பறவை வெளியே வருமா - Page 61
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8418
பிரகாஷின் கல்லூரிக்கு சென்று, அவனைப் பற்றி விசாரித்தாள் சுபிட்சா. 'உதவி செய்யற மனப்பான்மை உள்ளவன். ஆனால் பெண்களுடன் சுற்றுபவன். அந்த ஒரு கெட்ட குணம் இல்லாவிட்டால் நன்றாக முன்னேறக் கூடியவன்' என்று அவனது நண்பர்கள் கூறினார்கள்.
நொந்து போன உள்ளத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் சுபிட்சா.
53
மருத்துவமனை. ஆப்ரேஷனுக்குப் பிறகு சராசரி நினைவிற்கு வராமல் அரைகுறை மயக்கத்திலேயே இருந்த கமலம், அன்று முழுமையாக மயக்கம் தெளிந்தாள்.
"என்னப்பா சக்திவேல், மேகலா எங்கே?" அவள் கண் விழித்த பின் கேட்ட முதல் கேள்வியே மேகலா பற்றித்தான்.
'என்ன சொல்வது' என்று திகைத்துப் போனான் சக்திவேல். இதற்குள் கமலத்திற்கு ஊசி போடுவதற்காக உள்ளே வந்த நர்ஸ், சக்திவேலை வெளியே அனுப்பினாள். ஊசி போட்டு முடித்ததும் உள்ளே போன சக்திவேல், 'நான் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வந்துடறேன்மா' என்று கூற கமலம், "மேகலாவை கூட்டிட்டு வாப்பா" என்று சொன்னாள். மௌனமாய் வெளியேறினான் சக்திவேல்.
வீட்டில் டி.வி. பார்த்தே பொழுது போக்கின கமலத்திற்கு மருத்துவமனையில் வேறு பொழுது போக்கு ஏதுமின்றி கஷ்டமாக இருந்தது.
அங்கிருந்த வார்டு பையனைக் கூப்பிட்டாள்.
"தம்பி, யாராவது நியூஸ் பேப்பர் வச்சிருந்தா படிக்கறதுக்கு கேட்டு வாங்கிட்டு வாப்பா" என்றாள் கமலம்.
ஒரு கட்டு செய்தித்தாள்களை மற்ற அறையில் இருந்தவர்களிடம் கேட்டு வாங்கி வந்தான். கமலத்திடம் கொடுத்தான். அவன் கொடுத்த அத்தனை பேப்பர்களிலும் மேகலா கேஸ் பற்றிய முழு விபரங்களும், குற்றவாளியாக பிரகாஷை சந்தேகப்படுவதும் வெளியாகி இருந்தன. படிக்கும் பொழுதே அதிர்ச்சி அடைந்த கமலம், அதைப் படித்து முடிக்கும் பொழுது அவளே முடிந்து விட்டாள். ஆம்... அந்த அதிர்ச்சியான செய்திகளை அவளது இதயத்தால் தாங்க முடியாமல் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
மேகலாவின் இழப்பு... பிரகாஷின் சுயரூபம் இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் இதய நோயால் பாதிக்கப்பட்ட கமலத்தால் தாங்கிக் கொள்ள முடியுமா?
கமலத்தின் மரணம் அவளது துன்பங்களில் இருந்து அவளுக்கு விடுதலை அளிப்பதாகவே அமைந்தது.
54
காவல் நிலையம். மீனா மாமி, முரளி மாமா இருவரும் மேகலா இறந்து போன அன்று பிரகாஷின் நடவடிக்கைகள் இருந்த விதத்தைப் பற்றி இன்ஸ்பெக்டர் ஆதவனிடம் எடுத்துக் கூறினார்கள். அங்கே வந்த சுபிட்சா, பிரகாஷின் டைரியையும், மேகலாவின் கடிதத்தையும் இன்ஸ்பெக்டர் ஆதவனிடம் ஒப்படைத்தாள். பிரகாஷ், சிறையில் அடைக்கப்பட்டான். பிரகாஷின் கைரேகை பதிவின் மூலமும், அவனது மொபைலில் இருந்த நம்பர்கள் மூலமும் தகுந்த தகவல்கள் கிடைத்தபடியால் பிரகாஷ்தான் குற்றவாளி என போலீஸாரால் நிரூபிக்கப்பட்டது. இனி தப்பிக்க வழி இல்லை என்றதும், பிரகாஷே வாக்குமூலம் கொடுத்தான். அவனது தவறுகளை ஒப்புக் கொண்டான். வழக்கு பதிவாகியது. குடும்பத்தினர் யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.
மீனா மாமியும், முரளி மாமாவும் பிரகாஷை அடைத்து வைத்திருந்த ஜெயிலுக்கு சென்றனர்.
"நீ நன்னா இருப்பியாடா? நல்ல குடும்பத்துல பொறந்த உனக்கு ஏண்டா இந்த ஈன புத்தி? மேகலாவையும், உன்னைப் பெத்தவளையும் சாகடிச்சுட்ட. மேகலா நல்ல பொண்ணு. கல்யாணமாகி சந்தோஷமா வாழ்ந்திருந்த அந்தப் பொண்ணை அநியாயமா சாகடிச்சுட்டியே? அண்ணன் மனைவி அம்மாவுக்கு சமம்டா. அவளையா பெண்டாளப் போனே?..த் தூ..." காறி உமிழ்ந்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் மீனா மாமி. மேகலாவின் ஆசைப்படி, கிரியை மணந்து கொள்ள முடிவு எடுத்தாள் சுபிட்சா. சக்திவேல்தான் கிரியின் அப்பா சொக்கலிங்கத்துடன் பேசி சுபிட்சாவின் படிப்பு முடிந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசினான்.
அதன்படி திருமணம் நிச்சியக்கப்பட்டது. காலம் பறந்தது. குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் சுபிட்சா, கிரிதரன் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குக் கிளம்பினாள் சுபிட்சா. முதுமை அடைந்துவிட்ட அப்பாவையும், மனைவியைப் பிரிந்து மாறாத சோக முகத்துடன் காணப்படும் சக்திவேலையும் பார்த்துக் கதறி அழுதாள்.
"சுபிட்சா... உங்க அக்கா ஆசைப்பட்டபடி கிரிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். இதுக்காகத்தான் இத்தனை நாள் நான் இங்கே காத்திருந்தேன். நான் என்னோட வேலையைப் பூனாவுக்கு மாற்றல் வாங்கிட்டேன். நான் பூனாவுக்கு போகப் போறேன். மேகலா இல்லாத இந்த வீட்ல இனி என்னால இருக்க முடியாது" கண்கள் கலங்க விடை பெற்றான் சக்திவேல்.
"எனக்கு மட்டும் இங்கே என்னம்மா இருக்கு? என் உயிருக்குயிரான தங்கச்சி கமலம் போய் சேர்ந்துட்டா. என் மகளும் போயிட்டா. நீ... நல்லபடியா ஒரு நல்ல குடும்பத்துக்கு மருமகளாயிட்டே. நான் சிவானந்த குருகுலத்துல போய் இருக்கப் போறேன்மா. பேரன், பேத்தி பொறந்த பிறகு எனக்கு கொண்டு வந்து காட்டு. நம்ப வீட்டை உனக்குத்தான் எழுதி வச்சிருக்கேன். இதுதான் என்னால செய்ய முடிஞ்சது" மூர்த்தியும் அழுதார். அவர் அழுவதைப் பார்த்து சுபிட்சாவும் அழுதாள். கிரி ஆறுதல் கூறினான். சுபிட்சாவிடம் விடை பெற்று சக்திவேலும், மூர்த்தியும் வெளியேறினார்கள். சுபிட்சா, கிரியுடன் புகுந்த வீட்டிற்கு கிளம்பினாள். கிரி, அவளை உயிருக்கும் மேலாக நேசித்தான்.
55
ஆறு வருடங்கள் உருண்டோடின. சொக்கலிங்கத்தின் மேல் தன் அப்பாவைப் போல பாசம் வைத்து, அவரை கவனித்துக் கொண்டாள் சுபிட்சா. அவரும், சுபிட்சா மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். சுபிட்சா, தன் அறிவுத்திறனால் லிங்கம் கல்வி நிறுவனங்களை மேலும் மேம்படுத்தினாள். குடும்பத்தையும் பேணிக் காத்து வந்தாள். குறிப்பிட்ட நாளில் மூர்த்தியையும், சக்திவேலையும் வரவழைத்தாள். கிரியின் பங்களாவில் உள்ள தன் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றாள். அங்கே மேகலாவின் புகைப்படமும், கமலத்தின் புகைப்படமும் மாட்டப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த சக்திவேலும், மூர்த்தியும் கண்ணீர் வடித்தனர்.
"அம்மா... அம்மா..." குழந்தைகளின் குரல் கேட்டது.
"சக்திவேல் மச்சான். இது என் பொண்ணு. பேர் மேகலா. இது என் பையன். பேர் சக்திவேல். இன்னைக்கு இவங்களுக்கு பிறந்தநாள். அப்பாவுக்கு ஆறுமாசத்துக்கு ஒரு முறை குழந்தைகளை கூட்டிட்டுப் போய் காமிச்சுடுவேன். நீங்க இப்பத்தானே இவங்களை பார்க்கறீங்க. மேகலா, சக்திவேல்... இங்க வாங்கடா... இதோ பாருங்க. இது உங்க பெரியப்பா" சக்திவேலைக் காட்டினாள்.
சுபிட்சாவின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்த சக்திவேல், மகிழ்ச்சியடைந்தான். அவர்களை அள்ளி அணைத்துக் கொண்டான். அங்கே வந்த கிரியின் கைகளை அன்புடன் பிடித்துக் கொண்டாள் சுபிட்சா. 'என் அக்கா கொடுத்த வாழ்க்கை' என்று கிரியின் தோளோடு சாய்ந்து கொண்டாள் சுபிட்சா.
தன் பெண்மையை வருணிடம் கொடுத்துவிட்ட உண்மையை மறைக்கவும், குடும்பத்தினரின் நிம்மதியைக் காக்கவும் மேகலா பட்ட பாடு? பிரகாஷிடமிருந்து சுபிட்சாவைக் காப்பாற்ற, அவள் செய்த தியாகம்!
குடும்பத்தினரின் நிம்மதியைக் காக்கவும், சந்தோஷத்தை நிலை நிறுத்தவும், மேகலா தியாகத் தீபமாகத் திகழ்ந்தாள். தீயவன் பிரகாஷால் அந்த தீபம் பெருந்தீயாக எரிந்து தீக்கிரையாகிப் போனது.
குடும்பத்தினரின் அமைதிக்காக அவள் மறைத்து வைத்த உண்மை எனும் பறவை வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக எத்தனை பாடுபட்டாள்!. அவள் பட்டபாடு வீண் போகாமல், பிரகாஷின் சுயரூபம் எனும் உண்மை மட்டுமே வெளிப்பட்டு சுபிட்சாவின் வாழ்வு, மேகலாவின் ஆசைப்படி கிரியுடன் இணைந்தது. ஆனந்தமயமான வாழ்வு மலர்ந்தது.
பிரகாஷைப் பற்றிய நிஜமுகத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்த மேகலா, அவளை அறியாமல் அவளையே பலி கொடுத்து, பிரகாஷின் பொய் முகத்தை வெளிச்சமிட்டுக்காட்டி விட்டாள். தங்கை சுபிட்சாவின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வைத்து, அவளது அம்மாவைப் போல அவளும் சுபிட்சாவிற்கு வானில் இருந்து வாழ்த்திக் கொண்டிருந்தாள்.