உன் மனதை நான் அறிவேன் - Page 23
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
மெரீனாவில் ஆள் குறைவான இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் சுதாகரும், பாவனாவும்.
''ஒரு பெண் என்னைக் காதலிச்சா. நானும் அவளைக் காதலிச்சேன். ஆனா... அவ என்னை நம்பவச்சு கழுத்தறுட்டா...''
''கழுத்தறுத்தது நீயா... அந்தப் பொண்ணா? கழுத்தறுக்கறது உனக்கு கை வந்த கலையாச்சே?..''
''குறுக்கே பேசாத பாவனா. அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கா...''
''அதனால என்ன? கழுத்துல தாலி விழுந்தப்புறம் அவ வழுக்கி விழுந்தாத்தான் தப்பு... சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கறதுல நீ ஏன் குறுக்கிடணும்?''
''என்னோட காதலுக்குக் குறுக்கே வந்த அந்தக் கல்யாணம் ஜெயிக்கக் கூடாது. அந்தக் கல்யாணத்தை பண்ணிக்கிட்ட அவளும் தோல்வி அடையணும்.''
''அவ... ஏன் உன்னை விட்டுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ன்னு அவளை கேட்டியா?''
பாவனா கேட்டதும் சுதாகரின் முகம் மாறியது. அவளது அந்தக் கேள்விக்கு பதில் கூறுவதற்கு திணறினான். அதன்பின் சமாளித்து பேசினான்.
''அவளை ஏன் நான் கேட்கணும்? பெரிய பணக்காரனா... புகழ் பெற்றவனா கிடைச்சதும் என்னைக் கழட்டிவிட்டுட்டா... காரணம் தெரிஞ்சே அவளிடம் போய் நான் எதுக்கு கேட்கணும்?''
''பணத்துக்காகத்தான் வேற ஒருத்தனை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ன்னு நீ சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது. உன்னோட தவறான நடவடிக்கைகள் தெரிஞ்சு... சரியான முடிவு எடுத்துத்தான் அவ வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கணும்... கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்தப் பொண்ணு... நல்லபடியா வாழட்டுமே...''
''அவ நல்லபடியா வாழறதுல எனக்கு ஒரு நல்ல லாபம் வேணுமே...''
''அதுக்காக...?!''
''அதுக்காக... அவளை மிரட்டி பணம் கேட்டுக்கிட்டிருக்கேன்...''
''மிரட்டி உருட்டறதெல்லாம் உனக்கு கை வந்த கலைதான்... அது எனக்குத் தெரியும்... இதில என்னை ஏன் இழுக்கற? இந்த ப்ளாக் மெயில் மோசடிக்கெல்லாம் நான் வர மாட்டேன்...''
''அந்த வேலையில உன்னை நான் இழுக்கலை... அவ குடுக்கப் போற பணம் மட்டும் எனக்கு போதாது. அவளுக்கு நான் குடுக்கப் போற அதிர்ச்சி வைத்தியத்துல அவ மனசு... வேதனையில துடிக்கணும். அவ கிடைக்காம... என் நெஞ்சு எரியறது மாதிரி அவளோட நெஞ்சும் பல நூறு மடங்கு எரியணும். அதுக்காக ஒரு திட்டம் தீட்டி வச்சிருக்கேன்...
''அப்போ? அவளை பழி வாங்கற படலம்தான் நீ என்னை நடிக்கச் சொல்ற டிராமாவா?''
''புத்திசாலி! புரிஞ்சுக்கிட்டியே...''
''உன்னோட புத்தி எனக்குத் தெரியாதா? சரி... நான் என்ன பண்ணணும் சொல்லு...?''
''அவளோட வீட்லதான் நீ நடிக்கணும். பயப்படாதே... கச்சிதமா ப்ளான் போட்டிருக்கேன். நான் பழி வாங்க நினைக்கற அந்தப் பொண்ணு பேரு சரிதா. பிரபல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷேரட மனைவி...''
''வாவ்... அபிலாஷா... ஹய்யோ... அவரோட ஸாங்க்ஸ்ன்னா எனக்கு உயிர்... அவரோட எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்...''
உணர்ச்சி வசப்பட்டு பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த பாவனாவை அடக்கினான் சுதாகர்.
''வாயை மூடு. அவனோட ம்யூஸிக்கா இப்ப முக்கியம்? சரிதாவுக்கு அடிக்கடி ப்யூட்டி பார்லர் போற வழக்கம் உண்டு. நீ ஒரு பியூட்டிஷியனா அவளோட வீட்டுக்குள்ள நுழையணும். அதுக்காக ப்யூட்டி கோர்ஸ் சேர்ந்து படிச்சுக்கோ. அது மூலமா அவளைப் பிடிச்சுக்கோ. வீடு வீடா போய் சேலை, சோப், சப்பாத்தி மேக்கர்ன்னு விக்கப் போறாங்கள்ல்ல, அது மாதிரி வீடு தேடி வந்து ப்யூட்டி ட்ரீட்மெண்ட் குடுக்கறதா சொல்லி அவளை ஃப்ரெண்ட் புடிச்சுக்கோ, அவ கூட நல்லா பழகி அவளோட புருஷன் அபிலாஷைப் பத்தி தப்பா பேசி அவ மனசைக் கலைக்கணும். அது மூலமா அவளோட நிம்மதியைக் குலைக்கணும். அவளும், அவ புருஷனும் பிரியணும். என்னைவிட்டு பிரிஞ்சு போன அவளை விட்டுட்டு அவளோட புருஷன் பிரியணும். அவளை விட்டு நான் பிரிஞ்சு துடிக்கற மாதிரி அவ, அவளோட புருஷனை பிரிஞ்சு கஷ்டப்படணும். அதுக்காக நீ தத்ரூபமா நடிக்கணும்.''
''நடிச்சா...?''
''நடிச்சா... உனக்கு நிறைய பணம் கிடைக்கும்...''
பாவனா அவசரமாய் குறுக்கிட்டாள்.
''பணமும் கிடைக்கும். கூடவே பெரும்பாவமும் கிடைக்கும்...''
''கொன்னா பாவம் தின்னா தீரும்.. நான் டைரக்ட் பண்ற அந்த நாடகத்துல நீ திறம்பட நடிச்சு, நான் சொல்றபடி நடந்துட்டா. நீ நினைச்ச மாதிரி லைஃப்ல ஸெட்டில் ஆகிடலாம். இந்த சந்தர்ப்பத்தை விட்டா, நீ எப்ப... எப்பிடி... இவ்ளவு பெரிய தொகையை சம்பாதிக்கறது? ஸெட்டில் ஆகறது... யோசிக்காதே. நீ மறுத்தா... இந்த வேலையை செய்றதுக்கு நீ இல்லைன்னா... இன்னொருத்தி. நீ ஒருத்தி மாட்டேன்னு சொல்றதுனால நான் சும்மா இருந்துட மாட்டேன். எப்பிடியும் அவளை பழி வாங்கிட்டுதான் சிங்கப்பூருக்கு ஃப்ளைட் ஏறுவேன்...''
''சிங்கப்பூருக்கு போவியோ... சிறைச்சாலைக்கு போவியோ தெரியலையே...''
''யம்மா... தாயே. ஆளை விடு. இவ்ளவு சந்தேகப்பட்டின்னா வேலைக்கு ஆகாது. நான் வேற ஆளை பார்த்துக்கறேன்...''
''இ... இ...இல்லை சுதாகர். நானே இதுக்கு சம்மதிக்கறேன். ஆனா... நான் கேட்டபடி அட்வான்ஸ் தொகையை இப்பவே குடுத்துடு...''
''நீதான் நேத்தே சொல்லிட்டியே அட்வான்ஸ் வேணும்ன்னு. கையோட கொண்டு வந்திருக்கேன்.''
அவன் கொடுத்த அட்வான்ஸ் தொகை, அவளது வாயை அடைத்தது.
''இந்தா... இது உன்னோட ப்யூட்டி கோர்ஸ்க்கு கட்டற பணம். நல்ல பார்லரா பார்த்து ஏனோ தானோன்னு கத்துக்காம ஒழுங்கா கத்துக்க. சரிதாவை மயக்க வேண்டியது ப்யூட்டி ட்ரீட்மெண்ட்லதான்...''
''சரி சுதாகர். நான் தீர்மானிச்சுட்டேன். உன்னோட நாடகத்துல நடிக்கறதுக்கு தயாராயிட்டேன். அதுக்குரிய முதல் கட்டமா இன்னிக்கே ப்யூட்டி பார்லருக்குப் போய் ப்யூட்டி கோர்ஸ் சேர்ந்துடறேன்.''
''வெரி குட். வா... உன்னை நானே உன் வீட்ல கொண்டு போய் விட்டுடறேன்.''
''நான் வீட்டுக்கு போகலை. நேரே ப்யூட்டி பார்லர் போகப் போறேன். ஆட்டோவுல போய்க்கறேன்.''
''ஓ.கே.'' என்ற சுதாகர், காரில் ஏறி கிளம்பினான். காலியாக வந்து கொண்டிருந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி, ஏறிக் கொண்டாள் பாவனா.