உன் மனதை நான் அறிவேன் - Page 30
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
சதா சர்வ காலமும் 'பணம், பணம்' என்று பறக்கும் சுதாகர், நேர்மையற்ற வழிகளில் பணம் சம்பாதிப்பதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தான்.
குடும்பத்தினர்க்கு செய்ய வேண்டிய கடமைகளுக்காக பணத் தேவையில் இருந்த பாவனா, சுதாகர் காட்டிய நேர்மையற்ற வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். இருப்பினும் அவளது மனசாட்சி, முள்ளாகக் குத்தியது.
'இந்த ஒரு முறைதானே. இதன் மூலம் எனக்கு தேவையான பணம் கிடைச்சுடும். அதுக்கப்புறம் மிக நேர்மையாக, உண்மையாக ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது கடை ஆரம்பிச்சு நல்லபடியாக சம்பாதிச்சு, சேர்த்து வச்சு எதிர்காலத்தை வளமானதா உருவாக்கிக்கணும்.' முள்ளாக உறுத்திய மனசாட்சியிடம் பேசிக் கொண்டாள் பாவனா. அன்று அவளை சந்திப்பதாக சுதாகர் கூறி இருந்தான். எனவே அவனுக்காக ஒரு ஐஸ்க்ரீம் கடையில் காத்திருந்தாள் பாவனா. சுதாகர் வந்தான். இருவரும் பேச ஆரம்பித்தனர்.
''என்ன விஷயம்? சரிதா வீட்டுக்கு அடிக்கடி போறதா சொல்றியே? ஏதாவது பலன் இருக்கா?..''
''உனக்கு எப்பவும், எதிலயும் நம்பிக்கையே கிடையாது. என்னமோ 'உடுப்பி ஹோட்டல் போய் சாப்பிட்டியா? எப்பிடி இருந்துச்சு'ன்னு கேக்கற மாதிரியில்ல கேக்கற? ஒரு பெண்ணான நான் இன்னொரு பெண்ணோட வீட்டுக்குள்ள நுழைஞ்சு, அவளோட மனசை மட்டுமில்ல... அவளோட வாழ்க்கையையே கெடுக்கற மாதிரி நாடகமாடறது என்ன லேஸான விஷயமா?..''
''லேஸான விஷயமோ... கஷ்டமான விஷயமோ... அதுக்காக நான் உனக்கு குடுக்கற பணம்... குடுக்கப் போற பணம்... கொஞ்ச நஞ்சமில்லை... அது... தெரியுமில்ல?!''
''எப்பப் பார்த்தாலும் பணம் பணம்ன்னு அதைப் பத்தியே பேசி என்னோட வாயை மூடிடலாம்ன்னு நீ நினைக்கற. 'நீ செய்றது பெரிய தப்பு... கொடிய பாவம்'ன்னு என்னோட மனசாட்சி இடிச்சுக் காட்டுதே... அந்த மனசாட்சியை உன்னால மூட முடியுமா?''
''சரி... சரி... வேலை செஞ்ச விஷயத்தைப் பத்தி பேசு...''
''சரிதா மேடம்க்கு கயல்விழின்னு ஒரு ஃப்ரெண்ட் இருக்காங்க...''
''என்ன சொன்ன? கயல்விழியா?!''
''ஆமா...''
''அந்த கயல்விழி ஒரு டான்ஸரா? அதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்ல ஆடற டான்ஸரா?''
''ஆமா. உனக்கு அவளைத் தெரியுமா? அதாவது...''
''நீ நினைக்கற மாதிரி அவ ஒரு இரவுப் பறவை இல்லை. இரவு நேரத்துல டான்ஸ் மட்டும் ஆடற மயில்...''
''பின்ன எப்பிடி அவளைத் தெரிஞ்சு வச்சிருக்க?''
''அவளோட டான்ஸை 'வெண்ணிலா ஹோட்டல்'ல பார்த்தேன். பெரிய பெரிய புள்ளிகள், எல்லாம் அவளோட அழகையும் உடம்பையும் விலை பேசினாங்க. எனக்கும் பெரிய அமௌண்ட் தர்றதா சொன்னாங்க. அதனால அவகிட்ட போய் கேட்டுப் பார்த்தேன். முகத்தில அடிக்கற மாதிரி கோபமா பேசிட்டா. அந்த கயல்விழி, இந்த சரிதாவுக்கு ஃப்ரெண்டா? அப்பிடின்னா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுடலாம்ன்னு சொல்லு...''
''ரெண்டு மாங்காயோ? மூணு மாங்காயோ? உன்னோட நாடகத்தை நிறைவேத்தி வைக்கறதுக்கு கயல்விழி எனக்கு ஒரு துருப்பு சீட்டா கிடைச்சிருக்கா. மெஸ்மரிஸம் பண்ற மாதிரி சரிதாகிட்ட பேசி... அபிலாஷ் மேல சந்தேகம் வர்றமாதிரி பத்த வச்சது மட்டுமில்ல... கயல்விழியையும் மறைமுகமா சம்பந்தப்படுத்தி பேசி இருக்கேன். சரிதா மேடம் அவுங்க புருஷன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்காங்க. அதைவிட பாசமும், காதலும் நிறையவே இருக்கு. நான் விதைச்ச சந்தேக விதை, துளிர்விடுதான்னு பார்க்கணும். ஆனா... இப்பிடியெல்லாம் என்னை வச்சு சரிதா மேடமோட வாழ்க்கையை கெடுக்கறதுனால உனக்கு என்ன பலன்?''
''அதான் சொன்னேனே... நான் காதலிச்ச ஒருத்தி, எனக்கு கிடைக்காம வேற எவனுக்கோ கிடைச்சுட்ட கோபத்தை இப்பிடி பழி வாங்கி, தீர்த்துக்கறேன்.''
சரிதாவை சந்தித்ததையோ... அவளை மிரட்டி பணம் கேட்டதையோ பாவனாவிடம் கூறாமல் மறைத்தான் சுதாகர்.
அவனிடம் தொடர்ந்து பேசினாள் பாவனா.
''இது தப்பு இல்லையா? நீ நல்லவனா இருந்தா... அவங்க பண்ணினது துரோகம்னு சொல்லலாம். தான் காதலிச்ச ஒருத்தன் மோசமானவன் தெரிஞ்சப்புறம் கண்ணை மூடிக்கிட்டு யாராவது கிணத்துல விழுவாங்களா? தப்பான உன்கிட்ட இருந்து தப்பிச்சு... வேற ஒரு நல்லவர் கூட நல்லதொரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டாங்க சரிதா மேடம். இதுக்கு ஏன் நீ... பழி வாங்கணும்?''
''அவ என்னை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா. நான் செய்யற தொழில்கள் மோசமான தொழில்கள்தான். ஆனா... நான் மோசமானவன் இல்லை...''
அவனைப் பேசவிடாமல் குறுக்கிட்டுப் பேசினாள் பாவனா.
''என்ன?! நீ செய்றதெல்லாம் மோசமான தொழில்கள். ஆனா... நீ மோசமானவன் இல்லையா? இந்த வருஷத்தோட சிறந்த ஜோக் இதுவாத்தான் இருக்கும்.''
''என்னைப் பேச விடாம நீ ஏன் நடுவுல பேசற? சொல்றத முழுசா கேளு. கேட்டுட்டுப் பேசு தங்களோட வறுமைக்காகவோ... ஊதாரித்தனமா செலவு பண்றதுக்கோ... என் மூலம் இரவுப் பறவையா உழைக்க வர்ற பெண்கள் யாரையுமே நான் கெட்ட எண்ணத்துல தொட்டதில்லை. அழகான பெண்களை பணம் சம்பாதிக்கற இரவு நேர வேலைக்கு கூப்பிடுவேன். வற்புறுத்துவேன். என்னோட வழிக்கு வரவைப்பேன். ஆனா... என் மனசுல நான் இடம் குடுத்தது சரிதாவுக்கு மட்டும்தான். அவளைத் தவிர வேற யாரையும் நான் இந்த மனசுல நினைச்சதும் இல்லை. இந்த கையால தொட்டதும் இல்லை. கணிசமா ஒரு தொகை சேர்ந்தப்புறம் இந்த தொழிலை விட்டுட்டு அவகூட சந்தோஷமா வாழணும்னு நான் நினைச்சிருந்த நேரத்துல எனக்கு அறிமுகமான பொண்ணு ஒருத்தி சரிதாகிட்ட என்னோட மறுபக்கத்தைப் பத்தி சொல்லிட்டா. அந்தப் பொண்ணு ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். அவளுக்கும், சரிதாவுக்கும் எப்பிடி பழக்கம்னு எனக்குத் தெரியாது. எங்க காதல் படகை கவிழ்த்தது அந்தப் பொண்ணுதான். விஷயம் அம்பலமானதும் சரிதா, என்கிட்ட வந்து சண்டை போட்டா. என்னை விட்டு விலகிட்டா. என்னை தலை முழுகிட்டா. வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிட்டா. என்னோட உண்மையான காதலை பொய்யானதுன்னு சொல்லி... என்னை அடியோட வெறுத்துட்டு, அந்த அபிலாஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்ப சொல்லு... நான் பழி வாங்கறது தப்பா?''
''தப்புதான். கடந்த காலத்துல நடந்ததை மறுபடியும் இழுத்து, ஏன் கஷ்டப்படுத்தணும்? ஒருத்தரைப்பத்தி... அதுவும் தான் காதலிச்ச ஒருத்தனைப்பத்தி 'அவன் சரியானவன் இல்லை'ன்னு தெரிஞ்சபின் ஒரு பொண்ணு என்ன முடிவு எடுப்பாளோ அதைத்தான் சரிதா மேடமும் எடுத்திருக்காங்க. இது வாழ்க்கைப் பிரச்னை. போனா போயிட்டு போகுதுன்னு விடக் கூடிய விஷயம் இல்லை. 'தான் காதலிச்ச பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா வாழணும்'ன்னு நினைக்கறவனோட காதல்தான் உண்மையான காதல்! ஆனா... நீ...? காதலிச்சவளை பழி வாங்கி அவளோட வாழ்வை அழிக்கப் பார்க்கறியே?''
''நான் படற வேதனையை அவளும் படணும். நல்லவங்க மட்டும்தான் காதலிக்கணும்ன்னா உலகத்துல காதலே இருக்காது... ஊர், உலகத்துல இருக்கற அத்தனை காதலர்களும் நல்லவங்களா?''
''காதலுக்கு நீ சொல்ற இலக்கணம் பைத்தியக்காரத்தனமா இருக்கு. ஒவ்வொரு பொண்ணும் தான் காதலிக்கறவன், நல்லவன்னு நம்பித்தான் காதலிக்கறா. கல்யாணம்ங்கற சம்பிராதயத்துல இணையறதுக்கு முன்னால... காதலனோட முகமூடி கிழிஞ்சு... அவனோட நிஜ முகம் தெரிஞ்சுட்டா... 'நல்லவேளை... தப்பிச்சுட்டோம்'ன்னு தன் வழியில போயிடுவா. இது இயல்பான எச்சரிக்கை உணர்வு. தாலி கழுத்துல விழுந்தப்புறம் அவனோட அயோக்கியத்தனம் தெரிஞ்சுகிட்டா... 'பாழுங் கிணத்துல விழுந்தாச்சு, இனி கரை சேர என்ன வழின்னு யோசிச்சு, வாழ்க்கை முழுசும் போராடுவா. வாழ்க்கைல போராட்டம்... கண்கள்ல்ல நீரோட்டம்னு அவளோட வாழ்க்கையே இருண்டு போயிடும். அந்தக் காலத்துலதான் புருஷன்காரன் காலடியில விழுந்து கிடந்தாங்க பொண்ணுங்க. ஆனா... இப்போ... அவன் கட்டின தாலியைக் கழற்றி வீசி எறிஞ்சுட்டு... வீட்டு வாசப்படியை தாண்டி... கோர்ட் வாசல்ல போய் நிக்கறாங்க. நீ என்னடான்னா... கொஞ்ச நாள் காதலிச்ச பொண்ணு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ன்னு கிடந்து துள்ளற. பழிக்குப் பழி வாங்கணும்ங்கற. அவங்க எடுத்த முடிவு நியாயமானதுதான். ப்ளீஸ்... இதோட உன் பழிவாங்கற படலத்தை நிறுத்திக்கோயேன். என்னோட பணத் தேவையைக் கூட பொருட்படுத்தாம கேக்கறேன்... பாவம் அந்த சரிதா மேடம்... கணவர் அபிலாஷ் மேல தன் உயிரையே வச்சிருக்காங்க. மேக்கப்பை கலைக்கற மாதிரி அவங்களோட மனசைக் கலைக்கறது எனக்கு வேதனையா இருக்கு...''
''எதுக்காக வேதனை? வேடிக்கையா நினைச்சு... என்னோட டைரக்ஷன்ல நடிச்சு முடிக்கற வேலையைப் பாரு. என்னோட திட்டத்தை படிப்படியா செயல்படுத்து. உனக்கு தேவையான பணத்தை நான் கொட்டிக் குடுக்கறேன்...''
''என்னோட பலவீனமான நிலைமையை பயன்படுத்தி... செய்யக் கூடாததை செய்ய சொல்ற. என்னால முழு மனசா இதை செய்யவும் முடியலை. என்னோட இக்கட்டான நிலைமையில செய்யாம இருக்கவும் முடியலை. இருதலைக் கொள்ளி எறும்பு போல துடிக்கிறேன்... பாவத்துக்கு மேல பாவங்களை செஞ்சுக்கிட்டே போறேன். அந்தக் கடவுள் எனக்கு என்ன முடிவை வச்சிருக்காரோ தெரியலை...''
''புலம்பாத பாவனா. உனக்கு இந்த ப்ராஜக்ட் முடிஞ்சதும் கணிசமா ஒரு தொகை குடுப்பேன்ல... அதை வச்சு இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுடு...''
''முற்றுப்புள்ளி வச்சுடலாம்னு நான் நினைக்கற ஒவ்வொரு தடவையும் அது தொடர்கதையா தொடர்ந்துகிட்டிருக்கு. நீ என்னை ஏமாத்திட்ட. என்னோட பணம் முழுசையும் என்கிட்ட குடுத்திருந்தா... இந்த பாவப்பட்ட வேலையை பணத்துக்காக நான் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது.''
''என் மேல பழி போடறியா? என்னால நீ ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சியே... அந்தப் பணத்தை சேர்த்து வச்சு ஸெட்டில் ஆகி இருக்கலாம்ல?...''
''சாத்தான் வேதம் ஓதற கதைதான் போ. சம்பாதிக்ற பணத்துல சரிபாதிக்கு மேல நீ தின்னுட்ட. பணக்கஷ்டம்ன்னா என்னன்னு உனக்கு தெரியுமா? கஷ்டப்படாம வர்ற காசு... இஷ்டத்துக்கு அள்ளி வீசுவ... அது சரி... என்னவோ சிங்கப்பூர்ல ஸெட்டில் ஆகப் போறதா சொன்னியே... அது என்ன ஆச்சு?... அதுக்கு தேவையான பணமும், எனக்கு குடுக்கறதா சொன்ன பணமும் பெரிய தொகையா இருக்கே... அதுக்கு என்ன திட்டம் வச்சிருக்க?''
''அதெல்லாம் ரெடியா இருக்கு. ப்ளாக் மெயில், பெண்களை ஏமாத்தி விலை பேசறது, இப்பிடி பல வழிகளில்ல சம்பாதிச்சு பணத்தை ஒதுக்கி வச்சிருக்கேன். பணத்தை பதுக்கி வச்சிருக்கற விஷயத்தை என்னோட கூட்டாளி வெங்கட்கிட்ட கூட நான் சொல்லலை சொன்ன... சிங்கப்பூர் போறதுக்குள்ள பணம் பணம்னு அரிச்சு எடுத்துருவான்.''
''சரிதாவை பழி வாங்கற வேலை முடிஞ்சுதுன்னா... என்னோட வாழ்க்கை, சிங்கப்பூர்ல ஆரம்பமாகிடும்...''
''பழி வாங்கறது... பழி வாங்கறதுன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை பேசறியே... உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்க?''
''சரிதா, அவ புருஷன் அபிலாஷ் மேல சந்தேகப்பட்டு சிறுக சிறுக வேதனைப் படணும். பழம் நழுவி பாலுக்குள்ள விழுந்தாப்ல அந்த கயல்விழியும் என்னோட திரைக்கதையில முக்கியமான கதாபாத்திரமாயிட்டா. அதனால உன் மூலமா நான் நடத்தற இந்த நாடகம் எனக்கு டபுள் வெற்றி. அபிலாஷ்- கயல்விழி இவங்க இரண்டு பேரையும் சந்தேகப்பட்டு சரிதா சிறுக சிறுக வேதனைப் படணும். சரிதா மனசுல ஏற்படற சந்தேகத்துனால அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் பிரச்னை ஏற்பட்டு அவங்க பிரியணும். என்னை 'வேண்டாம்'ன்னு ஒதுக்கிட்டு, என்னோட கண் முன்னாலயே வேற ஒரு பெரிய செல்வந்தனான அந்த அபிலாஷ்கூட வாழற அவளோட சம்சார சாம்ராஜ்யம் சரிஞ்சு போகணும். புருஷனை பிரிஞ்சு... சரிதா கதறி அழணும். 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்'ங்கற அவளோட இறுமாப்புக்கு இறுதிச் சடங்கு நடக்கணும். ஓட்டை விழுந்த படகு எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும்? தாம்பத்ய வாழ்க்கையில சந்தேகம்ங்கற விஷ விதையை விதைச்சுட்டா... அவளோட மகிழ்ச்சியான இல்லறம்ங்கற பயிர் நாசமாயிடும். அப்பிடி நாசமாகறதுதான் என்னோட குறிக்கோள். குறி பார்த்து நான் வீசற அம்பு, அவளோட அன்பான வாழ்க்கையை குழி தோண்டி புதைக்கும். அந்த அம்பு நீ... அதை வீசறவன் நான்...''
''பணத்துக்காக நீ சொன்னதையெல்லாம் கேட்டு... உன்னோட நாடகத்துல நான் நடிச்சாலும் என்னோட மனசாட்சி ஒரு முள்ளா நெஞ்சுல குத்திக்கிட்டேதான் இருக்கு...''
''முள்ளும் மலரும். இந்த 'டீல்' முடிஞ்சு உன்னோட கைக்கு பணம் வந்து சேரும்போது இந்த முள் குத்தினது... மனசாட்சி உறுத்தினது இதெல்லாம் மறந்து போயிடும். பணம் குடுக்கற நிம்மதியையும் சந்தோஷத்தையும் வேற எது குடுத்துடும்?...''
''உன்னோட தத்துபித்து தத்துவத்தை கேட்டு கேட்டு எனக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கு. இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது...''
''சரி சரி. இந்தா... இதில பத்தாயிரம் ரூபா இருக்கு. உன்னோட வேலையில கவனமா இருந்து கச்சிதமா வேலையை முடி. முடிஞ்ச கையோட பேசினபடி காசை வாங்கிக்கோ...''
நீண்ட பெருமூச்சு விட்டபடி, சுதாகர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் பாவனா.