உன் மனதை நான் அறிவேன் - Page 35
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10468
அபிலாஷிற்காக காத்திருந்த சரிதா. அவன் வருவதற்கு மிகவும் தாமதமானபடியால் பலமுறை அபிலாஷின் மொபைலில் அழைத்தாள். அவனது மொபைலை அவன் எடுக்கவில்லை. எனவே உள்ளுக்குள் கோபம் கொந்தளிக்க, அவனுக்காகக் காத்திருந்தாள்.
அபிலாஷின் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவளது உள்ளம் படபடத்தது. சந்தேகம் துளைத்து எடுத்துக் கொண்டிருந்த அவளது மனது அமைதி அற்றுப் போனது.
வாசல் கதவை திறந்து வைத்துவிட்டு ஹாலில் உள்ள ஸோஃபாவில் வந்து உட்கார்ந்தாள். அபிலாஷ் வந்தான்.
''ஸாரிடா சரித். என்னோட மொபைலை 'ஸைலன்ட் மோட்'ல போட்டிருந்தேன். என்னோட முதல் பட ப்ரோட்யூஸர் பழனிவேல் ஸார் திடீர்னு கூப்பிட்டார். புதுசா படம் பண்றாராம். நான்தான் ம்யூஸிக் பண்ணனும்ன்னு சொல்லி, இப்ப உடனே பார்த்து பேசணும்ன்னார். அதனால மாயா இன்ட்டர்நேஷனல் ஹோட்டல்ல ஒரு மீட்டிங் போட்டோம்...''
''மீட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற வழியில மொபைல் ஃபோன்ல என்னைக் கூப்பிட்டிருக்கலாமே...''
''சார்ஜ் இல்லாம போச்சும்மா. அதனாலதான் வேகமா காரை ஓட்டிட்டு வந்தேன்.''
''எங்கே?... உங்க மொபைலை காட்டுங்க பார்க்கலாம்...''
''நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா?...''
சரிதா குதர்க்கமாகக் கேட்பதை அப்போது புரிந்து கொள்ளாத அபிலாஷ், சிரித்தபடியே கேட்டான். சமாதானமாகாத சரிதா, மேலும் தன் கேள்விக் கணையைத் தொடர்ந்தாள்.
''பழனிவேல் ஸாரை பார்க்கப் போறதுக்கு முன்னாடி எனக்கு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே?...''
''ஏன்? இப்ப... என்ன ஆச்சு? அதான் வந்துட்டேன்ல? நீ காத்துக்கிட்டிருப்பியேன்னு வேக வேகமா வந்தேன்... நீ என்னடான்னா... கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிட்டிருக்க?''
''உங்களுக்கு ஏன் கோபம் பொத்துகிட்டு வருது?...''
''பின்ன என்ன? உனக்காக பதற்றமா ஓடி வந்தா... சொன்னதை புரிஞ்சுக்காம அநாவசியமான கேள்வி கேட்கற?''
''அவசியமான கேள்விதான் கேட்கறேன். என்னிக்காவது இப்பிடி மொபைலை எடுக்காம இருந்திருக்கீங்களா? இப்ப என்ன புதுசா?...''
''என்னோட சூழ்நிலையை சொன்னதுல என்ன புதுசு? நீதான் புதுசு புதுசா கேள்வி கேட்டுக்கிட்டிருக்க... உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி குடைஞ்சு எடுக்கற?''
''எனக்கு ஒண்ணும் ஆகலை. உங்களுக்குதான் என்னமோ ஆயிடுச்சு...''
''நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீதான் மாறிக்கிட்டிருக்க...''
''நீங்க மாறிடக் கூடாதே...'' இதைக் கூறும்போது சரிதாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இதைக் கண்ட அபிலாஷ் பதறினான்.
''என்னம்மா சரித்... ஏன் என்னென்னமோ பேசற? மனசு சரி இல்லையா? எங்கயாவது வெளியில போய்ட்டு வந்திருக்கலாம்ல? ஏன் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கற? கொஞ்ச நாளாவே நீ இப்பிடித்தான் இருக்க... ஏன்னுதான் எனக்கு புரியலை...''
''அதெல்லாம் ஒண்ணும் இல்லை. பழனிவேல் ஸாரை எந்த ஹோட்டல்ல சந்திச்சதா சொன்னீங்க?''
''மாயா இன்ட்டர்நேஷனல் ஹோட்டல். நான்தான் ஏற்கெனவே சொன்னேனே.''
''அவர் என்ன சொன்னார்? அவரோட படத்துக்கு டேட்ஸ் குடுத்துட்டீங்களா?...'' சந்தேகங்கள் மீண்டும் குடைய கேள்விகளைத் தொடர்ந்தாள் சரிதா. ஆனால் அபிலாஷ், அவள் மனநிலை சரியாகி, சாதாரணமாக கேட்கிறாள் என்று எண்ணி சமாதானம் அடைந்தான்.
தயாரிப்பாளர் பழனிவேல் பேசியதையெல்லாம் அவளிடம் கூறினான்.
இதயத்திற்குள் புதைந்திருந்த சந்தேகம் துளி கூட மாறாமல் அவன் கூறியதை ஏனோதானோவென்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
''பசிக்குதும்மா. சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே...''
இருவரும் சாப்பிடும் அறைக்கு சென்றனர். உணவு வகைகளை எடுத்து, வைத்து பரிமாறிக் கொண்டிருந்த சரிதா, சிந்தனை வலைக்குள் சிக்கிக் கொண்டாள். அவளுடைய குழம்பிய மனநிலை ஏதும் புரியாத அபிலாஷ், வழக்கம் போல கலகலவென பேசிக் கொண்டிருந்தான்.
''கயல்விழி ஃபோன் பண்ணினா...''
''ரெக்கார்டிங்ல இருந்திருப்பீங்களே?! உங்க மொபைலை ஆஃப் பண்ணிதானே வச்சிருப்பீங்க?''
''டீ ப்ரேக்ல கூப்பிட்டா பேசுவேன்னு அவளுக்குத் தெரியுமே... அதனால டீ டைம்ல கூப்பிட்டா... நீ என்னவோ மூட் அவுட் ஆகி இருந்தியாம்...''
''நான் எப்பவும் போலத்தான் இருந்தேன்...''
''எனக்கென்ன தெரியும்? அவ சொன்னதை உன்கிட்ட சொன்னேன்...''
''அது சரி... இன்னிக்கு என்ன ரெக்கார்டிங்?''
''இன்னிக்கு ஹீரோயின் பாடற பாடல் ரிக்கார்டிங். கோரஸ் கூட வந்திருந்தாங்க... கோரஸ் பாட வந்த பொண்ணுங்க என்னைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எல்லாருமே திறமையா பாடறாங்க... அந்தப் பொண்ணுங்கள்ல்ல ஒருத்திக்கு குடும்பத்துல ரொம்ப கஷ்டமாம். அவளுக்கு உதவி செய்யணும்னு தோணுச்சு. கையில செக் புக்தானே இருந்துச்சு. அதனால ரெண்டாயிரம் ரூபாய்க்கு செக் போட்டு குடுத்தேன்...''
''அவ பேரு என்ன?''
''பேரெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியாதும்மா.''
''நல்ல வேளை... என்னோட பேரை மறந்துடலியே?!...''
''ஏய்? என்ன குறும்பா?''
''அ... அதெல்லாம் ஒண்ணும் இல்லை...''
''கயல்விழி சொன்னது சரியாத்தான் இருக்கு நீ ஏதோ மூட் அப்ஸெட் ஆகியிருக்கே...''
''கயல்விழி சொன்னா எல்லாமே சரியாத்தான் இருக்கும். உங்களுக்கு...''
''எனக்கு மட்டுமா? உனக்கும்தான். கயல்விழி சொல்றதைத்தானே நீ கேட்ப... உங்க ஃப்ரென்ட்ஷிப்பை பார்த்து நானே பிரமிச்சுப் போயிருக்கேனே...''
''.............''
''என்ன சரிதா? எதுவும் பதிலே சொல்லமாட்டேங்கற? உனக்கு என்ன ஆச்சு?''
''எனக்கு எதுவும் ஆகிடக் கூடாதேன்னுதான்....''
''நீ பேசறது ஒண்ணுமே புரியலை...''
''எனக்கு இப்பத்தான்ங்க புரிய ஆரம்பிச்சிருக்கு....''
''எதைப் பத்தி...?''
''இந்த உலகத்தைப் பத்தி?''
''அடேங்கப்பா உலகத்தைப் பத்தி புரிஞ்சுக்கிட்டியா? நீயா? நீ ஒரு வெகுளி...''
''பார்க்கறதுக்குதான் நான் வெகுளி. வெகுண்டு எழுந்தா வெடிகுண்டுதான்...''
''டி.வி.யில ஏதாவது பழைய தமிழ்ப்படம் பார்த்தியா? டையலாக்கெல்லாம் ஒரு டைப்பா இருக்கு?'' சிரித்தான் அபிலாஷ்.
''யார் என்ன டைப்ன்னு யோசிச்சு யோசிச்சே எனக்கு பொழுது போகுது...''
''யார் என்ன டைப்பா இருந்தா நமக்கென்னம்மா. உனக்கு நான்; எனக்கு நீ... நாம எப்பவும் இதே மாதிரி அன்பா இருந்தா அது போதும்...''
''ஆமாங்க. எனக்கு நீங்கதான் எல்லாமே. உங்களுக்கும் எல்லாமே நானாத்தான் இருக்கணும்.''
''அப்பிடித்தானே இருக்கோம்?''
''இன்னிக்கு வரை இருக்கோம். என்னிக்கும் இருப்போமா?''
''என் உயிர் உள்ள வரை நாம இப்பிடித்தான் இருப்போம். நீதான் என் உயிர், நீ மட்டுமே என் உயிர்...''
அபிலாஷ், சரிதாவை இறுக அணைத்தபடி கூறினான். ஆனால் அந்த அணைப்பில் லயித்துப் போகாமல் பாவனா கூறிய அதே வார்த்தைகளை அபிலாஷ் கூறுகிறானே என்று யோசனைக்குப் போனாள்.
''என்ன சரிதா... என் தோள்லயே தூங்கிட்டியா?''
சமாளித்தபடி தன் யோசனையிலிருந்து மீண்டாள் சரிதா. இருவரும் படுக்கையறைக்கு சென்றனர்.
அபிலாஷ் தூங்கிய பிறகும் சரிதாவிற்கு தூக்கம் வரவில்லை.
'கயல்விழி எதற்காக இவருக்கு போன் போடணும்? கோரஸ் பாட வந்த பொண்ணுங்க கிட்ட சிரிச்சிப் பேசி இருப்பாரோ? மனசு சபலப்பட்டுத்தான் அந்தப் பொண்ணுக்கு செக் குடுத்திருப்பாரோ? ப்ரொட்யூஸர்ட்ட பழனிவேல்ட்ட பேசிக்கிட்டிருந்ததா சொன்னது நிஜமா? பாவனா சொல்ற மாதிரி, ஆண்கள் ஒரு வினாடி நேரத்துல சபலப்பட்டுருவாங்களோ? அபிலாஷேரட இந்த முகம், இந்த உடல், ஸ்பரிஸம் அன்பு இவை எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தம். அவருக்கு நான்; எனக்கு அவர். நடுவுல வேற யாரும் வரக்கூடாது. வரவிட மாட்டேன். ஜாக்கிரதையா இருக்கணும். கயல்விழி என்னைவிட அழகு. ச்ச... என்னோட கயல்விழியையா நான் இப்பிடி நினைக்கிறேன்? நினைச்சதுல என்ன தப்பு? அவளைவிட என்னோட கணவர் எனக்கு முக்கியமாச்சே? அவர் எனக்கு மட்டுமே வேணும்ங்கற உணர்வுலயும் உரிமையிலயும் நான் போடற வேலி... முள் வேலி இல்லை... முன் ஜாக்கிரதை வேலி. என்னோட ஃப்ரெண்ட் என்னிக்கும் எனக்கு ஃப்ரெண்ட்தான். அவளை இவர்கூட பழக விடாம பார்த்துக்கறது என்னோட எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடுதானே? அது சரி... ஒரு கயல்விழியை அவர் கண்ல பட விடாம, அவர்கூட பழக விடாம தடை போட்டுக்க முடியும். ஆனா இவரோட வெளி உலக வாழ்க்கையில இவர்கூட எந்தப் பெண்ணுமே... பழகாம என்னால பாதுகாத்துக்க முடியுமா?'
ஒரு திகில் உணர்வு அவளது நெஞ்சிற்குள் எழுந்து, அவளது உள்ளம் முழுவதும் சூழ்ந்து கொண்டது. பாவனா பற்ற வைத்த சந்தேகக் கனல், அவளது மனதில் பெரு நெருப்பாய் எரிந்தது. எரிமலையாய் பொங்கியது.
அருகில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அபிலாஷைப் பார்த்தாள். ஒரு நடிகருக்குரிய சிறப்பான முக அமைப்பும், இசை எனும் தெய்வீகத்தில் சதா சர்வமும் ஈடுபட்டுக் கொண்டிருந்த படியால் அவனது முகத்தில் ஏற்பட்டிருந்த தேஜசும்... தினம் தினம் பார்க்கும் சரிதாவையே காந்தம் போல் இழுத்தது.
'இவர் என்னுடையவர். என்னுடையவர் மட்டுமே. வேற எந்தப் பொண்ணோட மூச்சுக்காத்து கூட இவர் மேல படக் கூடாது. யாரும் இவரோட அழகை ரஸிக்கக் கூடாது. இந்த முகம்... இந்த... உடல்... இந்த... அடர்ந்து கிடக்கும் அழகான தலைமுடி... ஒவ்வொன்றும் எனக்கு மட்டுமே சொந்தம். எண்ணற்ற நினைவலைகள், புயல் கண்ட கப்பல் போல அவளது உள்ளத்தில் ஆடியது. அபிலாஷை நெருங்கி அணைத்துக் கொண்டாள். அவளது ஸ்பரிஸத்தில் லேஸாக கண் விழித்தான் அபிலாஷ்.
''என்னம்மா... நீ இன்னும் தூங்கலியா...'' கேட்டபடி அவளை இறுக அணைத்துக் கொண்ட அபிலாஷை மீண்டும் தூக்கம் அணைத்துக் கொண்டது.
பெருமூச்சு விட்டபடி புரண்டு புரண்டு படுத்தாள் சரிதா.
'இவர் சொன்ன காரணம் உண்மையாத்தான் இருக்குமா? தயாரிப்பாளர் பழனிவேலை சந்தித்து பேசியது நிஜமாக இருக்கக்கூடும். ஆனால் அத்தனை நேரம் அவருடன்தான் அபிலாஷ் இருந்திருப்பாரா? பழனிவேல் ஸாருக்கு ஃபோன் செய்து சாமர்த்தியமாக பேசி உண்மை விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா? தற்செயலாக நான் அவருடன் ஃபோனில் கேட்ட விபரங்களை அபிலாஷிடம் அவர் கூறிவிட்டால்? இன்னிக்கே நான் கேட்ட கேள்விகளுக்கு அபிலாஷ் கோவிச்சுக்கிட்டார். நான் சந்தேகப்படுவதை அப்பட்டமாக அபிலாஷ் புரிந்து கொண்டால்?...'
இவ்விதம் நீண்ட நேரம் யோசித்ததையே திரும்பத் திரும்ப யோசித்தபடி தூக்கமின்றித் தவித்தாள் சரிதா.
தூக்கக் கலக்கத்தில், பழக்க தோஷமாக சரிதா மீது கையைப் போட்ட அபிலாஷின் கையை இறுகப் பற்றிக் கொண்ட சரிதா, தன் கண்களையும் இறுக மூடினாள்.
'இவரோட இந்தக் கை, என் உடலை மட்டுமே தீண்டும் கையா? அல்லது பல பெண்களை அணைத்த கையா? பாவனா சொன்னது போல ஆண்களில் யாருமே உத்தமர்கள் இல்லையா? இதைப் பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் பதறுகிறதே... என் இதயம் தாறுமாறாய் துடிக்கின்றதே... கடவுளே... நான் நினைப்பது சரியா? தப்பா? என் கணவர் அபிலாஷ் எனக்கு மட்டுமே சொந்தமானவரா? அல்லது வேறு பலருக்கும் தன்னைக் கொடுத்தவரா? அவளது உள்ளம் புலம்பியது. தூக்கமின்மையால் அவளது இரவு மிகவும் நீண்டது. விடியும் பொழுதில்தான் அவளையும் அறியாமல் அவளது விழிகள், தூக்கத்தைத் தழுவின.