வருவேன் நான் உனது... - Page 31
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 9793
இப்ப நான் அவசரமா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கிட்டிருக்கேன். உன்னை வந்து பேசிக்கறேன்...”
கோபம் கொப்பளிக்கப் பேசிய ஏகாந்த், காரைக் கிள்ிபபிக் கொண்டு சென்றான்.
ஏகாந்த் வருணாவிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த மோகன்ராமிற்கு எதுவும் புரியவில்லை. அது ஏகாந்த்தின் குடும்பப் பிரச்னை என்பதால் நாகரிகம் கருதி மெளனமாக இருந்தார்.
33
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட ‘மிருதுளா... கன்னித் தன்மை நீங்கியவள், கற்பழிப்பு நேரிடவில்லை!’ என்ற தகவல்களைக் கேட்டதும் ஏகாந்த் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தான். “அப்படின்னா அந்தப் பிணம் என்னோட மிருதுளாவோடது இல்ல இன்ஸ்பெக்டர். என் மனைவி கூட முதலிரவு நடந்தாலும் நாங்க ரெண்டு பேரும் மனம் திறந்து பேசிக்கிட்டோமே தவிர உடல் ரீதியான உறவே வச்சிக்கலை. ஸோ... என்னோட மிருதுளா உயிரோட எங்கயோ இருக்கா... நீங்க இன்னும் கொஞ்சம் தீவிரமா தேடுங்க இன்ஸ்பெக்டர், ப்ளீஸ்..”
“ஒரு நிமிஷம்... நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க மிஸ்டர் ஏகாந்த். உங்கவிட்ட கேக்கறதுக்கு கஷ்டமாதான் இருக்கு... இருந்தாலும் நான் அதப்பத்தி பேசித்தான் ஆகணும்... உங்க மனைவி மிருதுளா, கல்யாணத்துக்கு முன்னால வேற யார் கூடயாவது...”
ப்ரேம்குமார் பேசியதைக் கேட்ட மோகன்ராம் கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.
“ஸ்டாப் இட் இன்ஸ்பெக்டர். என் பொண்ணு அப்படிப்பட்ட கேவலமான பொண்ணு இல்ல. அவ பண்பானவ. பண்பாடு நிறைஞ்சவ. சில உயர்மட்டத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுங்க மாதிரி டிஸ்கோத்தே, டேட்டிங் அது இதுன்னு ஊர் சுத்தற ரகம் இல்ல என் பொண்ணு. அவளுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அது உண்மையான நட்பு ரீதியானது. எல்லை தாண்டாத தூய்மையான சிநேகிதம் மட்டும்தான். தட்டிக் கொடுத்து வளர்க்கத் தாய் இல்லாட்டாலும் தட்டுக் கெட்டுப் போற மாதிரி என் பொண்ணை நான் வளர்க்கலை. அவ நெருப்பு. நீங்க இந்தக் கேஸோட ஃபைலை க்ளோஸ் பண்ணணுங்கறதுக்காக எப்படி வேணாலும் பேசலாமா...?”
ஆவேசமாகக் கத்திய மோகன்ராமைக் கை அமர்த்தி அடக்கினார் ப்ரேம்குமார்.
“லுக் மிஸ்டர் மோகன்ராம். புலன் விசாரனைன்னு வந்துட்டா போலீஸ் நாங்க எல்லாக் கோணத்துலயும் சிந்திப்போம். கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்போம். அது எங்களோட கடமை மட்டுமில்ல.... எங்களோட துப்புத்துலக்கற வழி முறைகளை அப்படித்தான் இருக்கும். என்னமோ இவ்வளவு கோபப்படறீங்களே... அரவிந்த்துக்கு உங்க மக மிருதுளா எழுதின காதல் கடிதம் இதோ இருக்கு பாருங்க...”
கார்த்திக் ஃபேக்ஸ் மூலம் அனுப்பிய கடிதத்தை மேஜை மீது போட்டார் ப்ரேம்குமார்.
“எடுத்துப் பாருங்க...”ப்ரேம்குமார் கூறியதும் மோகன்ராம் அதை எடுத்துப் பார்த்தார், படித்தார்.
“இது என்னோட பொண்ணு மிருதுளாவோட கையெழுத்து இல்ல இன்ஸ்பெக்டர். ஒரு விஷயம் இன்ஸ்பெக்டர்... நான் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கற அப்பா கிடையாது. என் பொண்ணு ஒருத்தனைக் காதலிக்கறதா சொல்லியிருந்தா, அவளுக்கு எந்தத் தடையும் இல்ல. அப்படி இருக்கும்போது அவ ஏன் ஒருத்தனைக் காதலிக்கணும்? வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கணும்? நிச்சயமா இந்த லெட்டர் என் பொண்ணு எழுதினது கிடையாது. அந்த அரவிந்த்கிட்ட தான் ஏதோ தப்பு இருக்கு. அவனைப் பிடிச்சு உலுக்கி விசாரிங்க.”
“ஆமா இன்ஸ்பெக்டர். மாமா சொல்றது ரொம்ப கரெக்ட். அந்த அரவிந்த்தைத் தீவிரமா விசாரிங்க.”
“நீங்க சொல்ற மாதிரியெல்லாம் அதிரடியா அரவிந்த்தை விசாரணை பண்ண முடியாது. பெங்களூர்ல அவர் பெரிய புள்ளி. மஃப்டியில போய் விசாரணை பண்ணின கார்த்திக் கண்ணுல இந்த லெட்டர் பட்டிருக்கு. இது ஒரு ஸ்ட்ராங்கான ஆதாரம். இனி கொஞ்சம் கொஞ்சமா அந்த அரவிந்த்தை ஃபாலோ பண்ணணும். இந்த ஒருலெட்டரை வச்சு உங்க மிருதுளாவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க முடியாது. இன்னும் பல வழிகள்ல மிருதுளாவைத் தேடணும். நாங்க தீவிரமா ஈடுபட்டுச் சீக்கிரமா மிருதுளாவைக் கண்டு பிடிப்போம்.”
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் கூறியதும் சற்றுச் சமாதானம் அடைந்தனர் ஏகாந்த்தும், மோகன்ராமும். இருவரும் ப்ரேம்குமாரிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.
34
“என்ன? மிருதுளா வயசுள்ள பொண்ணோட ‘டெட்பாடி’ கிடைச்சுருக்கா?” ஏகாந்த்தின் மொபைல் அழைப்பில் பேசிக் கொண்டிருந்த அஷோக் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமா அஷோக். ஆனா அந்தப் பிணத்தோட ‘போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்’-ல அந்தப் பிணத்திற்குரிய பெண் ‘கன்னித்தன்மை’ நீங்கியவள்னு சொல்லியிருக்காங்க. அதனால அது என்னோட மிருதுளாவா இருக்க முடியாது. முதலிரவுல மிருதுளா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா... ‘கொஞ்ச நாள் நாம பேசி, பழகி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம்தான் உடலால ஒண்ணு சேரணும்னு.’ நானும் அவ சொன்னதை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன். அதனாலதான் உறுதியா சொல்றேன், போலீஸ்க்கு கிடைச்சிருக்கற அந்தப் பிணம் என்னோட மிருதுளா இல்ல. பிணத்தோட முகம் அடையாளம் தெரியாமல் சிதைஞ்சு போயிருந்தாலும், அது மிருதுளா இல்லைங்கறது எனக்கு நல்லாத் தெரியும்...”
“பிறகென்ன? நிம்மதியா இரு...”
“இல்ல, அஷோக்... மிருதுளாவுக்கு, கல்யாணத்துக்கு முன்னால, வேற யார் கூடயாவது தொடர்பு இந்திருக்குமோங்கற ரீதியில இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு....”
“அட... நீ என்ன ஏகாந்த் இதுக்குப் போய்க் கஷ்டப்பட்டிருக்கிட்டு, போலீஸ்காரங்க அப்படித்தான் கேட்பாங்க. அவங்களோட சூழ்நிலை அப்படி. விசாரணைன்னு வரும்போது அவங்களோட கோணத்துல ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். அதைத்தான் கேட்டிருக்காங்க. அது அவங்களோட ட்யூட்டி. நீ உன் மனைவியை நம்பற. அந்த நம்பிக்கை மிருதுளாவை உன்கூடச் சேர்த்து வைக்கும்...”
“சரி, அஷோக். உன் கூடப் பேசும்போது ஆறுதலா இருக்கு...” என்ற ஏகாந்த், போலீஸாருக்குக் கிடைத்துள்ள பிணம் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அஷோக்கிடம் கூறி முடித்தான்.
அஷோக்கிடம் பேசிய பின், ஏகாந்த்தின் கனத்துப் போயிருந்த மனது சற்று லேசானது.
35
“எங்களூர் எ.ஜி.ரோடின் மையப் பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டுத் தொப்பி அணிந்தவனுக்காகக் காத்திருந்தான் அரவிந்த்.
கற்றை கற்றையான ரூபாய் நோட்டுக்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். அரவிந்த்தின் கார் அருகே வந்தான் தொப்பி மனிதன். அவனைப் பார்த்ததும் பணக்கற்றையை அவனிடம் கொடுத்தான்.
“எதுவும் பேசாத. நீ கேட்ட தொகைக்கு மேல இரண்டு மடங்கா கொடுத்திருக்கேன். என்னோட உயிரைக் காப்பாத்தினதுக்கு தாங்க்ஸ்.... சீக்கிரம் இங்கிருந்து கிளம்பு.” அவசர அவசரமாகப் பேசி முடித்த அடுத்த வினாடி அரவிந்த் காரில் பறந்தான்.