பறவை வெளியே வருமா - Page 41
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
மழை வர்றதுக்கு முன்னால கூடி வர்ற மேகம், பெரிசா காத்து அடிச்சதும் கலைஞ்சுதானே போகுது? அது போல வருணோட இழப்பும் ஒரு கலைஞ்சு போன மேகம்ன்னு விட்டுடு. உங்க அத்தை, அப்பா அவங்களுக்கெல்லாம் நீ பதில் சொல்லித்தானே ஆகணும்? அவங்க எதிர்பார்க்கற ஒரு நல்ல பதிலைச் சொன்னீனா ஏதோ வயசான ரெண்டு ஜீவன்களோட நிம்மதியைக் காப்பாத்தற புண்ணியமாவது இருக்குமே. இன்னொரு விஷயம் மேகி, வாழ்க்கையில வர்ற மாற்றங்களை நாம மனப்பூர்வமா ஏத்துக்கிட்டோம்ன்னா... அந்த மாற்றங்கள் நமக்குள்ளே புதிய பரிணாமங்களை ஏற்படுத்தும். நான் சொல்றதை நம்பு. கல்யாணம் பண்ணி புருஷன் கூட வாழ்ந்து, அந்த தாம்பத்தியத்தின் அடையாளமா குழந்தை பெத்தவங்க கூட அந்தப் புருஷன் இறந்து போனதுக்கப்புறம் மறுமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறாங்க. அப்படி இருக்கும் போது நீ ஏன் சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்கத் தயங்கறே? உன்னோட வெல்விஷரா சொல்றேன் மேகி. நான் சொல்றதைக் கேளு..."
"யோசிக்கறேன் சௌமி..." வழக்கமாய் கூறும் பதிலையே இப்போதும் கூறினாள் மேகலா.
மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
"சுபிட்சா விஷயமா உன்கிட்ட ஒண்ணு பேசணும் சௌமி. லிங்கம் கல்லூரி நிறுவனங்களோட அதிபர் சொக்கலிங்கத்தோட ஒரே வாரிசு கிரிதரன்ங்கற கிரி அவரோட பையன். அவனுக்கு சுபிட்சாவைக் கேக்கறாங்க. காலேஜ் கலை விழாவுல சுபியோட டான்ஸ் ப்ரோக்ராம்ல சுபியைப் பார்த்த அந்தப் பையன், 'ரெண்டு வருஷம் ஆனா கூட பரவாயில்லை... நான் காத்திருக்கேன்' அப்படின்னு சொல்றானாம். தற்செயலா அந்தக் கிரியை கருமாரி அம்மன் கோயில்ல பார்த்தேன். பார்க்கறதுக்கு ஆள் நல்ல லட்சணமா இருக்கான். கலைவிழாவுல எடுத்த சுபியோட ஃபோட்டோவை அவனோட ஷர்ட் பாக்கெட்ல வச்சிருந்தான்." கோயிலில் அன்று நடந்ததையும், ஷோபா ஜெகன், தன்னிடம் கிரியைப்பற்றியும், அவனது நல்ல குடும்பப் பின்னணி பற்றியும் எடுத்துக் கூறி, சுபிட்சா விஷயமாக பேசியதையும், ஷோபா ஜெகன் மட்டும் அல்லாமல் வேறு சிலரிடமும், தான் கிரியைப் பற்றி விசாரித்ததையும் சௌம்யா உதயகுமாரிடம் விளக்கமாகக் கூறினாள் மேகலா.
"நல்ல வேளையா போச்சு. குடும்பப் பின்னணிக்கும், அந்தப் பையன் கிரிக்கும் இவ்வளவு தூரம் நல்ல விதமா தெரியும் போது, சுபிட்சாவை அந்தக் கிரிக்கே கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதானே? படிப்பு முடிச்சப்புறம் கூட கல்யாணம் பண்ணிக்கறதுக்கு காத்திருக்கறதா சொல்றானே. உன்னோட கல்யாணத்தை முடிச்சுட்டு, சுபிட்சாவிற்கு, இப்போ நிச்சயம் பண்ணி வச்சுக்கிட்டு ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்க வேண்டியதுதானே? இதில யோசிக்க என்ன இருக்கு?"
"சுபிட்சா ஒத்துக்கணுமே... ஒத்தக்கால்ல நிக்கறா... இந்தப் பையன் வேண்டாம்னு..."
"ஏனாம்?"
"அவ... பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கறதுல ஆர்வமா இருக்கா..."
"ஆர்வம்ன்னா? காதலா?"
"ஆர்வம்ன்னா அதுக்கு அர்த்தம் காதல் இல்லை. வீட்ல, கூடவே இருக்கற அத்தை பையன்ங்க நல்ல பையனுங்க. சக்திவேலை நான் பண்ணிக்கிட்டா பிரகாஷை அவ பண்ணிக்கலாம்னு நினைக்கறா. வெளியில இருந்து வரக்கூடிய அந்நியப் பையனா இருந்தா பிரச்சனை வருமோன்னு நினைக்கறா. மத்தபடி காதல் கீதல்லாம் எதுவும் கிடையாது. பிரகாஷை நல்லவன்னு நம்பறா..."
"ஏன்? பிரகாஷ் நல்லவன் இல்லையா?"
"நல்லவன்தான்... அவனுக்கென்ன..." மேற்கொண்டு பிரகாஷைப் பற்றிய விஷயங்களைப் பேச அவளுக்கு கூசியது. என்னதான் உயிர்த்தோழியாக இருந்தாலும் குடும்ப கௌரவம் கருதி, பிரகாஷின் தகாத நடவடிக்கைகள் பற்றி சௌம்யா உதயகுமாரிடம் சொல்வதில் மேகலாவிற்கு உடன்பாடு இல்லை.
"என்ன மேகி, நல்லவன்தான்னு இழுக்கற?"
பிரகாஷ் பற்றிய பேச்சைத் தவிர்த்துப் பேசினாள் மேகலா.
"கிரி நல்ல குணமான பையன். ஏராளமான சொத்துக்கள்! தாராளமான பணப்புழக்கம்! கிரிக்கு வாழ்க்கைப்பட்டா மகாராணி மாதிரி சுபிட்சா வாழலாமே? என் தங்கை செல்வச் சீமாட்டியா வாழற ஆசை எனக்கு இருக்கக் கூடாதா சௌமி?"
"ஏன் இருக்கக்கூடாது? செல்வச் சீமான் குடும்பம் மட்டுமில்லாம நல்ல பண்புள்ள மனிதர்கள்ன்னு தெரிஞ்சப்புறம் தயங்காம... அவங்ககிட்ட பேசலாமே?"
"பேச வேண்டாம்ன்னு சுபிட்சா தடுக்கறா. எனக்கு என்ன பண்றதுன்னு புரியலை. கிரி சார்பா ஷோபா ஜெகன் என்னை வந்து பார்த்து பேசினாங்கன்னு வீட்ல நான் யார்கிட்டயும் சொல்லலை. சுபிட்சா கிட்டதான் சொல்லி இருக்கேன்."
"சுபிட்சா சின்னப் பொண்ணு. அவளுக்கு அதைப்பத்தி முடிவு எடுக்கற வயசு பத்தாது. பெரியவ நீ சொல்றதை அவ கேக்கணும்..."
"சின்னப் பொண்ணுன்னு நீ சொல்லற. அவ ரொம்ப ஆழமா யோசிக்கறா. அளவுக்கு அதிகமாகவும் யோசிக்கறா. வற்புறுத்துறதுக்கும் எனக்கு மனசு வரலை."
"மனசுக்குள்ள ஒண்ணு வச்சு... வெளியில வேற பேசற பொண்ணு இல்லை சுபிட்சா. அவளுக்கு விபரம் பத்தலை. அத்தை பையனைக் கட்டிக்கிட்டா பிரச்சனை இல்லாம பாதுகாப்பா இருக்கலாம்னு அவ நினைக்கறா..."
"நினைக்கறதெல்லாம் நடந்துட்டா தெய்வமே இல்லைன்னு கவிஞர் பாடி இருக்காரு..."
"அதே கவிஞர்தான் 'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை'ன்னும் பாடி இருக்கார். அதனால... புது வாழ்க்கையைத் துவங்கறதுக்கு, முதல்ல உன்னோட மனசை நீ தயார் பண்ணிக்கோ. சுபிட்சாவோட விஷயத்தை அப்புறம் பார்க்கலாம்."
"அப்புறம் பார்க்கலாம்ன்னு லேஸா விட்டுட முடியாது சௌமி. பணக்கார மாப்பிள்ளை வேணும்... சம்பந்தம் வேணும்னு நாம வலிந்து தேடிப் போகலை. சுபியை விரும்பிப் பெண் கேக்கற அந்த நல்லவங்க, பணக்காரங்களா இருக்காங்க. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அமையற வாய்ப்பு தேடி வரும்பொழுது... ஏன் அதை நழுவ விடணும்ங்கறதுதான் என்னோட ஆதங்கம். எங்க அம்மா இருந்திருந்தா எடுத்துச் சொல்றது எடுபடும். என்ன இருந்தாலும் நான் அக்காதானே?"
"அக்காவா இருந்தாலும் ஒரு தாய் ஸ்தானத்துல இருந்துதானே சுபிட்சாவுக்கு நல்லது நடக்கணும்னு ஆசைப்படறே... உன்னோட ஆசையில அவளோட அழகான வாழ்க்கையும் அடங்கி இருக்குன்னு சுபிட்சா புரிஞ்சுக்குவா. அடிமேல் அடி அடிச்சா அம்மியும் நகரும். சுபிட்சாகிட்ட நீ சொல்லிக்கிட்டே இரு. அவ மனசுல பதியும்."
"அவ மனசுல எங்கம்மாவோட முகமும், பாசமும் பதிஞ்சு கிடக்கு. திடீர் திடீர்னு 'அம்மா என் முன்னால வந்தாங்க'ம்பா. என்னைப் பார்த்தாங்க, ஆசீர்வாதம் பண்ணாங்கன்னு சொல்லி கண் கலங்குவா."
"அவ, கண் கலங்காத வாழ்க்கை வாழணும்னு உங்கம்மாவே ஆசீர்வதிப்பாங்க. அவகிட்ட திரும்ப திரும்ப பேசு. அவ மனசை மாத்து..."
"மாத்திட்டா... நிச்சயமா என் தங்கை நல்லா இருப்பா. இது உறுதி..."
"இவ்வளவு உறுதியா இருக்கற... நீ உன்னோட எதிர்காலம் பத்தியும் உறுதியான ஒரு முடிவு எடு. எல்லாமே நல்லபடியா நடக்கும்..."