உன் மனதை நான் அறிவேன் - Page 13
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10465
நள்ளிரவு நேரம்... அபிலாஷின் மார்பில் புதைந்தபடி தூங்கிக் கொண்டிருந்த சரிதா, கண் விழித்தாள். அவளை அணைத்துக் கொண்டிருந்த அபிலாஷின் கையை மெதுவாக விலக்கினாள். எழுந்தாள். மனதில் இனம் புரியாத கலக்கம் தோன்றியது.
'ஏன்?' என்று யோசித்தாள்.
'நேத்து ராத்திரி நான்... கயல்விழிட்ட கோபமா நடந்துக்கிட்டேனோ... இல்லையே... கோபத்தை அடக்கிக்கிட்டுதானே இருந்தேன்? ஆனா... என் மனசில... அவ மேல கோபம் இருந்துச்சு. அபிலாஷ் மேல எனக்கு இருக்கற 'பொஸஸிவ்' உணர்ச்சியினால அவ மேல கோபம் வர்றது நியாயமே இல்லையே... நான் ஏன் இப்பிடி இருக்கேன்? கயல்விழி என் உயிர்த் தோழியா இருந்தும் அவளைக்கூட தப்பா நினைக்கறது தப்புதானே? அவளுக்கு என்னோட கோபம் புரியாட்டாலும்... என்னோட மனசாட்சி என்னைக்குத்துதே... இப்பவே அவளுக்கு ஃபோன் போட்டு பேசலாம்...''
உடனே... கயல்விழிக்கு ஃபோன் செய்தாள். மறுமுனையில் தூக்கக் கலக்கமான குரலில் 'ஹலோ...' என்றாள் கயல்விழி.
''ஏய்... என்ன... தூக்கமா?''
''பின்னே... ராத்திரி... அதை சாப்பிடு இதை சாப்பிடுன்னு போட்டுத் தாக்கினீங்க நீயும் அபிலாஷும். நைட்ல ஹெவியா சாப்பிட்டா லேட் நைட்ல தூக்கம் வராதா? அது சரி... நீ என்ன இந்த நேரத்துல ஸபோன் பண்ணி இருக்க?...''
''ஸாரிடி...''
''ஸாரியா? எதுக்கு? இந்த நேரத்துல ஃபோன் பண்ணினதுக்கா?''
''ச்சீ... அது இல்லை... நேத்து உன்கிட்ட நான் 'மூட்அவுட்' ஆனமாதிரி நடந்துக்கிட்டேனே... அதுக்கு...''
''அப்பிடியா? அப்பிடி ஒண்ணும் நீ நடந்துக்கலியே?''
சில வினாடிகள் மௌனம் காத்தாள் சரிதா.
''ஏய் சரித்... என்ன ஆச்சு உனக்கு? நேத்து அப்பிடி எதுவும் நடக்கலை, நேத்து நான் செம ஜாலியா இருந்தேன். ஒரு 'எக்ஸ்க்யூஸ் கிடைச்சது'ன்னு இஷ்டப்படி சாப்பிட்டேன். நல்லா அரட்டை அடிச்சு... மனசு ரிலாக்ஸ்டா வீட்டுக்கு வந்து சுகம்மா தூங்கறேன். நேற்றைய நாள் எனக்கு ரொம்ப நல்ல நாள். நீ என்னடான்னா... என்னமோ பெனாத்திக்கிட்டிருக்க... நான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்ன்னு இருந்தா... நீ என்கிட்ட ஸாரி சொல்ற... சந்தோஷமா இரு.''
''ஓ. கே. கயல்... நாளைக்கு உனக்கு ப்ரோகிராம் இருக்கா?''
''தெரியல. கோ-ஆர்டினேட்டர் ஜெயராஜ்... இது வரைக்கும் ஃபோன் பண்ணலை.''
''ஃப்ரீயா இருந்தா எங்கேயாவது வெளியே போலாமா?''
''ஓ... போலாமே...''
''சரி கயல். நீ காலையில ஃபோன் பண்ணு...''
''சரி சரித்...''
இருவரும் பேசி முடித்தனர்.