உன் மனதை நான் அறிவேன் - Page 34
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10467
ஹோட்டல் லாபியில் காத்திருந்த அபிலாஷ், தயாரிப்பாளர் பழனிவேல் வந்ததும் அவரை கை குலுக்கி வரவேற்றான்.
''வாங்க பழனிவேல் ஸார். எல்லாம் உங்களாலதான். உங்க படம் 'ஹிட்' ஆனதுனாலதான் எனக்கு இப்பிடி தொடர்ந்து பிஸியா இருக்கற அளவுக்கு படங்கள் இருக்கு...''
''உங்க திறமையும், ஆண்டவன் அருளாலயும் நல்லது நடக்குது அபிலாஷ்.''
''ஆமா ஸார். அது உண்மைதான்.'' அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கே பணியாளர் வந்தார். அவர்களுக்கு கொறிக்கவும், குடிக்கவும் என்ன வேண்டும் என்று பவ்யமாகக் கேட்டான்.
''கட்லெட்டும், டீயும் சொல்லுங்க அபிலாஷ்...''
பணியாளரிடம் திரும்பிய அபிலாஷ் அவரிடம் ''ரெண்டு ப்ளேட் கட்லெட்டும், ரெண்டு டீயும் கொண்டு வாங்க...''
பணியாளர் அங்கிருந்து நகர்ந்தார்.
''சொல்லுங்க ஸார். புதுப்படத்துக்கு கதை யாரோடது ஸார்? டைரக்ஷன் யாரு?''
''தெலுங்குல ஹிட்டான படத்தோட கதையை வாங்கி இருக்கேன். டைரக்டர் மதிவாணன்தான் அந்தப் படத்தைப் பத்தி என்கிட்ட சொன்னார். கதை ரொம்ப நல்லா இருக்கு. ம்யூஸிக் ஸ்கோப் உள்ள கதை. அதனாலதான் எனக்கு உடனே உங்க ஞாபகம் வந்துச்சு. டைரக்டர் மதிவாணனும் உங்களைத்தான் ம்யூஸிக் பண்ணச் சொல்லணும்ன்னு சொன்னார். உங்க 'டேட்' எப்பிடி இருக்கு? ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட் எல்லாம் வாங்கிட்டேன். ரெண்டு பேரும் பிஸியானவங்க. அதனால அவங்க குடுத்திருக்கற தேதிகளுக்கு முன்னால நீங்க பாடல்களை இசை அமைச்சுக் குடுத்துட்டா நல்லா இருக்கும்...''
''எங்தெந்த டேட் ஸார் வாங்கி இருக்கீங்க?''
''ஜுலை பதினொண்ணுல இருந்து முப்பது வரைக்கும். அதுக்கப்புறம் செப்டம்பர் பத்துல இருந்து அக்டோபர் பத்து வரைக்கும் முன் ஏற்பாடா கால்ஷீட் வாங்கி வச்சிருக்கேன்.''
''ஒரு நிமிஷம் ஸார். என்னோட டேட்ஸ் பார்த்துட்டு சொல்றேன்'' என்ற அபிலாஷ், தன் மொபைலில் குறித்த வைத்திருந்த தேதிகளைப் பார்த்தான்.
''டேட் இடிக்குதே ஸார்...'' தயக்கமாக அபிலாஷ் கூறியதும் சற்று அதிர்ச்சி அடைந்தார் பழனிவேல். இதைக் கவனித்த அபிலாஷ், பேச ஆரம்பித்தான்.
''கவலைப்படாதீங்க ஸார். என் ஒய்ஃப் கூட டென்மார்க் போற ப்ளான் இருக்கு. அதை கேன்ஸல் பண்ணிட்டு அந்த டேட்ல உங்க பாடல்களை இசை அமைச்சுக் குடுத்துடறேன். டைரக்டர் கூட ஸ்டோரி டிஸ்கஷன்ல உட்கார்ந்துட்டா என்னோட வேலை ஈஸியாயிடும். ''
''ஃபேமிலி டூரை கேன்ஸல் பண்ணிட்டு... டேட் குடுக்கறதா சொல்றீங்களேன்னு கஷ்டமா இருக்கு. ஸாரி... வேற வழி இல்லை அபிலாஷ்...''
''பரவாயில்லை ஸார். என்னை அறிமுகப்படுத்தின உங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணப் போறேன்? வேற எந்த ப்ரொட்யூஸருக்கோ டைரக்டருக்கோ குடுத்த டேட்ஸை மாத்தி ஒண்ணும் உங்களுக்கு பண்ணலியே? என்னோட பெர்ஸனல் டூரை கேன்ஸல் பண்ணித்தானே உங்களுக்கு 'ஸாங்' கம்போஸிங் பண்ணித் தர்றதா சொல்றேன்? யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாம உங்களுக்கு பண்ணிடறேன். நீங்க எதுவும் யோசிக்காதீங்க...''
''வெளிநாட்டு 'ட்ரிப்'பை கேன்ஸல் பண்றது உங்களுக்கு பெர்ஸனலா பிரச்னைதானே அபிலாஷ்...?''
''அதெல்லாம் இல்லை ஸார். என்னோட மனைவி சரிதா என்னைப் புரிஞ்சுக்கிட்டவ. என்னோட தொழிலை புரிஞ்சுக்கிட்டவ. ம்யூஸிக்கை நான் எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு அவளுக்குத் தெரியும். அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.''
''ரொம்ப தேங்க்ஸ் அபிலாஷ். இந்தக் காலத்துல அதுவும் இந்த திரைப்பட உலகத்துல உங்களைப் போல நன்றி உணர்வு உள்ளவர்களை பார்க்கறதே ரொம்ப அபூர்வம். உங்க ப்ரோக்ராம்மை மாத்தாம இருக்கணும்ன்னா ஒரு வழி இருக்கு. ஆனா அதுக்கு டைரக்டர் மதிவாணன் ஒத்துக்க மாட்டார். ஏன்னா... முதலில் ஸாங்ஸைதான் ஷூட் பண்ணனும்ங்கறார். இல்லைன்னா... மத்த ஷ*டூ்டிங்கை முடிச்சுட்டு கடைசியில ஸாங்க்குக்குரியதை ஷுட் பண்ணிக்கலாம்...''
''இல்லை ஸார். அதுக்கப்புறம் எனக்கு டேட்ஸ் சிக்கல் ஆகிடும்.''
''ஓ... அப்பிடியா? டைரக்டர் மதிவாணனை உங்க கூட பேசச் சொல்றேன். ஸ்டோரி டிஸ்கஷனுக்கு என்னிக்கு, எங்கே உட்காரலாம்னு பேசிடுவார்.''
''சரி ஸார். ரொம்ப சந்தோஷம்...''
அதன் பின் புதிய படத்தின் கதையை அபிலாஷிற்கு விளக்கினார் பழனிவேல்.
கதையை கவனமாக கேட்டுக் கொள்டான் அபிலாஷ்.
''டைரக்டரோட திரைக்கதையையும் கேக்கறதுக்கு அவர்கூட பேசி ஒரு டிஸ்கஷன் போட்டுடலாம் ஸார்...''
''தேங்கஸ் அபிலாஷ். நாம கிளம்பளாமா?''
''ஓ.கே. ஸார்.''
இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர்.