பறவை வெளியே வருமா - Page 59
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8419
'ஐய்யோ... அக்கா... இவனைப்பத்தி தெரிஞ்சுதான் பிரகாஷ் வேண்டாம்னு சொன்னியா? இவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தறதுக்குதான் போயும் போயும் இவனைப் போல அயோக்யனைக் கல்யாணம் பண்ணிக்கத் துணிஞ்சியா? உனக்காக எதையும் செய்வேன்! உனக்காக எதையும் செய்வேன்னு, நீ இதுக்குத்தான் சொன்னியா? இவன் வேண்டாம்னு நீ சொன்னதை நான் புரிஞ்சுக்கலியே.’ கதறி கதறி அழுத சுபிட்சா, மேலும் பக்கங்களைப் புரட்டினாள்.
'ஒருநாள் ஏதோ நீளமாக எழுதிக் கொண்டிருந்த மேகலா, என்னைப் பார்த்ததும் மறைத்தாள். அவள் ஆபீஸ் போன பிறகு அவள் எழுதியதை எடுத்துப் பார்த்து விட்டு ஒளித்து வைத்திருக்கிறேன்.' இதைப் படித்த சுபிட்சா பரபரப்பானாள். டிராயர் முழுவதும் மேகலாவின் கடிதத்தைத் தேடினாள். டிராயரில் விரிக்கப்பட்டிருந்த பேப்பரைத் தூக்கிப் பார்த்தாள். நீளவாக்கில் மூன்றாக மடிக்கப்பட்டிருந்த ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தாள். அது மேகலா எழுதிய கடிதம்... திகில் நிறைந்த மனதுடன் அதைப் படிக்க ஆரம்பித்தாள்.
'என் உயிர் தங்கை சுபி,
உன்னிடம் நேரில் கூறினால் நீ சமாளித்துப் பேசி என்னை சமாதானப்படுத்தி விடுகிறாய். எனவே வேறு வழி இல்லாததால் இக்கடிதம் எழுதியுள்ளேன். பிரகாஷ் கெட்டவன். காமுகன். அவனை நம்பாதே. என்னை நம்பு. அந்த பிரகாஷ் என் மீது, என் உடல் மீது ஆசைப்பட்டு என்னை அடையத் துடிப்பவன். அவனது அண்ணியாக ஆன பிறகும் என்னை அனுபவிக்க நினைப்பவன். தன்மையாக அறிவுரை கூறினேன். கேட்கவில்லை. வன்மையாக கண்டித்துப் பார்த்தேன். கேட்கவில்லை. அவன் பெண் சபல புத்தி கொண்டவன். நான் எழுதி இருப்பதைப் படித்து தீவிரமாக யோசித்து முடிவு எடு. நான் பேசும் பொழுது நீ பதில் கூறுவது போல் அலட்சியமாக இருந்துவிடாதே. என் உயிர் தங்கை நீ நன்றாக இருக்க வேண்டும். லிங்கம் கல்லூரி நிறுவனங்களின் உரிமையாளர் சொக்கலிங்கத்தின் மகன் கிரி நல்லவன். பண்பானவன். அவனை திருமணம் செய்து கொள். இந்த பிரகாஷ் வேண்டாம். வீட்டில் அவனால் ஏற்பட்ட பாலியல் பலாத்கார பிரச்சனைகளை பலமுறை எதிர் கொண்டுள்ளேன். இப்படிப்பட்ட அவனுக்கு நீ மனைவியாவது மிகவும் மடத்தனமானது. உன் அக்கா சொல்வதைக் கேள்..'
பாதியில் நின்றிருந்தது அக்கடிதம்.
'பிரகாஷ் இவ்வளவு கேவலமானவனா?.... எனக்காக என் அக்கா இந்தக் கயவனை கணவனாக்கிக் கொள்ளும் எண்ணம் வச்சிருந்திருக்கா. அவள் மனம் ஒரு தியாக பூமி' எண்ணங்கள் பின்னலிட கண்களில் கண்ணீர் வழிந்தது சுபிட்சாவிற்கு.
52
வினயாவின் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது.
"ஒரு கொலைக்காரப் பயலைக் காதலிச்சதும் இல்லாம... இப்ப அவனைப்பத்தின தகவல்களை போலீஸ் ஸ்டேஷன்ல வேற சொல்லப் போறேங்கற? உனக்கென்ன மூளை கலங்கிப் போச்சா?" வினயாவின் அப்பா, ராமநாதன் கேட்டார். வினயாவின் அம்மா புனிதவதி, தங்கை இருவரும் பயம் கலந்த முகத்துடனும் மனதுடனும் வினயாவைச் சுற்றி நின்றிருந்தனர்.
"என்னோட மூளை கலங்கிப் போகாம, எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்கணும்ன்னா அவனைப்பத்தி நான் போலீஸ்ல சொல்லியே ஆகணும்..." வினயா பேசியதைக் கேட்ட ராமநாதன், அவளைக் கன்னத்தில் அறைந்தார்.
இதைப்பார்த்து புனிதவதி பதறினாள். தடுக்கப் போனால், ராமநாதனின் கோபம் அதிகமாகும் என்பதால் அழுதபடி இருந்தாள்.
"நீங்க என்னை அடிச்சாலும் சரி, கொன்னாலும் சரி, நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் சொல்லத்தான் போறேன்..."
மறுபடியும் அடித்தார் ராமநாதன்.
அதுவரை மௌனமாக அழுது கொண்டிருந்த புனிதவதி, வினயாவின் அருகே சென்றாள். கோபமாகக் கத்தினாள். "ஏண்டி இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறே? நம்ம குடும்ப கௌரவத்தை நினைச்சுப் பார்த்தியா? உன்னோட எதிர்காலத்தைப்பத்தி நினைச்சுப் பார்த்தியா? நீ இப்ப உன்னோட காதல்... கண்றாவி விஷயத்தை அம்பலப்படுத்தினா... நாளைக்கு உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்? இதோ நிக்கற உன் தங்கச்சியை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்?"
"அம்மா... நானும் பொண்ணு. தங்கச்சியும் பொண்ணு. நம்ம ஊர்ல, நம்ம நாட்டில என்னை மாதிரி எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. அவங்கள்ல ஒரு பொண்ணாவது என்னோட இந்த நிலைமை தெரிஞ்சு, சுதாரிப்பா இருந்துக்க மாட்டாங்களாங்கற ஆதங்கத்துலதான்மா நான் இந்த விஷயத்துல இவ்வளவு தீவிரம் காட்டறேன்... நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற பொண்ணுங்களையெல்லாம் 'நீயும் என் பொண்ணு மாதிரிதான்னு' சொல்லி அன்பு காட்டுவீங்களே... பொண்ணுங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கலாம்னு நினைச்சுத்தாம்மா நான் இவ்வளவு தூரம் பேசறேன்.
“உங்க வயித்துல பிறந்த பொண்ணான என்னைப்பத்தி மட்டும் கவலைப்படறீங்களேம்மா.. உங்க வயித்துல பிறக்காத எத்தனை பொண்ணுங்க இருக்காங்க? என்னோட தப்பு அவங்களுக்கு ஒரு பாடமா இருக்கக் கூடாதாம்மா? அப்பா மேல நான் கடலளவு பாசம் வச்சிருக்கேன்மா. அவரையே நான் எதிர்த்துப் பேசறேன்னா... நீங்க கொஞ்சம் யோசிக்கணும்மா. காதல்.. காதல்ன்னு மயங்கிப் போற பொண்ணுங்களுக்கு சாதல்தான் முடிவுன்னு ஆகிடுது. எல்லாருமே குடும்ப கௌரவம்னு நினைச்சு, சம்பந்தப்பட்டவங்களைக் காட்டிக் குடுக்காம... தப்பிக்க வைச்சோம்ன்னா... இன்னும் ஏகப்பட்ட பெண்கள் பாதிக்கப்படுவாங்க... வீட்டையும், நாட்டையும் ஒரே மாதிரி நேசிக்கணும்னு சான்றோர்கள் சொல்லி இருக்காங்களே... என்னோட நாட்டுக்காக பெரிசா ஏதும் செய்ய முடியாட்டாலும் என்னைப் போன்ற பெண்களுக்காக ஏதோ என்னால முடிஞ்சதை செய்யணும்ன்னு நினைக்கறது தப்பாம்மா?
‘எனக்கு ஏற்பட்ட காதல், ஒரு விபத்து மாதிரின்னு புரிஞ்சுக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க, ஒரு நல்லவன் முன் வந்தா மனப்பூர்வமா அந்த வாழ்க்கையை ஏத்துக்குவேன். இதை ஒரு காரணமா வச்சு, களங்கமா நினைச்சு என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்லை. என் இஷ்டத்துக்கு நிறைய படிச்சு, முன்னேறி என்னோட சொந்தக் கால்கள்ல நின்னு சுதந்திரமா வாழ்வேன். வாழ்ந்து காட்டுவேன். கல்யாணம் ஆகலைன்னா பெண்களால வாழ முடியாதா? சொல்லப் போனா... அந்தக் கல்யாணங்கற சம்பிரதாயத்துனாலதான் பெரும்பாலும் பெண்களோட முன்னேற்றம் தடைப்படுது. அதனால தைரியமா இதைப்பத்தி போலீஸ்ல சொல்லலாம்னு நான் எடுத்திருக்கற முடிவுக்கு ஒத்துழைக்க மாட்டீங்களாப்பா?"
வினயா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதனுக்குக் கோபம் தணிந்தது. வினயாவைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டார்.
"ஸாரிம்மா வினயா. சுயநலமா சிந்திச்சுக்கிட்டிருந்த என்னோட புத்தியில தட்டிட்டம்மா. வாம்மா, இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம். நானும் உன் கூட வரேன். இனிமேலயும் உன்னோட இந்த நல்ல எண்ணத்துக்கு மதிப்பு குடுக்கலைன்னா நான் ஒரு அப்பா இல்லை... ஏன்... ஒரு மனுஷனே இல்லை..."
"தேங்க்ஸ்ப்பா..."