பறவை வெளியே வருமா - Page 39
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
கல்லூரி நிறுவனர்ங்கற முறையில எங்கப்பாவுக்கு வந்த ஃபோட்டோஸ்ல இருந்து அதை எடுத்து வச்சிருக்கேன். ஸாரி... நான் இப்படி வச்சிருக்கறது தப்புதான்..."
அவன் பேசியதில் இருந்து அவன்தான், ஷோபா ஜெகன் குறிப்பிட்ட 'கிரி' என்று புரிந்து கொண்டாள் மேகலா.
கிரி தொடர்ந்து பேசினான்.
"உங்க தங்கை சுபிட்சாவை முறைப்படி பெண் கேட்டு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்பட்டு எங்கப்பாகிட்ட சொல்லி இருக்கேன். மத்தபடி... தப்பான..."
"போதும் கிரி. எனக்குப் புரிஞ்சுடுச்சு..." மேகலா பேச்சை முடிக்கும் முன், மூர்த்தி அவளைத் தேடி வந்தார்.
"என்னம்மா மேகலா... அம்மன் சந்நிதியில் சுபிட்சா பாட்டு பாடப் போறா. வாம்மா..."
மேகலா மறுபடியும் சந்நிதிக்குச் சென்றாள். கிரியும் கோயில் வலம் வருவதை முடித்துவிட்டு சந்நிதிக்கு வந்தான். அவன் கூடவே வேணுவும் சென்றான்.
அங்கே கண்மூடி லயித்தபடி அம்மன் பக்தி பாடலை பாடிக் கொண்டிருந்தாள் சுபிட்சா. அவளைப் போலவே அவளது குரலும் இனிமையாக இருப்பதை ரசித்தான் கிரி.
கிரி ரசிப்பதைக் கவனித்து விட்ட பிரகாஷ், கோபத்தில் பற்களைக் கடித்தான். மற்ற அனைவரும் தெய்வீகப் பாடலை ரசித்து, ஆன்மிக உணர்வில் திளைக்க, பிரகாஷ் மட்டும் கிரியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பாடல் முடிந்தது. பரபரவென பிரகாஷ், சுபிட்சாவிடம் சென்றான்.
"வா கிளம்பலாம்" என்றான், மற்றவர்களையும் துரிதப்படுத்தினான்.
"ஏண்டா பிரகாஷ், திடீர்னு இப்படி வந்து அவசரப்படுத்தறே..." கமலம் சலித்துக் கொண்டே கிளம்பினாள். அம்மனின் கழுத்தில் போடப்பட்டிருந்த பூச்சரத்தை, குருக்கள் சுபிட்சாவிடம் கொடுக்க, அவள் அதைத் தன் கூந்தலில் தொங்க விட்டுக் கொண்டாள்.
சுபிட்சாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கிரி. அவர்கள் அனைவரும் காரில் ஏறி செல்வதற்காக கோயில் வாசலை நோக்கி நடந்தனர். கிரியும், வேணுவும் வெளியே வந்தனர். சுபிட்சாவின் கூந்தலில் இருந்த பூச்சரம் கீழே விழுந்ததை அறியாமல் அவள், கால்டாக்ஸியில் ஏறினாள். கால்டாக்ஸி கிளம்பியது. சுபிட்சாவின் கூந்தலில் இருந்து விழுந்த பூச்சரத்தை கிரி எடுத்துக் கொண்டான். சுபிட்சாவே தன்னுடன் இருப்பது போல மகிழ்ந்தான்.
30
ஆபீஸிலிருந்து வந்த மேகலா, லன்ஞ்ச் பாக்ஸை கழுவி வைத்தாள். உடை மாற்றிவிட்டு சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள்.
அவளுக்கு சூடான காபி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள் கமலம்.
"என்னம்மா மேகலா... உங்கப்பாவும், நானும் உன்னோட கல்யாண விஷயம் பேசலாம்னு காத்திருக்கோம்..." என்றவள், மூர்த்தியிடம் திரும்பி, "என்னண்ணா...நீயே பேசேன்..." என்றாள்.
"அவ என்னோட பொண்ணுன்னாலும் என்னை விட உனக்குத்தான் உரிமை அதிகம். நீயே பேசேன்..." மூர்த்தி சொன்னதும் கமலம் பேச ஆரம்பித்தாள்.
"மேகலா... சக்திவேலுக்கு உன்னைக் கட்டி வைக்கலாம்னு நானும், உங்கப்பாவும் நினைக்கறோம், விருப்பப்படறோம். நீ என்னம்மா சொல்ற?"
"அத்தை... எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"
"பொண்ணாப் பிறந்த ஒவ்வொருத்தியும் குறிப்பிட்ட கால கட்டத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தறதுதான் நம்ப கலாச்சாரம். உனக்கு கல்யாண வயசு வந்தாச்சு. சக்திவேல் நல்ல வேலை கிடைச்சப்புறம்தான் கல்யாணம்ன்னு காத்திருந்தான். நல்ல வேலையும் கிடைச்சாச்சு. நல்ல வேளையும் வந்தாச்சுன்னு நான் நம்பறேன். நீ என்னம்மா சொல்ற? என்னோட பையன்ங்கறதுக்காக சக்திவேலைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு உன்னை வற்புறுத்தலை. உனக்கு சக்திவேல் வேண்டாம்ன்னா வெளியில மாப்பிள்ளை பார்க்கலாம். நீ என்ன முடிவு எடுக்கறியோ அதுதான். கல்யாணம்ங்கறது யாரோட வற்புறுத்தலுக்காகவும் நடக்கக் கூடாது. பொண்ணுக்கும், பையனுக்கும் பிடிச்சிருக்கணும். அதுதான் முக்கியம்..."
"நான் யோசிக்கணும் அத்தை..."
"என்னம்மா மேகலா... எத்தனை நாள்தான் யோசிப்பே? உன்னோட எதிர்காலம் நல்லபடியா அமைஞ்சுட்டா அதுதான் எங்களுக்கு சந்தோஷம். உனக்கு அடுத்து இன்னொருத்தி சுபிட்சா இருக்கா. எங்க காலத்துக்குள்ள உங்களோட எதிர்காலத்தை எங்க கண்ணால பார்த்துட்டா, நாங்க நிம்மதியா கண்ணை மூடுவோம்..." மூர்த்தி, சற்று உறுதியான குரலில் பேசினார்.
"அது... வந்துப்பா..."
"என்ன சொல்லணும்னு நினைக்கறியோ... அதை சொல்லும்மா."
"உங்க விருப்பமும், அத்தையோட விருப்பமும் எனக்குக் புரியுதுப்பா. ஆனா... என்னோட விருப்பத்தை நான் உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு டைம் வேணும்ப்பா."
"எங்க விருப்பத்தை உன் மேல திணிக்க மாட்டோம். அதை மட்டும் தெளிவா நீ புரிஞ்சுக்க. உங்க அம்மா மனோன்மணி நம்பளை விட்டுப் போனப்புறம், உங்களை தனி ஆளா எப்படி வளர்த்து ஆளாக்கப் போறேனோன்னு மலைச்சுப் போய் நின்னேன். துரதிர்ஷ்டவசமா உங்க அத்தையோட கணவரும் போய் சேர்ந்துட்டாரு. அந்த நிலைமையில இருந்து இன்னிக்கு வரைக்கும் நீ, சுபிட்சா, சக்திவேல், பிரகாஷ்... நாலு பேரும் எங்களுக்கு எந்தத் தொல்லையும் குடுக்காம... பொறுப்பான பிள்ளைங்களா வளர்ந்து ஆளாகி நிக்கறீங்க. அனுசரிச்சுப் போற பக்குவமும் உங்ககிட்ட நிறையவே இருக்கு. என் தங்கச்சி பெத்த தங்கமான பையன்ங்க... சக்திவேலும், பிரகாஷும். நம்ம குடும்பம் ஒத்துமையா வாழறதுக்கு அவங்க ரெண்டு பேரும் ஒரு காரணம். அந்த ஒற்றுமை நிலைக்கணும்னு நினைச்சுத்தான் உன்னைத் தன் பையனுக்கு கேட்கறா உங்க அத்தை. இதில் அவளோட எண்ணத்தைவிட உன்னோட விருப்பம்தான் முக்கியம். இனி நீ தான்ம்மா சொல்லணும்..."
"அப்பா... எனக்கு கொஞ்சம் டைம் குடுங்கப்பா. ப்ளீஸ்..."
"சரிம்மா. யோசிச்சு சொல்லு..."
மேகலா... உடனே சம்மதம் சொல்லாமல் யோசித்து சொல்வதாகக் கூறியதைக் கேட்டு முகம் வாடினாள் கமலம். அந்த வாட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டாள்.
"சரிம்மா மேகலா... நீ போய் முகம் கழுவும்மா. ராத்திரி டிபனுக்கு என்ன செய்யட்டும்?"
"ஏழு கூட ஆகலியே அத்தை. ஏழு மணிக்கு நானும் சமையலறைக்கு வரேன். ரவா கிச்சடியும், தக்காளி சட்னியும் பண்ணிடலாம். சமையலறையில மளிகை சாமான் பாட்டில்கள்யெல்லாம் கலைச்சுப் போட்டு வச்சிருக்கேன் அத்தை. சுபிட்சா வந்து பார்த்தா கத்துவா. அவ வர்றதுக்குள்ள அதையெல்லாம் அடுக்கி வைக்கணும் அத்தை..."
"அக்காவுக்கு பயப்படற தங்கச்சியை பார்த்திருக்கேன். தங்கச்சிக்கு பயப்படற அக்காவை இப்பத்தான் பார்க்கறேன்" கமலம் சிரித்தபடி சமையலறைக்குள் சென்றாள்.
அறைக்குள், அலமாரியில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்துப் போட்டாள் சுபிட்சா. ஒவ்வொரு துணியையும், பொருளையும் மறுபடியும் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு நினைக்கறேன்... சுபி." மேகலா, பேச ஆரம்பித்தாள்.
"மனசுக்குள்ள நினைச்சதை வாய்விட்டு சொல்லிடுக்கா..."