உன் மனதை நான் அறிவேன் - Page 32
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10468
அடிக்கடி சரிதாவின் வீட்டிற்கு வந்து, அவளுக்கு அழகுப் பராமரிப்பு செய்வது மூலமாக சரிதாவின் மனதில் சந்தேகத் தீயை ஊதி... ஊதி... பெருக்கினாள் பாவனா. அந்தத் தீ... பெரு நெருப்பாகப் பற்றிக் கொண்டது சரிதாவின் இதயத்தில்.
அபிலாஷ் யாருடன் பேசினாலும் அவளுக்கு சந்தேகம் தோன்றியது. 'இப்பிடி இருக்குமோ.... அப்பிடி இருக்குமோ' என்று யோசித்தாள். தெளிந்த நீரோடை போலிருந்த அவளது மனநிலை, கலங்கிய குட்டையாகிப் போனது.
எந்த நேரமும் இதைப் பற்றிய சிந்தனையிலேயே உழன்றாள். பாவனா வீசிய தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீனாய் சிக்கிக் கொண்டாள் சரிதா. தேவையற்ற சந்தேகப் புயல் வீசிக் கொண்டிருந்த சரிதாவின் கவனத்தைக் கலைத்தது அவளது மொபைலில் ஒலித்த அபிலாஷின் இசை அமைப்பில் உருவாகியிருந்த பாடல்.
மொபைலை எடுத்து சரிதாவிடம் பேசினான் அபிலாஷ்.
''ஹாய் சரித்... டார்லிங்... நான் ஸ்டூடியோவுல இருந்து கிளம்பிட்டேன். இதோ வந்துடறேன்...''
''சரிங்க...''
''என்ன? தூக்கக்கலக்கமா?...''
''இல்லையே?..''
''சரிம்மா. நான் வந்துடறேன்.''
''சரிங்க'' என்ற சரிதா மொபைலின் வாயை அடைத்தாள்.