பறவை வெளியே வருமா
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8418
அரவிந்த் மருத்துவமனை, தூய்மையையும் சேவை மனப்பான்மையையும் தனக்குள் நிறைத்துக் கொண்ட புத்துணர்வுடன் இயங்கிக் கொண்டிருந்தது. வெண்புறாக்கள் போன்ற நர்சுகள் தங்கள் பணிகளில் கவனமாக ஈடுபட்டிருக்க, வெள்ளை கோட் அணிந்த டாக்டர்கள் சுறுசுறுப்பாக நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
"அட என்னம்மா, நீ சீக்கிரம் வா, சீட்டு எழுதற இடத்துல போய் பேரைக் குடுக்கணும்" அங்கே வந்த ஒரு பெரியவர், தயக்கமாய் நின்ற அவருடைய மகளைத் துரிதப்படுத்தினார்.
"அப்பா, இந்த ஆஸ்பத்திரியைப் பார்த்தா ரொம்ப பெரிசா இருக்கு. எக்கச்சக்கமா செலவு ஆகும் போலிருக்கு. நாம வேற ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டிக்கலாம்ப்பா." கவலையாகப் பேசிய மகளின் தலையை ஆறுதலாக தடவினார் பெரியவர்.
"நீ நினைக்கிற மாதிரி இங்கே ரொம்ப செலவு ஆகாதும்மா. நாம விருப்பப்பட்டு ஒரு ரூபா குடுத்தாக்கூட வாங்கிக்குவாங்க. ஏழை, பணக்கார வித்யாசம் பார்க்காம மக்களுக்கு சேவை செய்யறதுக்காக இந்த மருத்துவமனையை ஒரு ஆசிரமத்துக்காரங்க நடத்துறாங்க. நல்ல மனசு கொண்ட பெரிய பணக்காரங்க நிறைய நிதி குடுக்கறாங்கம்மா. ரொம்ப நாளா உனக்கு இருக்கிற வயித்து வலி குணமாகணும். வாம்மா." அவர் விபரம் கூறியதும் நிம்மதியாக அவருடன் சீட்டு எழுதும் இடத்திற்கு விரைந்தாள் அவரது மகள்.
"டாக்டர் அங்கிள், நான் எப்ப அங்கிள் வீட்டுக்கு போகலாம்? நான் ஸ்கூலுக்குப் போகணும். படிக்கணும், என் சிநேகிதிகளை எல்லாம் பார்க்கணும். எனக்கு உடம்பு நல்லாயிடுச்சு டாக்டர் அங்கிள்." மூன்றாம் நம்பர் அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சின்னஞ்சிறுமி, தன் மழலை மாறாத மொழியில் டாக்டரிடம் விழி மலர்த்திப் பேசினாள்.
"பாப்பா! நீ இன்னைக்குச் சாயங்காலம் வீட்டுக்குப் போயிடலாம். ஜாலிதானே?" சிறுமியின் குண்டுக் கன்னங்களில் செல்லமாகத் தட்டினார்.
"டாக்டர், என் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை குடுத்தது நீங்கதான் டாக்டர். உங்களைக் கோயில் கட்டிக் கும்பிடணும் டாக்டர்" நன்றி உணர்வில் கண்ணீர் மல்கப் பேசினாள் சிறுமியின் தாய்.
"எல்லாம் கடவுள் செயல்மா. அவருக்கு நன்றி சொல்லுங்க. வீட்டுக்குப் போனாலும் இவளை ஒரு வாரம் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப வேண்டாம். என்கிட்ட மறுபடி பரிசோதிச்சிட்டதுக்கப்புறமா அனுப்பலாம்."
"சரிங்க டாக்டர்."
அடுத்த அறைக்குள் சென்ற டாக்டர், அங்கே ஊசி போட்டுக் கொள்ள அடம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரைப் பார்த்தார். நர்ஸ் அவரைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
"ஐயா... உங்க நல்லதுக்குத்தான் ஊசி போடறோம். உங்க உடம்பு சரியானாத்தானே வீட்டுக்குப் போக முடியும்?"
"எனக்கு சாப்பிடறதுக்கு ரொட்டியும், பாலும்தான் குடுக்கறீங்க. எனக்கு காரசாரமா மீன் குழம்பு வேணும். அதெல்லாம் குடுக்காட்டி ஊசி போட்டுக்க மாட்டேன்."
குழந்தை போல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த பெரியவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரிடம் நெருங்கினார், டாக்டர்.
"பெரியவரே, உங்களுக்கு மீன் குழம்புதானே வேணும்? இன்னைக்கு உங்களுக்கு கண்டிப்பா மீன் குழம்புக்கு ஏற்பாடு பண்றேன். முதல்ல ஊசி போட்டுக்கங்க."
"ம்கூம். இந்த நர்சம்மா வலிக்க வலிக்க ஊசி போடறாங்க. நான் மாட்டேன்" மேலும் அடம் பிடித்தவரை சமாளிக்க, தானே ஊசியை அவருக்கு செலுத்தினார் டாக்டர்.
2
இவ்விதம் அன்பும், பண்பும் நிறைந்த ஊழியர்களைக் கொண்டு இயங்கிய அந்த மருத்துவமனையின் எட்டாம் நம்பர் அறைக்குள், மருந்துகள் சகிதம் நுழைந்தாள் நர்ஸ் அகிலா. அங்கே படுக்கையில் கண்ணீர் வழிந்தோடும் சோகத்துடன், சோர்வாகப் படுத்திருந்த மேகலாவின் அருகே சென்றாள்.
மேகலா, மஞ்சள் நிறத்தில், கரிய, பெரிய கண்களுடன், எடுப்பான அழகிய மூக்குடன் மிக மிக அழகாய் இருந்தாள். மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருந்த அவளது நீண்ட கூந்தல் தரையில் புரண்டுக் கொண்டு இருந்தது.
மருந்துகள் கொண்டு வந்த தட்டை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு தரையில் புரண்ட அவளது பின்னலை எடுத்து கட்டிலில் போட்டாள் அகிலா. அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு, தன் முகத்தை புதைத்துக் கொண்ட மேகலா, குலுங்கிக் குலுங்கி அழுதாள். சிறிது நேரம் அவளை அழ விட்ட அகிலா, அவள் சற்று அடங்கியதும் அவளது முகத்தை நிமிர்த்தினாள்.
"அழாதே மேகலா. எல்லாம் நடந்து முடிஞ்சப்புறம் அழுது என்ன பிரயோஜனம்? பொண்ணாப் பொறந்தவளுக்கு அவளோட கற்புதாம்மா அவ மண்ணுக்குள்ள மறையற வரைக்கும் அவளுக்கு மரியாதை குடுக்கற கவசம். 'கன்னிப்பொண்ணு'ன்னு ஏன் சொல்றாங்கன்னு தெரியுமா? கல்யாணம் ஆகற வரைக்கும் யாருமே தொடாததுனால கன்னிப் போகாத கனியைப் போன்றவ பெண் அப்பிடிங்கறதுனாலதான் கன்னிப் பொண்ணுன்னு சொல்றாங்க. ஒரு நிமிஷ சபலம், எத்தனை வருஷமானாலும் மறக்க முடியாத அவலமாச்சே... ஆம்பளைகளுக்கென்ன?!.... பொண்ணுங்களைத் தொட்டுட்டு தொலைதூரம் போயிடுவானுங்க. அவனுங்க பொண்ணுங்களை தொட்டதுக்கு ஆண்டவன் அவங்களுக்கு எந்த அடையாளமும் குடுக்கறதில்லை. பொண்ணுங்களோட கருவறை, ரகசியமா இருந்தாலும் அவ தன்னோட கற்பை பறிகுடுத்து, அந்தக் கருவறை ஒரு உயிரை உருவாக்கிட்டா...? அதை ஊருக்கும் உலகத்துக்கும் மறைக்க முடியுமா? உயிரை உருவாக்கிய ஆண்... ? தப்பிச்சுக்கறான். உயிரை உள் வாங்கிய பெண்? தப்பிக்கவே முடியாது. மேலிட்ட வயிறு, 'இவ கேடு கெட்டுப் போனவள்ன்னு' ஆதாரம் காட்டுமே... ஆதாரத்தை வளர விடாம தடுக்கறதுக்காக இங்கே வந்து அபார்ஷன் பண்ணிக்கிட்ட... செஞ்ச தப்பு போதாதுன்னு ஒரு ஜீவனை அழிக்கற பாவத்தையும் சேர்த்து பண்ணிட்டியேம்மா. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு நீ... இப்பிடி கல்யாணத்துக்கு முன்னாலயே அத்து மீறி நடந்துட்டு அல்லல் படலாமா? உன்னோட கணவன்னு சொல்லி காலையில இங்கே வந்து கையெழுத்துப் போட்டானே... அவன்தானே உன்னோட காதலன்?"
"ஆமா சிஸ்டர். அவர் பேர் வருண். ரொம்ப நல்லவர்."
"நல்லவனா இருந்தா காதலிக்கறதோட நிறுத்தி இருக்கணுமே.... உன் மனசை மட்டும் பார்க்காம உன் உடம்பையும் சேர்த்துப் பார்த்துட்டானே..."
"சிஸ்டர், என்னைக் காதலிச்ச வருண் ரொம்ப நல்லவர். என்னைக் கைவிட மாட்டார். அவர் நிச்சயமா என்னைக் கல்யாணம் பண்ணிக்குவார்."
"அதுக்குள்ள என்ன அவசரமாம்? உன்னை ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினாராம்? ஆனது ஆயிடுச்சுன்னு உடனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்காம எதுக்காக இந்த அபார்ஷன்...?"
"அவரை மட்டும் குத்தம் சொல்லாதீங்க சிஸ்டர். ஊசி இடம் கொடுக்காம நூல் நுழைய முடியுமா? அவரென்ன என்னை பலவந்தப்படுத்தியா கற்பழிச்சார்? நானும் ஒரு நிமிஷம் என்னை மறந்துட்டேன். தப்பு என் மேலயும் இருக்கு.