பறவை வெளியே வருமா - Page 60
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8419
வினயாவும், ராமநாதனும் உடனே சி.லெவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பிரகாஷ் பற்றிய தகவல்களைக் கூறினார்கள். பாண்டிச்சேரிக்கு தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டது உட்பட அவனது காதல் பிடியில் தான் சிக்கிக் கொண்ட விபரத்தை இன்ஸ்பெக்டர் ஆதவனிடம் கூறினாள் வினயா.
"இன்ஸ்பெக்டர் ஸார்... பிரகாஷைப்பத்தி வேற எதுவும் எனக்கு தகவல்கள் தெரியாது. பிள்ளைங்களை நம்பி காலேஜுக்கும், ஸ்கூலுக்கும் அனுப்பற பெற்றோர்களை ஏமாத்தக் கூடாதுங்கற பாடத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் தெரிஞ்சுக்கிட்ட பாடத்தை என்னைப் போன்ற பெண்களும் தெரிஞ்சுக்கணும்னுதான் எங்க குடும்ப கௌரவத்தைக் கூட பெரிசா நினைக்காம இங்கே வந்து உங்ககிட்ட தகவல்கள் சொல்லி இருக்கேன். படிக்கற வயசுல படிப்புல மட்டும்தான் கவனத்தை செலுத்தணும். இல்லைன்னா... எதிர்காலமே இருண்டு போயிடும்னு புரிஞ்சுக்கிட்டேன்" வினயா பேசியதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் ஆதவன், அவளைப் பாராட்டினார்.
மகளின் மனதைப் புரிந்துக் கொண்டு அவளுக்கு உதவியாகக் கூட வந்த ராமநாதன், வினயாவைப்பற்றி பெருமிதம் கொண்டார். இருவரும் இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.
காவல் நிலையத்திற்குள் புயலென நுழைந்தான் ஒருவன்.
"மேகலாங்கற பொண்ணு கேஸ் விஷயமா இன்ஸ்பெக்டர்கிட்ட நான் பேசணும்..." கான்ஸ்டபிளிடம் படபடவென முரட்டுத்தனமாக பேசினான் அவன்.
"இன்ஸ்பெக்டர் ஆதவன் இருக்கார். அவர்கிட்ட போய் சொல்லுங்க." கான்ஸ்டபிள் கூறியதும் அவன், இன்ஸ்பெக்டர் ஆதவன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு சென்றான்.
இன்ஸ்பெக்டர், யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
"ஸார்..."
அவனைக் கையசைத்து, உட்காரும்படி கையைக் காட்டினார் ஆதவன்.
அவன் உட்கார்ந்தான். ஆதவன் ஃபோன் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க முடியாமல் தவித்தான். சேரில் வசதியாக உட்காராமல் சேரின் நுனியில் உட்கார்ந்திருந்தான். அத்தனை டென்ஷனாக இருந்தான் அவன்.
ஃபோன் பேசி முடித்த ஆதவன், தன் எதிரே உட்காந்திருந்தவனைப் பார்த்தார்.
"நீங்க யார்? என்ன விஷயம்?."
"என் பேர் கார்மேகம் ஸார். நான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில வேலை பார்க்கறேன். மேகலான்னு ஒரு பொண்ணு கற்பழிப்பு முயற்சியில கீழே விழுந்து செத்துப் போனதுக்கப்புறம் அவளை தீ வச்சு எரிச்சது அந்த பிரகாஷ்தான் ஸார்..."
கார்மேகம் பேச ஆரம்பித்ததுமே உஷாரானார் ஆதவன்.
"எதை வச்சு பிரகாஷ்தான்னு சொல்றீங்க?"
"பிரகாஷ் ஒரு பொம்பளை பொறுக்கி ஸார். காதல் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றுபவன். எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா ஸார். அவ பேர் பொற்கொடி. பேருக்கேத்த மாதிரி தங்கம் போல இருப்பா ஸார். நல்லா படிச்சுக்கிட்டிருந்த பொண்ணு ஸார். எங்கேயோ... எப்படியோ... இந்த பொறுக்கி பிரகாஷைப் பார்த்திருக்கா. அவன் வீசின காதல் வலையில விழுந்திருக்கா. உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஆசைக்காட்டி, அவனோட ஆசையை தீர்த்துக்கிட்டு, என் தங்கச்சியை கழட்டி விட்டுட்டான் ஸார். அவன் வேற பொண்ணு கூட சுத்தறதைப் பார்த்துட்ட என் தங்கச்சி பொற்கொடி, மனசு உடைஞ்சு போய் தற்கொலை பண்ணிக்கிட்டா ஸார். என் உயிருக்குயிரான பொற்கொடியோட உயிர் இந்த உலகத்தை விட்டுப் போனதுக்குக் காரணம் இந்த பிரகாஷ்தான் ஸார்..."
"இதுக்கு என்ன ஆதாரம்?"
"இதோ... இந்த ஃபோட்டோவைப் பாருங்க ஸார். பொற்கொடியோட பீரோவுல இருந்துச்சு. பாருங்க ஸார்... ஃபோட்டோவுக்குப் பின்னால 'ஐ லவ் யூ பொற்கொடி'ன்னு எழுதி கையெழுத்துப் போட்டிருக்கான்."
கார்மேகத்தின் கையில் இருந்த ஃபோட்டோவை வாங்கிப் பார்த்தார் ஆதவன்.
அந்த ஃபோட்டோவில் இருந்தது பிரகாஷ்தான் என்பதை உறுதி செய்து கொண்டார்.
கார்மேகம் படபடப்பு நீங்காத குரலில் தொடர்ந்து பேசினான்.
"இவனை எப்படியாவது பழி வாங்கணும்ன்னு துடிச்சேன் ஸார். ஆனா இவனோட அட்ரஸ் கிடைக்காம இவனைத் தேடி அலைஞ்சேன். பொற்கொடியோட பீரோவுல இந்த ஃபோட்டோவை தவிர, இவன் சம்பந்தப்பட்ட வேற எதுவுமே கிடைக்கலை ஸார்."
"ஒரு நாள் ட்ரிப்ளிகேன் 'இன்சுவை ஹோட்டல்'ல ஒரு பொண்ணு கூட அவனைப் பார்த்தேன். அவனைத் தொடர்ந்து போய் பிடிக்கறதுக்குள்ள, எங்க மேனேஜர், என்னைப் பிடிச்சுக்கிட்டாரு. அதனால அவன் அன்னிக்குத் தப்பிச்சுட்டான்."
"பிரகாஷ், உன் தங்கச்சியை ஏமாத்தினான்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னால என் தங்கச்சி எனக்கு லெட்டர் எழுதி இருந்தா. அந்த லெட்டர்ல்ல எல்லா விஷயமும் எழுதி இருந்தா. ஆனா அவனோட அட்ரஸ் மட்டும் அதில் இல்லை. பொற்கொடிக்கே அவன், அவனோட அட்ரஸைக் குடுத்திருக்க மாட்டான். எப்படியோ.. பொற்கொடி கையில அவனோட ஃபோட்டோ மட்டும் கிடைச்சிருக்கு... கூடப்பிறந்த ஒரு தங்கச்சியை பறி குடுத்துட்டு பரிதவிக்கிறேன் ஸார். அந்தப் பிரகாஷுக்கு தண்டனை வாங்கிக் குடுங்க ஸார். அதன் மூலமா செத்துப் போன என் தங்கச்சி திரும்பக் கிடைக்காட்டாலும் அவன் செஞ்ச தப்புக்குரிய தண்டனையை அனுபவிக்கிறான்ங்கற ஒரு சின்ன திருப்தியாவது இருக்கும் ஸார்..."
சோகம் தாங்காமல் தவித்தான் கார்மேகம்.
"குற்றவாளி அவன்தான்னு நிரூபணம் ஆனா... சட்டப்படி என்ன செய்யணுமோ அதைச் செய்வோம். கான்ஸ்டபிள் உங்ககிட்ட சில பேப்பர்ல கையெழுத்து வாங்குவாங்க. கையெழுத்து போட்டுட்டுப் போங்க. உங்க அட்ரஸ், மொபைல் நம்பர் குடுத்துட்டுப் போங்க. கோர்ட்ல கேஸ் நடக்கும் போது நீங்க வரணும். அதே சமயம் விசாரணை சம்பந்தமா ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டாலும் வரணும்..."
"வரேன் ஸார்."
காவல் நிலையம். லண்டனில் இருந்த பிரகாஷின் நண்பன் பாலாஜியிடம் இன்ஸ்பெக்டர் ஆதவன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார்.
"ஆமா ஸார். அவன் என்னோட ஃப்ரெண்டு ஸார். பொதுவா நல்லவன் ஸார். ஆனா பெண் சபல புத்தியினால் கெட்டுப் போயிட்டான். இன்ட்டர்நெட்ல மேகலா கேஸ் பத்தி நானும் படிச்சேன். வினயாங்கற பொண்ணைக் காதலிக்கறதா சொல்லி அவளை அனுபவிச்சுட்டு கை கழுவுறதுதான் ஸார் அவனோட திட்டம். நான் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவன் திருந்தலை ஸார். இந்த மேகலா பத்தி எதுவுமே அவன் பேசினது இல்லை ஸார். மாமா பொண்ணுங்க இருக்காங்கன்னு தெரியும். அவ்வளவுதான். நான் லண்டன் கிளம்பறதுக்கு முன்னால கூட திருந்திடுன்னு சொல்லிட்டுத்தான் கிளம்பினேன். ஏதோ, சபலபுத்தி... நாளடைவில திருந்திடுவான்னு நினைச்சேன். ஆனா சொந்த மாமா பொண்ணை கற்பழிக்க முயற்சி பண்ணி அவ சாகறதுக்கும் காரணமாகி, அவ உடலை தீ வச்சு எரிக்கிற அளவுக்கு பிரகாஷ் இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை ஸார்."
நீளமாக பேசி முடித்தான் பாலாஜி.