நீ எங்கே? என் அன்பே ! - Page 10
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by chitralekha
- Hits: 8684
சுரேஷ் மேடை ஏறினான். “ஆக்ஷன் மன்னன் ராம்குமார் அவர்களை விழாவினைத் துவக்கி வைத்து பேசும்படி கேட்டுக் கொள்கிறேன்.”
ராம்குமார் எழுந்தான். மைக்கின் முன் நின்றான். லேசாகக் கலைந்திருந்த தலைமுடியை ஸ்டைலாக சரிப்படுத்திக் கொண்டான். பேச ஆரம்பித்தான்.
“என் உயிருக்குயிரான ரசிகப் பெருமக்களே”
மீண்டும் ரசிகர்களின் ஆரவாரம்! அவர்களைப் பார்த்துக் கையமர்த்திய ராம்குமார் தொடர்ந்தான். “அனைவருக்கும் என் அன்பு வணக்கம். எனது அருமை நண்பர், திரைப்பட நட்சத்திரம் நிரஞ்சன்தான் இந்த விழாவின் நாயகன். நிரஞ்சனுக்கு மத்திய அரசு விருது கிடைச்சிருக்கு. திறமை வாய்ந்த ஒரு நடிகருக்கு விருது குடுத்து அரசு கெளரவிச்சிருக்கு. இதுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவங்க எல்லாருமே ரொம்ப சந்தோஷப்படறோம். நிரஞ்சன் புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் கூட அவர் மனசுல கர்வம்ங்கறது துளி கூடக் கிடையாது. வீண் பந்தா கிடையாது. பண்புள்ள மனிதர்...” நிரஞ்சனைப் பற்றிய பாராட்டுரையைக் கேட்ட அவனது ரசிகர்கள் மேலும் ஆர்ப்பரித்தனர்.
“என்னோட துறையைச் சேர்ந்த என் அருமை நண்பர் நிரஞ்சனின் சிலை திறப்பு விழாவில் தலைமை தாங்கி, அவரைப் பாராட்டறதுக்கு எனக்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது. என் ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு அனைத்து மாவட்ட ரசிகர் மன்றங்களும், நிரஞ்சனின் ரசிகர் மன்றங்களும் உதவி செய்ய முன் வந்தாங்க. நிரஞ்சனுக்கு சிலை வைக்கறதுக்கு அனுமதி அளித்த அரசுக்கு நான் ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன். இன்னும் பல நூறு படங்களில் நிரஞ்சன் நடித்து மேன்மேலும் புகழ் பெறனும். ஏழை, எளியவங்களுக்கு மன்றங்கள் மூலமா அவர் செய்ற நற்பணி பெருமைக்குரியது.”
“இந்த விழாவில் எங்க ரெண்டு பேருடைய ரசிகர்களும் சேர்ந்து இருக்கிறதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களோட நட்பைப் புரிஞ்சிருப்பீங்க. எங்க மேல இருக்கற அளவற்ற அபிமானத்துல நீங்க அடிச்சுக்கறது, வீணா தகராறு பண்றதை எல்லாம் இனிமேலாவது தவிர்த்திடுங்க. ஒற்றுமையா இருங்க. ஒற்றுமையா இருங்க. எல்லார்க்கும் என் நன்றி. இப்போது நிரஞ்சன் பேசுவார்.”
மீண்டும் கைத்தட்டல் ஒலி அடங்குவதற்குப் பல நிமிடங்கள் பிடித்தன. நிரஞ்சன் ராம்குமாரிடம், “என்னங்க ராம்குமார் நம்பளை இழுத்து வுட்டுட்டீங்க?” சிரித்துக் கொண்டே கேட்டான்.
“பேசுங்க நிரஞ்சன். ரசிகர்கள் எத்தனை ஆவலா இருக்காங்க பாருங்க.” நிரஞ்சனைப் பிடித்து இழுத்து, மைக்கின் முன் கொண்டு நிறுத்தினான். நிரஞ்சன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, கூட்டத்தினைப் பார்த்து வணங்கினான். பின் பேச ஆரம்பித்தான்.
“எனக்கு மேடையில நேருக்கு நேர் பேச வராது. என் இனிய நண்பர் ராம்குமார் ரொம்ப அழகா பேசினார். எனக்கு அந்த அளவுக்குப் பேச வராது. ராம்குமார் என்னை அதிகமா புகழ்ந்து பேசினார். எனக்கு அதுக்கெல்லாம் தகுதி இருக்கோ இல்லையோ, ஆனா அவருக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். நண்பர் ராம்குமார் சொன்னது போல ரசிகர்கள், நீங்க எப்பவும் ஒற்றுமையா இருக்கனும். கலைஞர்களோட வளர்ச்சி உங்ககிட்டதான் இருக்கு. உங்களோட ஆதரவும், அன்பும் தான் எங்களை உற்சாகப்படுத்தற டானிக். எனக்கு அரசு குடுத்திருக்கற இந்த கெளரவத்துக்கும், நண்பர் ராம்குமாரோட ஏற்பாட்டில் நடக்கற இந்த சிலை திறப்புக்கும் என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குது. உங்கள் அனைவர்க்கும் என் நன்றி. வணக்கம்.”
நிரஞ்சன் பேசி முடித்ததும், சுரேஷ் “இப்போது திரு.ராம்குமார் அவர்கள் திரு. நிரஞ்சனோட சிலையைத் திறந்து வைப்பார். இந்த அரங்கத்தின் முன் பகுதியில் உள்ள கலைக் கூடத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.”
ராம்குமாரும், நிரஞ்சனும் மேடையை விட்டு இறங்கி, கைகோர்த்தபடியே கலைக் கூடத்திற்குச் சென்றனர். அனைவரும் பின் தொடர்ந்தார்கள். அங்கே நிரஞ்சனின் சிலை அழகிய திரைச்சீலையினால் மூடப்பட்டிருந்தது.
ராம்குமார் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைப்பில் உள்ள பொத்தானை அமுக்கியதும் திரை மெல்ல விலகியது.
அங்கே நிரஞ்சனின் மெழுகு சிலையைக் கண்டு மக்கள் அனைவரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து நின்றனர்.
“நிரஞ்சன் நேர்ல நிக்கறாப்ல இருக்கே.”
“சிலை போலவே இல்லை. நிஜ நிரஞ்சனுக்கும், அதுக்கும் வித்தியாசமே இல்லை.” அனைவரும் வியப்பினால் விழிகளை விரித்தார்கள்.
சிலை அத்தனை தத்ரூபமாக அமைந்திருந்தது. உடைகள் கூட நிரஞ்சன் பொது நிகழ்ச்சிகளுக்கு உபயோகப்படுத்தும் வகை துணியில், அதே மாடலில் தைக்கப்பட்டு, சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
புதுமையான அந்த மெழுகுச் சிலையினைக் கண்ட மக்கள் மகிழ்ந்தார்கள். ராம்குமாரைக் கட்டித் தழுவி, தன் நன்றியைத் தெரியப்படுத்தினான் நிரஞ்சன். பத்திரிகைகளைச் சேர்ந்த புகைப்பட நிபுணர்களின் காமிராக்கண்களுக்கு அன்று அதிகமாகவே விருந்து கிடைத்தது. விழா இனிது முடிந்தது.
ராம்குமாரும், நிரஞ்சனும் புறப்பட்டார்கள். கலைக்கூடத்தில் இருந்து வெளியில் கார் நிற்கும் இடத்திற்கு நடந்தார்கள். சிலர் இவர்களின் காலில் விழுந்தனர். சில பேர் இருவரது உடைகளைத் தொட்டுப் பார்த்தனர்.
சக்திவேலும், சுரேஷும் இரு நட்சத்திரங்களிடமும் விடைபெறுவதற்காக அவர்களைச் சமீபிக்க பெரும் முயற்சி செய்தனர்.
“ராம்குமார் சார், ரொம்ப தாங்க்ஸ் சார். நல்லா பேசினீங்க.”
“நான்தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும். விழா ஏற்பாடெல்லாம் பிரமாதம். வரட்டுமா? வரேன், சக்திவேல்.”
“ஓ.கே. சார் ரொம்ப சந்தோஷம்” சக்திவேல் ராம்குமாரிடம் கைகளைக் குலுக்கி விடை கொடுத்தான். சுரேஷ், நிரஞ்சனிடம் சொல்லிக் கொண்ட பின், நிரஞ்சன் சக்திவேலிடம் திரும்பினான். “என்ன சக்திவேல் சந்தோஷம்தானே? நானும் கிளம்பட்டுமா?”
“புறப்படுங்க சார். ஓய்வுக்காக வெளியூர் போறதா சொன்னீங்க? எப்ப சார் போறீங்க?”
“எங்க போறீங்க?”
“மகாபலிபுரம்தான் போலாம்னு இருக்கேன். வீட்ல பெரியம்மாவுக்கு உடம்பு சரி இல்லை. அதனால் எப்ப போறேன்னு தெரியலை.”
“எத்தனை நாள் சார்?”
“அஞ்சு அல்லது ஆறுநாள்தான். அதுக்கு மேல நான் நினைச்சாலும் ரெஸ்ட் எடுக்க முடியாது. பெரிய கம்பெனிப்பட ஷூட்டிங் இருக்கு.”
“எந்த கம்பெனி சார்?”
“அன்னை ப்ரொடக்ஷன்ஸ். சரி சக்திவேல் நான் புறப்படறேன். ஸீ.யூ.”
நிரஞ்சன் அவனது வெளிநாட்டு பென்ஸ் காரிலும், ராம்குமார் அவனது நீல வண்ணக் கான்டெஸ்ஸாவிலும் ஏறிக் கொண்டார்கள். இரு நடிகர்களும் காரின் ஜன்னல் கண்ணாடி வழியாக மக்களைப் பார்த்துக் கையசைத்தனர்.
போர்டிகோவிலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் பெரியம்மா. நிரஞ்சனும், சோமுவும் வருவதைப் பார்த்தாள். பார்த்தும் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இதைப் புரிந்துக் கொண்ட நிரஞ்சன் பெரியம்மாவின் அருகே சென்று அவளது கைகளைப் பிடித்தான். கைகளை உதறினாள் பெரியம்மா.