வருவேன் நான் உனது... - Page 29
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 9793
என்கிட்ட போன் இருக்கற விஷயமே யாருக்கும் தெரியாது. தெரிஞ்சுட்டா என் தலை போயிடும்...”அவசர அவசரமாகப் பேசினாள் துர்க்கா.
“ஐயோ அக்கா... இங்கேயும் தலைபோற விஷயம்தான். நம்ப ரம்யா மேல லாரி மோதி, அவ தலையில அடிபட்டு கோமாவுல கிடக்கா. நாப்பத்தெட்டு மணி நேரம் ஆனப்புறம்தான் எதுவும் சொல்ல முடியும்னு டாக்டருங்க சொல்றாங்க...”
“அடப்பாவி... ‘என் பொண்ணை வளர்த்து ஆளாக்கு’ன்னு உன்னை நம்பி விட்டேனே... எப்படியா இது ஆச்சு? உன்னை என் கூடப்பிறந்தவன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. இப்படியா ரம்யாவைத் தனியா விடுவ?”
“ரம்யா எங்கே போனாலும் நான் அவ கூடவேதான்க்கா போவேன். நேத்து நைட் டூட்டிக்குப் போனதுனால பகல்ல கொஞ்சம் கண் அவந்துட்டேன்க்கா. கம்ப்யூட்டர் க்ளாசுக்குப் போன பொண்ணு மேல லாரிக்காரன் மோதிட்டான்க்கா....”
துர்க்காவுடன் மறுமுனையில் பேசிய குரல், மிருதுளாவிற்குத் தெளிவாகக் கேட்கவில்லை எனினும், ஏதோ பேசுவதும் அதுவும் தமிழில் என்பதும் மட்டும் கேட்டது. துர்க்கா... தொடர்ந்து பேசினாள்.
“ஐயோ... இப்ப ரம்யா... என்ன நிலைமையில இருக்கா? கண்ணைத் தெறக்கவே இல்லையா?...”
“அந்தப் பத்ரகாளி அம்மன்தான்க்கா கண் திறக்கணும்... ரம்யா அவசர சிகிச்சைப் பிரிவுல இருக்காக்கா...”
தன் செல்ல மகளுக்கு, ஒரே மகளுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக, மகளின் உயிர் ஊசலாடும் வேதனையை அனுபவித்த துர்க்கா... சூழ்நிலையை மறந்து, அவளது தம்பியுடன் சகஜமாகத் தமிழில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளா, கோபத்துடன் குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.
“ஏம்மா... உனக்குத் தமிழ் தெரிஞ்சுருக்கு! தெரியாத மாதிரி நடிச்சிருக்க... தாய் மொழியையே மறந்து இப்படி ஒரு நாடகமா? ஏன்? எதுக்காக? நீ யாரு? அந்தக் கயவன் அரவிந்த்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?... நீயும் ஒரு பொண்ணுதானே?... என் விருப்பத்துக்கு விரோதமா ஒருத்தன் என்னை அடைச்சு வச்சிருக்கான். அதுக்கு நீயும் உடந்தையா இருக்கியே?... செல்லு... இது எந்த இடம், பெங்களூர்தானே?” கோபமாகப் பேசிக் கொண்டிருந்த மிருதுளா, தன் போகத்தைக் குறைத்துக் கொண்டு தன்மையாகப் பேச ஆரம்பித்தாள்.
“சொல்லு... ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணே கேடு நினைக்கலாமா? உனக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டா? நினைச்சுப் பாரு. என்னைக் காணாம என்னைப் பெத்தவரும், புருஷனும் எப்படித் துடிச்சிக்கிட்டிருப்பாங்க?”
மிருதுளா இவ்விதம் பேசியதும், துர்க்கா தன் மகளை நினைத்துப் பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள். அச்சமயத்தில் துர்க்காவின் கையிலிருந்த மொபைல் போனை தட்டிப் பறித்தாள் மிருதுளா.
“இப்ப நான் ஒரு போன் அடிச்சா போதும். போலீஸ் பட்டாளமே வந்து நிக்கும்..”
“வேணாம்மா... என்னை மன்னிச்சிடு. குடிக்காரப் புருஷனால எந்த வருமானமும் இல்ல. வயித்த கழுவவும், என் பொண்ணை வளர்க்கவும், இந்த மாதிரி தவறான வேலைகள்ல இறங்கிட்டேன். நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். கல்யாணம் கட்டினதுக்கப்புறம் இந்தப் பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு ஒரே பொண்ணு. அவ பேர் ரம்யா. அவளையும் என்னை மாதிரி ஆக்கிடக் கூடாதுன்னுதான் நல்லா படிக்க வைக்கணும்னு சென்னையில இருக்கற என் தம்பிகிட்ட அனுப்பிட்டேன். இங்க ஒருத்தன் நடத்தற திருட்டுக் கும்பல்ல சேர்ந்தேன். அவன் என்ன வேலை செய்யச் சொல்றானோ அதைச் செய்யணும். செஞ்சா நிறையப் பணம் கொடுப்பான். எல்லாமே சட்டத்தை மீறின வேலைங்கதான். என்னோட இந்த தப்பான வேலையைப் பத்தி அவளுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னுதான் சென்னைக்கு என் தம்பிகிட்ட அவளை அனுப்பினேன். என் தம்பியும் சோம்பேறி. நெனச்சா வேலைக்குப் போவான்.... இல்லாட்டி படுத்துத் தூங்குவான். அதனால என் மகளோட படிப்புச் செலவுக்கு நான்தான் இங்க இருந்து பணம் அனுப்பறேன். அவ நல்லா படிக்கறா, அவ படிச்சு முடிச்சு கெளரவமான உத்யோகத்துல சேர்ற வரைக்கும் இந்தத் திருட்டுக் கும்பல்ல இருந்தாகணும். குடிக்காரப் புருஷன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கும்போது எனக்கு இருபது வயசு. அவர் இந்த ஊர்க்காரர்ங்கறதுனால நானும் இங்க வந்தேன். அதனால இங்க உள்ள நடை உடை பாவனை, பாஷை எல்லாம் எனக்கும் வந்திடுச்சு. என் மக ரம்யாவுக்காகத்தான் இப்படி ஒரு இழிவான வாழ்க்கை நான் நடத்தறேன். என்னை மன்னிச்சிடும்மா. வாம்மா... நாம இங்கயிருந்து தப்பிச்சிடலாம்!” என்ற துர்க்கா, மிருதுளாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முயற்சிக்கும் பொழுது அங்கே வந்து நின்ற அரவிந்த், இருவரையும் அறைக்குள்ளே தள்ளினான். மிருதுளாவின் கையிலிருந்த மொபைல் போனைப் பிடுங்கிக் கொண்டான். தன்னிடம் இருந்த சாவியால் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். மறுபடியும் கதவைத் திறந்து துர்க்காவிடம் இருந்த சாவியையும் பிடுங்கிக் கொண்டான். இருவரையும் கட்டிப் போட்டு விட்டு வெளியேறினான்.
31
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் பணிபுரியும் காவல் நிலையம். அவரது மேஜை மீதிருந்த டெலிபோன் ஒலித்து அழைத்தது. ரிஸீவரை எடுத்தார் ப்ரேம்குமார்.
“இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்?” மறுமுறையிலிருந்து கேள்வி வந்தது.
“ஆமா கார்த்திக். நான்தான் பேசறேன். சொல்லுங்க.”
“என்ன ஸார்... குரலை வச்சே கண்டுபிடிச்சிட்டீங்க?”
“இதுல என்ன ஆச்சர்யம்? பாரதிராஜா ஸாரோட குரல் மாதிரி பெக்யூலியர் வாய்ஸ் உங்களுக்கு. சரி கார்த்திக், என்ன விஷயம் சொல்லுங்க. அந்த அரவிந்த் மேட்டர் என்னாச்சு?”
“அவரோட ஆபீசுக்கு மஃப்ட்டியில போனதுனால என்னை அவருக்கு அடையாளம் தெரியல. என்னை அடையாளம் கண்டதும் அவரோட முகம் லேசா இருட்டடிச்சது. ‘சட்டுன்னு’ சுதாரிச்சிக்கிட்டு சகஜமா பேசினாரு.”
“மிருதுளாவைப் பத்தி கேட்டீங்களா?”
“மிருதுளா ‘ப்ராஜக்ட்’ விஷயமா பெங்களூர் வந்த சமயத்துல பழக்கமாம். நல்ல ஃப்ரெண்ட் அப்படீன்னு சொன்னாரு...”
“அந்த இ.மெயில் பத்தி என்ன சொன்னாரு?”
“அது சும்மா தமாசுக்காக அனுப்பினதா சொன்னாரு. எல்லா ஃப்ரெண்ட்சுக்கும் அதே செய்தி அடங்கின இ.மெயில் அனுப்பியிருக்கறதா சொன்னாரு. அதையெல்லாம் எனக்குக் காண்பிச்சாரு. அவரோட பேச்சு இயல்பா இருந்தாலும் அதுல ஒரு செயற்கைத்தனம் தெரிஞ்சது ஸார். சும்மா சொல்லக் கூடாது ஸார். இப்ப உள்ள நடிகர்களையெல்லாம் மிஞ்சிப் போற அளவுக்கு நல்லாவே நடிக்கறாரு.”
“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க – நடிக்கறார்னு?”
“மிருதுளா தனக்கு நல்ல சிநேகிதி மட்டும்தான்னு சொன்னாரு. ஆனா அவரோட டேபிள் மேல மிருதுளா எழுதின காதல் கடிதம் இருந்துச்சு.”