அவக்கிட்ட ஹாஸ்பிட்டல்ல நைட் டூட்டின்னு சொல்லி இருக்கேன். ஆஸ்பத்திரியோட ஆபீஸ் வேலைன்னு சொல்லி வச்சிருக்கேன்... என்னால முடிஞ்ச வரைக்கும் மறைச்சு வைப்பேன். அவங்களுக்கு தெரியறப்ப தெரியட்டும்...''
''சரிம்மா... இன்னிக்கு ஒரு பெரிய பங்களா வாடகைக்கு முடியற மாதிரி இருக்கு. முடிஞ்சுட்டா... கணிசமான தொகை கிடைக்கும். பார்க்கலாம்...''
''சரிப்பா... நீங்க 'டாஸ்மார்க்' போகாம... வீட்டை பார்த்துக்கோங்க...''
''நான் இப்ப கொஞ்ச நாளா போறதில்லைம்மா.''
''அப்பிடியே விட்டுடுங்கப்பா...''
''சரிம்மா...''
''தேங்ஸ்ப்பா...'' பாவனா, மதிய உணவு தயாரிப்பதற்காக சமையலறைக்கு சென்றாள்.