உன் மனதை நான் அறிவேன் - Page 20
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
சமையல்கார வத்சலாம்மாவின் உதவியோடு அபிலாஷிற்கு பிடித்தமான இரவு உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தாள் சரிதா. முள்ளங்கி பரோட்டாவும், தயிர் பச்சடியும் சேர்ந்த உணவு என்றால் அபிலாஷிற்கு மிகவும் பிடிக்கும். மாவை தயார் செய்து வைத்துவிட்டு, பச்சடிக்கு வெங்காயத்தை நறுக்கும்படி வத்சலாம்மாவிடம் சொல்லிவிட்டு, தயிர் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக ஃப்ரிட்ஜை திறந்தாள். அப்போது அழைப்பு மணி ஒலித்து அழைத்தது.
''அபிலாஷ்தான் வந்துட்டாரோ... காரோட ஹாரன் சப்தம் கூட கேட்கலியே...'' நினைத்தபடியே கதவைத்திறந்தாள் சரிதா.
''ஆஹா... என்ன ஒரு அதிசயம்! சொல்லாம கொள்ளாம இந்த நேரத்துல ஒரு ஆச்சர்யமான வருகை!...'' வாசலில் நின்றிருந்த கயல்விழியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் சரிதா.
''அதிசயமும் இல்லை. ஆச்சர்யமும் இல்லை. அவசியமா இந்த ஏரியாவுக்கு வர வேண்டி இருந்துச்சு. புரியலையா? புரியும்படியா சொல்றேன்... இந்த ஏரியாவுலதான் என் தங்கை வந்தனாவோட க்ளாஸ் டீச்சரோட வீடு இருக்கு. ஸ்கூல்ல பெர்மிஷன் கேட்டு, அந்த டீச்சர் ட்யூஷன் எடுக்கறாங்க. ஆனா ஃபீஸ் எக்கச்சக்கமா வாங்கறாங்க. அவங்ககிட்ட ஃபீஸை குறைச்சுக்க சொல்லிக் கேக்கணும். வந்தனா ப்ளஸ் டூ முடிச்சப்புறம் அவளை எந்த துறையில ஈடுபடுத்தலாம்ங்கற யோசனை கேக்கணும்ன்னு வந்தேன். அவங்களைப் பார்த்துட்டேன். பேசிட்டேன். நீ வீட்ல இருந்தா உன்னையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்...''
''நல்ல வேளை. நீ வந்த. என்னடா இது போர் அடிக்குமேன்னு நினைச்சுட்டிருந்தேன். இன்னிக்கு அபிலாஷ் வர்றதுக்கு பத்து மணியாகிடும். மணி ஏழுதான் ஆகுது. வா, ஊஞ்சலுக்கு போகலாம்...''
''போலாம். போலாம். அதுக்கு முன்னால சூடா எனக்கு ஒரு டீ போடச்சொல்லு வத்சலாம்மாவை.''
''ஸாரி கயல். உன்னைப் பார்த்த குஷியில உனக்கு குடிக்கறதுக்கு என்ன வேணும்னுகூட கேட்கலை...''
''உன்னோட வீட்ல, கேட்டு வாங்கி குடிக்கற உரிமையும், சாப்பிடற உரிமையும் எனக்கு இல்லாததா? நல்ல இஞ்சி டீ போடச் சொல்லு...''
வத்சலாம்மாவிடம் டீ போடச் சொல்லி விட்டு இருவரும் ஊஞ்சலுக்குப் போனார்கள். உட்கார்ந்தார்கள். பத்து நிமிடங்களில் இஞ்சி மணக்கும் தேனீர் வந்தது. சுவைத்துக் குடித்தாள் கயல்விழி.
''அபிலாஷ் அந்த புது படத்தோட ம்யூஸிக் வேலையை முடிச்சிட்டாரா...?''
''பாடல்களை முடிச்சுக் குடுத்துட்டார். இனி படம் முடிஞ்சப்புறம் ரீ-ரிக்கார்டிங் வேலையை முடிச்சுக் குடுக்கணும். அது சரி, அம்மா நல்லா இருக்காங்களா?''
''நல்லா இருக்காங்க. அம்மாவுக்கு பிஸியோதெரபி பண்ணச் சொல்றாரு டாக்டர். அதுக்காக வீட்டுக்கு வந்து பண்றவங்க இருக்காங்களாம். அதுக்கு நிறைய பணம் கேட்கறங்க. ஏற்பாடு பண்ணிட்டேன். தங்கச்சி படிச்சு முடிச்சு கால், ஊன்றி நின்னுட்டா... என்னோட கால் ஆட வேண்டி இருக்காது. அவ ஒரு நல்ல நிலைமைக்கு வரணும்னா நான் டான்ஸ் ஆடி சம்பாதிக்கறது மட்டும் போதாது. ஏதாவது பிஸினஸ் ஆரம்பிச்சு, அதில சம்பாதிச்சாத்தான் அவளோட மேல் படிப்புக்கு உதவியா இருக்கும். ஆனா பிஸினஸ்ல மூலதனம் போடறதுக்கு நிறைய பணம் தேவைப்படும். ஓரளவுக்கு சேர்த்து வச்சிருக்கேன். அது போதாது. பேங்க்ல லோன் கேட்டா... 'வீட்டு பத்திரம் இருக்கா...?' 'நிலத்துப் பத்திரம் இருக்கா'ன்னு கேக்கறாங்க. வீடு, நிலம்ன்னு இல்லாததுனாலதானே கடன் கேக்கறோம்?! உயிரோட இருக்கற மனுஷனை நம்பி கடன் குடுக்கமாட்டாங்களாம். அஃறினைப் பொருளான வீடு, மனை, ஆறு அறிவு இல்லாத ஆடு, மாடு இதையெல்லாம் ஸெக்யூரிட்டியா கேக்கறாங்க. வீட்டுக்கும், மாட்டுக்கும் கடன் குடுக்கறவங்க, மனுஷனுக்கு குடுக்க மாட்டேங்கறாங்களே...''
''அப்படி இல்லை கயல்... கடன் வாங்கறவங்க, முறைப்படி திருப்பிக் குடுக்கணும்ங் கறதுக்காகத்தான் அப்பிடி ஒரு சட்டதிட்டம் வச்சிருக்காங்க. கடன் வாங்கறவங்க எல்லாருமே குடுக்காம விட்டுட்டா ?... பணம், கடனா குடுக்கற பேங்க்கோட நிலைமை என்ன ஆகும்? அதனால அதைக் குற்றம் சொல்ல முடியாது. சில நிபந்தனைகளோட கடன் குடுத்தாத்தான், வாங்கின பணத்தைத் திருப்பிக் குடுக்கற எண்ணம் வரும். குடுக்கறவங்களுக்கும் பாதுகாப்பு...''
''அப்போ...? என்னைப்போல ஏழைகளுக்கு கடன் தேவைப்பட்டா?''
''அதுக்கெல்லாம் கவர்மெண்ட்ல ஏதேதோ திட்டங்கள் இருக்கு. ஆனா... நீ நினைக்கற மாதிரி பெரிய தொகை குடுப்பாங்களா என்னன்னு தெரியலை. சின்னதா ஏதாவது தொழில் ஆரம்பிச்சா குடுப்பாங்கன்னு நினைக்கிறேன். அதைப்பத்தின தகவல்கள் எனக்கு சரியா தெரியலை. அதெல்லாம் போகட்டும், பேங்க் லோன்... அந்த லோன்னு பேசறியே? என்கிட்ட கேக்கணும்ன்னு தோணலையா? என்கிட்ட கேக்கறதுக்கு உனக்கு உரிமை இல்லையா? அந்த அளவுக்கு என்கிட்ட உரிமை எடுத்துக்க மாட்டியா? ஏன் இப்பிடி ஒரு தூரத்தை மெயின்டெயின் பண்ணற? எனக்கு எவ்ளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இருபது வருஷமா உயிருக்குயிரா பழகிக்கிட்டிருக்கோமே... அதை மறந்துட்டு, பேங்க்லோன்... அது... இதுங்கறியே...''
''கோவிச்சுக்காதே சரிதா. நீ சொல்றியே இருபது வருஷமா உயிருக்குயிரா பழகற நட்புன்னு? நாம உயிரோட இருக்கற வரைக்கும் அந்த நட்பும் உயிரோட இருக்கணும். பணம்ங்கறது வலிமை மிக்கதுதான். நான் ஒத்துக்கறேன். ஆனா அதே பணம் நல்லது, கெட்டது ரெண்டுக்குமே தன்னோட வலிமையைக் காட்டும். பூஞ்சோலை போல பூத்துக்குலுங்கற நம்ம நட்புக்கு நடுவுல பணம்ங்கற ஒரு முட்புதர் உருவாக வேண்டாமே...?''
''ஏன் அப்பிடி சொல்ற? திரும்ப குடுக்க முடியலைன்னா நமக்குள்ள பிரச்னை வருமா? உனக்கு பணம் குடுத்துட்டு அதை திரும்ப எதிர்பார்ப்பேனா? தேவை இல்லாத கற்பனை பண்ணிக்கிட்டு என்னோட அன்பை கொச்சைப்படுத்தறியே?... உனக்கே இது சரின்னு தோணுதா? என் கூடப்பிறந்தவ இருந்தா... அவளுக்கு செய்ய மாட்டேனா?...''
பேசிக் கொண்டே போன சரிதாவின் வாயைத் தன் விரல்களால் மூடினாள் கயல்விழி.
''கூடப் பிறந்தவளா இருந்தாலும் சரி... கூடப்பிறக்காமலே கூடப்பிறந்தவ மாதிரி பாசத்தோட பழகற தோழியா இருந்தாலும் சரி... அன்பைக் குடுக்கலாம்... திரும்ப அதே அன்பை வாங்கலாம். ஆனா... பணம்ங்க்ற ஒரு இரும்புத்திரையை நடுவுல போடக்கூடாது. கண்ணுக்குத் தெரியாத அந்தத் திரை, நம்ப மனசையும், உணர்வுகளையும் நமக்குத் தெரிஞ்சே நோக வச்சுடும். இப்ப நான் பணத் தேவையில இருக்கறதுனால அதை மட்டும் நினைச்சு நீ ஈஸியா பேசற. ஆனா நான்? இன்னைக்கு தேவையை மட்டுமில்லாம என் வாழ்நாள் முழுக்க தேவையான உன்னோட நட்பையும், பாசத்தையும் நினைச்சு பேசறேன்...''
''என்ன கயல் நீ... பெரிசா... ராமாயணம் படிக்கற? பண விஷயத்துக்கு இவ்ளவு பேசணுமா? உன்னோட முன்னேற்றம் என்னோட உதவியினால நடக்கக் கூடாதா? அப்பிடி என்ன ஈகோ உனக்கு?''
சரிதா, சற்று கோபத்துடன் கேட்டாள். கயல்விழி, அவளது கன்னத்தில் தட்டினாள்.
''சின்னக் குழந்தை மாதிரி பேசற. எனக்கு ஈகோவும் இல்லை, ஒண்ணும் இல்லை...'' கயல்விழி பேசுவதைக் கவனிக்காதவள் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு, கயல்விழிக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்து கொண்டாள் சரிதா.
கயல்விழி தொடர்ந்து பேசினாள்.
''இதென்ன இது... முகத்தைத் திருப்பிக்கிட்டு... முதுகை காமிச்சுக்கிட்டு? ம்... எனக்கு அவசியமா... அவசரமா... பணம் தேவைப்பட்டா உன்னைத்தவிர வேற யார்க்கிட்ட கேட்கப் போறேன்? எனக்குன்னு இருக்கற ஒரே ஜீவன் நீதான். நீ மட்டும்தான். 'ஹோட்டல்ல டான்ஸ் ஆடறவ'ன்னு உறவுக்காரங்க ஒதுக்கி வச்சுட்டாங்க. என்னோட குடும்பத்தினருக்கு அடுத்து என்னோட உறவு, உயிர், அன்புத் தோழி எல்லாமே நீதான். என்னோட சந்தோஷத்துல கலந்துக்கறவ நீ. துக்கத்துல என்னோட கண்கள்ல்ல இருந்து வர்ற கண்ணீரோட உப்பை சுவைக்கறவ நீ மட்டும்தான். உன்கிட்ட எனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு?
வந்தனா போட்டுக்கற உடுப்பெல்லாம் நீ வாங்கிக் குடுக்கறதுதான். அம்மா கட்டற காட்டன் சேலைகள் எல்லாமே நீ வாங்கிக் குடுக்கறதுதான். இதோ... இந்த மொபைல் ஃபோன் நீ வாங்கிக் குடுத்ததுதான். இந்த ஹேண்ட்பேக் நீ வாங்கிக் குடுத்ததுதான். உரிமை இல்லாமயா இதையெல்லாம் வாங்கிக்கறேன்? பணத்தோட அருமை எனக்குத் தெரியற மாதிரி என்னோட தங்கைக்கும் தெரியணும். நான் எந்த பிஸினஸ் செஞ்சாலும்... அதை பிற்காலத்துல அவ எடுத்து நடத்தணும். குடும்பத்துக்கு நிரந்தரமான வருமானம் வர்றதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணனும். திடீர்னு... என்னால டான்ஸ் ஆட முடியாத நிலைமை ஏற்பட்டா... என்னோட குடும்பம் மொத்தமும் ஆடிப் போயிடும். 'சரிதா அக்கா குடுப்பாங்க, அவங்க எல்லாம் பார்த்துக்குவாங்க' அப்பிடிங்கற அலட்சிய மனப்பான்மை அவளுக்கு உருவாகிடக் கூடாது. பாங்க்ல லோன் இருந்தாத்தான்... அதை அடைக்கணும்ங்கற பொறுப்பு வரும். அந்தப் பொறுப்பை அவ உணர்ந்தாத்தான் கடினமா உழைப்பா. பணத்தோட அருமையும் தெரியும். நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய விஷயங்களைப் பத்தி தெளிவா சிந்திச்சுதான் பேசறேன். நீ சொல்ற மாதிரி எனக்கு ஈகோல்லாம் கிடையாது. என் செல்லம் இல்ல நீ... புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்... ''
கயல்விழி கொஞ்சியும், கெஞ்சியும் பேசுவதைக் கேட்ட சரிதா நெகிழ்ந்தாள். உள்ளம் மகிழ்ந்தாள். கயல்விழியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
''நான் இங்கே... இன்னிக்கு உன்னைப் பார்க்க வந்ததுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு சரிதா. ரெண்டு நாளா மன உளைச்சல். உன்கிட்ட பேசினாத்தான் கொஞ்சமாவது மனசு அமைதியா இருக்கும்ன்னுதான் உன்னைப் பார்க்க வந்தேன்...''
''மன உளைச்சலா? என்ன ஆச்சு கயல்?''
''முந்தா நாள் நைட், டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சதும் ஒருத்தன் வந்து என்னைப் பார்த்தான். என்னோட டான்ஸை புகழ்ந்தான். அதுக்கப்புறம் வேற மாதிரி அசிங்கமா பேச ஆரம்பிச்சுட்டான். அவன் ஒரு 'பிம்ப்'...''
''அடப்பாவி... சும்மாவா விட்ட அவனை?''
''நல்லா திட்டி அனுப்பிச்சுட்டேன். ஆனா... என்னை எவ்ளவு கீழ்த்தரமா நினைச்சிருந்தா அவன் அப்பிடி கேட்டிருப்பான்ங்கற நினைப்பு என் மனசை புண்ணாக்கிடுச்சு. அவமானமா இருக்கு... சில நேரங்கள்ல்ல ஏன்தான் 'பெண் ஜென்மமா பிறந்தோமோ'ன்னு இருக்கு...''
''பொண்ணா பொறக்கறதுக்கு பெரிய தவம் செஞ்சிருக்கணும்ன்னு சொல்லுவாங்க கயல். நீ பொண்ணா பிறந்ததுனாலதான் உன் அம்மா, தங்கச்சியை அன்போட பார்த்துக்கற. அவங்களுக்காக அக்கறையா உழைக்கற. பையனா இருந்தா... பொறுப்புகளை சமாளிக்கப் பயந்துக்கிட்டு அலட்சியமா இருந்துப்பாங்க. மானப்பிரச்னை. கௌரவக் குறைவுன்னு நேரிடும் போதுதான் பொண்ணா பிறந்ததுக்காக வருத்தப்பட வேண்டியதிருக்கு. அது சரி, அந்த ஆள் யார், அவனோட பேர் என்ன?''
''எதுவும் தெரியாது. கால்டேக்ஸியில ஏறப்போகும்போது என்கிட்ட வந்து பேசினான். அவனோட பேச்சு, தரக்குறைவா இருக்கறது தெரிஞ்சதும் நான் அவனை நல்லா திட்டிட்டேன். பெண்களை போகப் பொருளா நினைச்சு, ஆண்களோட சல்லாபத்துக்கு விலை பேசற அவனைப் போல பொறுக்கிகளை நிக்க வச்சு ஷுட் பண்ணனும்... தங்களோட கற்பை விலை பேசற பெண்களை விலைமாது, விபச்சாரி, தேவடியாள்ன்னு இழிவா பேசறாங்க. அப்பிடிப்பட்ட பெண்கள்ட்ட சுகம் அனுபவிச்சுட்டுப் போற ஆண்களுக்கு மட்டும் இந்த சமூகம் எந்த ஒரு இழிவான அவச் சொல்லும் குடுக்காதாம். இது என்ன நியாயம்? விபச்சார கேஸ்ல பிடிபடற பெண்கள் மட்டும்தான் தண்டனை அனுபவிக்கறாங்க. இருட்டில நடந்த அவங்களோட அவலத்தைப்பத்தி ஊடகங்கள்ல்ல வெளிச்சம் போட்டுக் காட்டுறாங்க. ஆணுக்கு ஒரு நீதி, பொண்ணுக்கு ஒரு நீதியாம்...''
சூடாகப் பேசிக் கொண்டிருந்தான் கயல்விழி. குறுக்கிட்டு பேசினாள் சரிதா.
''சமீப காலமா பெண்களும் 'நிறைய படிச்சுட்டோம், சுயமா சம்பாதிக்கறோம்'ங்கற அகம்பாவத்துல முறை தவறி, நெறி தவறி நடந்துக்கறாங்களே. அது மட்டுமில்ல... அம்மா... அப்பா... பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குள்ள காதல்ங்கற பிரச்னையில மாட்டிக்கறாங்க...!''
''காதல்... பிரச்னையா?'' கயல்விழி, தன் மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்டாள்.
''ஆமா. காதலிக்கறவன் நல்லவனா கெட்டவனான்னு தெரிஞ்சுக்கற வயசும், பக்குவமும் வர்றதுக்குள்ள காதலிக்கறது பிரச்னைதான். இனிக்க இனிக்க பேசறதைப் பார்த்து 'இவன் நம்ப மேல உயிரையே வச்சிருக்கானே'ன்னு முழுசா நம்பிடறாங்க. அவனும் 'என் உயிரே', 'தேனே', 'மானே'ன்னு உருக வைக்கற மாதிரி பேசறான். அதில மயங்கிப் போய் ஏமாந்து சீரழியற பெண்கள் எத்தனையோ பேர்!...''
சரிதா, தன்னை நினைத்து, தனது தவறான காதலை நினைத்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள்.
''சரி... சரி... உன்னோட 'மூடை' நான் ரொம்ப கெடுக்கறேன்னு நினைக்கறேன். வேற பேச்சு பேசலாம். இன்னிக்கு நைட்டுக்கு என்ன சமையல்?''
''முள்ளங்கி பரோட்டா, தயிர் பச்சடி. அபிலாஷ்க்கு முள்ளங்கி பரோட்டான்னா போதும். டயட் கண்ட்ரோல் எதுவும் பார்க்காம நிறைய சாப்பிடுவாரு. நீயும் அபிலாஷ் வந்ததும் சாப்பிடு.''
''ஓ... சாப்பிடலாமே...''
அபிலாஷ் வரும்வரை இருவரும் அரட்டை அடித்து, கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர்.
அபிலாஷ் வந்தபிறகு மூவரும் சந்தோஷமாக, சிரித்து பேசியபடி சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் சரிதாவும், அபிலாஷும் சேர்ந்து, கயல்விழியை காரில் அவளது வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.